தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். நடப்பு கல்வியாண்டில் அதிகளவிலான மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளதால் ஆசிரியர்களின் தேவை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் பணியிடங்கள்:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பள்ளிகள் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. மேலும் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்த காரணத்தால் ஏராளமானோர் வேலையிழந்தனர். தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை செலுத்த நிர்பந்தித்து, போதிய வருமானமின்மை போன்ற காரணங்களால் பெற்றோர்கள் பலர் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடப்பு கல்வியாண்டில் வழக்கமானதை விட அதிகளவிலான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
எனவே பள்ளிகள் முழுமையாக திறக்கப்படும் பொழுது ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர் – மாணவர் விகிதம் மற்றும் கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் கோபியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்பட்ட பின்னரே ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் தற்போது தேவைக்கு ஏற்ப ஆசிரியர்கள் உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.