கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Rabies : நம்மை தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை

 


ரேபிஸ் நோய் : நம்மை தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை 


🦮🐕‍🦺🐈🐕🐕‍🦺🦮🐈‍⬛🐕

சமீபத்தில் தெருநாயை சாக்கடையில் இருந்து காப்பாற்றும் போது நாயிடம் இருந்து கடிபட்ட ப்ரிஜேஷ் எனும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த கபடி வீரர் ரேபிஸ் நோய் ஏற்பட்டு துடிதுடித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 


கடந்த இரண்டு மாதங்களில் கேரள மாநிலத்தில் மூன்று சிறு வயதினர் நாய்க்கடிக்குப் பின் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு தடுப்பூசி போடப்பட்ட பின்னரும் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இத்தகைய சூழ்நிலையில் 

ரேபிஸ் குறித்தும், நம்மையும் நம் சுற்றத்தாரையும் தற்காத்துக் கொள்ளத் தேவையான விஷயங்களைப் பற்றி அறிவோம். 


ரேபிஸ் என்பது ஒரு வைரஸ் தொற்று நோயாகும். 


இந்தியாவைப் பொருத்தவரை இந்தத் தொற்று, பெரும்பாலும் நாய்களிடம் ( 95%)   இருந்தும் 

அதன் பின் பூனைகள் (2%), நரி, கீரிப்பிள்ளை (1%) உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து பரவுகின்றது. 


ரேபிஸ் வைரஸ் தொற்றுடைய நாயோ பூனையோ, மனிதர்களைக் கடிக்கும் போதோ பிராண்டும் போதோ அல்லது காயமுற்ற பகுதியில் நக்கும் போதோ அல்லது மனிதர்களின் வாயில் , கண்ணில் அதன் எச்சில் படும் போதோ, ரேபிஸ் வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் செல்கிறது.


இது ஏனைய வைரஸ்கள் போல ரத்த ஓட்டத்தில் கலந்து பரவும் தன்மையற்றது.  மாறாக நரம்புகளில் ஊடுருவி மூளையை நோக்கி மெதுவாக ஊர்ந்து செல்லும் தன்மை கொண்டதாக இருக்கிறது. 


விலங்கிடம் கடிபட்டு தொற்று அடைந்ததில் இருந்து நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கு மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் வரை ஆகும். 


பொதுவாக, எந்த இடத்தில் விலங்கு கடித்திருக்கறது என்பதைப் பொருத்து அந்த காலம் முடிவாகும். 

மூளைக்கு மிக அருகில் இருக்கும் தலை, முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் கடிபட்டால் சீக்கிரமே அறிகுறிகள் தோன்றிவிடும். 


இன்னும் கை, கால்கள், விரல்கள் ஆகிய பகுதிகளில் நரம்புகள் அதிகமாக உணர்வூட்டுவதால் அங்கு உள்ளே செல்லும் வைரஸும் எளிதில் தண்டுவட நரம்பை அடைந்து அங்கிருந்து தண்டுவட நீர் மூலம் மூளையை அடைந்துவிடுகிறது. 

பொதுவாக பெரும்பான்மையான ரேபிஸ் நோயாளர்களில் மூளையை வைரஸ் அடைவதற்கு 21 நாட்கள் நேரம் எடுத்துக் கொள்கிறது. 


ரேபிஸ் நோய் ஏற்பட்டுவிட்டால் மரணம் சம்பவிப்பது 100% உறுதி. 

இதற்குக் காரணம்,

இந்த வைரஸ் மூளையைச் சென்று அடைந்த பிறகே மூளையில் தொற்று (எண்கெஃபாலைட்டிஸ்) ஏற்பட்டதற்கான அறிகுறிகளை வெளியிடும்.  வைரஸானது மூளையைச் சென்று அடைந்து விட்ட பிறகு எந்த சிகிச்சை கொடுத்தும் காப்பாற்றுவது மிகக் கடினம் என்ற நிலையே இப்போது வரை இருந்து வருகிறது. 


காய்ச்சல் 

கடும் தலைவலி 

நீரைக் கண்டு அச்சம் கொள்ளுதல் ( ஹைட்ரோ ஃபோபியா) , 

ஒலியைக் கேட்டு அச்சம் கொள்ளுதல் ( ஃபோனோபோபியா) , 

காற்று மேலே பட்டால் கூட கடும் உடல் வலி ஏற்படும். தொண்டைப் பகுதி தசைகள் லேசாக நீர்பட்டால் கூட இறுக்கிக் கொண்டு மூச்சுத் திணறல் ஏற்படும். 

