டி.இ.டி., இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில், தொடர்ந்து இழுபறி
நிலை நிலவுவதால், தேர்வு பெற்றவர்கள், தவியாய் தவித்து வருகின்றனர்.
இதுமட்டுமின்றி பாட வாரியாக உள்ள ஆசிரியர் காலி இடங்களையும், பள்ளி
கல்வித்துறை, இப்போதே, இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், தேர்வு
பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர். டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றதும், மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில், தகுதி வாய்ந்த ஆசிரியரை தேர்வு செய்ய, முதலில் டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. சென்னை, ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், "டி.இ.டி., தேர்வு, ஒரு தகுதித் தேர்வே; அதன்பின், ஆசிரியரை தேர்வு செய்ய, வேறொரு விதிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பிளஸ் 2, பட்டப் படிப்பு, ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு, பி.எட்., ஆகியவற்றுக்கு, 40 மதிப்பெண், டி.இ.டி., தேர்வுக்கு, 60 மதிப்பெண் என, 100 மதிப்பெண் கணக்கிட்டு, அதனடிப்படையில், தகுதியான ஆசிரியரை தேர்வு செய்யும் புதிய முறையை, தமிழக அரசு அறிவித்தது.
ஜூலையில் தேர்வு பெற்ற, 2,448 பேர் மற்றும் அக்டோபரில் தேர்வு பெற்ற, 19 ஆயிரம் பேருக்கும், புதிய தேர்வு முறை கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணியில், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது. அக்., தேர்வில் தேர்வு பெற்றவர்களில், 2 சதவீதம் பேர், தகுதி இல்லாதவர்களாக இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்ததால், தேர்வு பெற்றவர்கள் மத்தியில், பீதி நிலவி வருகிறது.
இதனால், இறுதி தேர்வுப் பட்டியலை, ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 26ம் தேதி, பட்டியல் வெளியாகும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால், தற்போது, எந்த தகவலையும் வெளியிடாமல், "பணிகள் நடக்கின்றன; விரைவில் வெளியிடுவோம்" என, தொடர்ந்து கூறி வருகின்றன.
இதுதொடர்பாக, ஏராளமானோர் தினமும், டி.ஆர்.பி., அலுவலகத்திற்கும், பத்திரிகை அலுவலகங்களுக்கும் போன் செய்து, கேட்டபடி உள்ளனர். ஆனால், டி.ஆர்.பி., அதிகாரிகள், தொடர்ந்து மவுனம் காக்கின்றனர். இது, தேர்வு பெற்றவர்கள் மத்தியில், மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை, வெளிப்படையாக வெளியிட, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாட வாரியாக உள்ள காலி இடங்கள் பட்டியலை, பள்ளி கல்வித்துறை, இப்போதே, இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.