டில்லி, ஜனாதிபதி மாளிகையின் நூலகத்தில் கண்டு கொள்ளப்படாமல் கிடந்த, பழமையான புத்தகங்களுக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டு, படிக்க வசதியாக, அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூலையில், ஜனாதிபதியாக, பிரணாப் முகர்ஜி பொறுப்பேற்ற பிறகு, ஜனாதிபதி மாளிகையில் பல புதுமைகளை செய்து வருகிறார். 340 அறைகளுடன் பிரமாண்டமாக காட்சியளிக்கும், வரலாற்று சிறப்பு மிக்க மாளிகையின், பாரம்பரிய அறைகளை புதுப்பித்து வருகிறார்.
பொலிவிழந்து காணப்பட்ட, "தர்பார் ஹால்", பிரணாப்பின் முயற்சியை அடுத்து, புனரமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கண்டு கொள்ளப்படாமல் இருந்த நூலகமும், சமீபத்தில் புத்துயிர் பெற்றுள்ளது.
புறக்கணிக்கப்பட்டு, மூலையில் குவிக்கப்பட்டிருந்த, பழமையான புத்தகங்கள், தூசி தட்டி எடுக்கப்பட்டு, அலமாரிகளில் அடுக்கப்பட்டு, பார்வையாளர்கள் படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில், 1800ம் ஆண்டுகளில் வெளியான, திப்பு சுல்தான் பற்றிய புத்தகம், 1840களில் வெளிவந்த, கார்ட்டூன் புத்தகங்கள், 1888ல் வெளிவந்த, ஆங்கில அகராதி போன்ற, 2,000க்கும் மேற்பட்ட, பழமையான புத்தகங்கள் அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
பழமையான புத்தகங்களை, ஸ்கேன் செய்து, எலக்ட்ரானிக் வடிவில் மாற்றும் முயற்சியும் நடந்து வருகிறது.