கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Rabies : நம்மை தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை

 


ரேபிஸ் நோய் : நம்மை தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை 


🦮🐕‍🦺🐈🐕🐕‍🦺🦮🐈‍⬛🐕

சமீபத்தில் தெருநாயை சாக்கடையில் இருந்து காப்பாற்றும் போது நாயிடம் இருந்து கடிபட்ட ப்ரிஜேஷ் எனும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த கபடி வீரர் ரேபிஸ் நோய் ஏற்பட்டு துடிதுடித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 


கடந்த இரண்டு மாதங்களில் கேரள மாநிலத்தில் மூன்று சிறு வயதினர் நாய்க்கடிக்குப் பின் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு தடுப்பூசி போடப்பட்ட பின்னரும் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இத்தகைய சூழ்நிலையில் 

ரேபிஸ் குறித்தும், நம்மையும் நம் சுற்றத்தாரையும் தற்காத்துக் கொள்ளத் தேவையான விஷயங்களைப் பற்றி அறிவோம். 


ரேபிஸ் என்பது ஒரு வைரஸ் தொற்று நோயாகும். 


இந்தியாவைப் பொருத்தவரை இந்தத் தொற்று, பெரும்பாலும் நாய்களிடம் ( 95%)   இருந்தும் 

அதன் பின் பூனைகள் (2%), நரி, கீரிப்பிள்ளை (1%) உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து பரவுகின்றது. 


ரேபிஸ் வைரஸ் தொற்றுடைய நாயோ பூனையோ, மனிதர்களைக் கடிக்கும் போதோ பிராண்டும் போதோ அல்லது காயமுற்ற பகுதியில் நக்கும் போதோ அல்லது மனிதர்களின் வாயில் , கண்ணில் அதன் எச்சில் படும் போதோ, ரேபிஸ் வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் செல்கிறது.


இது ஏனைய வைரஸ்கள் போல ரத்த ஓட்டத்தில் கலந்து பரவும் தன்மையற்றது.  மாறாக நரம்புகளில் ஊடுருவி மூளையை நோக்கி மெதுவாக ஊர்ந்து செல்லும் தன்மை கொண்டதாக இருக்கிறது. 


விலங்கிடம் கடிபட்டு தொற்று அடைந்ததில் இருந்து நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கு மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் வரை ஆகும். 


பொதுவாக, எந்த இடத்தில் விலங்கு கடித்திருக்கறது என்பதைப் பொருத்து அந்த காலம் முடிவாகும். 

மூளைக்கு மிக அருகில் இருக்கும் தலை, முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் கடிபட்டால் சீக்கிரமே அறிகுறிகள் தோன்றிவிடும். 


இன்னும் கை, கால்கள், விரல்கள் ஆகிய பகுதிகளில் நரம்புகள் அதிகமாக உணர்வூட்டுவதால் அங்கு உள்ளே செல்லும் வைரஸும் எளிதில் தண்டுவட நரம்பை அடைந்து அங்கிருந்து தண்டுவட நீர் மூலம் மூளையை அடைந்துவிடுகிறது. 

பொதுவாக பெரும்பான்மையான ரேபிஸ் நோயாளர்களில் மூளையை வைரஸ் அடைவதற்கு 21 நாட்கள் நேரம் எடுத்துக் கொள்கிறது. 


ரேபிஸ் நோய் ஏற்பட்டுவிட்டால் மரணம் சம்பவிப்பது 100% உறுதி. 

இதற்குக் காரணம்,

இந்த வைரஸ் மூளையைச் சென்று அடைந்த பிறகே மூளையில் தொற்று (எண்கெஃபாலைட்டிஸ்) ஏற்பட்டதற்கான அறிகுறிகளை வெளியிடும்.  வைரஸானது மூளையைச் சென்று அடைந்து விட்ட பிறகு எந்த சிகிச்சை கொடுத்தும் காப்பாற்றுவது மிகக் கடினம் என்ற நிலையே இப்போது வரை இருந்து வருகிறது. 


