சிறுநீரக நலன் காப்பதன் மூலம் பூமியை பாதுகாக்க முடியுமா?
நீரின்றி அமையாது உலகு
சிறுநீரின்றி இயங்காது உடம்பு !
இன்று (12/03/2026) உலக சிறுநீரக தினம். சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தையும் அதன் பிரச்சினைகளால் ஏற்படும் உடல் உபாதைகளையும் தெரிந்து கொள்வதற்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சிறுநீரகத்தின் செயல் ,தேவை மற்றும் அதன் செயல்இழப்பால் ஏற்படக்கூடிய விளைவுகளை பெரும்பாலான மக்கள் உணர்ந்து இருப்பார்கள். எனினும் சிறுநீரகத்தின் சிறப்பையும் அதன் நலனை பராமரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் தொடர்ந்து மனதில் நிறுத்திக் கொள்ள ஒரு மையப் பொருளை (theme)உருவாக்கி ஒவ்வொரு வருடமும் சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி இந்த வருட மையக் கருத்தாக
"அனைவருக்கும் சிறுநீரக நலன்- மக்களின் மீதான அக்கறையும் பூமியை பாதுகாத்தலும்"
என்பதனை உருவாக்கி உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அது என்ன சிறுநீரக நலன் ?
ஆம், அதன்படி சிறுநீரக நலனை கருத்தில் கொண்டு சிறுநீரக சுகாதாரத்திற்கான கருத்துக்களை மக்களிடையே விதைப்பது அதில் உறுதிப்படுத்தக்கூடிய சிறுநீரக நலன்களாக..
1) போதுமான உடலின் நீர்ச்சத்தை உறுதிப்படுத்துவது
2) ஆரோக்கியமான உணவு முறை
3) சரியான அளவு தூக்கம்
4) தேவையற்ற மருந்துகள் உட்கொள்வதை தவிர்த்தல்
5) சிறுநீரக செயல் இழப்புகளை உருவாக்கும் நோய்களை விரைவில் கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்துதல்
6) தேவையான நேரங்களில் மருத்துவரின் ஆலோசனையையும் மருத்துவமும் பெறுதல்
மேற்கண்ட அனைத்தும் ஒரு மனிதனின் சிறுநீரக நலனை காப்பதற்கு உதவுகிறது. இந்த தொடர் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலமாக மக்களின் மீதான அக்கறையை உலக சிறுநீரகக் கூட்டமைப்பும் இதர சுகாதார அமைப்புகளும் உறுதிப்படுத்துகின்றன.
இதன் மூலம் எவ்வாறு இந்த பூமியை பாதுகாப்பது ?
ஒரு எளிமையான விளக்கம், பூமியை பாதுகாப்பது என்பது நேரடியாக இந்த பூமி பந்தை பாதுகாப்பது என்றும் பூமியில் வாழும் மக்களை பாதுகாப்பது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
சிறுநீரக செயலிழப்பை தடுப்பதன் மூலம் இந்த பூமி பந்தின் பாதுகாப்பை எவ்வாறு செயல்படுத்த முடியும்.
இன்று சிறுநீரக செயலிழப்பின் காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் டயாலிசிஸ்(Dialysis )எனப்படும் ரத்த சுத்திகரிப்பை மேற்கொண்டு உயிர் வாழ்ந்து வருகிறார்கள் ,இதற்காக கோடிக்கணக்கான லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் செலவிடப்படுகிறது மேலும் இந்த இரத்த சுத்திகரிப்பிற்கு பயன்படுத்தப்படும் டையலைசர்(Dialyser) மற்றும் பிளட் டியூபிங்(Blood tube) அனைத்தும் மக்காத பிளாஸ்டிக் போன்ற பொருட்களினால் செய்யப்படுகிறது ,இது தினமும் பயன்படுத்தப்பட்டு மருத்துவக் கழிவுகளாக எல்லா நாடுகளிலும் மலை போல் குவிந்து வருகின்றன, இது பின்வரும் மனித சமுதாயத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துமில்லை .
எனவே சிறுநீரக நலனை பாதுகாப்பதன் மூலம் சிறுநீரக நோய்களை விரைவில் கண்டறிந்து குணப்படுத்துவதன் மூலம் அல்லது கட்டுப்படுத்துவதன் மூலம் டயாலிசிசின் தேவையை குறைக்க முடியும், இவ்வாறு குறைப்பதன் மூலமாக அதனால் பெருகக்கூடிய மக்காத மருத்துவ கழிவுகளின் அளவு குறையும் இதன் மூலம் இந்த பூமி பந்தினை நம்மால் பாதுகாக்க முடியும்.
எனவே இந்த வருட கருப்பொருளை மனதில் நிறுத்தி செயல்படுவோம்
"Kidney Health For All - Caring for People, Protecting the planet"
"அனைவருக்கும் சிறுநீரக நலன் மக்களின் மீதான அக்கறையும் பூமியை பாதுகாத்தலும்."
நன்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.