குடும்ப வறுமையிலும், மகனின் எம்.பி.பி.எஸ்., கனவை, தந்தை நிறைவேற்றியது, கவுன்சிலிங்கில் பங்கேற்றவர்களை நெகிழவைத்தது.
புதுச்சேரி, இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, சென்டாக்
அலுவலகத்தில், நேற்று நடந்த சிறப்பு கவுன்சிலிங்கில், பிம்ஸ் மருத்துவ
கல்லூரியில், ஏற்கனவே கிடைத்த, எம்.பி.பி.எஸ்., சீட்டை, மாணவர்
அரவிந்த்குமார், "சரண்டர்' செய்து விட்டு, அரசு மருத்துவக் கல்லூரியில்,
எம்.பி. பி.எஸ்., சீட்டை தேர்ந்தெடுத்தார். இதனால், பிம்ஸ் மருத்துவக்
கல்லூரியில், ஒரு காலியிடம் ஏற்பட்டது. அந்த இடத்தைத் தேர்வு செய்யும்
வாய்ப்பு, அரசு பொறியியல் கல்லூரி, பி.டெக்., படிக்கும் மாணவர்,
பாலசுந்தரத்திற்குக் கிடைத்தது. ஆனால், எம்.பி.பி.எஸ்., சீட்டை எடுக்க அவர்
தயக்கம் காட்டினார்.
இதனைக் கண்ட சென்டாக் அதிகாரிகள், " பிம்ஸ் மருத்துவ கல்லூரியில்
எம்.பி.பி.எஸ்., சீட் எடுத்தால், ஏற்கனவே அரசு பொறியியல் கல்லூரியில்
சேர்ந்த இன்ஜினியரிங் சீட்டை, "சரண்டர்' செய்ய வேண்டும். மேலும் பொறியியல்
கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியாது. மெடிக்கல் சீட் வேண்டுமா,
இன்ஜினியரிங் சீட் வேண்டுமா என்பதை, நீயே சீக்கிரம் முடிவு செய்து கொள்'
எனக் கூறி, பதிலுக்காகக் காத்திருந்தனர். ஐந்து நிமிடமாகியும்
மாணவனிடமிருந்து பதில் வரவில்லை; மாறாக, கண்களில் கண்ணீர் பெருகியது.
இதைக் கண்ட, அவர் தந்தை ராசு, "அவனுக்குச் சின்ன வயதில் இருந்தே,
எம்.பி.பி.எஸ்., படிக்க வேண்டும் என்பதே ஆசை. நான், "பஸ் செக்கர்' பதவியில்
இருக்கிறேன். குடும்ப பொருளாதார சூழல், கண்முன் நிற்கிறது; யோசிக்கிறான்.
நீங்கள், எம்.பி.பி.எஸ்., சீட்டையே கொடுங்கள். என் உழைப்பின் மீது எனக்கு
நம்பிக்கை இருக்கிறது. அவனை டாக்டருக்குப் படிக்க வைப்பேன்.இவ்வாறு அவர்
கூறவே, மகன் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. குடும்ப வறுமையிலும், மகனின்
எம்.பி.பி.எஸ்., கனவை தந்தை நிறைவேற்றியது உருக்கமாக இருந்தது.