காய்ச்சல் 

கடும் தலைவலி 

நீரைக் கண்டு அச்சம் கொள்ளுதல் ( ஹைட்ரோ ஃபோபியா) , 

ஒலியைக் கேட்டு அச்சம் கொள்ளுதல் ( ஃபோனோபோபியா) , 

காற்று மேலே பட்டால் கூட கடும் உடல் வலி ஏற்படும். தொண்டைப் பகுதி தசைகள் லேசாக நீர்பட்டால் கூட இறுக்கிக் கொண்டு மூச்சுத் திணறல் ஏற்படும். 

எச்சில் அதிகமாக சுரக்கும். முதலில் ஆங்காங்கே 

தசை இறுக்க நிலை ஏற்பட்டு, 

பிறகு பக்கவாதம், பிதற்றல் நிலை என்று நோய் முற்றி  மரணம் சம்பவிக்கும்.


எனவே, 

நாய்க்கடியோ பூனைக்கடியோ உதாசீனப்படுத்தாமல் உடனடியாக அதற்குரிய முக்கியமான உயிர்காக்கும் சிகிச்சைகளான 

1.காயத்தைக் கழுவி சுத்தம் செய்தல்

2. ரேபிஸ் தடுப்பூசியை முறையாகப் பெறுதல் 

3. தேவை இருக்கும் இடங்களில், ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் ஊசியைப் பெறுதல் 


ஆகிய மூன்றையும் கட்டாயமாகச் செய்தாக வேண்டும்.


வளர்ப்பு நாய்களால்  ரேபிஸ் தொற்று ஏற்படாது என்றே பலரும் அலட்சியமாக இருக்கின்றனர். 

அவ்வாறின்றி 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த 121 ரேபிஸ் மரணங்களில்  51 மரணங்கள் வளர்ப்பு நாய்க்கடிகளால் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 


நாய்க்கடி/ பூனைக்கடி விஷயத்தில் முதலும் முக்கியமானதும் கடியை வகைப்படுத்துவதாகும். 


வகை ஒன்று 

CATEGORY I 


விலங்கைத் தொடுவது, 

விலங்குக்கு உணவு வழங்குவது, 

காயம் ஏற்படாத நல்ல நிலையில் உள்ள தோலில் விலங்கு நக்குவது, காயம் ஏற்படாத நல்ல நிலையில் உள்ள தோலில் விலங்கின் எச்சில் மற்றும் சிறுநீர் உள்ளிட்ட எச்சங்கள் படுவது .


மேற்கூறியவற்றால் ரேபிஸ் நோய் பரவுவதில்லை. 

எனவே இவர்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. 


வகை இரண்டு 

CATEGORY II 


லேசான ரத்தம் வெளியே வராத அளவு 

சிறிய அளவு பிராண்டல்/ பல் பதியாத அளவு  சிறிய அளவு கடி 


 

கடிபட்ட இடத்தை சுத்தமாகக் கழுவ வேண்டும் அதனுடன் 

ரேபிஸ் தடுப்பூசி ( ANTI RABIES VACCINE) வழங்கப்பட வேண்டும். 


வகை மூன்று

( CATEGORY III)  


ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் ரத்தம் வெளியே வருமாறு தோல் முழுமையையும் உள்ளடக்கிய கடி / பிராண்டல்/ காயம் ஏற்பட்ட இடத்தில் நக்கப்படுதல்/ கண், வாய் உள்ளிட்ட இடங்களில் விலங்கின் எச்சில்படுவது ஆகியன மூன்றாம் நிலை கடியாகும். 


கடிபட்ட இடத்தைக் கழுவுதல் + ரேபிஸ் தடுப்பூசியைப் பெறுதல் அதனுடன் கடிபட்ட இடத்தில் ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் ஊசி கட்டாயம் வழங்கப்பட வேண்டும். 


----- 


கடிபட்ட பிறகு உடனே செய்ய வேண்டியது 

காயம்பட்ட இடத்தை ஓடும் குழாய் நீரில் தண்ணீரைத் திறந்து விட்டு நன்றாக சோப் போட்டுத் தேய்த்து 15 நிமிடங்கள்  கழுவ வேண்டும். பிறகு கடிபட்ட இடத்தில் போவிடோன் அயோடின் போன்ற கிருமி நாசினியை  உபயோகிக்கலாம். 


மூன்றாம் வகைக் கடியாக இருப்பின் கடித்த இடத்தைச் சுற்றி ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் (RABIES IMMUNOGLOBULIN)  ஊசியை கட்டாயம் வழங்க வேண்டும். கூடவே டெட்டானஸ் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ள வேண்டும். 


