கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சர்வதேச ஆசிரியர் பரிசு - ரூ.7.38 கோடி வென்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியர்...

 இந்தியாவைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஒருவர் 2020-ஆம் ஆண்டுக்கான ஆண்டுக்கான 10 லட்சம் டாலர் (ரூ.7.38 கோடி) சர்வதேச ஆசிரியர் பரிசை வென்றுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூர் மாவட்டம், பரிதேவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்சிங் டிசாலே (32). பெண் கல்வியை ஊக்குவிக்க முயற்சிகளை மேற்கொண்டது மற்றும் பாட புத்தகத்தில் கியூ.ஆர். குறியீடு முறை மூலம் புரட்சியை ஏற்படுத்தியது போன்ற பணிகள் மூலம் இந்தப் பரிசுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக அளவில் ஆசிரியர் பணியில் மிகச் சிறந்த பங்களிப்பை ஆற்றிவரும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், லண்டனைச் சேர்ந்த வர்க்கி அறக்கட்டளை கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இந்த சர்வதேச ஆசிரியர் பரிசு திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தி வருகிறது.  அந்த வகையில் 2020-ஆம் ஆண்டுக்கான இந்தப் பரிசை ரஞ்சித்சிங் வென்றுள்ளார்.

பரிதேவாடி கிராமத்தில் ஜில்லா பரிஷத் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் ரஞ்சித்சிங், அந்தப் பள்ளிக்கு 2009-ஆம் ஆண்டு ஆசிரியராக வந்தபோது மிகவும் பாழடைந்த கட்டடத்தில் அந்தப் பள்ளி இயங்கிவந்துள்ளது. மேலும் பள்ளியைச் சுற்றி மாட்டுக் கொட்டகை, தீவன சேமிப்பு அறை என மிக மோசமான சூழல் இருந்துள்ளது. இந்தச் சூழலை மாற்றியமைத்த ரஞ்சித்சிங், பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்தார். பாட புத்தக்கத்தில் சிறப்பு கியூ.ஆர். குறியீடு முறையை அறிமுகம் செய்து, மாணவர்கள் அதை கிளிக் செய்தால் பாடங்களை ஒலி வடிவில் மாணவர்கள் கேட்கவும், பாடங்கள் மற்றும் கதைகளையும் காணொலி வழியில் பார்க்கவும் ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார். இவருடைய முயற்சி மூலம், அந்த கிராமத்தில் சிறார் திருமணம் வெகுவாக குறைந்து, 100 சதவீத மாணவிகள் பள்ளிக்கு வரும் நிலையை ஏற்படுத்தியுள்ளார்.

இவருடைய பள்ளியில் பாட புத்தக கியூ.ஆர். குறியீடு முன்னோட்ட திட்டம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, மாநிலத்தின் அனைத்து வகுப்புகளுக்கும் இந்த நடைமுறையை மகாராஷ்டிர அறிமுகம் செய்தது. அதுபோல, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (என்சிஇஆர்டி) கவுன்சிலின் அனைத்து பாட புத்தகங்களில் கியூ.ஆர். குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பரிசுக்காக, உலகம் முழுவதிலுமிருந்து சிறந்த ஆசிரியர்களின் பங்களிப்பு குறித்த விவரங்கள் பெறப்பட்டு, அவர்களில் 10 பேர் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்படுவர். பின்னர், அந்த 10 பேரில் ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

இவ்வாண்டு இந்தப் பரிசை வென்ற ரஞ்சித்சிங், தனது பரிசுத் தொகையில் 50 சதவீதத்தை, இறுதிப் போட்டியாளர்களாக தேர்வான பிற 9 பேருடன் சமமாக பகிர்ந்துகொள்ளப்போவதாக அறிவித்து அசத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "மாணவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியர்கள்தான் உலகின் உண்மையான மாற்றத்தை உருவாக்குபவர்கள்.

அந்த வகையில், நான் கொடுப்பதிலும், பகிர்ந்தளிப்பதிலும் நம்பிக்கைக் கொண்டுள்ளேன். எனவே, எனது பரிசுத் தொகையில், 50 சதவீதத்தை பிற இறுதிப் போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொள்வேன். இதனால் அவர்கள் சார்ந்த நாட்டின் மாணவர்கள் பயனடைவார்கள் என்று நம்புகிறேன்' என்று கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiyam Mobile App New Version Update - Version 1.21.2 - Updated on 07-04-2025

   Kalanjiyam App Update செய்த பிறகு New / Old Regime தேர்வு செய்ய முடிகிறது  KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.21.2 *  IFHRMS   Kalanjiya...