கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கூட்ட நெரிசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூட்ட நெரிசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தவெக மாவட்ட செயலாளரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

 

தமிழக வெற்றிக் கழக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு 


தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் முன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நாமக்கல்லில், தவெக தலைவர் விஜய், செப். 27-ஆம் தேதி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் மீது நாமக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.



இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கேட்டு சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.


அந்த மனுவில், ”தான் எந்த குற்றமும் செய்யவில்லை, அரசியல் காரணங்களுக்காக வழக்கில் தன்னை சேர்த்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த ஒரே காரணத்துக்காக தனக்கு எதிராக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறியிருந்தார்.


இந்த வழக்கில், ”காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருக்கிறேன். எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.


இந்த மனு, நீதிபதி என். செந்தில்குமார் அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சந்தோஷ், அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்வதாக கூறி மனுதாரர் அனுமதி பெற்றார். அவரது கட்சியினரின் செயல்பாடுகளால் ரூ. 5 லட்சம் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இது தவிர பொது சொத்துக்கள் சேதப்படுத்தியதாக மேலும் எட்டு வழக்குகள் அவருக்கு எதிராக பதியப்பட்டுள்ளதாக கூறி, சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்தார்.


இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஏ. முருகவேல் எதிர்ப்பு தெரிவித்தார்.


இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், எதுவும் தெரியாது என மனுதாரர் எப்படி கூறலாம்? கட்சியினரைக் கட்டுப்படுத்த தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? என சரமாரியாக கேள்வி எழுப்பி, முன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் : CBI விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

 

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் : CBI விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு 


கரூரில் விஜய் பரப்புரையின்போது 41 பேர் பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு 


நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என மனுதாரர்களுக்கு நீதிபதிகள் கண்டனம் 




கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரைக் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


பலர் காயமடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களை விஜய்யோ அல்லது தவெக நிர்வாகிகளோ சென்று சந்திக்காதது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.


காவல்துறை சார்பில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கரூர் தவெக மாவட்டச் செயலாளர், பொருளாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் சில த.வெ.க தலைமை நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


கரூர் நெரிசல் குறித்த வழக்கில் முன் ஜாமீன் வேண்டி த.வெ.க பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


இந்நிலையில் கரூர் விஜய் பிரசார கூட்டநெரிசல் மரணம் தொடர்பான பொதுநல வழக்குகள் மற்றும் என்.ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமின் மனுக்கள் மீதும் இன்று (அக்டோபர் 3) உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை தொடங்கி இருக்கிறது.


இதில் கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை கேட்ட மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்து அந்த மனுவை முடித்து வைத்திருக்கின்றனர்.


இழப்பீடு கோரிய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.


விஜய் மற்றும் அரசுத்தரப்பு 2 வாரத்தில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டிருக்கின்றனர்.


இது ஒரு துயர சம்பவம், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்று மனுதாரர்களுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


வழக்கு விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை தெரிவித்திருக்கிறது.


என்.ஆனந்த், நிர்மல்குமார் மீதான முன் ஜாமீன் மனுக்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மதியத்துக்கு மேல் விசாரணைக்கு வரும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.


தேசிய , மாநில நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகளின் பரப்புரைகளுக்கு அனுமதி வழங்க கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 

தேசிய , மாநில நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகளின் பரப்புரைகளுக்கு அனுமதி வழங்க கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


வழிகாட்டு நெறி முறை வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்காது - அரசு தரப்பு





கரூர் துயர நிகழ்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 நபர்கள் மீது வழக்குப் பதிவு - 3 பேர் உடனடியாக கைது

 கரூர் துயர நிகழ்வு தொடர்பாக வதந்தி பரப்பிய 3 பேர் கைது


கரூர் துயர நிகழ்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 நபர்கள் மீது வழக்குப் பதிவு - 3 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.


கரூர் சோகம் : வதந்தி பரப்பிய மூவர் கைது, 25 சமூக ஊடகக் கணக்குகள் மீது எஃப்ஐஆர்


கரூர் சோகம் தொடர்பாக வதந்தி பரப்பிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளதோடு, 25 சமூக வலைதளக் கணக்குகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கரூரில் நடைபெற்ற விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட நெரிசலில் ஏராளமானோர் சிக்கிய நிலையில், 41 பேர் வரை உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தகவலறிந்து உடனடியாக கரூர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு உயிரிழந்தோர் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, காயம் அடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு கிளம்பினார். துணை முதல்வர் உதயநிதி துபாயில் இருந்து பாதியிலேயே வந்து கரூர் சூழல்களை கவனித்தார். அதேபோல அமைச்சர்கள் கரூரில் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.