- கடிபட்ட இடத்தில் வைரஸ் இருக்கும் என்பதால் கட்டாயம் கடிபட்ட இடத்தை வெறும் கையால் தொடுதல் கூடாது 

- கட்டாயம் காயத்தின் மீது மண், காபித் தூள், எலுமிச்சை, மூலிகைகள், வெற்றிலை போன்றவற்றை அப்புவது தவறு. 

-------


கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் -


எச்.ஐ.வி நோயாளிகள் , புற்று நோய் கீமோதெரபி சிகிச்சையில் இருப்பவர்கள், எதிர்ப்பு சக்தி குன்றியோர் , ஸ்டீராய்டு மாத்திரைகள் உட்கொள்பவர்கள், 

ஹைட்ராக்சி குளோரோகுயின், மலேரியா சிகிச்சையில் பயன்படும் குளோரோகுயின் போன்ற மாத்திரைகளை உட்கொள்வோருக்கு 

இரண்டாம் வகை கடி ஏற்பட்டிருந்தாலும் 

அதை மூன்றாம் வகைக் கடியாகக் கருத்தில் கொண்டு 

ரேபிஸ் தடுப்பூசியுடன் 

கட்டாயம் ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் வழங்கப்பட வேண்டும். ரேபிஸ் தடுப்பூசி மட்டுமே இவர்களுக்கு  எதிர்ப்பு சக்தியை போதுமான அளவு வழங்காது  என்பதே இதற்கான காரணம். 


ரேபிஸ் தடுப்பூசி மற்றும் இம்யூனோகுளோபுளின் - அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகின்றன.  


கடிபட்ட உடனே நன்றாக பதினைந்து நிமிடங்கள் ஓடும் குழாய் நீரில் சோப் போட்டுக் கழுவி விட்டு, அரசு மருத்துவமனைக்கு விரைந்திட வேண்டும். 


கடிபட்ட இடத்தில் ரத்தம் வந்ததென்றால் அதை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். 

மருத்துவர் கடியை சரியாக வகைப்படுத்துவதற்கு இந்தத் தகவல் உறுதுணையாக இருக்கும். 


எவ்வளவு சீக்கிரம் 

தடுப்பூசி பெறுகிறோமோ அவ்வளவு நல்லது. 

உள்ளே சென்ற வைரஸ் மூளையை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்குமுன் நாம் எதிர்ப்பு மருந்தை வழங்கியாக வேண்டும். 


முதல் தவணை ( 0 நாள்) 

அதிலிருந்து மூன்றாவது நாள், பின் ஏழாம் நாள், பின் இருபத்தி எட்டாம் நாள் என்று நான்கு தவணை மருத்துவமனைக்குச் சென்று தோலினூடே வழங்கப்படும் ஊசியைச் முறையாகச் சரியாகப் போட்டுக் கொள்ள வேண்டும். 


தனியாரில் தசை வழி வழங்கப்படும் ரேபிஸ் தடுப்பூசி பெறுபவர்கள்

 

முதல் தவணை ( 0 நாள்) 

அதிலிருந்து மூன்றாவது நாள், பின் ஏழாம் நாள், பின் பதினான்காம் நாள், அதன் பின்  இருபத்தி எட்டாம் நாள் என்று ஐந்து  தவணை  சென்று தசைக்குள் வழங்கப்படும் ஊசியை முறையாகச் சரியாகப் போட்டுக் கொள்ள வேண்டும். 


தடுப்பூசி பெறும் இந்த ஒரு மாத காலத்தில் 

உணவுப் பத்தியம் ஏதுமில்லை. மாமிசம், மீன், முட்டை உள்ளிட்ட அனைத்தையும் சாப்பிடலாம். 


தமிழ்நாட்டில் 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த ரேபிஸ் மரணங்களில் செய்யப்பட்ட ஆய்வில், 

மரணமடைந்தவர்களில் 73.6% பேர் கடிபட்ட பிறகான ரேபிஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளவில்லை என்பதும் 

17.4% பேர் ஆரம்ப  தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டாலும்  

முழுமையாக நான்கு தவணைகளையும் ( 0, 3,7,28) முழுமையாக முடிக்கவில்லை. 

