டி.இ.டி. மறுதேர்விற்கு, 13 ஆயிரத்து 712 பேர் புதிதாக
விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில், ஆயிரத்து 793
பேரும், குறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 296 பேரும்
விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த வாரம் முதல், ஹால் டிக்கெட்
இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
டி.இ.டி. மறுதேர்வு, அக்டோபர்
14ம் தேதி நடக்கிறது. ஏற்கனவே நடந்த தேர்வில், தோல்வியடைந்தவர்கள் மட்டும்,
மறுதேர்வில் பங்கேற்கலாம் என, டி.ஆர்.பி., அறிவித்தது. இதையடுத்து, புதிய
விண்ணப்பதாரர்களுக்கும், டி.இ.டி., தேர்வில் பங்கேற்க வாய்ப்பளிக்க
வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், மாவட்ட
முதன்மை கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
விண்ணப்பதாரர்களின் விவரங்களை, நேற்று இரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது.
அதன்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கு, 3,721 பேரும், இரண்டாம் தாள்
தேர்வுக்கு, 8,852 பேரும், இரு தாள்கள் சேர்த்து, 1,139 பேரும்
விண்ணப்பித்துள்ளனர். மொத்தம், 13 ஆயிரத்து 712 பேர் விண்ணப்பித்துள்ளனர்.