அதே சமயம் விஜய் உடனடியாக கரூரிலிருந்து திருச்சி சென்று, திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். சில மணி நேரம் கழித்தே அவரிடம் இருந்து இரங்கல் செய்தி வந்தது. இந்த சூழலில் நடிகர் விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் சதி நடந்திருப்பதாக வதந்தி பரப்பப்பட்டு வந்தது.


இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.


இந்த நிலையில் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது.


இவ்வாறு, பொதுவெளியில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது பெறப்பட்ட புகார்களின் பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


எனவே, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இதன் தொடர்ச்சியாக கரூர் சோகம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல் துறை இறங்கியுள்ளது. அதன்படி, சென்னை பெரும்பாக்கம் பகுதியில் பாஜகவை சேர்ந்த சகாயம், மாங்காடு தமிழக வெற்றி கழக நிர்வாகி சிவனேசன், ஆவடி தவெக நிர்வாகி சரத்குமார் ஆகிய மூன்று பேரை வதந்தி பரப்பியதாக கைது செய்துள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


கரூர் துயர நிகழ்வு : ஒரு நபர் ஆணையம் விசாரிக்க தொடங்கியது




கரூர் துயர நிகழ்வு : ஒரு நபர் ஆணையம் விசாரிக்க தொடங்கியது


கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று நடத்திய பிரசாரத்தில் 40 பேர் பலியானார்கள். பலர் மயக்கமடைந்தனர். இதையடுத்து அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் இன்று விசாரணையை தொடங்கியுள்ளது. 


விஜய் பிரசாரம் செய்த வேலுச்சாமிபுரத்தில் ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். 


அப்போது காவல்துறையினரிடம் சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் கேட்டறிந்தார். மேலும் கள நிலவரம் குறித்து அவரிடம் காவலர்கள் எடுத்துரைத்தனர். இதை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் அங்கு நடந்த அனைத்து நிகழ்வுகளையும் அருணா ஜெகதீசன் கேட்டறிந்தார்.


அதனை தொடர்ந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தினார். அப்போது பலர் கதறி அழுதனர்.


கரூரில் நடிகர் விஜய் பரப்புரையில் 40 உயிரிழப்புகள் : யார் யார் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு?



கரூரில் நடிகர் விஜய் பரப்புரையில் 40 உயிரிழப்புகள் : யார் யார் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு?


கரூரில் நடிகர் விஜய் பரப்புரை உயிரிழப்புகள் : த.வெ.க. கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், புஸ்ஸி ஆனந்த், C.T. நிர்மல் குமார் உள்ளிட்டவர்கள் (& Others) மீது வழக்கு பாய்ந்தது


கரூர் நகர காவல் நிலையம்-  u/s 105, 110, 125(b), 223 r/w 3 of TNPPDL Act


A1. மதியழகன் – கரூர் மேற்கு மாவட்ட செயலாளர்

A2. புஸ்ஸி ஆனந்த்

A3. நிர்மல் குமார்

& others.


* BNS பிரிவு 105 – கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை.


* BNS பிரிவு 110 – குற்றமற்ற கொலை செய்ய முயற்சி.


* BNS பிரிவு 125 – மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர/அலட்சிய செயல்களுக்கு தண்டனை


* BNS பிரிவு 223 – பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை குற்றமாக்கப்படுகிறது.


* TNPPDL சட்டம் பிரிவு 3 – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்


ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு...




நடிகர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை SRM கல்விக் குழுமம் ஏற்கும் : ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர்

நடிகர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை SRM கல்விக் குழுமம் ஏற்கும் :  ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர்


கரூரில் நேற்று நடந்த துர்திஷ்டவசமான சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்


உயிரிழந்தோரின் குடும்பத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களின் முழு கல்வி செலவையும் எஸ்ஆர்எம் கல்வி குழுமம் ஏற்கும்


அவர்கள் தற்போது படிக்கும் கல்வி நிறுவனங்களுக்கே அவர்களின் கல்வி கட்டணம் செலுத்தப்படும்: ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர்



விஜய் பரப்புரையில் 40 பேர் உயிரிழப்பு - விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் காட்டமான பதிவு


"களத்தில் நிற்காமல் விஜய் உட்பட மொத்த கட்சி நிர்வாகமும் ஓடிப்போய் ஒளிந்தது அரசியல் அரங்கில் இதுவரை நாம் காணாத அவலம்"


விஜய் பரப்புரையில் 40 பேர் உயிரிழப்பு - விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் காட்டமான பதிவு



விஜய்க்கு எதற்கு அரசியல்? ஷா நவாஸ் காட்டம் 

நெருக்கடிகள், சவால்கள், துயரங்களை எதிர்கொள்வதே அரசியல் 

அந்தத் துணிவு சிறிதும் இல்லாத விஜய்க்கு எதற்கு அரசியல் ?