ஒரே ஒரு நபர் தான் முழுமையாக தடுப்பூசி பெற்றிருந்தது தெரிய வந்தது. 


அந்த ஆய்வில், இறந்த நபர்களில் 83.5% பேர் நாய்களால் கடிக்கப் பெற்று  , 73.5% பேர் மூன்றாம் வகை ( CATEGORY III) கடியைப் பெற்றிருந்தும் அவர்களில் 5% பேர் மட்டுமே ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் பெற்றிருந்தது தெரியவந்தது. இதிலிருந்து, கடியை வகைப்படுத்துதலின் முக்கியத்துவமும் ,

மூன்றாம் வகைக் கடிக்கு கட்டாயம் இம்யூனோகுளோபுளின் வழங்கப்பட வேண்டியதன் அத்தியாவசியம் குறித்தும் நாம் அறிய முடிகிறது. 


வீட்டில் செல்ல நாய்கள் மற்றும் பூனைகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் அவற்றுக்கு வருடாந்திர ரேபிஸ் தடுப்பூசியை முறையாக வழங்கி வர வேண்டும். கூடவே தாங்கள் வளர்க்கும் நாய் மற்றும் பூனையை, தெரு நாய் மற்றும் பூனைகளுடன் கலந்து விடாதவாறு பராமரிப்பதும் அவர்களின் கடமை. 


தடுப்பூசி பெறப்பட்ட நாய், பூனை கடித்தாலும் பிராண்டினாலும் மனிதர்களுக்கு  ரேபிஸ் தொற்று ஏற்படும் வாய்ப்பு அரிதாக உள்ளது. எனவே,  கடித்தது நாம் வளர்க்கும் செல்ல நாயாக இருந்தாலும் சரி. அதற்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் சரி, கடிபட்டவருக்கு ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது. 


ஒருமுறை சரியாக நாய்க்கடிக்குப் பின்பான ரேபிஸ் தடுப்பூசி அட்டவணையை முடித்தவர்கள் ( கட்டாயம் அதற்கான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்)  அதற்குப் பின்பு மூன்று மாதங்களுக்குள் மற்றொரு கடிபட்டால் அவர்களுக்கு காயம்பட்ட இடத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சிகிச்சை மட்டும் பெற்றால் போதுமானது. 

ரேபிஸ் தடுப்பூசி பெறத் தேவையில்லை. 


முந்தைய முழு அட்டவணை தடுப்பூசிகளைப் பெற்று

மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிய நிலையில் தற்போது புதிதாக கடிபட்டிருந்தால், 

முதல் தவணை ( 0 நாள்) 

மற்றும் மூன்றாம் நாள் ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால் போதுமானது. இவர்களுக்கு இம்யூனோகுளோபுளின் தேவையில்லை. 


முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசி ( PRE EXPOSURE PROPHYLAXIS) 


விலங்கு நல ஆர்வலர்கள்,  மருத்துவர்கள், விலங்கு நல ஆர்வலர்கள்,  

நாய் வளர்ப்போர், நாய்களைப் பிடிப்பவர்கள், 

அதிகமான தெரு நாய்கள் இருக்கும் பகுதிகளில் வாழ்பவர்கள் - முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசி பெறுவது குறித்து சிந்தித்து முடிவெடுக்கலாம். 

இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் - குழந்தைகளுக்கு முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசி பெறுவதற்கு ஊக்குவிக்கிறது. 


முன்கூட்டிய ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி அட்டவணை பின்வருமாறு 


தடுப்பூசி பெறும் முதல் நாள் ( 0 நாள்) 

மூன்றாவது நாள் 

21 அல்லது 28வது நாள்

ஆகிய மூன்று தவணைகள் பெற வேண்டும். 


ஒருமுறை முன்கூட்டிய தடுப்பூசிகளை எடுத்தவர்களுக்கு 

அவர்கள் நாய்க்கடி வாங்கும் போது 

முதல் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆகிய இரு தவணைகள் மட்டும் ரேபிஸ் தடுப்பூசி போட்டால் போதுமானது. மேலும் இவர்களுக்கு இம்யூனோகுளோபுளின் வழங்கத் தேவையில்லை. 


