அக்டோபர் 29 முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு...
*சென்னை: நாடு முழுவதும், அக்.29 முதல் நவ.28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
*இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான கால அட்டவணையை இந்தியதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த கடிதத்தையும் அனுப்பியுள்ளது.
*அதன்படி, 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்கும் நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
*வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகளுக்கு முன்னதாக, ஆக.20 முதல் அக்.18-ம் தேதி வரை வாக்குச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று பட்டியலை சரிபார்க்க வேண்டும், வாக்குச்சாவடிகளை சீரமைக்க வேண்டும், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தம் செய்ய வேண்டும்.
*வாக்காளர்களின் தெளிவான மற்றும் சரியான புகைப்படங்களைப் பெற்று இணைத்தல், உரிய பாக எண் அடிப்படையில் அதற்கு உட்பட்ட பகுதியில் வாக்குச்சாவடியை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். அக்.19 முதல் 28-ம் தேதி வரை, உரிய படிவங்களைத் தயாரித்தல் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
*அதன்பின், அக்.29-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். அன்று முதல் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கான விண்ணப்பங்களைப் பெறும் பணியை தொடங்க வேண்டும். நவ.28ஆம் தேதி வரை விண்ணப்பங்களைப் பெற வேண்டும்.
*பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையை டிச.24-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி, தரவுகளை முழுமை செய்து வாக்காளர் பட்டியலைத் தயாரித்து, துணைப்பட்டியலை அச்சிட வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியலை அடுத்தாண்டு ஜனவரி 6-ம் தேதி வெளியிட வேண்டும்.