பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருவேன் என்று வாக்குறுதி அளித்து அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம் போட்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று எதிர்க்கட்சித் தலைவர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மடிக்கணினி திட்டம், அம்மா ஸ்கூட்டர் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், திருமண உதவித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை ஆட்சிக்கு வந்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறுத்திவிட்டார் என்று குற்றம்சாட்டினார்.
அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி எனக்கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் கண்ணை திறந்து பார்த்தால் அதிமுக ஆட்சிக்காலம் வெளிச்சமான ஆட்சிக்காலம் என்பது தெரியும் என்று கூறினார்.
நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி, பல வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனை நிறைவேற்றாமல் மக்களுக்கு நாமத்தை போட்டு விட்டு 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக பொய் கூறி வருவதாக எடப்பாடி பழனிசாமி சாடினார். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவேன் என்ற வாக்குறுதியை அளித்து அரசு ஊழியர்களை வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் தற்போது வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம் போட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என்று தேர்தலில் பொதுமக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.