சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10,12-ம் வகுப்பு தேர்வு வினாத்தாள்முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் 23 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 68 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே எதிர்கால தேவையை முன்வைத்து பாடத்திட்டம், தேர்வு வடிவங்களில் பல மாற்றங்களை சிபிஎஸ்இ மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, 9 முதல் 12-ம் வகுப்பு வரை தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு முறைகளில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 9, 10-ம் வகுப்பு தேர்வு வினாத்தாள்களில் 30 சதவீதமும், 11, 12-ம் வகுப்பு தேர்வுகளில் 20 சதவீதமும் இனி திறன் மதிப்பீடு கேள்விகள் கேட்கப்படும் என்றுசிபிஎஸ்இ கடந்த வாரம் அறிவித்தது. இந்த மாற்றங்கள் 2021-22-ம்கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும். அதற்கேற்ப மாணவர்களை பள்ளிகள் தயார்படுத்த வேண்டும் எனவும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது;
தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வினாத்தாள்வடிவங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவை மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எளிதாகஎதிர்கொள்ளவும், உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் வழிவகுக்கும்.
திறன் மதிப்பீடு கேள்விகள் அன்றாட வாழ்க்கை தொடர்பானதாகவும் இருக்கும். எனவே, புத்தகங்கள் தவிர்த்து பொதுஅறிவு தொடர்பான பகுதிகளிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். அதேநேரம் நடப்பு ஆண்டு பொதுத்தேர்வு ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படியே நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்