துயரம் நடந்து விட்ட பிறகும் கூட தன் தொண்டர்களை மீட்கவோ, பார்க்கவோ களத்தில் நிற்காமல் விஜய் உட்பட மொத்த கட்சி நிர்வாகமும் ஓடிப்போய் ஒழிந்தது அரசியல் அரங்கில் இதுவரை நாம் காணாத அவலம்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் Road show என்ற concept ஐ தடை செய்யுங்கள்

 


பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அரசியல் கட்சியினரின் Road show என்ற concept ஐ தடை செய்யுங்கள்


# Ban Road Shows


வணக்கம் நண்பர்களே நான் உங்கள் மரு.கு.அரவிந்தன், இப்பதிவை அரசியல் நோக்கத்துடன் யாரும் அணுக வேண்டாம் 🙏🏻 சராசரி மக்கள் நலன் பார்வையில் இப்பதிவை படித்தால் போதும் 👍🏻


முன்பு எல்லாம் அரசியல் தலைவர்கள், கட்சி பரப்புரைகளையோ, கூட்டத்தையோ, மாநாடுகளையோ.. ஒவ்வொரு ஊரிலும் திடல் என்று ஒன்று இருக்கும், மைதானம் என்று ஒன்று இருக்கும், கார்னர் என்று ஒன்று இருக்கும்.. அவ்வாறான ஒரு பெரிய இடத்தில் தான் அவைகளை நடத்துவார்கள் 👍🏻 அதாவது தஞ்சையில் எடுத்தீர்களேயானால் திலர்கள் திடல் என்ற இடத்தில் மட்டும் தான் முன்பெல்லாம் அவ்வாறு நடக்கும்.. மதுரையில் எடுத்தீர்களேயானால் தமுக்கம் மைதானம் என்று இருக்கும்.. திருச்சியில் எடுத்தீர்களேயானால் ஜி கார்னர் என்று இருக்கும்.. அங்கேதான் கூட்டங்கள் நடக்கும்..


இப்பதிவை படிப்பவர்களில், பொதுவாக ரோடு என்றால் எதற்காக உரியது என்று யாரேனும் ஒரு புத்திசாலி விளக்கம் தாருங்களேன்??

ரோடு என்றால் மக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு தானே, இங்கே கூட்டங்கள் நடத்தவோ இல்லை ரோட் ஷோ (Road Show ) நடத்தவோ அனுமதி கேட்கவும், அனுமதி கொடுக்கவும் யாருக்கு இங்கே அதிகாரம் உள்ளது.. நான் ரோட்டில் வந்து கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று ஒரு விளையாட்டு அமைப்பு அனுமதி கேட்டு விட முடியுமா?? விளையாட வேண்டும் என்றால் மைதானங்கள் இருக்கு அங்கே தானே விளையாட வேண்டும் 🙄🙄 


அப்படி இருக்க அரசியல் கட்சிகளுக்கு மட்டும் எவ்வாறு ரோடுகளை கூட்டங்கள் நடத்த அனுமதிக்க இயலும்?? எந்த கட்சியாக இருந்தாலும் சரி அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி இல்ல வேறு சிறிய கட்சிகளாக இருந்தாலும் சரி.. Road show என்று ஒன்றை நடத்துவதே அடிப்படைத் தவறு.. 🙄🙄 சமீப காலமாக இது பெரிதாய் நடந்து கொண்டே தான் போகிறது..  


ஆம்புலன்ஸ் போகதானே ரோடே தவிர, கூட்டங்கள் நடத்த இல்லை என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அங்கே கூட்டங்கள் அனுமதி பெற்று நடைபெற்று நடக்கிறப்போ, ஏன் ஆம்புலன்ஸ் இங்கு வருகிறது என்று புத்திசாலித்தனமான கேள்விகள் வேறு.. இப்போது கூட்ட நெரிசல் அதிகமாகி உயிர் சேதங்கள் ஏற்படும் பொழுது உங்கள் தலைவர் மைக்கிலேயே.. எப்பா ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கப்பா!!! எப்பா ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கப்பா!!! என்று கதறினாரே இப்பொழுது மட்டும் உங்களுக்கு ஏன் ஆம்புலன்ஸ் கூட்டத்துக்கு நடுவே  தேவைப்படுகிறது 🙄🙄