எச்சில் அதிகமாக சுரக்கும். முதலில் ஆங்காங்கே 

தசை இறுக்க நிலை ஏற்பட்டு, 

பிறகு பக்கவாதம், பிதற்றல் நிலை என்று நோய் முற்றி  மரணம் சம்பவிக்கும்.


எனவே, 

நாய்க்கடியோ பூனைக்கடியோ உதாசீனப்படுத்தாமல் உடனடியாக அதற்குரிய முக்கியமான உயிர்காக்கும் சிகிச்சைகளான 

1.காயத்தைக் கழுவி சுத்தம் செய்தல்

2. ரேபிஸ் தடுப்பூசியை முறையாகப் பெறுதல் 

3. தேவை இருக்கும் இடங்களில், ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் ஊசியைப் பெறுதல் 


ஆகிய மூன்றையும் கட்டாயமாகச் செய்தாக வேண்டும்.


வளர்ப்பு நாய்களால்  ரேபிஸ் தொற்று ஏற்படாது என்றே பலரும் அலட்சியமாக இருக்கின்றனர். 

அவ்வாறின்றி 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த 121 ரேபிஸ் மரணங்களில்  51 மரணங்கள் வளர்ப்பு நாய்க்கடிகளால் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 


நாய்க்கடி/ பூனைக்கடி விஷயத்தில் முதலும் முக்கியமானதும் கடியை வகைப்படுத்துவதாகும். 


வகை ஒன்று 

CATEGORY I 


விலங்கைத் தொடுவது, 

விலங்குக்கு உணவு வழங்குவது, 

காயம் ஏற்படாத நல்ல நிலையில் உள்ள தோலில் விலங்கு நக்குவது, காயம் ஏற்படாத நல்ல நிலையில் உள்ள தோலில் விலங்கின் எச்சில் மற்றும் சிறுநீர் உள்ளிட்ட எச்சங்கள் படுவது .


மேற்கூறியவற்றால் ரேபிஸ் நோய் பரவுவதில்லை. 

எனவே இவர்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. 


வகை இரண்டு 

CATEGORY II 


லேசான ரத்தம் வெளியே வராத அளவு 

சிறிய அளவு பிராண்டல்/ பல் பதியாத அளவு  சிறிய அளவு கடி 


 

கடிபட்ட இடத்தை சுத்தமாகக் கழுவ வேண்டும் அதனுடன் 

ரேபிஸ் தடுப்பூசி ( ANTI RABIES VACCINE) வழங்கப்பட வேண்டும். 


வகை மூன்று

( CATEGORY III)  


ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் ரத்தம் வெளியே வருமாறு தோல் முழுமையையும் உள்ளடக்கிய கடி / பிராண்டல்/ காயம் ஏற்பட்ட இடத்தில் நக்கப்படுதல்/ கண், வாய் உள்ளிட்ட இடங்களில் விலங்கின் எச்சில்படுவது ஆகியன மூன்றாம் நிலை கடியாகும். 


கடிபட்ட இடத்தைக் கழுவுதல் + ரேபிஸ் தடுப்பூசியைப் பெறுதல் அதனுடன் கடிபட்ட இடத்தில் ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் ஊசி கட்டாயம் வழங்கப்பட வேண்டும். 


----- 


கடிபட்ட பிறகு உடனே செய்ய வேண்டியது 

காயம்பட்ட இடத்தை ஓடும் குழாய் நீரில் தண்ணீரைத் திறந்து விட்டு நன்றாக சோப் போட்டுத் தேய்த்து 15 நிமிடங்கள்  கழுவ வேண்டும். பிறகு கடிபட்ட இடத்தில் போவிடோன் அயோடின் போன்ற கிருமி நாசினியை  உபயோகிக்கலாம். 


மூன்றாம் வகைக் கடியாக இருப்பின் கடித்த இடத்தைச் சுற்றி ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் (RABIES IMMUNOGLOBULIN)  ஊசியை கட்டாயம் வழங்க வேண்டும். கூடவே டெட்டானஸ் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ள வேண்டும். 


- கடிபட்ட இடத்தில் வைரஸ் இருக்கும் என்பதால் கட்டாயம் கடிபட்ட இடத்தை வெறும் கையால் தொடுதல் கூடாது 

- கட்டாயம் காயத்தின் மீது மண், காபித் தூள், எலுமிச்சை, மூலிகைகள், வெற்றிலை போன்றவற்றை அப்புவது தவறு. 

