தமிழகம் முழுவதும், அனுமதியின்றி கட்டடங்கள் கட்டியுள்ள, 700க்கும்
மேற்பட்ட, பள்ளி, கல்லூரிகளுக்கு, "நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ளது என,
நகரமைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள, அனைத்து தனியார் கல்வி நிறுவன வளாகங்களையும்
ஆய்வு செய்து, விதிமீறல் கட்டடங்கள் குறித்த விவரங்களை, நகரமைப்புத்
துறையினர் திரட்டத் துவங்கினர்.
நகரமைப்புத் துறையின் உள்ளூர் திட்ட குழுமங்கள், மண்டல அலுவலகங்களிடம்
இருந்து, இத்தகைய கட்டடங்கள் குறித்த விவரங்களும், அவற்றின் இப்போதைய நிலை
குறித்த விரிவான அறிக்கைகளும் பெறப்பட்டன.
இந்த அறிக்கைகளை ஆய்வு செய்ததில், 500க்கும் மேற்பட்ட சுயநிதி, கலை
மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள்,
ஆய்வுக்கூடம், நூலகம் ஆகியவை கட்டப்பட்டது தெரியவந்துள்ளது. முறையான அனுமதி
இவற்றிற்கு இல்லை.
இவற்றில் உள்ள விதிமீறல் கட்டடங்களின் பரப்பளவு, 75 லட்சம் சதுர அடியை
தாண்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, சென்னையை ஒட்டியுள்ள,
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தான் அதிக எண்ணிக்கையில், சுயநிதி
கல்வி நிறுவனங்கள் உள்ளன.இவற்றில் உள்ள, விதிமீறல் கட்டடங்களின் பரப்பளவு
மட்டும், 30 லட்சம் சதுர அடி வரை இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
கல்லூரிகள் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும், 300க்கும் மேற்பட்ட
தனியார் பள்ளி வளாகங்களிலும், அனுமதியின்றி அடுக்குமாடி கட்டடங்கள்
இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவை தொடர்பான விவரங்களும் நகரமைப்புத்
துறை அதிகாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன.வரன்முறை:இந்த விவரங்களுடன்,
இவற்றின் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கை,
அரசுக்கு அனுப்பப்பட்டது.
இதன் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நகரமைப்புத்
துறை, உயர்கல்வித் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர்
ஆலோசனை நடத்தினர். இக்கல்வி நிறுவனங்களிடம், சதுர அடி அடிப்படையில்,
அபராதம் வசூலித்தால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்
என்ற ஆலோசனை, அரசின் பரிசீலனையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம், 14, 28 ஆகிய தேதிகளில், நகரமைப்புத் துறை
கமிஷனர் கார்த்திக், அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும், உள்ளூர் திட்ட
குழுமங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.இந்த சுற்றறிக்கையின்
அடிப்படையில், அந்தந்த பகுதிகளில் விதிமீறல் கட்டடங்கள் உள்ள கல்வி
நிறுவனங்களை, நகரமைப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதில், இதுவரை, 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கும், 200க்கும் மேற்பட்ட
பள்ளிகளுக்கும், "நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ளன.
உங்கள் வளாகத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள், நகரமைப்புத் துறையின் அனுமதி
பெறாமல் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டப்பட்ட கட்டடங்கள் சட்டப்படி
குற்றமாகும். எனவே, 1971ம் ஆண்டு நகரமைப்புச் சட்டத்தின் பிரிவுகள், 56,
57ன்கீழ், அனுமதியில்லா கட்டடமாக அவை அறிவிக்கப்படுகின்றன' என, நோட்டீசில்
குறிப்பிடப்பட்டு உள்ளது.
விதிமீறலில் ஈடுபட்டுள்ள கல்வி நிறுவனங்கள், இந்த நோட்டீசுக்கு
அளிக்கும் பதிலை, ஆய்வு செய்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
என, அதிகாரிகள் தெரிவித்தனர்.