தனியார் பள்ளிகள், மொத்தமாக பாடப் புத்தகங்களை கொள்முதல் செய்யும்போது,
பாடநூல் கழகம் வழங்கும், 5 சதவீத தள்ளுபடி தொகையை, மெட்ரிக் பள்ளி
ஆய்வாளர்கள் பறித்துக் கொள்வதாக, பள்ளி நிர்வாகிகள் தரப்பில் குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
முப்பருவம்: இந்த ஆண்டு, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை,
முப்பருவக் கல்வி முறை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மூன்று
கட்டங்களாக, பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளை
பொறுத்தவரை, பெரும்பாலான நிர்வாகிகள், தமிழக அரசின் பாடப் புத்தகங்களையே
வாங்குகின்றனர். பாடப் புத்தகங்களை, மொத்தமாக கொள்முதல் செய்தால், மொத்த
தொகையில், 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பாடநூல் கழக குடோனில்
இருந்து, பள்ளிக்கு புத்தகங்களை எடுத்துச் செல்லும் போக்குவரத்துச்
செலவிற்கு, இத்தொகையை, பள்ளி நிர்வாகிகள் பயன்படுத்தி வந்தனர். இந்த
நடைமுறை, கடந்த ஆண்டு வரை இருந்தது.
வினியோக மையம்: தனித்தனி பள்ளி நிர்வாகிகளும், பாடநூல் கழக
குடோனில் குவிந்ததால், புத்தக வினியோகத்தில், பல குழப்பங்கள் ஏற்பட்டன. இதை
தவிர்ப்பதற்காக, இந்த ஆண்டு, 40, 50 பள்ளிகளுக்கு ஒரு வினியோக மையம்
ஏற்படுத்தப்பட்டு, அங்கிருந்து, பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்துச்
செல்லும் வகையில், புதிய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை,
மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் செய்தனர். இந்த முறையில், குளறுபடிகளோ,
குழப்பங்களோ எதுவும் ஏற்படவில்லை. ஆனால், பாடநூல் கழகம் வழங்கும், 5 சதவீத
தள்ளுபடி தொகை, அதிகாரிகள் பாக்கெட்டுக்குச் செல்வதாக, பள்ளி நிர்வாகிகள்
குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்க
பொதுச்செயலர் நந்தகுமார் கூறியதாவது: சிறிய பள்ளியில் கூட, 1.5 லட்சம்
ரூபாய்க்கு, பாடப் புத்தகங்களை கொள்முதல் செய்கின்றனர். தஞ்சாவூர்
மாவட்டத்தில் மட்டும், 5 சதவீத கமிஷன் தொகையே, 5 லட்சம் ரூபாய் வரை
வருகிறது. நாகை, திருவாரூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில், கமிஷன் தொகை,
பல லட்சத்தை தாண்டுகிறது.
செலவாகுமா? இவ்வளவு பணமும், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களால்
நியமிக்கப்பட்ட பாடப் புத்தக வினியோக மையத்தின் பொறுப்பாளரிடம் செல்கிறது.
அவர் மூலம், ஆய்வாளர்களுக்குச் செல்கிறது. இவ்வளவு பணத்தையும்,
போக்குவரத்துச் செலவுக்காக, வினியோக மைய பொறுப்பாளர்கள் செலவு செய்ய
வாய்ப்பில்லை. ஏனெனில், பள்ளிகளுக்கு நேரடியாக புத்தகம் வினியோகம்
செய்யாமல், குறிப்பிட்ட இடங்களில் இறக்கி விடுகின்றனர். அங்கிருந்து,
நாங்கள் தனியாக வாகனம் வைத்து, எடுத்து வர வேண்டி உள்ளது. இவ்வாறு
நந்தகுமார் கூறினார்.
பற்றாக்குறை: மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரக வட்டாரத்தின் பதில்:
ஐந்து சதவீத தொகையில், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கோ, இயக்குனரகத்திற்கோ
எவ்வித பங்கும் கிடையாது. இத்தொகை, பாடநூல் கழக குடோனில் இருந்து, பள்ளி
களுக்கு கொண்டு செல்ல ஏற்படும் போக்குவரத்திற்கு செலவிடப்படுகிறது. சில
இடங்களில், இந்தப் பணம் பற்றாக்குறை ஏற்படும் நிலையும் உள்ளது. அதை
சரிசெய்யும் பணியை, சம்பந்தப்பட்ட வினியோக மைய பொறுப்பாளர்களே
செய்கின்றனர். இவ்வாறு, இயக்குனரகவட்டாரங்கள் தெரிவித்தன.
இரு அதிகாரிகள் "சஸ்பெண்ட்': பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன்,
விருதுநகர் மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மெர்சி ஜாய், நெல்லை மாவட்ட
மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ஜாய் எபினேசர் ஹெப்சி ஆகிய இருவரையும், கடந்த
வாரம், "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார். அவர் கூறும்போது,
""தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டு,
அதனடிப்படையில், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதிகாரிகள் தவறு செய்தால்,
கண்டிப்பாக நடவடிக்கை பாயும். பாடப் புத்தக கமிஷன் தொகையில், அதிகாரிகள்
தவறு செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.