மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தினசரி பள்ளிக்கு வருவதில் இருந்து, விலக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், முதன்மை கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஒப்புதல் ஆணை பெற வேண்டுமென, சில அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள், கறாராக தெரிவிப்பதாக, புகார் எழுந்துள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கடந்த 2ஆம் தேதியில் இருந்து, தினசரி பள்ளிக்கு வருகைப்புரிய வேண்டுமென, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்று சிகிச்சையில் இருப்பவர்கள், இதய நோயாளிகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டும், பள்ளிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே(CEO), விலக்கு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நடைமுறையில், சில தலைமையாசிரியர்கள் கடுமையாக நடந்து கொள்வதால், மாற்றுத்திறன் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மாவட்ட உடல் ஊனமுற்றோர் நலவாரிய ஆலோசனை குழு உறுப்பினர் சீனிவாசன் கூறுகையில்,
''கோவை மாவட்டத்தில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் ஆசிரியர்கள், அரசுப்பள்ளிகளில் பணிபுரிகின்றனர். பள்ளிக்கு தினசரி வருவதில் இருந்து விலக்கு பெற, முதன்மை கல்வி அலுவலர் ஒப்புதல் பெற வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. நேரடியாக சென்று, சி.இ.ஓ., விடம் விலக்கு ஆணை பெற வேண்டும். அதே வேளையில், பள்ளி நேரத்தில், கல்வி அலுவலகத்திற்கு செல்ல, அனுமதிக்க முடியாது என சில தலைமை ஆசிரியர்கள் கடுமையாக நடந்து கொள்கின்றனர். விடுப்பு எடுத்து சென்றாலும், முதன்மை கல்வி அலுவலரை நேரடியாக பார்க்க முடியாமல், தகவல் பெட்டியில் தான், அனுமதி கடிதத்தை போட வேண்டிய நிலை உள்ளது. அந்தந்த பள்ளியிலே ஆவணங்கள் சமர்ப்பித்தால் போதுமென, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டால், வீண் அலைச்சலை தவிர்க்கலாம்,'' என்றார்.
முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, '' பள்ளிக்கு தினசரி வருவதில் இருந்து, விலக்கு பெற தகுதி உள்ளவர்களின் ஆவணங்களை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், இ-மெயில் மூலம் அனுப்பினால் போதும். யாரையும் கல்வி அலுவலகங்களுக்கு, அலைக்கழிக்க கூடாதென, தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்துள்ளேன்,'' என்றார்.
பள்ளியில் என்ன வேலை?
தற்போது பள்ளிகளுக்கு வருகை தரும் ஆசிரியர்கள், கல்வி தொலைக்காட்சிக்கு வீடியோ தயாரிப்பது, இதில் ஒளிபரப்பாகும் பாடங்களுக்கு ஏற்ப, அசைன்மென்ட் வழங்கி, மதிப்பீடு செய்வது, அதை அறிக்கை வடிவில் தயாரிப்பது, நலத்திட்ட பொருட்கள் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.