''இருவரும் சண்டை போடுவோம்; நான் ஜெயித்தால்,
உன் பள்ளியை இழுத்து மூடிவிட வேண்டும். நீ ஜெயித்தால் நான்
சொல்லிக்கொடுப்பதை நிறுத்திக் கொள்கிறேன். என்ன, சவாலுக்குத் தயாரா?" என்று
கொக்கறித்தார் குங்ஃபூவில் புகழ்பெற்ற
ஆசிரியரான வோங்க் ஜாக்மென். அமெரிக்காவின் ஆக்லாந்து நகரில் புதிதாக
தற்காப்புக் கலைகளைக் கற்று தரும் புரூஸ் லீ, எவ்விதத் தயக்கமும் இன்றி
சவாலுக்கு சம்மதித்தார். சண்டைக்கு வந்து, பத்தே நொடியில் தோல்வியைத்
தழுவினார் வோங்க். ஒரே நாளில் அமெரிக்கா மற்றும் சீனாவில் லீயின் புகழ்
கிடுகிடுவெனப் பரவியது.
"என்ன தைரியத்தில் அவரிடம் மோத
ஒப்புக்கொண்டீர்கள்?" என்று நிருபர்கள் கேட்டதற்கு, "நான் தத்துவத்தைப்
பாடமாகப் படித்திருக்கிறேன். வாய்ப்புகள் தாமே வராது, நாம் தான் உருவாக்க
வேண்டும் என்பதை அறிவேன். அதனாலேயே வெற்றி, தோல்வி பற்றி கவலையின்றி,
நானும் என் கலையும் புகழ்பெற இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன்" என்றார்
புரூஸ் லீ. 25 வயது வரை சாதாரண தொலைக்காட்சி நடிகராக இருந்து வந்த புரூஸ்
லீ, உலகப் புகழ்பெற்றது அதன் பிறகே!
'வாய்ப்புகள்
வரும் என்று காத்திருப்பவர்கள் என்றும் வெற்றியைத் தொடவே முடியாது;
வாய்ப்புகளை உருவாக்குபவர்களே சாதனையாளர்கள்' என்ற மந்திரச் சொல்லை நமக்கு
உணர்த்திய புரூஸ் லீக்கு (நவ.27) பிறந்தநாள்.