-------


கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் -


எச்.ஐ.வி நோயாளிகள் , புற்று நோய் கீமோதெரபி சிகிச்சையில் இருப்பவர்கள், எதிர்ப்பு சக்தி குன்றியோர் , ஸ்டீராய்டு மாத்திரைகள் உட்கொள்பவர்கள், 

ஹைட்ராக்சி குளோரோகுயின், மலேரியா சிகிச்சையில் பயன்படும் குளோரோகுயின் போன்ற மாத்திரைகளை உட்கொள்வோருக்கு 

இரண்டாம் வகை கடி ஏற்பட்டிருந்தாலும் 

அதை மூன்றாம் வகைக் கடியாகக் கருத்தில் கொண்டு 

ரேபிஸ் தடுப்பூசியுடன் 

கட்டாயம் ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் வழங்கப்பட வேண்டும். ரேபிஸ் தடுப்பூசி மட்டுமே இவர்களுக்கு  எதிர்ப்பு சக்தியை போதுமான அளவு வழங்காது  என்பதே இதற்கான காரணம். 


ரேபிஸ் தடுப்பூசி மற்றும் இம்யூனோகுளோபுளின் - அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகின்றன.  


கடிபட்ட உடனே நன்றாக பதினைந்து நிமிடங்கள் ஓடும் குழாய் நீரில் சோப் போட்டுக் கழுவி விட்டு, அரசு மருத்துவமனைக்கு விரைந்திட வேண்டும். 


கடிபட்ட இடத்தில் ரத்தம் வந்ததென்றால் அதை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். 

மருத்துவர் கடியை சரியாக வகைப்படுத்துவதற்கு இந்தத் தகவல் உறுதுணையாக இருக்கும். 


எவ்வளவு சீக்கிரம் 

தடுப்பூசி பெறுகிறோமோ அவ்வளவு நல்லது. 

உள்ளே சென்ற வைரஸ் மூளையை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்குமுன் நாம் எதிர்ப்பு மருந்தை வழங்கியாக வேண்டும். 


முதல் தவணை ( 0 நாள்) 

அதிலிருந்து மூன்றாவது நாள், பின் ஏழாம் நாள், பின் இருபத்தி எட்டாம் நாள் என்று நான்கு தவணை மருத்துவமனைக்குச் சென்று தோலினூடே வழங்கப்படும் ஊசியைச் முறையாகச் சரியாகப் போட்டுக் கொள்ள வேண்டும். 


தனியாரில் தசை வழி வழங்கப்படும் ரேபிஸ் தடுப்பூசி பெறுபவர்கள்

 

முதல் தவணை ( 0 நாள்) 

அதிலிருந்து மூன்றாவது நாள், பின் ஏழாம் நாள், பின் பதினான்காம் நாள், அதன் பின்  இருபத்தி எட்டாம் நாள் என்று ஐந்து  தவணை  சென்று தசைக்குள் வழங்கப்படும் ஊசியை முறையாகச் சரியாகப் போட்டுக் கொள்ள வேண்டும். 


தடுப்பூசி பெறும் இந்த ஒரு மாத காலத்தில் 

உணவுப் பத்தியம் ஏதுமில்லை. மாமிசம், மீன், முட்டை உள்ளிட்ட அனைத்தையும் சாப்பிடலாம். 


தமிழ்நாட்டில் 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த ரேபிஸ் மரணங்களில் செய்யப்பட்ட ஆய்வில், 

மரணமடைந்தவர்களில் 73.6% பேர் கடிபட்ட பிறகான ரேபிஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளவில்லை என்பதும் 

17.4% பேர் ஆரம்ப  தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டாலும்  

முழுமையாக நான்கு தவணைகளையும் ( 0, 3,7,28) முழுமையாக முடிக்கவில்லை. 

ஒரே ஒரு நபர் தான் முழுமையாக தடுப்பூசி பெற்றிருந்தது தெரிய வந்தது. 


அந்த ஆய்வில், இறந்த நபர்களில் 83.5% பேர் நாய்களால் கடிக்கப் பெற்று  , 73.5% பேர் மூன்றாம் வகை ( CATEGORY III) கடியைப் பெற்றிருந்தும் அவர்களில் 5% பேர் மட்டுமே ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் பெற்றிருந்தது தெரியவந்தது. இதிலிருந்து, கடியை வகைப்படுத்துதலின் முக்கியத்துவமும் ,

மூன்றாம் வகைக் கடிக்கு கட்டாயம் இம்யூனோகுளோபுளின் வழங்கப்பட வேண்டியதன் அத்தியாவசியம் குறித்தும் நாம் அறிய முடிகிறது. 


வீட்டில் செல்ல நாய்கள் மற்றும் பூனைகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் அவற்றுக்கு வருடாந்திர ரேபிஸ் தடுப்பூசியை முறையாக வழங்கி வர வேண்டும். கூடவே தாங்கள் வளர்க்கும் நாய் மற்றும் பூனையை, தெரு நாய் மற்றும் பூனைகளுடன் கலந்து விடாதவாறு பராமரிப்பதும் அவர்களின் கடமை. 