பெண்கள் இங்கே வாருங்கள், கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு வாருங்கள், ஒருவரை மீது ஒருவர் ஏறி செல்லுங்கள், வெளியூர்களிலிருந்து இங்கே நடக்கும் கூட்டத்திற்கு வாருங்கள் என்று உங்களை ஆளுங்கட்சி அழைத்ததா??போலீஸ் அழைத்ததா?? இல்லை எவர் தான் அழைத்தார்கள்?? நான் தளபதி வெறியன் அப்படி என்று சொல்லிக் கொண்டு உங்களை வரச் சொல்லி யார்தான் அழைத்தார்கள் 🙄


இப்பொழுது இங்கே அரசியல் களத்தில் நடந்த இந்தத் துயர உயிரிழப்புகளுக்கு காரணம் அவன் தான், இவன் தான், நான் இல்லை அவனில்லை என்று "Fingers Pointing Game " ஆரம்பித்துவிட்டது.. ஆனால் இந்த உயிரிழப்புக்கு முழுக்க முழுக்க காரணம் உயிர் இழந்தவர்களே.. முட்டாள்தனமாக ஒருவரை பார்க்கச் சென்று உயிரை விட்டவர்களே.. தனிமனித ஒழுக்கம் என்று ஒன்று இல்லாதவரை நாம் எவரையும் குற்றம் சாட்டி விட முடியாது🙏🏻 


உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் இந்த இறப்புக்களுக்கு பிறகாவது.. தானாக முன்வந்து நீதிமன்றத்தை கூட்டி.. இனி வரும் காலங்களில் இந்தியாவில் எந்த ஒரு இடத்திலும் Road show என்ற concept இருக்கவே இருக்கக் கூடாது என்று உத்தரவு இட வேண்டும்.. பொது மக்களுக்கு இடையூறாகவும் பொது சொத்துகளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் இருக்கும் இந்த road show களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் 🙏🏻 இறந்த இந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் 🙏🏻


... Dr. கு.. அரவிந்தன்....


நடிகர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு : அக்கறையில்லாத தலைமைதான் காரணமா?



நடிகர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு : அக்கறையில்லாத தலைமைதான் காரணமா? (முகநூல் பதிவு)


களத்திலிருந்த நிருபர்கள் கொதித்துப் பேசுகின்றனர்.  


நிகழ்வின் அத்தனை நெறிமுறைகளும் மிக கேவலமாக பின்பற்றப் பட்டிருக்கின்றன, இது நெரிசல் பலி அல்ல, படுகொலைகள் என்று ஆற்றாமையுடன் அவர்கள் வெடித்துப் பேசுவது காட்டப்பட்ட அலட்சியத்தைத்தான் !


காவல் துறை அனுமதித்த உரிய நேரத்திற்கு விஜய் வந்து பேசியிருந்தால் இவ்வளவு நெரிசலுக்கு வாய்ப்பே இல்லை என்கின்றனர்.


இன்னொரு நிருபர் (நியுஸ் தமிழ் 24 × 7) கதறி அழுகிறார்.  தன் கைகளால் பல குழந்தைகளின் உயிரற்ற உடல்களை ஆம்புலன்சில் ஏற்றியதாகச் சொன்னார்.  அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை.  நூற்றுக்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் நெரிசலில் சரிந்து கிடந்ததாகச் சொல்கிறார்.  அவர்களைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.  அத்தனைபேரும் விஜய் பேச்சைக் கேட்பதில்தான் ஆர்வம் காட்டினர் என்று குரல் கம்மப் பேசினார்.  


நீங்க சொல்றதுக்கும் பலி எண்ணிக்கைக்கும் தொடர்பே இல்லையே என்றார் அவரிடம் பேசிய நெல்சன்.  அப்போது 11 பேர் பலி என்றுதான் பிரேக்கிங் நியூஸ் வந்திருந்தது.  அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தபோதே அது 25 என்றானது அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது !


கல்வி நல்ல வேலையைத் தந்தது, பணமீட்டியது, வாழ்வின் அனைத்து ருசிகளையும் விரைவாக ருசிக்கச் செய்தது.  அவ்வளவுதான்.  பகுத்தறிவை தரவில்லை.  ஒரு தலைமுறையின் பெரும்பகுதிக்கு பகுத்தறிவு என்றால் என்னவென்றே தெரியவில்லை.  


குழந்தைகளுடைய எந்த ஆசையையும் உடனடியாக நிறைவேற்றுவதுதான் தன் தலையாய கடமை என்று பகுத்தறிவற்ற அந்த மூளை சிந்திக்கிறது.  அதுதான் எதற்கும் துணிகிறது !


இப்படி நடக்கலாமென நாம் முதல் மாநாட்டின் போதிருந்தே சொல்லி வருகிறோம்.  தன் குழந்தைகளை அத்தகைய கூட்டத்திற்கு அனுப்பும் பெற்றோர்களை தொடர்ந்து எச்சரித்தும் வந்தோம்.  அவர்களாலும் என்ன செய்ய முடியும் ?


