கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் - பாதிப்புகள்

       உணவு உற்பத்தி நிறுவனங்கள், உணவு விடுதிகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ள விதிமுறைகள், நடைமுறைக்கு ஒவ்வாது என்பதே சிறிய, நடுத்தர வணிகர்களின் கருத்து. பன்னாட்டு நிறுவனங்களை வளர்க்கவும், சிறிய மற்றும் நடுத்தர உணவு விடுதிகளை படிப்படியாக ஒழித்து விடவும் தான் இந்த விதிமுறைகள் பயன்படும் என்கின்றனர் வணிகர்கள். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டாலும், இந்தச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட விதிமுறைகள், ஒழுங்குமுறைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்தது.
இந்த விதிமுறைகள், ஒழுங்குமுறைகளை உணவு பாதுகாப்பு ஆணையம் வகுத்துள்ளது.ஆணையம் வகுத்துள்ள பல விதிமுறைகள் தங்களை பாதிப்பதாக உணவு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள சிறிய, நடுத்தர வணிகர்கள் கூறுகின்றனர்.
முக்கிய விதிமுறைகள்:
*சிறிய அளவில் உணவு உற்பத்தி செய்பவர்கள் கூட, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விண்ணப்பம் அளித்து பதிவு செய்ய வேண்டும். உரிமம் பெற வேண்டும்.
*உணவு உற்பத்தியை கண்காணிக்க தொழில்நுட்ப அறிவு பெற்றவரை, அந்த நிறுவனம் நியமிக்க வேண்டும். அவர் குறைந்தது பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும்.
*உணவு உற்பத்தி செய்யும் இடத்திலேயே, உணவுப் பொருட்களை பரிசோதனை செய்வதற்கு பரிசோதனைக் கூடம் இருக்க வேண்டும். அல்லது ஆணையம் அறிவிக்கும் சோதனைக் கூடங்களில் உணவுப் பொருட்களை பரிசோதிக்க வேண்டும்.
*உணவுப் பொருட்களைத் தயாரித்து பொட்டலம் போட்டு அளிக்கப்படுவனவற்றில், லேபிள் ஒட்டி கொடுக்க வேண்டும். உணவுப் பொருளில் அடங்கியுள்ள புரோட்டீன், தாதுச் சத்து, ஊட்டச் சத்து அளவை, அந்த லேபிளில் குறிப்பிட வேண்டும்.
*உரிமத்தில் கூறப்பட்டுள்ள உணவுப் பொருளைத் தவிர வேறு எதையும் தயாரிக்கக் கூடாது. பொருளில் மாற்றம், உட்பொருளில் மாற்றம் செய்தால், அதுகுறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.
பொருந்தாது: நுகர்வோருக்கு தரமான, பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக தான் இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன என மத்திய அரசு தரப்பில் கூறினாலும், இதனால் பாரம்பரிய உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மிகப்பெரும்பாதிப்பு வரும் என்கின்றனர்.உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டமானது, விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்குப் பொருந்தாது.நேரடியாக விவசாயிகள், மீனவர்களிடம் இருந்து மூலப் பொருட்களை வாங்கும்போது, அவைகளைப் பரிசோதிக்க இயலாது. வெவ்வேறு பருவங்களில் விளையும் விளைபொருட்கள், வெவ்வேறு விதத்தில் இருக்கும். ஆணையம் நிர்ணயிக்கும் தரத்துக்கு உட்பட்டதா என்பதை உறுதி செய்ய முடியாது.கலப்படமற்ற, சுத்தமான, சுகாதாரமான உணவுகளை பொது மக்களுக்கு வழங்க, வணிகர்களும் கடமைப்பட்டுள்ளனர். அபராதம்:ஆணையத்தின் விதிமுறைகள் பற்றி, ஐகோர்ட் வழக்கறிஞர் ஜி.சங்கரன் கூறும்போது, "சிறு, சிறு வணிகர்கள், உரிமம் அல்லது பதிவு பெறவில்லை என்றால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம்.