 ரேபிஸ் 100% மரணத்தை விளைவிக்கக் கூடிய கொடூர நோயாக இருப்பினும் 

முறையான விரைவான 

சிகிச்சை மற்றும் தடுப்பூசி வழங்குதல் உயிர்களைக் காக்கக் கூடிய நடவடிக்கைகளாகும். 


தொடர்ந்து நடக்கும் ரேபிஸ் மரணங்கள் குறித்த ஆய்வுகளில் தெரிய வருபவை யாதெனில் 


கடிபட்டவர்களுக்கு கடிபட்டதே தெரியாமலும், தெரிந்தாலும் கடிபட்ட இடத்தை சுத்தமாக நன்றாக சோப் போட்டுக் கழுவாமல் இருப்பதும், 

அதற்குப் பின்பு தடுப்பூசி போடாமல் அலட்சியம் செய்வதும், 

தடுப்பூசி போடப்பட்டாலும் வகைப்படுத்துதலில் சிக்கல் ஏற்பட்டு இம்யூனோகுளோபுளின் வழங்கப்படாமல் இருப்பதும், 

குறிப்பிட்ட அட்டவணைப்படி அனைத்து தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெறாமல் இருப்பதும் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. 


எந்தவொரு விலங்குக் கடியையும் அது நாய்க்கடியோ பூனைக்கடியோ அதன் சிறு பிராண்டலையும் 

துச்சமெனக் கருதாமல் அலட்சியம் செய்யாமல் 

உடனடியாக மருத்துவமனை விரைந்து அதற்குரிய சிகிச்சையும் தடுப்பூசியையும் பெறுவோம் என்று உறுதி ஏற்போம். 


ரேபிஸ் நோயால் ஏற்படும் மரணங்களைத் தடுத்திடுவோம்.


இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழின் "நலம் வாழ" பகுதியில் ரேபிஸ் நோய் குறித்த எனது விழிப்புணர்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


ஆகஸ்ட் 6 - ஹிரோஷிமா - அணு ஆயுத தாக்குதல் நாள்...



 ஆகஸ்ட் 6 - ஹிரோஷிமா - அணு ஆயுத தாக்குதல் நாள்...


ஆகஸ்ட் 1939  


நாஜி ஜெர்மனியில் இருந்து தப்பித்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த 

இயற்பியல் தத்துவ மேதை 

ஆல்பர்ட் ஐண்ஸ்டைண் 

அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டுக்கு ஒரு முக்கிய கடிதம் எழுதுகிறார். 


இதை எழுதத் தூண்டியவர் 

லியோ சிலார்ட் எனும் சக இயற்பியலாளர்


ஐண்ஸ்டைண் இவ்வாறு எச்சரிக்கிறார்

" நாஜி ஜெர்மனி உலகின் சக்தி வாய்ந்த அணு குண்டைத் தயாரிக்கும் முகத்தில் இருக்கிறது. 

அதற்கு முன்பு அமெரிக்கா அணுகுண்டை கண்டறியாவிட்டால் 

இந்த உலகை யாராலும் காப்பாற்ற முடியாது" என்று எழுதுகிறார். 


அமெரிக்கா கண் விழித்துக் கொள்கிறது 

டிசம்பர் 1941 மண்ஹாட்டன் ப்ராஜெக்ட் எனும் ரகசிய திட்டம் மூலம் 

ஒப்பன்ஹைமரை தலைவராக நியமித்து அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் இறங்குகிறது 


முரண் யாதெனில் அணுகுண்டு உருவாக்குமாறு கடிதம் எழுதியவரும் அணுகுண்டு தொழில்நுட்பத்தின் மூல சூத்திரமான ஈ = எம்சி² கண்டறிந்தவரே  இந்தத் திட்டத்தில் தேசத்தின் பாதுகாப்பு கருதி பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.   


அணுகுண்டு கண்டறியும் வேலை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க 


பல ஆயிரம் கிலோ எடை கொண்ட அணுகுண்டை பல ஆயிரம் மைல்கள் தூக்கிக் கொண்டு சென்று போடுவதற்கு ஏற்றவாறு போர் விமானங்கள் அப்போது இல்லை. 


அதற்கு ஏற்றவாறு 

நவீன போர் விமானங்களை உருவாக்கும் பொறுப்பு போயிங் நிறுவனத்திடம் செப்டம்பர் 1941 இல் வழங்கப்பட்டது. 


