பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று ஆசிரியர்கள், பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
நடப்பு ஆண்டு கரோனா பரவல்காரணமாக தமிழக பள்ளிக்கல்விபாடத்திட்டத்தில் 9, 10-ம் வகுப்புகள் மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதேநேரம் உயர் கல்வியை கருத்தில் கொண்டு பிளஸ் 2 வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 3 முதல் 21-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.
இதற்கிடையே மாநிலம் முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தஞ்சாவூர்உள்ளிட்ட சில மாவட்டங்களில் தனியார் பள்ளிகளில் மாணவர்கள்,ஆசிரியர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக 9, 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு நேரடி கற்பித்தல் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொதுத்தேர்வு இருப்பதால் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் தற்போது நேரடி வகுப்புகள் தொடர்கின்றன.
மறுபுறம் நோய் பரவலின் தீவிரம் தினமும் உயர்வதால் மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. இதை தவிர்க்க பிளஸ் 2மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக பெற்றோர் சிலர் கூறும்போது, ‘‘பெரும்பாலானபள்ளிகள் கரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை. வகுப்பறையில் முகக்கவசத்தை கழற்றிவைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.அதனால் பிள்ளைகள் தினமும்பாதுகாப்பாக பள்ளி சென்று திரும்புவதே சிக்கலாகியுள்ளது. எனவே பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து தேர்ச்சி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் பள்ளிகளில் உரிய பாதுகாப்பு வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.
ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் பே.சந்தானம் கூறியதாவது:
தற்போதைய சூழலில் நோய்த் தொற்று பரவலுக்கான சாத்தியங்கள் அதிகரித்துவிட்டன. இவற்றில் இருந்து மாணவர்களை பாதுகாத்து தேர்வுக்கு தயார்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால், தேர்தலில் மட்டுமே அரசியல் கட்சிகளின் கவனம் இருக்கிறது. பள்ளிகளில் மட்டுமல்ல பொதுவெளியில்கூட பலர் முகக்கவசத்தை முறையாக அணிவதில்லை. இதனால் பெற்றோர் மத்தியில் அச்சம் நிலவுகிறது. அதேநேரம் பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்தால் மாணவர்கள் உயர்கல்வி செல்வதில் சிக்கல்கள் ஏற்படும். அதனால் உரிய பாதுகாப்புகளுடன் தேர்வை நடத்த கல்வித் துறை முன்வரவேண்டும்.
இளைஞர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் என்பதற்காக அலட்சியமாக இருக்கக்கூடாது. மாணவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டால் குறைந்தபட்சம் இருவாரங்கள் கற்றல் தடைபடும். மேலும், மே மாதம் பாதிப்பு ஏற்பட்டால் தேர்வெழுத முடியாத நிலை உருவாகும். அது உளவியல் ரீதியாக மாணவர்களுக்கு பின்னடைவை தரும். தற்போது தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதேபோல், தேர்வெழுதும் மாணவர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை அரசு இலவசமாக போட வேண்டும். அதன்பின் மாணவர்கள் தொற்றுக்கு ஆளானாலும் பெரிய பாதிப்பு இருக்காது. மேலும், வழக்கமான முறையை மாற்றி எளிய வடிவில் தேர்வை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் முழுவதும் சுமார் 8.5 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2தேர்வெழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.