முழு முட்டாள் ரசிகர்கள் ஆன இவர்களை புயல் காற்று.  மேகவெடிப்பு மழை, பெரு நிலச்சரிவு.  சுனாமி.  யாராலும் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது.  காலம் மட்டுமே திருத்தும் ..


#கரூர்கூட்டநெரிசல்பலி


கரூர் துயர நிகழ்வில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதியுதவி விவரம்



கரூர் நடிகர் விஜய் பரப்புரை துயர நிகழ்வில் உயிரிழந்தவர்கள்  குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதியுதவி விவரம்


கரூரில் உயிரிழந்தவர்கள்  குடும்பத்திற்கு தலா 35,50,000 நிதியுதவி


* தமிழ்நாடு அரசு - 10 லட்சம்

* மத்திய அரசு - 2 லட்சம்

* தவெக - 20 லட்சம்

* காங்கிரஸ் - 2,50,000

* கரூர் மாவட்ட பாஜக - 1 லட்சம்


கரூர் துயர சம்பவத்தில் நடந்தது என்ன? - ADGP விளக்கம்

கரூர் துயர சம்பவத்தில் நடந்தது என்ன? - ADGP விளக்கம்


 விஜய் பேசும்போது மின்சாரம் தடை செய்யப்படவில்லை : மின்வாரிய அதிகாரி ராஜலட்சுமி பேட்டி 



* கரூரில் தவெகவினர் முதலில் கேட்ட லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி மிகவும் ஆபத்தான பகுதி, ஒரு பக்கம் பெட்ரோல் பங்க், மற்றொரு பக்கம் அமராவதி ஆறு, பாலம் உள்ளது 


* 2வதாக அனுமதி கேட்ட உழவர் சந்தை பகுதி மிகவும் குறுகலான இடம் 


* 3வதாக அனுமதி அளிக்கப்பட்ட வேலுச்சாமிபுரம் பஸ்ஸ்டாப் ஏற்கனவே அதிமுக பிரச்சாரம் செய்த இடம் என்பதால் பரிந்துரைத்தோம் 


* போலீஸ் பரிந்துரையை ஏற்றுக்கொண்டுதான் வேலுச்சாமிபுரம் பஸ்ஸ்டாப் பகுதியில் தவெகவினர் அனுமதி பெற்றனர் 


* கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் கல்வீச்சு ஏதும் நடைபெறவில்லை 


* நேற்று, விஜய் வந்தபோது 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் 



* அதற்கு முந்தைய நாள், எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தின்போது 137 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் 


* கூட்டம் அதிகம் உள்ளதால் 50 மீட்டர் முன்னதாகவே வாகனத்தை நிறுத்தமாறு காவல்துறை அறிவுறுத்தலுக்கு விஜய் தரப்பு மறுப்பு, 


* குறிப்பிட்ட இடத்தில்தான் பிரச்சாரம் மேற்கொள்வேன் என விஜய் திட்டவட்டம் - சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம் 


* தவெகவினர் அமைத்திருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்துவிட்டது 


* விஜய் வருவதற்கு முன்பு தொண்டர்கள் மரம், மின்கம்பம் மீது ஏறி இருந்ததால் அவர்களை கீழே இறக்கவதற்காக சிறிது நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது 


* விஜய் பேசும்போதும் மின்சாரம் தடை செய்யப்படவில்லை - மின்துறை விளக்கம்



கரூரில் 40 பேர் இறந்த இடத்தில் உள்ள CCTV ஆதாரங்களை காவல்துறை கைப்பற்றியதாக தகவல்



கரூரில் 40 பேர் இறந்த இடத்தில் உள்ள CCTV ஆதாரங்களை காவல்துறை கைப்பற்றியதாக தகவல்


*📽️ கரூரில் 40 பேர் இறந்த இடத்தை சுற்றி இருக்கும் கடைகளில் சிசிடிவி ஆதாரங்கள் சேகரிப்பு


*🎥 கடைகளின் சிசிடிவி ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்


*📽️ விஜய் பரப்புரை செய்த பகுதியில் சிசிடிவி ஹார்ட் டிஸ்க்களை காவல்துறையினர் கைப்பற்றியதாக தகவல்


*📽️ வேலுச்சாமிபுரத்தில் பதிவான சிசிடிவி ஆதாரங்களை போலீசார் மொத்தமாக கைப்பற்றியுள்ளதாக தகவல்


கரூரில் நடிகர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்சம் ரூபாய் - தவெக தலைவர் விஜய் அறிவிப்பு


கரூரில் நடிகர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்சம் ரூபாய் - தவெக தலைவர் விஜய் அறிவிப்பு


என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.


கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.


நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.


என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன். 


நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.


அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்.



கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பள்ளி குழந்தைகளை பார்த்த பிறகு கதறி அழுத பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பள்ளி குழந்தைகளை பார்த்த பிறகு கண்ணீர் விட்டு கதறி அழுத பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




கரூர் துயரம் - மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 111 பேரில் ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளதாக கரூரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

 கரூர் துயரம் - மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 111 பேரில் ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளதாக கரூரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்  



கரூர் விஜய் பரப்புரையில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதில் கரூர்  மாவட்டத்தைச் சேர்ந்தவகள் 28 பேர், ஈரோடு,  திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 பேரின் உடல்கள் அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 61 பேரும் என மொத்தம் 111 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் அடையாளம் காணப்பட்டுள்ள 34 பேரின் விவரங்கள்

 கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் அடையாளம் காணப்பட்டுள்ள 34 பேரின் விவரங்கள்


கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று இரவு தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 37 பேரின் பெயர் விவரங்கள் தெரியவந்துள்ளன. அந்த விவரங்கள் பின்வருமாறு:

1. தாமரைக்கண்ணன்(வயது 25) த/பெ.முருகேசன். ஒத்தப்பட்டி காலனி, பாகநத்தம், கரூர்.

2. ஹேமலதா(வயது 8) க/பெ.ஆனந்த்ஜோதி, 1/17, விஸ்வநாதபுரி, கரூர்

3. சாய்லெட்சனா(வயது 8) த/பெ.ஆனந்த்ஜோதி. 1/17, விஸ்வநாதபுரி. கரூர்

4. சாய்ஜீவா(வயது 4) த/பெ.ஆனந்த்ஜோதி, 1/17, விஸ்வநாதபுரி, கரூர்

5. சுகன்யா(வயது 33) க/பெ.தேவேந்திரன், வடிவேல்நகர் காவலர் காலனி, கரூர்

6. ஆகாஷ்(வயது 23) த/பெ.மாணிக்கம், காமராஜ்புரம், கரூர்

7. தனுஷ்குமார்(வயது 24) த/பெ.இளங்கோவன், காந்திநகர், காந்திகிராமம், கரூர்

8. வடிவழகன் (எ)வடிவேல்(வயது 54) த/பெ.முத்துசாமி 61. மேங்காட்டுதெரு. பசுபதிபாளையம், கரூர்

9. ரேவதி(வயது 52) க/பெ.முருகேசன், கொடுமுடி வட்டம், ஈரோடு.

10. சந்திரா(வயது 40) க/பெ.செல்வராஜ், ஏமூர், புதூர், கரூர்.

11. குருவிஷ்னு(வயது 2) த/பெ.விமல். வடிவேல் நகர், வேலுச்சாமி புரம், கரூர்.

12.ரமேஷ்(வயது 32) த/பெ.பெருமாள். கோடங்கிபட்டி, கரூர்.

13. சனுஜ்(வயது 13) த/பெ.ரகு காந்திகிராமம். தாந்தோனி கிராமம். கரூர்.

14. ரவிகிருஷ்ணன்(வயது 32) த/பெ.மருதாசலம், பாரதியார் தெரு, எல்.என்.எஸ் கிராமம், கரூர்.

15. பிரியதர்ஷ்ணி(வயது 35) க/பெ.சக்திவேல், ஏமூர் கிராமம், கரூர்.

16. தரணிகா(வயது 14) த/பெ.சக்திவேல், ஏமூர் கிராமம், கரூர்.

17. பழனியம்மாள்(வயது 11) த/பெ.பெருமாள். கே.எ.நகர். 2 வது தெரு 37/2டி, கோதூர் ரோடு, வேலுச்சாமிபுரம். கரூர்.

18. கோகிலா(வயது 14) த/பெ.பெருமாள், கே.எ.நகர், 2 வது தெரு 37/2டி. கோதூர் ரோடு, வேலுச்சாமிபுரம், கரூர்.

19. மகேஷ்வரி (வயது 45) க/பெ.சக்திவேல், 9E லெட்சுமிநகர் அரசுகாலனி, அருகம்பாளையம், மண்மங்கலம்.

20. அஜிதா(வயது 21) த/பெ.மணி (எ) புகழேந்தி, தொக்குப்பட்டி, புதூர், அரவக்குறிச்சி, கரூர்

21. மாலதி(வயது 36) க/பெ.கிருஷ்ணமூர்த்தி 86/5, பாரதியார் நகர், ராயனூர் வடக்கு, கரூர்.

22. சுமதி(வயது 50) க/பெ.மணி (எ) சுப்பிரமணி, 80 அடி ரோடு, 24, ரெத்தினம்சாலை, கரூர்.