கவனிக்க - ஜப்பான் அமெரிக்காவின் பியர்ல் ஹார்பரைத் தாக்கியது டிசம்பர் 1941 . அதற்கு முன்னதாகவே 

இத்தகைய நெடிய போர் நிலை வரும் என்பதை கணித்தோ என்னவோ அல்லது பசிபிக்கில் ஜப்பான் போன்ற நாட்டுடன் போர் புரிய நவீன விமானங்கள் வேண்டியோ 250 பி29 போர் விமானங்களுக்கு ஆர்டர் வழங்கப்பட்டது. 


இந்த விமானங்களை உருவாக்க 

அணுகுண்டை தயாரிக்க செலவழித்ததை விட இருமடங்கு செலவழிக்கப்பட்டது. 


பி29 சூப்பர் ஃபோர்ட்ரெஸ் நவீன போர் விமானங்களை உற்பத்தி செய்து டெலிவரி செய்யும் போது அதில் 

பல பிரச்சனைகள் கோளாறுகள் இருந்ததை  அறிய முடிந்தது. 


இதை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் கன்சாஸ் எனும் இடத்தில் ஐந்து வாரங்கள் 

1944 ஆம் ஆண்டு இந்த விமானங்களை எல்லாம் போருக்குத் தேவையான வழிவகைகளில் மராமத்து பார்த்து தயார் செய்யப்பட்டன. 


இந்நிலையில் 

அமெரிக்காவின் 509வது காம்போசிட் க்ரூப் எனும் படையை தலைமை தாங்கும் பொறுப்பு - கர்னல் பவுல் டபிள்யூ டிபெட் ஜூனியரிடம் டிசம்பர் 1944 இல் ஒப்படைக்கப்பட்டது


இந்த 509 வது படையின் முக்கிய முழு முதல் பணி - உலகின் முதல் அணுகுண்டை எதிரி நாட்டின் மீது விமானத்தில் இருந்து வீசுவது மட்டுமே. 


இதற்கெனவே அமெரிக்காவிலும் பசிபிக்கிலும் தனியாக இந்தக் குழு பயிற்சி எடுத்து வந்தது. 


பி29 விமானங்களுள் சில மட்டும். 

அணுகுண்டு தாங்கி ஏவுவதற்கு தோதாக வடிவமைக்கப்பட்டன. 

அவற்றின் எடை குறைக்கப்பட்டது. 

இந்த திட்டத்துக்கு "சில்வர் ப்ளேட் பார்ஜெக்ட்" என்று பெயர் வைக்கப்பட்டது. 


டிப்பெட் தனக்கான பிரத்யேக பி29 விமானத்தை மே 9, 1945  இல் தேர்ந்தெடுத்தார். 


இந்தக் குழுவானது ஜூன் 27 ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு ஜூலை 6 ஆம் தேதி 

பசிபிக்கில் ஜப்பானில் இருந்து 1500 மைல் தூரத்தில் இருக்கும் டினியன் தீவுக்கு வந்து அணுகுண்டின் வரவுக்காகவும் அதை வீசுவதற்கான உத்தரவுக்காகவும் காத்திருந்தது. 


ஜூலை 16,1945 

நியூ மெக்சிகோ மாகாணத்தில் 

ட்ரினிட்டி பரிசோதனையின் மூலம் வெற்றிகரமாக அணுகுண்டை வெடிக்கச் செய்து பரிசோதனை செய்து காண்பித்தார் ஒப்பன்ஹைமர்


இப்போது 

அமெரிக்கா கையில் 

லிட்டில் பாய் மற்றும் ஃபேட் மேன் ஆகிய இரண்டு அணுகுண்டுகள் இருக்கின்றன ஆனால் இவற்றை ஜப்பானுக்கு அருகில் இருக்கும் டினியன் தீவுக்கு கொண்டு செல்ல வாகனம் வேண்டுமே? 


அப்போது கை கொடுக்கிறது. 

யூஎஸ்எஸ் இண்டியானாபாலிஸ் போர்க்கப்பல்.. 


இந்த கப்பலுக்கு ஒரு பழிவாங்கும் வரலாறு இருக்கிறது.  


