பதவிக்குதான் மரியாதை - மனிதனுக்கு இல்லை - இன்று ஒரு சிறுகதை
Honour is for the position - not for the man - Today's Short Story
நான் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன்...
உயர் பதவிகளில் இருந்தபோது தீபாவளிக்கு பரிசுப் பொருட்களுடன் எனக்கு வாழ்த்து சொல்பவர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பர்.
அவர்கள் பரிசுப் பொருளாக அளித்தபல வகையான இனிப்புகள், பாதாம் பிஸ்தா பேரீச்சை போன்றவை நிறைந்த பெட்டிகள், இன்னும் பிற பரிசுகள் என, ஒருவர் பின் ஒருவர் என என் அறையில் உள்ளே நுழைந்தால்! ஏதோ இனிப்பு பரிசு பொருட்கள் விற்கும் கடையைப் போல எனது அறை இருக்கும்.
என்னால் முடிந்தவரை என்னைச் சுற்றி இருப்போருக்கு வந்த பரிசுகளை பங்கிட்டு அளித்த பின்னும்! என் வீடு பரிசுப் பொருட்களால் நிறைந்திருக்கும்.
நான் ஓய்வு பெற்றபின் வந்த முதலாண்டு தீபாவளிக்கு! நான் பணியில் இருந்த நினைவில்!
எனக்கு ஏராளமானோர் பல பரிசு பொருட்களுடன் வாழ்த்துச் சொல்ல வருவர் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன்!
யாருமே வரவில்லை.
நான் ஏமாந்து, விரக்தி அடைந்து மனதை வேறு பக்கம் திருப்பி! ஆன்மீக செய்தித்தாள் ஒன்றை படிக்கத் தொடங்கினேன்.
அதில் ஒரு சிறுகதையை அதிர்ஷ்டவசமாகப் பார்த்தேன்.
அந்தக்கதை சுமை தூக்கிச் செல்லப் பயன்படுத்தும் கழுதை பற்றியது.
ஒரு முறை அக்கழுதையின் மீது வழிபடும் தெய்வ உருவங்களை ஏற்றிச் செல்லும் பணியை கழுதையின் உரிமையாளர் செய்தார்.
பயணம் தொடக்கத்திலிருந்து முடிவு வரை பல்வேறு இடங்களில் ஏராளமானோர் கழுதையின் முன்னர் வந்து நின்று பயபக்தியுடன், மரியாதையுடன் வணங்கினர்.
இவ்வாறு தன்னை அனைவரும் வணங்குவதை கண்டு கழுதைக்கு மிகவும் மகிழ்ச்சி.. பெருமை !
தெய்வ வடிவங்களை உரிய இடத்தில் இறக்கிவிட்டு, திரும்பும் பயணத்தில்
காய்கறி மூட்டையை அதன் முதுகில் ஏற்றி பயணத்தைத் தொடர்ந்தார் கழுதையின் உரிமையாளர்.
பயணத்தில் ஆங்காங்கே ஏராளமானோர் வந்து தன்னை மரியாதையுடன் கும்பிடப் போகிறார்கள் என்று எதிர்பார்த்த கழுதைக்கு! ஒரே ஆச்சரியம்.
யாரும் வந்து கழுதையை வணங்கவில்லை.
வெறுத்துப்போன கழுதை பிறருடைய கவனத்தைக் கவர கத்தத் தொடங்கியது.
கடுப்பான உரிமையாளரும் பக்கத்தில் நின்றவர்களும் கழுதையை அடிக்கத் துவங்கினர்.
அவர்கள் அடிக்கும் போது எல்லோராலும் வணங்கப்பட்ட நான்! வரும் போது என்ன தவறு செய்தேன்? என்று கழுதை குழம்பியது !
கழுதையின் கதையைப் படித்த எனக்கு ஒரு ஞானோதயம் உதித்தது.
நான் உயர் பதவியில் இருந்தபோது என்னை சந்தித்து வாழ்த்துச் சொல்லிப் பரிசளித்த அனைவரும், கடவுள் விக்கிரகங்களை வணங்கியவர்கள் தான்.
தன்னை வணங்கியதாக நினைத்த கழுதை போல, எனக்கு தீபாவளிக்கு வாழ்த்து சொல்லி பரிசு அளித்தவர்கள் அனைவரும்,அதுபோலத்தான்
*நான் வகித்த பதவியின் அதிகாரத்திற்காக அதை செய்தார்களே தவிர எனக்கு இல்லை என்று*
அப்போது நான் புரிந்து கொள்ளவில்லை.
இந்தப் புரிதல் வந்தவுடன், பரிசுகளுடன் வாழ்த்து சொல்ல வருபவர்களை எதிர்பார்த்து ஏமாந்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு!
என் மனைவியுடன் இணைந்து சமையல் அறையில் அவளுக்கு உதவத் தொடங்கினேன்.
அவளிடம் கழுதைக் கதையை படித்து நான் பெற்ற ஞானோதயத்தை பகிர்ந்த போது அவள் பதில் சொன்னாள்...
அவ்வப்போது உங்களை நான் கழுதை என்று சொன்ன போது! என் மீது கோபப்பட்டீர்கள்?
இப்போது புரிந்திருக்கும் என்றாள்.