தடுப்பூசி பெறப்பட்ட நாய், பூனை கடித்தாலும் பிராண்டினாலும் மனிதர்களுக்கு  ரேபிஸ் தொற்று ஏற்படும் வாய்ப்பு அரிதாக உள்ளது. எனவே,  கடித்தது நாம் வளர்க்கும் செல்ல நாயாக இருந்தாலும் சரி. அதற்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் சரி, கடிபட்டவருக்கு ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது. 


ஒருமுறை சரியாக நாய்க்கடிக்குப் பின்பான ரேபிஸ் தடுப்பூசி அட்டவணையை முடித்தவர்கள் ( கட்டாயம் அதற்கான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்)  அதற்குப் பின்பு மூன்று மாதங்களுக்குள் மற்றொரு கடிபட்டால் அவர்களுக்கு காயம்பட்ட இடத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சிகிச்சை மட்டும் பெற்றால் போதுமானது. 

ரேபிஸ் தடுப்பூசி பெறத் தேவையில்லை. 


முந்தைய முழு அட்டவணை தடுப்பூசிகளைப் பெற்று

மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிய நிலையில் தற்போது புதிதாக கடிபட்டிருந்தால், 

முதல் தவணை ( 0 நாள்) 

மற்றும் மூன்றாம் நாள் ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால் போதுமானது. இவர்களுக்கு இம்யூனோகுளோபுளின் தேவையில்லை. 


முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசி ( PRE EXPOSURE PROPHYLAXIS) 


விலங்கு நல ஆர்வலர்கள்,  மருத்துவர்கள், விலங்கு நல ஆர்வலர்கள்,  

நாய் வளர்ப்போர், நாய்களைப் பிடிப்பவர்கள், 

அதிகமான தெரு நாய்கள் இருக்கும் பகுதிகளில் வாழ்பவர்கள் - முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசி பெறுவது குறித்து சிந்தித்து முடிவெடுக்கலாம். 

இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் - குழந்தைகளுக்கு முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசி பெறுவதற்கு ஊக்குவிக்கிறது. 


முன்கூட்டிய ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி அட்டவணை பின்வருமாறு 


தடுப்பூசி பெறும் முதல் நாள் ( 0 நாள்) 

மூன்றாவது நாள் 

21 அல்லது 28வது நாள்

ஆகிய மூன்று தவணைகள் பெற வேண்டும். 


ஒருமுறை முன்கூட்டிய தடுப்பூசிகளை எடுத்தவர்களுக்கு 

அவர்கள் நாய்க்கடி வாங்கும் போது 

முதல் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆகிய இரு தவணைகள் மட்டும் ரேபிஸ் தடுப்பூசி போட்டால் போதுமானது. மேலும் இவர்களுக்கு இம்யூனோகுளோபுளின் வழங்கத் தேவையில்லை. 


 ரேபிஸ் 100% மரணத்தை விளைவிக்கக் கூடிய கொடூர நோயாக இருப்பினும் 

முறையான விரைவான 

சிகிச்சை மற்றும் தடுப்பூசி வழங்குதல் உயிர்களைக் காக்கக் கூடிய நடவடிக்கைகளாகும். 


தொடர்ந்து நடக்கும் ரேபிஸ் மரணங்கள் குறித்த ஆய்வுகளில் தெரிய வருபவை யாதெனில் 


கடிபட்டவர்களுக்கு கடிபட்டதே தெரியாமலும், தெரிந்தாலும் கடிபட்ட இடத்தை சுத்தமாக நன்றாக சோப் போட்டுக் கழுவாமல் இருப்பதும், 

அதற்குப் பின்பு தடுப்பூசி போடாமல் அலட்சியம் செய்வதும், 

தடுப்பூசி போடப்பட்டாலும் வகைப்படுத்துதலில் சிக்கல் ஏற்பட்டு இம்யூனோகுளோபுளின் வழங்கப்படாமல் இருப்பதும், 

குறிப்பிட்ட அட்டவணைப்படி அனைத்து தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெறாமல் இருப்பதும் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. 


எந்தவொரு விலங்குக் கடியையும் அது நாய்க்கடியோ பூனைக்கடியோ அதன் சிறு பிராண்டலையும் 

துச்சமெனக் கருதாமல் அலட்சியம் செய்யாமல் 

உடனடியாக மருத்துவமனை விரைந்து அதற்குரிய சிகிச்சையும் தடுப்பூசியையும் பெறுவோம் என்று உறுதி ஏற்போம். 


ரேபிஸ் நோயால் ஏற்படும் மரணங்களைத் தடுத்திடுவோம்.


இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழின் "நலம் வாழ" பகுதியில் ரேபிஸ் நோய் குறித்த எனது விழிப்புணர்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-07-2025

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-07-2025 - School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...