உணவுப் பொருளை மாற்றி விற்பனை செய்தால், பேக்கிங் மற்றும் லேபிள் இல்லாமல் விற்பனை செய்தால் அபராதம் என கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து கலந்த விளைப் பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யலாம். ஆனால், அதை வாங்குபவர்கள் தான் அதற்கு பொறுப்பு என விதிமுறைகள் கூறுகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் நல்லது தான். அதை அமல்படுத்துவதற்காககொண்டு வரப்பட்டுள்ள விதிமுறைகள் சரியல்ல' என்றார். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை அமல்படுத்துவதற்காக, ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகள் குறித்து, சென்னை ஓட்டல்கள் சங்கத்தின் தலைவர் கே.டி.சீனிவாச ராஜா கூறியதாவது:இந்தச் சட்டத்தினால் சிறு வியாபாரிகள் முதல் பெரிய ஓட்டல்கள் நடத்தி வரும் உரிமையாளர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். கடற்கரையில் சுண்டல் விற்கும் சுடலையும், சுடச்சுட ஆவிபறக்க இட்லி அவித்து விற்கும் கையேந்தி பவன் முனியாண்டியும் மட்டுமல்ல, அனைத்து ஓட்டல்களின் உரிமையாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
கட்டணம் அதிகம்:ஓட்டலுக்கான உரிமம் புதுப்பிக்க முன்பு 500 ரூபாய் செலவு செய்தோம். புதிய விதிமுறைகளின்படி பார்த்தால் ஆண்டுக்கு 2ஆயிரம் ரூபாய் வீதம் 5 ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
காபியில் கலப்படம் : காபி தயாரித்தால் அதில் எத்தனை சதவீதம் சிக்கரி கலந்துள்ளது, எந்த வகையான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன, எந்த விகிதாசாரத்தில் தயாரிக்கப்படுகிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. காபி தூள் நிறுவனத்திலிருந்து தயாரித்து வரும் தூளில் எதாவது கலப்படம் சேர்ந்து விட்டால் நாங்கள் தான் பொறுப்பு என்கிறது சட்டம்.எண்ணெயில் கலப்படம் இருந்தாலோ அல்லது பூச்சி மருந்துகள் அதிகமாக அடித்த காய்கறிகளை நாங்கள் சமைத்தால் ஓட்டல் உரிமையாளர்களுக்கு தான் தண்டனை என்கிறது சட்டம். இதை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியும்? குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.வாடிக்கையாளர் ஒருவர் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு அவர் வீட்டுக்கு செல்லும்போது ஏதாவது ஒரு பிரச்னையின் காரணமாக விபத்து நேரிட்டால் உடனே அவரது மரணத்திற்கு நஷ்ட ஈடாக அபராதமும், தண்டனையும் விதிக்கலாம் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இது நடைமுறையில் சாத்தியமா? உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஊழியர்களில் "கேட்டரிங்' படித்தவர் ஒருவர் இடம் பெற வேண்டும். ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை நடத்த வேண்டும். அந்த பரிசோதனையை மேற்கொண்டால் குறைந்தப்பட்சம் 500 ரூபாய் முதல் ஆயிரம் வரை ஊழியர்களுக்கு நிர்வாகம் செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க சட்டத்தின் வடிவம்:தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் செயலர் ஆர்.சீனிவாசன் கூறியதாவது:அமெரிக்காவில் உள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் சட்டத்தை அப்படியே காப்பி அடித்து, அதன் வடிவமாக இங்கு உருவாக்கியுள்ளனர்.இந்தச் சட்டத்தை வரவேற்கிறோம். சட்டத்தை அமல்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட விதிமுறைகள் தான் சரியல்ல. தரமான உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் கொடுத்தால் வியாபாரம் நடக்கும். நமது நாட்டின் யதார்த்தமான நிலைமைக்கும், விளை பொருட்களின் தரம், தண்ணீரின் தன்மை, இதையெல்லாம் கருத்தில் கொண்டு விதிமுறைகளை உருவாக்கியிருக்க வேண்டும். உணவு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களிடம் கலந்து ஆலோசித்து, வழிமுறைகளை உருவாக்கியிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உச்சநீதிமன்றத்திற்கு புதிய இணையதளம் தொடக்கம் - வழக்கு விசாரணையை நேரலையில் காணலாம்...

உச்சநீதிமன்றத்திற்கு புதிய இணையதளம் தொடக்கம் - வழக்கு விசாரணையை நேரலையில் காணலாம்... புதுடெல்லி: நீதித்துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதாகவும...