கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"மாநிலப் பாடத்திட்டம் தரம் தாழ்ந்தது ("State Board is very low...")" என்ற தனது கூற்றை ஆளுநர் திரு ஆர். என். இரவி அவர்கள் திரும்பப் பெற வேண்டும் அல்லது ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடியாக விலக வேண்டும் - பிரின்ஸ் கஜேந்திர பாபு....

 


"மாநிலப் பாடத்திட்டம் தரம் தாழ்ந்தது ("State Board is very low...")" என்ற தனது கூற்றை ஆளுநர் திரு ஆர். என். இரவி அவர்கள் திரும்பப் பெற வேண்டும் அல்லது ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடி விலக வேண்டும்....


பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை நாள் 02.09.2024


தமிழ்நாடு ஆளுநர் திரு.‌ஆர். என். இரவி அவர்கள் பள்ளி விழா ஒன்றில் பேசும் போது "தமிழ்நாடு பாடத்திட்டம் மிகவும் கீழ் நிலையில் உள்ளது" என்று பேசியிருப்பது அவர் வகிக்கும் பொறுப்பிற்கு மிகவும் கண்ணிய குறைவான செயல். 



திரு. ஆர். என். இரவி அவர்கள் பேசியுள்ளது உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல, மாணவர்களை மிகப் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் செயல். 


மாணவர்கள் அவர்தம் பெற்றோருக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதுடன், தனியார் நடத்தும் மத்தியப் பாடத் திட்டப் பள்ளிகளை ஊக்குவிக்கும் தந்திர மிக்க உரை.‌


தமிழ்நாடு அரசு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களிடம் அவர்கள் படிக்கும் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய ஆளுநர், அப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் "நமக்கு ஒரு பாடத்திட்டம் உள்ளது, அதை நீங்கள் பின்பற்றுகிறீர்கள். அதைத் தாண்டி நீங்கள் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.‌ ஏனெனில், நமது மாநிலத்தில் உள்ள பாடத்திட்டம், குறிப்பாக மாநிலப் பாடத்திட்டம் மிகவும் கீழ் நிலையில் உள்ளது" ("We have a syllabus, which you follow. But, I urge you to think beyond it. Because (the) syllabus in our State, especially (that of the) State Board is very low..."  - The Hindu, Chennai Dated September 2,2024) என்று கூறியுள்ளார்.‌ இந்த உரை மிகவும் அநாகரிகமானது. 


பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக, தொண்டுள்ளம் கொண்ட பெரியவர்களால் உருவாக்கப்பட்டு,  சென்னையின் முதன்மையான பெண்கள் பள்ளிகளில் ஒன்றாக திகழும் நூற்றாண்டுப் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், கடந்த நூறு ஆண்டுகளாக தரம் தாழ்ந்த பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு நடத்தி வருகிறதா? என்ற கேள்வியை‌ எழுப்பும் உரையாக‌ ஆளுநர் உரை அமைந்துள்ளது. 


கடந்த நூறு ஆண்டுகளில் இந்த பள்ளி பின்பற்றும் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவிகள் யாரும் எந்த பயனும் அடையாமல் போய்விட்டனரா? 


இப்பள்ளியில் பின்பற்றும் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவிகளின் அறிவு நம் சமூகத்திற்கும், நாட்டிற்கும் பயன்படாமல் போய்விட்டதா? 


வடசென்னையின் மையப் பகுதியில் இயங்கி வரும், மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும், நூற்றாண்டு பழமைவாய்ந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் இந்திய சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு எந்த பங்களிப்பும் செய்யவில்லையா? 


என்ற கேள்விகளை ஆளுநர் உரை எழுப்புகிறது. 


ஆளுநர் அவர்கள்  மாநிலப் பாடத்திட்டம் மிகவும் தரம் தாழ்ந்தது (State Board is very low) என்று எதன் அடிப்படையில் கூறுகிறார்? 


தரத்தை அளக்க என்ன அளவுகோல் ஆளுநரால் பயன்படுத்தப்படுகிறது? 


