எந்த அளவுக்குத் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறதோ, அந்த அளவுக்கு மோசடியும் புதுப்புது ஃபார்முலாக்களில் நடக்கிறது. ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி மூலம் கார்டின் விவரங்களைச் சேகரித்து, போலி கார்டை தயாரித்து மோசடி செய்ததெல்லாம் பழைய டெக்னிக். தற்போது ஏடிஎம் கார்டுகளைக்கொண்டு சென்சாரை விரல்கள் மூலம் தடை செய்து பணத்தை நூதன முறையில் வடமாநில இளைஞர்கள் மோசடி செய்திருக்கின்றனர். அது தொடர்பாக சென்னை வேளச்சேரி, தரமணி, வடபழனி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு வங்கி தரப்பில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.
ஏடிஎம்-மில் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபடும் கும்பல்
இது குறித்து நம்மிடம் பேசிய மத்திய குற்றப்பிரிவின், வங்கி மோசடி பிரிவின் போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``சென்னையிலுள்ள எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம் மையங்களில்தான் இந்த நூதன மோசடி நடந்திருப்பதாக வங்கி நிர்வாகம் தரப்பில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. பணத்தை டெபாசிட் மற்றும் பணம் எடுக்கும் வசதியுள்ள சிடிஎம் (Cash Deposit Machine) இயந்திரங்களில் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பணத்தை எடுக்கும் வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள், பணம் வந்தவுடன் அதை உடனடியாக எடுக்க மாட்டார்கள். பணம் எடுக்கவில்லை என்றால் குறிப்பிட்ட நிமிடத்துக்குப் பிறகு அது மீண்டும் இயந்திரத்துக்குள் உள்ளே சென்றுவிடும். பணம் உள்ளே செல்வதற்குச் சில நொடிகளுக்கு முன் இயந்திரத்தில் உள்ள சென்சாரையும் ஷட்டரையும் விரல்கள் மூலம் மோசடிக் கும்பல் தடுத்து நிறுத்தி பணத்தை எடுத்திருக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் எடுக்கவில்லை என்று மெஸேஜ் வரும். இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணத்தை எடுத்து, லட்சக்கணக்கில் வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்தக் கும்பல். இந்த மோசடி குறித்து ஆரம்பத்தில் வங்கி நிர்வாகத்துக்கு தகவல் தெரியவில்லை. ஆனால் ஏடிஎம் மையங்களில் வைக்கப்படும் பணத்தையும், அதை எடுத்தவர்களின் விவரங்களையும் வங்கி நிர்வாகம் ஆய்வு செய்தபோதுதான் இந்த மோசடி நடப்பது தெரியவந்திருக்கிறது. இது பழைய டெக்னிக் என்றாலும் ஜூன் மாதம் 17-ம் தேதி இந்த மோசடியில் வடமாநில இளைஞர்கள் வளசரவாக்கம், வடபழனி, ராமாபுரம், வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட இடங்களிலுள்ள ஏடிஎம் மையங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இந்த மோசடி குறித்து வேளச்சேரி, தரமணி, வடபழனி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்குப் புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சென்னை முழுவதும் இந்த மோசடி நடந்திருப்பதால், மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடிப் பிரிவு போலீஸார் இந்த வழக்கை விசாரித்துவருகிறார்கள். ஏடிஎம் மையங்களிலுள்ள சிசிடிவி ஆதாரங்களை வங்கித் தரப்பில் கொடுத்திருக்கிறார்கள். அதை ஆய்வு செய்தபோது ஹெல்மெட் அணிந்தபடி இளைஞர் ஒருவரும், அவருடன் இன்னொரு இளைஞனும் ஏடிஎம் மையத்தின் முன் நிற்கிறார்கள். பிறகு அவர்கள் ஆட்கள் வருகிறார்களா என நோட்டமிட்ட பிறகு உள்ளே செல்கின்றனர். அப்போது சிடிஎம் இயந்திரத்தில் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்கிறார்கள். பணம் வந்ததும் அதை எடுக்காமல், பணம் உள்ளே செல்லும் சமயத்தில் சென்சாரைத் தடை செய்து பணத்தை எடுத்து பாக்கெட்டில் வைக்கும் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.
அது தொடர்பாக விசாரித்தபோது டெல்லியிலுள்ள வங்கிக் கணக்கை இந்தக் கும்பல் பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. அவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்துவருகிறோம். இந்த மோசடி சம்பவத்துக்குப் பிறகு குறிப்பிட்ட மாடல் கொண்ட சிடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க எஸ்.பி.ஐ வங்கி தடை விதித்திருக்கிறது. சிடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் பணத்தை எடுத்த கும்பலைப் பிடித்தால் மட்டுமே எவ்வளவு ரூபாய் எடுத்தார்கள் என்ற விவரம் தெரியவரும். வங்கித் தரப்பில் 15 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருப்பதாகத் தகவல் தெரிய வந்திருக்கிறது. மோசடிக் கும்பல் டூ வீலரைப் பயன்படுத்தியிருக்கிறது. அந்த வாகன பதிவு நம்பர் அடிப்படையிலும் விசாரணை நடந்துவருகிறது" என்றார்.
இந்த மோசடி குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மத்திய குற்றப்பிரிவின் போலீஸ் உயரதிகாரிகள், வங்கி அதிகாரிகள் ஆகியோருடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது மோசடி நடந்தது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
நன்றி : விகடன்