சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின், அண்ணா பல்கலையில் நடந்த முதல்,
சிண்டிகேட் கூட்டத்தில், 50க்கும் அதிகமான கோப்புகளுக்கு ஒப்புதல்
கோரியதற்கு, உயர்கல்வித் தறை செயலர், அபூர்வ வர்மா, அதிரடியாக மறுப்பு
தெரிவித்தார்.
"ஒவ்வொரு கோப்பு சம்பந்தமான
ஆவணங்களை, அதன் ஆரம்ப நிலையில் இருந்து ஆய்வு செய்த பிறகே, ஒப்புதல் அளிக்க
முடியும்' என, தெரிவித்த செயலர், சிண்டிகேட் கூட்டத்தை, 29ம்
தேதிக்கு, தள்ளி வைத்தார்.
ஆட்சி மாற்றத்திற்குப் பின், அண்ணா தொழில்நுட்ப பல்கலைகள் அனைத்தும்,
மீண்டும், அண்ணா பல்கலையின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதைத் தொடர்ந்து,
சமீபத்தில், சிண்டிகேட் அமைக்கப்பட்டு, அதற்கு உறுப்பினர்களும்
நியமிக்கப்பட்டனர். இதன் முதல் கூட்டம், நேற்று முன்தினம் மாலை, பல்கலை
வளாகத்தில் நடந்தது.
ஆசிரியர்கள், பல்கலை பணியாளர்கள், ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும்
கோப்புகள், பல்வேறு குழுக்களை அமைப்பதற்கு ஒப்புதல் கோரும் கோப்புகள்
மற்றும் கடந்த ஆண்டு படிப்புகளை முடித்த மாணவ, மாணவியருக்கு, பட்டங்கள்
வழங்குவதற்கான கோப்பு உள்ளிட்ட, 50க்கும் அதிகமான கோப்புகள், கூட்டத்தின்
ஒப்புதலுக்கு வைக்கப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மலைபோல் குவிந்திருந்த கோப்புகளை பார்த்ததும், உயர்கல்வித் துறை செயலர்,
அபூர்வ வர்மா, அதிர்ச்சி அடைந்தார். "இவ்வளவு கோப்புகளையும், ஒரே
நேரத்தில் ஆய்வு செய்து, உடனடியாக ஒப்புதல் அளிப்பது என்பது மிகவும்
கடினம். ஒவ்வொரு கோப்பின் தன்மையையும், அதன் ஆரம்ப நிலையில் இருந்து ஆய்வு
செய்து, சரிபார்த்த பிறகே, ஒப்புதல் அளிக்க முடியும். எனவே, இன்றைய
கூட்டத்தை, 29ம் தேதிக்கு தள்ளி வைத்துக் கொள்ளலாம்,' என,
தெரிவித்ததாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்படி, 29ம் தேதி, மீண்டும் சிண்டிகேட் கூடுவதை, பல்கலை வட்டாரங்களும்
உறுதிபடுத்தின. எனினும், பட்டமளிப்பு விழா மற்றும் புதிய துணைவேந்தரை
தேர்வு செய்வதற்கு, சிண்டிகேட் சார்பில், ஒரு உறுப்பினரின் பெயரை
பரிந்துரைத்தல் உள்ளிட்ட, ஒரு சில முடிவுகளுக்கு மட்டும், ஒப்புதல்
அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பல்கலையின் பொறுப்பு துணைவேந்தராக காளிராஜ் இருந்து வருகிறார். புதிய
துணைவேந்தரை தேர்வு செய்ய, மூன்று உறுப்பினர்கள் அடங்கிய, தேர்வுக் குழுவை
அமைக்க வேண்டும். சிண்டிகேட் சார்பில், ஒரு உறுப்பினரின் பெயர்
பரிந்துரைத்ததை தொடர்ந்து, தமிழக அரசு, ஒரு உறுப்பினரையும், கவர்னர், ஒரு
உறுப்பினரையும், விரைவில் அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு வாரங்களுக்குள், தேர்வுக்குழு விவரம், அரசாணையாக வெளியாகும் என,
பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் கல்வி ஆண்டில், பொறியியல் சேர்க்கை
துவங்குவதற்கு முன், புதிய துணைவேந்தர் பதவி ஏற்பார் என, தெரிகிறது.