கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மும்பையில் செயல்படும் மிக பெரிய வர்த்தகம்..!

 
மிகப் பெரிய நிறுவனம்... 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள்... பக்காவான தொழில் பயிற்சி... மாத வருவாய் 15 கோடிக்கு மேல்... ஊழியரின் சம்பளம் 15 ஆயிரத்துக்கு குறைவில்லை... என்ன, இப்படிப்பட்ட பெரிய கம்பெனியில் வேலை கிடைக்கலையேன்னு நினைக்கத் தோன்றுதா... சாரி, அந்த எண்ணத்தை மாத்திக்குங்க. இது, முழுக்க முழுக்க ‘பிச்சை’ பிசினஸ் விவகாரம். மொழி, இனம் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் மும்பை சாலைகளில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்கள், தங்களின் பாஸுக்கு மாதந்தோறும் சம்பாதித்து தரும் தொகைதான் ரூ. 15 கோடி. தொழிலாளிக்கோ ஒருநாள் சம்பளம் ரூ. 500.

நாளுக்கு நாள் மாறி வரும் தொழில்நுட்பத்தை கற்றுத் தருவதற்காக பல கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் உருவாவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பிச்சை எடுப்பது எப்படி என்பதை கற்றுத்தரும் பயிற்சி மையத்தை பற்றி சொன்னால் மூக்கின்மேல் விரலை வைக்கத் தோன்றுகிறது.

இந்தியாவின் வர்த்தக நகரம் என்றழைக்கப்படும் மும்பையில் இதுதான் இப்போதைய டாப் பிசினஸ். 1999-ம் ஆண்டு பிச்சை தடுப்பு பிரிவு சட்டத்தின்கீழ் மும்பையில் தட்டும் கையுமாக அலைந்தவர்களை போலீசாரும், அதிகாரிகளும் ஓடி ஓடி பிடித்தனர். அவர்களை மறுவாழ்வு இல்லங்களுக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும், பிச்சைக்காரர்கள் தொல்லை குறைந்தபாடியில்லை. புதிதுபுதிதாக வர ஆரம்பித்தார்கள்.

இவர்கள் எங்கிருந்து உருவாகி வருகிறார்கள்? யார் இவர்களை உருவாக்குவது என்பதை அறியும் முயற்சியில் இறங்கினார் ஒரு பத்திரிகை உளவாளி. அழுக்குத் தலை, கிழிந்த சட்டையுடன் பிச்சைக்காரர்களுடன் ஊடுருவினார். மாறு வேடத்தில் சென்று திரட்டிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார். அந்த அதிர்ச்சித் தகவல்: மும்பை தாராவி, மால்வானி பகுதிகளில் பிச்சை எடுப்பது எப்படி என்று பயிற்சி தர ஒரு கும்பலே இருக்கிறதாம். இந்த கும்பலின் தலைவர்கள் ‘குரு’ என்று அழைக்கப்படுகின்றனர். எச்சைக் கையால காக்கா ஓட்டாத கருமியாக இருந்தாலும் அவரை விடாப்பிடியாக சுற்றிவந்து பிச்சை வாங்குவது எப்படி என்ற டெக்னிக்தான் இங்கு அளிக்கப்படும் முதல் பயிற்சி.

போலீசோ அல்லது வேறு யாராவதோ துரத்தினால் அவர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது என்ற தற்காப்பு கலையும் கற்றுத்தரப்படுகிறது. அப்ரன்டிஸ்டுகளாக சேர்பவர்கள், முதலில் சாப்பாடு கூடையைத்தான் தூக்க வேண்டும். நிரந்தரமாக ஒரு இடத்தில் அமர்ந்து பிச்சை எடுக்கும் தங்கள் கூட்டத்தை சேர்ந்தவருக்கு சாப்பாடு எடுத்துச் சென்று கொடுக்க வேண்டும். மற்ற நேரங்களில் முழுக்க முழுக்க பயிற்சிதானாம். மாற்றுத் திறனாளிகளுக்கு நடுரோட்டில் பரிதாபமாக உருண்டு புரண்டு பிச்சை எடுக்க பயிற்சி தரப்படுகிறது.

பயிற்சிக்கு முடிந்ததும் ஏதாவது ஒரு சாலையை அவர்களுக்கு ஒதுக்குவார்கள். அங்கு சுற்றித் திரிந்து பிச்சை எடுக்க வேண்டும். ஓடி, உருண்டு, கத்திக்கத்தி சேர்த்த பணத்தை பைசா குறையாமல் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். ரகசிய கேமராக்கள் மாதிரி, ஆங்காங்கே சில கண்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும். வசூலில் ஏதாவது சுருட்ட நினைத்தால் அவ்வளவுதான்.

பச்சிளம் குழந்தைகளுக்கு இங்கே ஏக கிராக்கி. சில பெண்கள் தங்கள் குழந்தைகளை பிச்சை எடுப்பதற்காக வாடகைக்கு அனுப்புகின்றனர். ஒரு மாத கைக்குழந்தை என்றால் ஒருநாள் வாடகை ரூ. 100. ஒரு வயது குழந்தையென்றால் ரூ. 50, மூன்று முதல் 5 வயது வரை ரூ. 30 வாடகையாக தரப்படுகிறது. கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு பிச்சை எடுத்தால் வசூல் கொட்டுகிறதாம். மாலையில் கைநிறைய காசோடு திரும்பும்போது பயிற்சி மையத்தில் ஏக வரவேற்புதான். வசூலாகும் தொகையை எல்லாரும் கொண்டுவந்து தந்ததும் எண்ணும் பணி நடக்கிறது.

அதில் ஒரு பகுதியை போலீஸ், உள்ளூர் ரவுடிகளுக்கு மாமூல் தர ஒதுக்கி வைக்கப்படுகிறது. மும்பை முழுவதும் சிக்னல்களில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேர் பிச்சை எடுக்கின்றனர். இவர்களுக்கு ஒருநாள் கூலியாக தலா ரூ. 500 தரப்படுகிறது. இவர்கள் அனைவரும் சேர்ந்து மாதத்துக்கு ரூ. 15 கோடியை வசூலித்து ‘குரு’வின் காலில் கொட்டுகின்றனர். முதலீடே இல்லாமல் தர்ம பிரபுக்களின் தயவால் கோடி கோடியாக சம்பாதிக்கும் ‘தொழிலதிபர்களை’ போலீசாரும் கண்டுகொள்வதில்லை. ‘‘பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் மூலம் ஏராளமானவர்களை பிடித்து பாதுகாப்பு இல்லங்களில் அடைத்தோம். ஆனாலும் புற்றீசல்போல் இந்த கூட்டம் பெருகிக்கொண்டே இருக்கிறது’’ என்கின்றனர் போலீசார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...