மாநிலப் பாடத்திட்டத்தை எந்த பாடத்திட்டத்துடன் ஒப்பாய்வுச் செய்தார்? எப்போது செய்தார்? எந்த வகையில் தரம் தாழ்ந்து இருப்பதாக கண்டறிந்தார்? 


மாநிலத்தின் தலைவராக உள்ள‌ ஆளுநர், அவ்வாறு ஆய்வுகள் மேற்கொண்டு இருந்தால், தான் ஆய்ந்தறிந்தவற்றை மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறையிடம் தெரிவித்தாரா? ஒப்பீட்டு ஆய்வறிக்கையை மாநில அரசிடம் வழங்கி கருத்து கோரினாரா? 


இவை எதையுமே ஆளுநர் செய்ததாக அவரே கூறவில்லை. தான் பார்த்தாக ("I can see") கூறுவதற்கும், தான் ஆராய்ந்து அறிந்துக் கொண்டதாக கூறுவதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது. 


மாநிலப் பாடத்திட்டம் போட்டிகளுக்கு தகுதியானதாக இல்லை என்ற விமர்சனத்தை போகிறபோக்கில் பொத்தாம் பொதுவாக வைப்பது மாநிலப் பாடத்திட்டத்தைச் சிறுமைப்படுத்தும் நோக்கம் கொண்டது. 


என்சிஇஆர்டி (NCERT) தயாரித்த இயற்பியல் பாடப் புத்தகம் அணு குறித்து 2017யில் ஒரு விதமாகவும் 2020க்கு பின்னர் வேறு விதமாகவும் உள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) உச்ச நீதிமன்றத்தில் "நீட்" முறைகேடுகள் தொடர்பான வழக்கில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது. 


வேறு வழி இல்லாமல் இரண்டு வகையான விடைகள் மாணவர்கள் எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, அதன் விளைவாக இரண்டு விதமான பதில்களுக்கும்  மதிப்பெண் வழங்கப்பட்டதாக தேசியத் தேர்வு முகமை தெரிவித்தது‌. 


ஒரு கேள்விக்கு ஒரு பதில்தான் இருக்க முடியும் என்று கருதிய உச்ச நீதிமன்றம், எது சரியான விடை என்று கண்டறிய தில்லி ஐஐடியை நாடவேண்டிய அவசியம் ஏற்பட்டதை உலகமே பார்த்து சிரித்தது என்ற செய்தியை ஆளுநர் திரு.‌ஆர். என்.‌இரவி படிக்கத் தவறிவிட்டாரா?  


தேசிய தேர்வு முகமையால் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, கேள்வியை தயார் செய்த அமைப்பு,  "இதுதான் இந்த கேள்விக்கு விடை" என்று திட்டவட்டமாக கூற முன்வரவில்லை. 


கேள்வியை தயார் செய்தவருக்கு எது சரியான விடை என்று தெரியவில்லை. பாடநூலில் உள்ளதைத் தான் சரியான விடையாக எடுத்துக் கொள்கிறார். 


இவ்வளவுதான் என்சிஇஆர்டி (NCERT) மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) ஆகியவற்றின் தரமும் தகுதியும். 


இப்படிப் பட்ட அமைப்புக்கள்தான் மருத்துவப் படிப்பிற்கு  தகுதியான மாணவர்களை கண்டறிவார்களாம்.‌


அணுவின் நிலைத்தன்மை குறித்து 2017க்கு  பின்னர் ஏதாவது புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளதா? 


2017க்கு முன் இருந்த அணு நிலைத்தன்மை குறித்து புரிதலில் 2017 க்கு பின்னர் ஏதாவது மாற்றம் நிகழ்ந்துள்ளதா? 


அவ்வாறு இல்லை என்றால் எப்படி 2017க்கு முன் இருந்த என்சிஇஆர்டி பாடப் புத்தகம் ஒரு விதத்திலும், 2017 க்கு பின்னர் உருவான என்சிஇஆர்டி பாடப் புத்தகம் வேறு விதத்திலும் அணு குறித்து எழுதியிருக்க முடியும். 


