கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடங்களுக்கு, இந்த மாதம், 30ம் தேதி வரை,
நியமன உத்தரவுகளை வழங்க, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை
விதித்துள்ளது. கிராம நிர்வாக அதிகாரிகள், 3,484,
பணியிடங்களை நிரப்ப, 2010ம் ஆண்டு, அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத்
தொடர்ந்து, தேர்வு முடிந்து, 2011ம் ஆண்டு, ஜூலையில், 2,407 இடங்களுக்கு,
முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான
இடங்களுக்கு, 2011ம் ஆண்டு, செப்டம்பரில், பட்டியல் வெளியிடப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், 400 பேர், பணியில் சேரவில்லை. இதையடுத்து, தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல்
செய்த மனு: காலியிடங்களில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான,
காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நியமித்திருக்க வேண்டும். ஆனால், புதிதாக அறிவிப்பை, அரசு வெளியிட்டுள்ளது. கடந்த, 8ம் தேதி,
வெளியிடப்பட்ட பட்டியலில், இடம் பெற்றுள்ள, 41 பேர், முதலில் வெளியிடப்பட்ட
பட்டியலிலும் இல்லை. இரண்டாவது பட்டியலிலும் இல்லை. தகுதியற்றவர்களை
நியமிக்க, முயற்சிகள் நடக்கின்றன. கடந்த 2010ம் ஆண்டு நடந்த தேர்வில், நான் கலந்து கொண்டேன். நான்,
ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவன். பட்டியலில், எனக்கு பின்னால்
உள்ளவர்கள், இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு, நியமன
உத்தரவுகள் வழங்கப்பட உள்ளது. எனக்கு, கிராம நிர்வாக அதிகாரி, பணி வழங்க
வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி நாகமுத்து விசாரித்தார். மனுதாரர் சார்பில், மூத்த
வழக்கறிஞர் கே.துரைசாமி, "தகுதிப் பட்டியலில், முன்னணியில் இருந்தும்,
மனுதாரரை தேர்ந்தெடுக்காததற்கு, என்ன காரணம், என தெரியவில்லை" என்றார்.
அரசு தரப்பில் பதிலளிக்க, சிறப்பு அரசு பிளீடர் ராஜேஸ்வரன்,
"நோட்டீஸ்" பெற்றுக் கொண்டார். டி.என்.பி.எஸ்.சி., தரப்பில்,
வழக்கறிஞர் நிறைமதி, இந்த மாதம், 30ம் தேதி வரை, நியமன உத்தரவுகளை வழங்க
மாட்டோம், என, உத்தரவாதம் அளித்தார்.
இதையடுத்து, நீதிபதி நாகமுத்து, "ஆதிதிராவிடருக்கான பொது மற்றும்
விடுபட்ட பட்டியலில் உள்ளவர்களுக்கு, இந்த மாதம், 30ம் தேதி வரை, நியமன
உத்தரவுகளை, வழங்கக் கூடாது" என, உத்தரவிட்டார். விசாரணையை, 30ம் தேதிக்கு
தள்ளிவைத்தார்.