டிசம்பர் 7,1941 ஆம் ஆண்டு 

பியர்ல் ஹார்பரை ஜப்பான் விமானப்படை நிர்மூலமாக்கிய போது அங்கிருந்த பல போர்க்கப்பல்கள் சிதறடிக்கப்பட்டன. ஆனால் இந்த இண்டியாணாபாலிஸ் கப்பல் மற்றும் அதில் இருந்த போர் விமானங்கள் போர் ஒத்திகைக்காக வேறொரு இடத்துக்குச் சென்றதால் தப்பித்தன.


இந்த கப்பலில் தான் தற்போது 

உலகின் முதல் இரண்டு அணுகுண்டுகள் டினியன் தீவு நோக்கி பரமரகசியமாக கொண்டு வரப்பட்டு ஜூலை 25ஆம் தேதி வந்தடைந்தன. 


இதில் மற்றொரு ட்விஸ்ட் யாதெனில் 

வந்து அணுகுண்டுகளை டெலிவரி செய்த நான்காவது நாள் இந்த போர்க்கப்பல் ஜப்பானின் நீர் மூழ்கி குண்டுகளான டோர்பிடோக்களால் மூழ்கடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இப்போது 

அணுகுண்டை வீச வேண்டிய டிபெட் தலைமையிலான படை ரெடி

அணுகுண்டு ரெடி 


அணுகுண்டை எங்கு எப்போது வீச வேண்டும் என்ற ஆணைக்கு காத்திருந்தனர்


ஜூலை 17 ,1945 தொடங்கி நடந்து வந்த பாட்ஸ்டேம் அமைதி மாநாட்டில் நேச நாடுகள் தலைவர்கள் ஒன்றிணைந்து ஜெர்மனியை மற்றும் கைப்பற்றப்பட்ட பகுதிகளை எப்படி பங்கிட்டுக் கொள்ளலாம் எப்படி நிர்வகிக்கலாம் என்பது குறித்து கலந்தாலோசித்தனர்


இதில் ஜூலை 25 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரூமன் ஜப்பானுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

உடனடியாக நிபந்தனையற்ற சரணாகதி அடையாவிட்டால் துரிதமான முறையில் மிகத்தீவிரமான மனித சமுதாயம் இதுவரை கண்டிராத பேரழிவை சந்திக்க நேரும் என்று சூசகமாக அணுகுண்டு குறித்து எச்சரித்தார்


ஆனால் ஜப்பான் செவிகளில் இது விழவில்லை. அமெரிக்கர்கள் அணுகுண்டே கண்டறிந்தாலும் அதை பக்குவமாக 

இவ்வளவு தூரம் கொண்டு வரும் தொழில் நுட்பமெல்லாம் இருக்காது என்றே நம்பியது. 


அதே ஜூலை 25 ஆம் தேதி 1945, 

அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் இருந்து பசிபிக் போர் தளபதிக்கு உத்தரவு பறக்கிறது. 


509வது காம்போசிட் படை ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு மேல் எப்போது வானிலை அனுமதி அளிக்கிறதோ அப்போது 


ஹிரோஷிமா

கொகுரா

நிகாட்டா

நாகசாகி 

ஆகிய நகரங்களில் ஒன்றின் மீது ஸ்பெசல் குண்டை வீச வேண்டும். 


வீசச் செல்லும் போது 

ராணுவ மற்றும் சிவிலியன் அறிவியலாளர்களை கூட வேறு விமானங்களில் அழைத்து சென்று 

இந்த குண்டினால் ஏற்படும் பாதிப்புகளை படம் பிடித்து அளவிட வேண்டும். 


இன்னும் சில அணுகுண்டுகள் அடுத்தடுத்து டெலிவரி செய்யப்படும். அதை எங்கு வீச வேண்டும் என்பதும் பின்னால் தெரிவிக்கப்படும்"


என்று உத்தரவும் வந்து விட்டது.


அணுகுண்டு 

அணுகுண்டு வீசும் விமானம் மற்றும் விமானி

அணுகுண்டு வீசச் சொல்லி உத்தரவு 


மூன்றும் வந்து விட்டது. 


ஆகஸ்ட் மூன்றுக்குள் ஜப்பான் சரணடையவில்லை என்பதால் 


முதல் இலக்காக 

ராணுவ தளவாடங்களும் கூடவே இதுவரை விமானத்தாக்குதலுக்கு உள்ளாகாமல் இருந்த ஹிரோஷிமா தேர்ந்தெடுக்கப்பட்டது. 


