தமிழகத்தில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள், 8 மாதங்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டன. சென்னை ராணி மேரி கல்லூரியில் முகக் கவசம் அணிந்து வந்த முதுகலை இறுதியாண்டு மாணவிகளுக்கு சமூக இடைவெளியைப் பின்பற்றி, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.
கரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் 8 மாதங்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டன. முதல்நாளில் 70 சதவீத மாணவர்கள் கல்லூரிக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் இணையவழியில் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
ஆராய்ச்சி, முதுகலை படிப்புகள்
மேலும், நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகளும் இணையவழியில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதல்கட்டமாக ஆராய்ச்சி மற்றும் முதுநிலை 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் டிச.2-ம் தேதி முதல் கல்லூரிகளைத் திறக்க அரசு முடிவு செய்தது.
அதன்படி மாநிலம் முழுவதும் 8 மாதங்களுக்கு பின்னர் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. கல்லூரிக்கு வந்த மாணவர்களுக்கு கரோனா பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அம்சங்கள் மற்றும் வளாகங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை பேராசிரியர்கள் எடுத்துரைத்தனர்.
வகுப்பறையில் ஒரு மேஜைக்கு 2 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்பட்டது. அதேபோல், முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்பாடு உள்ளிட்ட தற்காப்பு விதிகளும் முறையாகப் பின்பற்றப்பட்டன.
இப்பணிகளை கண்காணிக்க அனைத்து கல்லூரிகளிலும் பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதேநேரம் கரோனா அச்சம், புயல் எச்சரிக்கை உட்படசில காரணங்களால் பல கல்லூரிகளில் மாணவர்களின் வருகைகுறைவாக இருந்தது. ஒட்டுமொத்தமாக 60 முதல் 70 சதவீதம் மாணவர்கள் கல்லூரிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே இளநிலை படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு டிச.7-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.