வயர்லெஸ் முறையில் பல சாதனங்களை சார்ஜ் செய்யக்கூடிய ஒரு புதிய சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதாக mi xiaomi நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் நீங்கள் விளையாடும்போது அல்லது வீடியோக்களைப் பார்க்கும்போது சார்ஜ் தீர்ந்துவிட்டால், நீங்கள் வயர்டு அல்லது வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்ய போனை ஒரே இடத்தில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்காக, சியோமி அறிமுகம் செய்துள்ள தொழில்நுட்பத்தின் பெயர் என்ன? இது எப்படி செயல்படுகிறது? என்பதையெல்லாம் இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம் வாங்க.
எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் ஸ்மார்ட் சாதனங்களை சார்ஜ் செய்ய ரிமோட் வயர்லெஸ் சார்ஜிங் நுட்பமான ‘Mi ஏர் சார்ஜ்’ எனும் தொழில்நுட்பத்தை சியோமி அறிமுகம் செய்துள்ளது.
இந்த தொழில்நுட்பம் செயல்பட, நீங்கள் உங்கள் தொலைபேசியை ஒரே இடத்தில் வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் சார்ஜருக்கு அருகில் இருக்க வேண்டுமென்பது அவசியம், இதனால் உங்கள் தொலைபேசியை வயர் ஏதும் இல்லாமல் சார்ஜ் செய்யலாம். ரிமோட் சார்ஜிங் நுட்பத்தைப் பற்றி நிறைய நிறுவனங்கள் பேசியுள்ளன, ஆனால் அதை முதலில் நிஜமாகியுள்ளது சியோமி நிறுவனம் தான்.
80W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங், 120W வயர்டு சார்ஜிங் போன்ற பல முதன்மையான தொழில்துறை நுட்பங்களை முதன் முதலில் அறிமுகம் செய்யும் OEM ஆக சியோமி தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த வகையில் சீன உற்பத்தியாளரான சியோமி இப்போது இந்த புரட்சிகர புதிய வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் முதலில் அறிமுகம் செய்துள்ளது.
தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து விரிவான விவரங்கள் பகிரப்படவில்லை என்றாலும், சிலவற்றை வெய்போவில் சியோமி நிறுவனத்தின் நிறுவனர் பகிர்ந்து கொண்டார், இது சார்ஜிங் நிலையத்திலிருந்து ஓரிரு மீட்டர் தூரத்திற்கு 5W மின்சக்தியை வழங்கும் அம்சம் கொண்டது என்று தெரிவித்துள்ளார்.
5-phase இன்டர்ஃபெரன்ஸ் ஆண்டெனா மூலம் உங்கள் சாதனத்தின் நிலையை தீர்மானித்த பிறகு, ஒரு phase control வரிசையை உருவாக்கும் 144 ஆண்டெனாக்கள் மில்லிமீட்டர்-அலை அதிர்வெண்களில் பீம்ஃபார்மிங் மூலம் ஆற்றலை அனுப்புகின்றன.
சியோமி எப்போது இந்த தொழில்நுட்பத்தை வணிகமயமாக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இப்போதைக்கு இல்லை, ஆனால் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் உலகின் முதல் நிறுவனமாக Xiaomi இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.