100க்கு 8 மதிப்பெண் - பள்ளி மாணவியைக் கண்டித்த ஆசிரியர் - ஆசிரியருக்கு மூன்று முறை அறை கொடுத்த மாணவியின் தந்தை - கண்டுகொள்ளாத கல்வித் துறை மற்றும் ஆசிரியர் சங்கங்கள் - நாளிதழ் செய்தி (8 out of 100 - Teacher reprimands schoolgirl - Girl's father spanks teacher three times - Education department and teachers federations ignore - Daily news)...
திருப்பத்தூர், நவ.25-
திருப்பத்தூர் அடுத்த விசமங்கலம் பனந்தோப்பு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 575 மாணவர்கள் படித்து வருகின்றனர். 25 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு ஆசிரியராக இருப்பவர் மகேஷ்வரன்.
2 நாட்களுக்கு முன்னர் பள்ளியில் ஆங்கில விடைத்தாள் வழங்கப்பட்டுள்ளது. அப்போது கோடியூரைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி ஒருவர் 100 மார்க்குக்கு 8 மார்க் மட்டும் எடுத்துள்ளார். இதனால் ஆசிரியர் மகேஷ்வரன், அந்த மாணவியிடம், “படிக்காமல் இருந்தால் வாழ்வில் எப்படி முன்னேறுவது?” என அறிவுரை வழங்கி லேசாக கண்டித்துள்ளார்.
அதில் மாணவியின் விரலில் லேசாக வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாணவி அழுது கொண்டே வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் அன்று மாலை, ஆசிரியர் மகேஷ்வரன், மாலை நேர வகுப்பில், மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்த போது,அந்த மாணவியின் தந்தை, அங்கு வந்து, ஆசிரியரை தகாத வார்த்தைகளால் திட்டி, கன்னத்தில் 3 முறை அடித்துள்ளார். இதனால் அந்த ஆசிரியர் நிலைகுலைந்து போயுள்ளார்.
அதன் பின்னரும் விடாத அந்த தந்தை, மீண்டும் ஆபாச வார்த்தைகளால் திட்டியபடியே பள்ளியில் இருந்து கிளம்பியுள் ளார்.. இது திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மகேஷ்வரனிடம் கேட்ட போது,
“அந்த மாணவி மிகவும் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தார். அதற்காகதான் கண்டித்தேன். அதற்கு பள்ளிக்குள் வந்து, மாணவர்கள் முன்னிலையில் என்னை தகாத வார்த்தைகளால் தட்டி, கன்னத்தில் அடித்தது என்ன நியாயம்? என்னால் எப்படி மீண்டும் பள்ளியில் மாணவர்களை சந்தித்து பாடம் எடுக்க முடியும்? இதனால்தான் விடுப்பு எடுத்து, வீட்டில் இருக்கிறேன்' என்றார்.
தலைமை ஆசிரியர் பழனிசாமியிடம் கேட்டபோது, “ஆசிரியர் கண்டித்ததும் தவறு. அதற்காக அவர்கள் ஆசிரியரை அடித்ததும் தவறு. எங்கள் துறை உயர் அதிகாரிகள் மற்றும் டி.எஸ்பியிடம் இது குறித்து பேசியுள்ளேன்' என்றார்.
மாணவர்கள் படிக்காவிட்டால், என்ன செய்து, அவர்களை படிக்க வைக்க முடியும்? எனத் தெரியவில்லை... அதே நேரம், எதற்கெல்லாமோ கொடி பிடிக்கும் ஆசிரியர் சங்கங்கள் இந்தப் பிரச்னையில் மவுனமாக இருப்பதன் காரணம் தெரியவில்லை.
மாவட்ட கல்வித்துறை உயர்அதிகாரிகளும் இந்தப்பிரச்சனையை அடக்கி வாசிக்கும்படி சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது,
இதே நிலை தொடர்ந்தால், மாவட்ட பொதுத்தேர்வு முடிவுகளைப் பார்த்து மற்றவர்கள் கைகொட்டி சிரிக்கும் நிலை ஏற்படும்.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனிசுப்ராயனிடம் கேட்ட போது அந்த பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோர் வாய்மொழியாகவே என்னிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் எழுத்துப் பூர்வமாக என்னிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.