அஞ்சலகங்களில் கல்வி உதவித்தொகை திட்டம் : செப்டம்பர் 1க்குள் விண்ணப்பிக்கலாம்
தபால் நிலையங்களில் கல்வி உதவித்தொகை திட்டம் செப்டம்பர் 1க்குள் விண்ணப்பிக்க அவகாசம்!
தபால் நிலையங்கள் மூலம் 'தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா' என்ற பெயரில் கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தபால் துறை மூலம் தபால் தலை சேகரிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 'தீன்தயாள் ஸ்பார்ஷ் யோஜனா' என்ற பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்துள்ளனர். இத்திட்டத்தில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறலாம்.
இம்மாணவர்கள் கட்டாயம் தபால் தலை சேகரிப்பு சங்க உறுப்பினராகவோ அல்லது தபால் தலை சேகரிப்பு கணக்கு வைத்திருப்பவராகவோ இருக்க வேண்டும். இத்தகுதியுள்ள மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு ஆண்டுக்கு ரூ.6,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு அளவில் உள்ள மாணவர்கள் இக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, தமிழ்நாடு அளவில் உள்ள மாணவ, மாணவிகள் அந்தந்த தபால் துறை மண்டல தலைவர் அலுவலகங்களுக்கு செப்., 1க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
தென்மண்டல அளவிலான பள்ளி மாணவ, மாணவிகள் தாங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தென்மண்டல தபால் துறை தலைவர், மதுரை மண்டலம், மதுரை - 625 002 என்ற முகவரிக்கு செப்டம்பர் 1 க்குள் கிடைக்கும் விதமாக அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அந்தந்த தபால் கோட்ட கண்காணிப்பாளர் மூலம் மாவட்ட வாரியாக வெளியிட்டு வருகின்றனர்.
இந்த வாய்ப்பை 6 முதல் 9 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு முறை தேர்வு செய்த மாணவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அடுத்த ஆண்டில் தேர்ச்சி பெற்றால் அந்த ஆண்டிற்கான உதவித்தொகை வழங்கப்படும் என தபால் துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.