பயிற்சி முடித்ததும் வேலை வழங்கப்படும் என்ற உறுதிமொழியை, 'சிபெட்' காப்பாற்றவில்லை என தெரிவித்து, வேலை கிடைக்காத, வட கிழக்கு மாநில மாணவர்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களான, அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய, எட்டு மாநிலங்களின் மேம்பாட்டிற்கான, வடகிழக்கு பகுதி மேம்பாட்டு துறை சார்பில், படித்த இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
சென்னையை தலைமையகமாக கொண்டுள்ள, 'சிபெட்' எனப்படும், மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில், வட கிழக்கு மாநிலங்களில், ஆறு மாதங்கள், தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும்; பயிற்சி முடிந்ததும், வேலைவாய்ப்பு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பை நம்பி, 2010, ஆகஸ்டில், பயிற்சியில் சேர்ந்த மாணவர்களில், 100 பேருக்கு, பயிற்சி நிறைவு பெற்ற பிறகும் வேலை கிடைக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த மாணவர்கள், கவுகாத்தி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், அவர்கள் கூறியுள்ளதாவது:
ஆறு மாத பயிற்சி நிறைவடைந்ததும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என கூறப்பட்டதால், 5,000 ரூபாய் கட்டணம் செலுத்தி படித்தோம். பயிற்சி முடிந்ததும், வீட்டுக்கு செல்லுங்கள் என, கூறப்பட்டது. நாங்கள் மறுத்ததால், பெயரளவிற்கு வேலை வழங்கினர். ஆனால், அந்த வேலைகளும் நிரந்தரமாக கிடைக்கவில்லை.
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், 'சிபெட்' இடமிருந்து தகவல் கேட்கப்பட்டதில், "பயிற்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வேலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது" என, கூறப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அவ்வாறு வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. எங்களுக்கு போதுமான பயிற்சியும் வழங்கப்படவில்லை.
எங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி, தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், எங்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அந்த மாணவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.