23. மணிகண்டன்(வயது 33) த/பெ.பாலாஜி, தீர்த்தம்பாளையம், தாராபுரம் மெயின் ரோடு, வெள்ளக்கோயில் காங்கேயம் வட்டம், திருப்பூர்.

24. சதீஷ்குமார் (வயது 34) த/பெ.துரைசாமி, ஆவுடையார்பாளயம். காந்திநகர், கொடுமுடி, ஈரோடு

25. கிருத்திக்யாதவ்(வயது 7) த/பெ.சரவணன். கருப்பாயி கோவில் தெரு, 5 ரோடு, கரூர்.

26. ஆனந்த்(வயது 26) த/பெ.முருகன், அரூர் மெயின் ரோடு, சுக்காம்பட்டி, சேலம்.

27. சங்கர் கனேஷ்(வயது 45) த/பெ.பால்ராஜ், வடக்கு தாளிபட்டி, குஜிலியம்பாறை வட்டம், திண்டுக்கல்.

28. விஜயராணி (வயது 42) க/பெ.சக்திவேல், தாழைப்பட்டி, பிச்சம்பட்டி, கரூர்.

29. கோகுலபிரியா(வயது 28) க/பெ.ஜெயபிரகாஷ், செம்மாண்டபாளையம், வெள்ளகோவில், காங்கேயம் வட்டம், திருப்பூர்.

30. பாத்திமாபானு(வயது 29) க/பெ.பிரபாகரன், கொள்ளப்பட்டி, ஒட்டன்சத்திரம் வட்டம், திண்டுக்கல்.

31. கிஷோர் (வயது 17) த/பெ.கனேஷ். வடக்கு காந்திகிராமம். அன்பு நகர், கரூர்.

32. ஜெயா(வயது 55) க/பெ.சுப்பிரமணி, ரெட்டிகடை தெரு. வெங்கமேடு, கரூர்.

33. அருக்காணி(வயது 60), ஏமூர் கிராமம், கரூர்.

34. ஜெயந்தி(வயது 43) க/பெ.சதீஷ்குமார், மாரியம்மன் கோவில் தெரு. வேலாயுதம்பாளையம், புகளூர்.

35. ஸ்ரீநாத்(வயது 16), மேட்டூர், சேலம்.

36. மோகன்(வயது 19), ஜம்பை பவானி, ஈரோடு.

37. பிரித்திக்(வயது 10), ஏமூர். கரூர்









கரூர் விஜய் பரப்புரையில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


இதில் கரூர்  மாவட்டத்தைச் சேர்ந்தவகள் 28 பேர், ஈரோடு,  திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 பேரின் உடல்கள் அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தற்போது கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 61 பேரும் என மொத்தம் 111 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.


கூட்ட நெரிசலில் நாம் சிக்கிக் கொண்டால் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்?



கூட்ட நெரிசலில் நாம் சிக்கிக் கொண்டால் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்?


What should we do for safety if we get stuck in a crowd?


பெங்களூரு ஆர்சிபி வெற்றி விழா துயரம்: இப்படி ஒரு கூட்ட நெரிசலில் நாம் சிக்கிக் கொண்டால் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்?


முதலில் நாம் 

அங்கம் வகிக்கும் கூட்டம் நெரிசலுக்கு உள்ளாகிறது என்பதை அறிய வேண்டும். 


நீங்கள் நிற்கும் இடத்தைச் சுற்றி நிற்பவர்கள் உங்களைத் தொடாமல் நிற்கிறார்கள் என்றால் ஒரு சதுர மீட்டருக்கு மூன்று பேர் என்ற நிலையில் இருக்கிறீர்கள். அது ஆரோக்கியமான கூட்டம். 


அதுவே சுற்றி நிற்பவர்கள் அவ்வப்போது உங்களை மோதுகிறார்கள் என்றால் ஒரு சதுர மீட்டருக்கு ஐந்து நபர்கள் வரை நிற்கிறீர்கள் என்று அர்த்தம். இது ஆபத்தான கூட்டமாக மாற வாய்ப்பு உள்ளது. எனவே உடனே கூட்ட நெரிசல் குறைவாக இடம் நோக்கி நகர்ந்து விட வேண்டும். 


உங்களால் ஒரு கூட்டத்தில் குனிந்து கால்களைத் தொட முடியவில்லை என்றால் அந்தக் கூட்டம் - நெருக்கடி நிலையை எட்ட உள்ளது என்று பொருள். 


இப்படி ஒரு கூட்டத்தில் நீங்கள் சிக்கிக் கொண்டால் எப்படி வெளியேறுவது? 