இதைப் பின்பற்றிய சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களில் யார் தரமானவர்கள்? 2017 க்கு முன் படித்தவர்களா? பின்னர் படித்தவர்களா? 


இந்த கேள்விகளுக்கு ஆளுநர் திரு. ஆர். என். இரவி பதில் சொல்ல வேண்டும். 


தமிழ்நாட்டில் மாணவர்கள் மனங்களில் தாழ்வு மனப்பான்மை உருவாகக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் கல்வி சமச்சீராக‌ இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பாடத்திடத்தை  உருவாக்கியது.  


மாநிலப் பாடத்திட்டம் தரமற்றது என்று தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், அதை தொடர்ந்து உச்சநீதிமன்றமும் மிக ஆழமாக ஆராய்ந்து, விவாதித்து, தனது தீர்ப்பில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் தரமற்றது என்ற வாதத்தை நிராகரித்து, மாநிலப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது.


மாநிலப் பாடத் திட்டத்தை மாநில அரசு தொடர்ந்து செழுமைப்படுத்தி வருவதுடன், பல புதிய அம்சங்களை இணைத்து மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் பாடநூல்கள் தயாரிக்கிறது. 


தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET)  என்ற ஒரு சூழ்ச்சி வலையில் மாணவர்கள் சிக்கித் தவிக்கும் நிலையில்,  எத்தகையப் போட்டியையும் எதிர்கொள்ளும் உள்ளடக்கம் கொண்டதாக பாடநூல்கள் மாநில அரசால் தயாரிக்கப்பட்டுள்ளச் சூழலில், மாணவர்களிடையே ஆளுநர் நிகழ்த்தியுள்ள, எந்தவித அடிப்படை ஆய்வும் இல்லாத, அவதூறு பரப்பும் உரை கண்டனத்திற்குரியது. 


தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்கள், அதன் ஏற்பில் இயங்கும் பல நூறு கல்லூரிகள், இவற்றில் பயிலும் பல இலட்ச மாணவர்களில் பெரும் பகுதியினர் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றவர்கள்.


வின்வெளி ஆய்வில் கோலோச்சும் இஸ்ரோ விஞ்ஞானிகள் பலரும் மாநிலப் பாடத்திட்டத்தில், மாநில அரசுக் கல்லூரிகளில் பயின்றவர்கள். 


மிகப் பெரும் அளவில் துறை சார்ந்த ஆளுமைகளை உருவாக்கித் தந்துள்ளதன் மூலம் இந்திய அறிவியல், பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு அளப்பரிய தொண்டு செய்துள்ளது மாநில அரசுப் பள்ளிகளும் அதில் பின்பற்றப்படும் மாநிலப் பாடத்திட்டமும்.


ஆளுநர் என்ற பதவியை வகிப்பதனால்,  பதவி வழிப் பொறுப்பாக தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக பொறுப்பு வகிக்கும் திரு. ஆர். என். இரவி அவர்கள், பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அனைத்து நிலையிலும் செயல்படும் தமிழ்நாடு மாநில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை மிகவும் சிறுமைப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். 


குழந்தைப் பருவ மாணவர்களிடம் பாடத்திட்டம் குறித்த தவறான விமர்சனங்களை முன்வைத்ததின் விளைவாக, மாநிலப் பாடத்திட்டதில் பயிலும் மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார். மன ரீதியாகவும், அதன் விளைவாக உடல் ரீதியாகவும் மாணவர்கள் பாதிப்படையும் வகையில் பேசப்பட்டப் பேச்சு கண்டனத்திற்குரியது. 


"மாநிலப் பாடத்திட்டம் தரம் தாழ்ந்தது ("State Board is very low...")" என்ற தனது கூற்றை ஆளுநர் திரு ஆர். என். இரவி அவர்கள் திரும்பப் பெற வேண்டும் அல்லது ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடி விலக வேண்டும். 


பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

பொதுச் செயலாளர்

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

மின்னஞ்சல்: spcsstn@gmail.com

தொடர்பு எண்: 94456 83660


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...