பிரதமர் மோடி அவர்கள் இன்று திறந்து வைத்த ராமேஸ்வரம் பாம்பன் புதிய செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது
Repairs underway on new vertical suspension bridge between Rameswaram and Pamban, inaugurated by Prime Minister Modi today
ராமேஸ்வரத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் புதிதாக திறக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. செங்குத்து தூக்கு பாலம் மேலே ஏற்றப்பட்ட நிலையில், மீண்டும் கீழே இறக்க முடியாமல் பழுது ஏற்பட்டிருக்கிறது. தூக்கு பாலம் ஒருபுறம் ஏற்றமாகவும், இன்னொரு புறம் இறக்கமாகவும் இருப்பதாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி அவர்கள் பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் திறந்து வைத்த ஒரு சில மணி நேரங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் ஒரு பக்கம் ஏற்றமாகவும் மறுபுறம் இறக்கமாகவும் உள்ளதால் பாலத்தை கீழே இறக்க முடியாமல் பொறியாளர்கள் தவித்துள்ளனர். இதனை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் தூக்கு பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். இலங்கை அனுராதபுரத்தில் இருந்து எம்ஐ17 ரக ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மண்டபம் வந்த பிரதமர் மோடி, அதன்பின் கார் மூலமாக ராமேஸ்வரம் வந்தார்.
இதனைத் தொடர்ந்து மண்டபம் - ராமேஸ்வரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கிமீ தொலைவிலான 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி அவர்கள், இன்று கொடியசைத்து திறந்து வைத்தார்.
2019ஆம் ஆண்டு புதிய பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, ரூ.700 கோடியில் கட்டப்பட்டு, 2024ஆம் ஆண்டு முடிவடைந்தது. இதன்பின் இன்று புதிய பாலத்தில் ரயில் பயணம் தொடங்கியது.
அதேபோல் புதிதாக திறக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலத்தின் கீழ் இந்திய கடற்படை கப்பலும் பயணித்தது. இதற்காக செங்குத்து தூக்கு பாலம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் புதிதாக திறக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலம் கீழே இறக்க முடியாமல் பழுது ஏற்பட்டுள்ளது. தூக்கு பாலம் ஒருபுறம் ஏற்றமும், இன்னொரு பக்கம் இறக்கமுமாக இருப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பழுது நீக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டின் பாக் ஜலசந்தியைக் கடந்து செல்லும் 2.07 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம், இந்தியாவின் பொறியியல் திறமைக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் ஒரு சான்றாக நிற்கும் என்று கூறப்பட்டது.
கடல் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் 72.5 மீட்டர் நீளமுள்ள பகுதியை தூக்கி, அதன் கீழ் கப்பல்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி 17 மீட்டர் உயரத்திற்கு தூக்கப்படும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
முதல்நாளே பழுதான புதிய பாம்பன் பாலம்:
இரண்டு ரயில் பாதைகளை தாங்கும் திறன் கொண்ட இந்தப் பாலத்தில் தற்போது ஒரு பாதையில் மட்டும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மணிக்கு 80 கிமீ வேகம் வரை ரயில் வேகத்தை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து மற்றும் அதிக சுமைகளைக் கையாளும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம், ராமேஸ்வரம் தீவையும், நிலப்பரப்பில் உள்ள மண்டபம் பகுதியையும் இணைக்கிறது. இந்த நிலையில், ஒட்டுமொத்த நாட்டையே திரும்பி பார்க்க வைத்த புதிய பாம்பன் பாலம், திறந்து வைக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது.
பாலத்தின் ஒரு பக்கம் ஏற்றமாகவும் மறுபுறம் இறக்கமாகவும் உள்ளதால் பாலத்தை கீழே இறக்க முடியாமல் பொறியாளர்கள் தவித்துள்ளனர். இதனை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து, பழுது சரிசெய்யப்பட்டு செங்குத்துப் பாலம் கீழே இறக்கப்பட்டது என தகவல்.
முன்னதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி 2024ஆம் ஆண்டு நவம்பர் 13, 14ஆம் தேதிகளில் பாலத்தை ஆய்வு செய்த பொழுது பாலம் கட்டுவதற்கான திட்டமிடும் பணியில் இருந்தே பெரும் குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
101 தூண்களுடன் புதிய தூக்குப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் வழியாக கப்பல் கடந்த செல்ல ஏதுவாக 27 மீட்டர் உயரத்தில் 77 மீட்டர் நீளத்தில் செங்குத்து தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து நவம்பர் 13, 14ஆம் தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி பாலத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பாலம் கட்டுவதற்கான திட்டமிடும் பணியில் இருந்தே பெரும் குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக தனது அறிக்கையில் சவுத்ரி தெரிவித்து இருக்கிறார்.
ஆர்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் தரத்துக்கு ஏற்ப செங்குத்தாக உயரும் 77 மீட்டர் நீள தண்டவாளம் அமைக்கப்படாததை சுட்டிக்காட்டியுள்ள சவுத்ரி, தூக்குப்பாலம் அமைப்பதற்கான வடிவமைப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு விவரங்கள் ஆர்.டி.எஸ்.ஓவிடமே இல்லை என தெரிவித்துள்ளார். விசாரணையில் இதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என பொறுப்பை உதறியிருக்கிறது ஆர்.டி.எஸ்.ஓ. தரமற்ற கட்டுமான பணிக்கான பளுவை தாங்கும் திறன் 36% குறைந்து விட்டதாக ஆணையர் கூறியிருக்கிறார். கட்டுமானத்துக்கு முன் தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கும் நடைமுறைகளை பின்பற்றாமல், தான் வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே வாரியம் மீறியிருப்பதாக சவுத்ரி குற்றச்சாட்டி இருக்கிறார். பாலம் கட்டும் இடத்திற்கு சென்று வெல்டிங் தரத்தை தெற்கு ரயில்வேயின் கட்டுமான ஆய்வுக் குழு சோதனை செய்யவில்லை எனவும் புகார் கூறியிருக்கிறார். கடல் பாலம் கட்டுவதால் ஏற்படும் அரிப்பு சேதம் குறித்து கவனம் செலுத்ததால் பாலம் திறக்கப்படுவதற்கு முன்பே தூண்களில் அரிமானம் ஏற்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார். ரயில்வே வாரிய கட்டுமானப் பிரிவு அதிகாரி சுட்டிக்காட்டிய பிறகும் அரிமானத்தைத் தடுக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை என அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். புதிய ரயில் பாலம் தரக்குறைவாக இருப்பதைக் கண்டறிந்த பிறகும் பாலத்தில் தூக்கு இருக்கும் பகுதியில் மட்டும் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், மற்ற இடங்களில் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் ரயில்களை இயக்க நிபந்தையுடன் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளார் ஏ.எம்.சவுத்ரி.