உங்களுக்கு மிக அருகில் கூட்டம் செல்லும் திசை அன்றி பக்கவாட்டில் ஏதேனும் மேடான பகுதி / கார் / மரம் உள்ளிட்ட இடங்கள் இருப்பின் அதை நோக்கி மூலைவிட்டமாக (Diagonal direction) நகர்ந்து செல்லவேண்டும். 


இவ்வாறு செல்லும் போது 

கைகளை பாக்சிங் செய்வது போல நெஞ்சுக்கு முன்னாடி பாதுகாப்பு தருவது போல வைத்துக் கொண்டு நகர வேண்டும். 


கூட்ட நெரிசல் ஏற்படும் போது அதுவும் நீரின் ஓட்டம் போல அலை அலையாகச் செயல்படும். எனவே நீரின் ஓட்டத்தோடு செல்லக் கூடாது. நீரை எதிர்த்தும் செல்லக் கூடாது. அதே சமயம், இந்த மக்கள் கூட்டம் எனும் நீர் ஓட்டத்துக்கு மூலை விட்டமாகச் செல்ல வேண்டும். இதன் மூலம் எளிதில் கூட்டத்தை விட்டு வெளியேற வாய்ப்பு கிடைக்கும். 


ஒரு கூட்டத்தில் பங்கெடுக்கும் போதே

அங்குள்ள பல வெளியேறும் பாதைகள், கதவுகள் மற்றும் திடீரென நெருக்கடி ஏற்பட்டால் எதன் மீது ஏறி தப்பிக்க வேண்டும், முதலில் எந்தப் பாதை நோக்கி ஓட வேண்டும் என்றெல்லாம் மனக்கணக்கு முன்னாடியே போட்டுக் கொள்ள வேண்டும். 


பெரிய கூட்டமே மந்தை மனப்பான்மையில் ஒரு குறிப்பிட்ட பாதையில் முண்டியடித்துக் கொண்டிருக்கும். ஆனால் பல மாற்றுப் பாதைகள் ஆள் இல்லாமல் அல்லது குறைவாக இருக்கும். எனவே நமது முன்கூட்டிய மனக்கணக்குகள் நம்மைக் காக்கக் கூடும். 



எப்பவும் நாம் நகரும் திசையில் நம்மைத் தடுக்கும் சுவர், தூண்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை விட்டு விலகி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு அசையாத, அசையமுடியாத இடத்தில் சிக்கிக் கொண்டால் நமது நெஞ்சுப் பகுதி சுற்றி இருக்கும் கூட்டத்தால் நெரிக்கப்பட்டு மூச்சு விட இயலாமல் இறக்கும் வாய்ப்பு அதிகம். 


எப்போதும் நமது கால்கள் தரையில் இருக்குமாறு ஊர்ந்து செல்ல வேண்டும். முடிந்த வரை கீழே விழாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். மீறி கீழே விழுந்தால் அடுக்கிவைத்த "டோமினோ"க்கள்  ஒன்று மேல் ஒன்று விழுவது போல மக்கள் நம் மேல் விழும் வாய்ப்பு உண்டு. 


அவ்வாறு கீழே விழுந்து விட்டால் கருவுக்குள் சிசு எப்படி சுருண்டு படுத்துக் கொள்ளுமோ அது போல தலையை உள்நோக்கி வைத்து மடங்கி சுருண்டு படுத்துக் கொள்ள வேண்டும். இது நமது தலை மற்றும் நெஞ்சுப் பகுதியைக் காக்கும். கூட்டம் சற்று விலகியவுடன் மீண்டும் எழுந்து நடக்க ஆரம்பிக்க வேண்டும். 


இது போன்ற கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் பத்து நொடிகளுக்கு மேல் மூச்சு விடாமலோ நாடித் துடிப்பு இல்லாமல் இருந்தால் உடனே சிபிஆர் (இதயத்துடிப்பு மற்றும் மூச்சை மீட்டல்)  முதலுதவியை ஆரம்பிக்க வேண்டும். 


இத்தகைய கூட்ட நெரிசல் மரணங்களில் தலையாய காரணமாக இருப்பது "மூச்சுத் திணறல்". எனவே மூச்சு நாடி நின்றி நான்கு நிமிடங்களுக்குள் சிபிஆர் ஆரம்பிக்கப்பட வேண்டும். 


இயன்ற அளவு கூட்ட நெரிசல் ஏற்படும் என்று சந்தேகிக்கப்படும் கூட்டங்களில் பங்கேற்காமல் இருப்பது நல்லது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Service rendered prior to regularization must also be counted for pension benefits – Supreme Court

  பணிவரன்முறைக்கு முந்தைய கால பணியும் ஓய்வூதிய பலன்களுக்கு கணக்கிடப்பட வேண்டும் - உச்ச நீதிமன்றம் Service rendered prior to regularisation m...