ஸ்மார்ட் கார்டு பணிகளுக்காக, மாணவர்களின் விவரங்களை, ஆன்-லைனில் பதிவு
செய்ய, தனியார் இணையதள மையங்களுக்கு தலைமையாசிரியர்கள் படையெடுத்து
வருகின்றனர். ஆன்-லைன் பதிவிற்கு மாணவர்களிடம் தலா, 10 ரூபாய்
வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
மாணவர்களின் அனைத்து விவரங்கள்
கொண்ட, ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. ஒன்று முதல், பிளஸ்
2 வரை, 80 லட்சம் மாணவர்களுக்கு கார்டுகள் தயாராகின்றன. மாணவர்களின்
விவரங்களை சேகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு விண்ணப்பங்கள்
வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் விவரங்களை சேகரித்து, கல்வித் துறை
அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
மாணவர் விவரங்கள் கொண்ட விண்ணப்பங்களுடன், போட்டோக்களையும், ஸ்கேன்
செய்து, கல்வி துறை ஆன்-லைனில், அப்டேட் செய்ய, தலைமையாசிரியர்களுக்கு,
தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பணியை, வரும் 31க்குள்
முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இதற்கு, அனைத்து மாவட்டங்களிலும், தலைமையாசிரியர்கள் எதிர்ப்பு
தெரிவித்ததால், இரு வாரங்களுக்கு நீட்டித்து, கல்வி துறை உத்தரவிட்டது.
ஆன்-லைன் பதிவு குறித்து, தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு முறை வரவேற்கத்தக்கது. அவரச கோலத்தில்
இப்பணியை முடிக்க, அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். மாநில அளவில், 25 சதவீத
பள்ளிகளில் தான், முழுமையான கணினி வசதி உள்ளது. 75 சதவீத, தொடக்க மற்றும்
உயர்நிலை பள்ளிகளில், இந்த வசதி இல்லை.
இதனால், தனியார் வெப்சைட் மையங்களுக்கு சென்று தான், மாணவர்களின்
போட்டோக்களை ஸ்கேன் செய்து, ஆன்-லைனில் பதிய, ஒரு மாணவருக்கு, ஏழு
நிமிடங்கள் ஆகின்றன. மின் வெட்டு, பிராட்பேண்ட் பிரச்னைகளும் உள்ளன. ஒரு
மாணவருக்கு குறைந்தபட்சம், 7 ரூபாய் செலவாகிறது. இதை எப்படி சமாளிப்பது என
தெரியவில்லை. மற்ற பணிகளும் பாதிக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆன்-லைன் பதிவுகளை மேற்கொள்ள, தலைமையாசிரியர்களை வற்புறுத்த கூடாது
என்பது உள்பட, 20 கோரிக்கைகளை வலியுறுத்தி, உயர்நிலை, மேல் நிலை பள்ளி
தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி
அலுவலகங்கள் முன், இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.