கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்: மகள்களை அரசுப் பள்ளியில் சேர்த்த ஐஆர்எஸ் அதிகாரி ஷெரின்...

 


மாற்றம் நம்மில் இருந்தே தொடங்க வேண்டும் என்கிறார், தன் மகள்களை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ள ஐஆர்எஸ் அதிகாரி ஷெரின் சோமிதரன். அரசு ஊழியர்கள், சமுதாயத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள், அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுக்கிறா.


மதுரை அருகே திருப்பாலை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஷெரின் சோமிதரன். ஐஆர்எஸ் அதிகாரியான இவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்திய வருவாய்த் துறையில் ஜிஎஸ்டி இணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அவர் தனது குழந்தைகளான ஆதிரை, ரெனி ஆகிய இருவரையும் அரும்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துள்ளார். ஆதிரை இரண்டாம் வகுப்பிலும் ரெனி எல்கேஜி வகுப்பிலும் சேர்ந்துள்ளனர்.


மகள்களை அரசுப் பள்ளியில் சேர்த்தது ஏன் என்பது குறித்து ஷெரின் ஐஆர்எஸ் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் விரிவாகப் பேசினார்.


''நான் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்ததால் அத்தகைய பள்ளிச் சூழலை உணர்ந்திருக்கிறேன். அது என் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன். பொதுவாகவே நானும் ஆவணப்பட இயக்குநராகிய கணவரும் மாற்றுச் சிந்தனை கொண்டவர்கள்தான். இருவரும் இயற்கை விவசாயப் பண்ணையில்தான் எந்தவித ஆடம்பரச் செலவும் இல்லாமல் கழிவுகளை உருவாக்காமல் திருமணம் செய்துகொண்டோம். நம்மாழ்வாருடன் இணைந்து பயணித்திருக்கிறோம். இயற்கை, சூழலியல், மண் சார்ந்த விருப்பங்கள் உண்டு.


மகள்கள் பிறந்ததில் இருந்தே அவர்களை அரசுப் பள்ளியில் சேர்ப்பது குறித்து யோசித்தோம். பாடங்கள், மதிப்பெண்கள், வேலை சார்ந்து மட்டுமே அவர்களை இயங்க வைக்காமல் வாழ்க்கையின் மீது தன்னம்பிக்கையை, பிடிப்பை ஏற்படுத்த ஆசைப்பட்டோம்.


அதேபோலப் பல தரப்பட்ட மக்களுடன் அவர்கள் பழக வேண்டும் என்று விரும்பினோம். கல்வி வணிகமயமாகி வரும் சூழலில், பள்ளி என்பது அனைத்துத் தரப்பு மக்களுக்குமானதாக இருக்க வேண்டும். அதற்கு அரசுப்பள்ளி சரியானதாக இருக்கும் என்று முடிவு செய்தோம். மற்ற பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளி மாணவர்கள், எந்த ஒரு சூழலையும் தைரியத்துடனும் நேர்மறைச் சிந்தனையுடனும் அணுகுவார்கள்'' என்கிறார் ஷெரின்.


அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்துத் தொடர்ந்து பொதுச் சமூகத்தில் ஐயங்கள் எழுப்பப்படுவது குறித்துக் கேட்டபோது, ''ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், சமுதாயத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள், அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அதன்மூலம் இயல்பாகவே பள்ளிகளின் உள் கட்டமைப்பு, வசதிகள், கல்வித் தரம் குறித்த கேள்விகள் எழுப்பப்படும். அவற்றை அமைப்பதற்கான கட்டாயம் அரசுக்கு ஏற்படும்.


இதன் மூலம் கிராமங்களில் உள்ள ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் அடுத்தகட்டத்துக்கு வளர்ச்சி அடையும். எனினும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிறப்பாகச் செயல்படும் அரசுப் பள்ளிகளைத் தேடி அங்கு சேர்க்க பல்வேறு வாய்ப்புகள் உள்ளன'' என்று ஷெரின் கூறுகிறார்.


அரசுப் பள்ளியில் மகள்களைச் சேர்த்தது குறித்து சக அலுவலக நண்பர்கள் கருத்து என்னவாக இருந்தது என்று கேட்டதற்கு, ''பெரும்பாலானோர் தைரியமான, வரவேற்கத்தகுந்த, முன்மாதிரியான முடிவு என்றுதான் கூறினர். அரசுப் பள்ளிகள் குறித்த பிம்பம் மாறியதன் அடையாளமாகத்தான் இதை நினைக்கிறேன். அதேவேளையில் சில ஆண்டுகளுக்கு முன்னால் இத்தகைய நிலை இல்லை'' என்று புன்னகைக்கிறார்.


பெருந்தொற்றுக் காலகட்டத்தில் பள்ளிகள் ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள சூழலில் அரசுப் பள்ளியில் சேர்த்தது குறித்தும் பேசுகிறார் ஷெரின். ''கற்றல் என்பது வாழ்க்கை முழுமைக்குமான நிகழ்வு. குழந்தைகள் பள்ளியில் மட்டுமே கற்பதில்லை. அது ஒரு பகுதிதான். இந்த ஊரடங்கு காலகட்டத்தில் என்னென்ன முறைகளில் அவர்களுக்குப் படிக்க வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வகையில் படிக்கட்டும். இதனால் அவர்கள் படிப்பதற்கான வேகம் வேண்டுமானால் குறைந்திருக்கலாம். அதை மதிப்பெண்கள், தேர்வுகள் என்று மட்டுமே பார்க்க வேண்டியதில்லை என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


ஒவ்வொரு குழந்தைக்கும் எந்த வகையிலாவது கற்றல் நிகழ்ந்துகொண்டே இருக்கும் என்று நம்புகிறேன். படிப்பு மட்டுமல்லாமல், இயற்கை விவசாயம், நெசவு, தையல், தச்சு வேலை என கலைகள் சார்ந்தும் மகள்களை வளர்த்தெடுக்க ஆசை. அரசுப் பள்ளிகளில் இத்தகைய ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.


அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல் அதிகாரமிக்க பதவியில் இருப்போர், தொழிலதிபர்கள் என சமுதாயத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள், தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்தால் இவை அனைத்தும் சாத்தியமாகும்'' என்று விடைகொடுக்கிறார் ஷெரின் ஐஆர்எஸ்.


க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in


நன்றி: இந்து தமிழ் திசை நாளிதழ்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருவாரூர் மாவட்டத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - தேர்வு தேதி மாற்றம்

திருவாரூர் மாவட்டத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - தேர்வு தேதி மாற்றம் திருவாரூர் மாவட்டத்தில் வரும் 7ம் தேதி உலகப் பிரசி...