டி.என்.பி.எஸ்., குரூப்- 2 தேர்வு வினாத்தாள்
வெளியான வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற அரசின் ஒப்புதல்
கிடைத்ததையடுத்து, வழக்கு தொடர்பான ஆவணங்கள் நேற்று சி.பி.சி.ஐ.டி.,யிடம்
முறையாக ஒப்படைக்கப்பட்டன.
டி.என்.பி.எஸ்.ஸி., சார்பில்
தமிழகம் முழுவதும், 3,631 பணியிடங்களுக்கு ஆகஸ்ட், 12ம் தேதி குரூப்- 2
தேர்வு நடந்தது. இதில், 6.40 லட்சம் பேர் எழுதினர்.தேர்வுக்கு முன்பே,
ஈரோடு, அரூர் மையங்களில் வினாத்தாள் நகல் வெளியானதால், குரூப்2 தேர்வு
ரத்து செய்யப்பட்டது.டி.என்.பி.எஸ்.ஸி., ஈரோடு வட்ட பொறுப்பாளர் லியாகத்
அலிகான் கொடுத்த புகாரின் பேரில், ஈரோடு டவுன் போலீஸார் வழக்கு பதிவு
செய்தனர்.
குமாரபாளைத்தை சேர்ந்த செந்தில், தனக்கொடி, திருச்செங்கோட்டை சேர்ந்த
சுதாகர், கவுந்தப்பாடியை சேர்ந்த வரதராஜன் உள்ளிட்ட பத்து பேரை கைது
செய்தனர்.முக்கிய குற்றவாளியான, சென்னையை சேர்ந்த பாலன் என்ற
ஸ்ரீதர்ராஜிடம் நடத்திய விசாரணையில், திருவள்ளூரை சேர்ந்த தியாகராஜனிடம்
இருந்து வினாத்தாள் வாங்கியதாக தெரிவித்தார்.
தியாகராஜன் கொடுத்த தகவலை அடுத்து, விசாகப்பட்டிணம் சென்ற போலீஸார்,
ஆந்திராவை சேர்ந்த ஆனந்தராவை கைது செய்து, கஸ்டடி எடுத்து
விசாரித்தனர்.இதில், விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த கக்கூன் என்பவர் பெயரை
கூறியதால், அவர் தான் முக்கிய குற்றவாளியென முடி செய்தனர்.
இவ்வழக்கில், முக்கிய குற்றவாளிகள் ஒடிசா, கொல்கத்தா, ஆந்திரா என
வெளிமாநிலங்களில் இருப்பதால், உள்ளூர் போலீஸாரால் முழுமையாக எடுத்துச்
செல்ல முடியவில்லை. வழக்கை சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டது.
தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்ததையடுத்து, ஈரோடு டவுன் போலீஸ்
இன்ஸ்பெக்டர் வேலுமணி, கோவையில் சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., ராஜராஜனிடம்,
வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களையும் ஒப்படைத்தார். வழக்கு
சி.பி.சி.ஐ.டி.,க்கு மாறியுள்ளதால், விசாரணை வேகமெடுத்து, விரைவில் முக்கிய
குற்றவாளிகள் அனைவரும் பிடிபடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.