இதுவரை பாதிப்புக்குள்ளாகாமல் இருந்தால் தான் 

அணுகுண்டினால் ஏற்படும் முழுமையான பாதிப்பு ஜப்பானுக்குத் தெரிய வரும் என்பதே இந்த இலக்கு தேர்ந்தெடுக்கப்பட காரணம். 


தொடர்ந்து வானிலை கண்டறியும் விமானங்கள் ஹிரோஷிமாவின் மீது வலம் வந்து 


ஆகஸ்ட் ஆறு அன்று வானிலை சரியாக இருக்கவே.. 


அன்று அதிகாலை 2.45 மணிக்கு 

தனது பி29 விமானத்தில் 

டெப்பெட் மற்றும் அணுகுண்டைக் கையாளும் கேப்டன் பார்சன் மற்றும் மோரிஸ் ஜெப்சன் ஆகியோருடன் டேக் ஆஃப் செய்தார்.


விமானத்தின் இடப்பக்கம் தனது தாயின் பெயரான எனோலா கே என்பதை அவரது நினைவாக எழுதக் கூறியதால் அந்த விமானம் எனோலா கே என்று இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறது. 


அதிபயங்கரமான அணுகுண்டை டேக் ஆஃப் செய்யுமுன்பே அசெம்பிள் செய்தால் 

வெடிக்கும் அபாயம் உள்ளதால்


வண்டி டேக் ஆஃப் ஆனதும் வானத்தில் வைத்த படியே அணுகுண்டு அசெம்பிள் செய்யப்பட்டு 

அதிகாலை ஆறு மணிக்கு வீசுவதற்கு தயார் செய்யப்பட்டது. 


அப்போது தான் முதல் முறையாக அவரது குழுவிடம் டிபெட் உலகின் முதல் அணுகுண்டை வீசப்போவதை அறிவிக்கிறார். 


காலை 7:00 

ஹிரோஷிமாவின் வான்பரப்பில் எனோலா கே நுழைந்தது


ஜப்பானிய ரேடார்கள் 

இதை மோப்பம் பிடித்ததால் மக்களுக்கு சைரன் மூலம் எச்சரிக்கை விடப்பட்டது


மக்கள் வீடுகளுக்கு பதுங்கினர்


ஆனால் ஏதும் நிகழவில்லை


இவ்வாறு 

7.25 மணிக்கு ஒருமுறையும் 


8.00 மணிக்கு 

மறுமுறையும் மீண்டும் எனோலா கே வட்டமடிக்க மக்கள் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை துச்சமாகக் கருதி அவரவர் வேலையைப் பார்க்கத் தொடங்கினர். 


சரியாக 8:09 மணிக்கு 

வானிலை ஆராயும் விமானத்தில் இருந்து தற்போது மேகமூட்டம் இல்லை. 

எல்லாம் க்ளியர் என்று தகவல் கிடைக்க 


இம்முறை எனோலா கே ஹிரோஷிமா நகரில் இருந்து மேலே 26000 அடிக்கு இறங்கி வந்து 


ஹான்காவா நதி மற்றும் மோடோயாசு நதிகள் இணையும் டி வடிவ பாலத்துக்கு நேர் மேலே 


8:15 மணிக்கு 

அணுகுண்டை மேலிருந்து வீசியது 


நிலப்பரப்பில் இருந்து

1900 அடி மேலே அணுகுண்டு வெடித்துச் சிதற


காளான் போன்ற பெரிய வடிவத்தில் மேக மூட்டம் கிளம்பியது. 


அந்த இடத்தை சுற்றி நான்கு மைல் தூரத்திற்கு அனைத்தும் சாம்பலாகின. 


சுமார் ஒரு லட்சம் மக்கள் உடனேவும் 

இன்னும் ஒன்றரை லட்சம் மக்கள் அடுத்த சில நாட்கள் முதல் வருடங்களுக்கும் மாண்டணர். 


டோக்யோவில் இருந்து நேரடியாக ராணுவ அதிகாரிகள் வந்து நிலைமையின் கோரத்தைக் கண்ணால் காணும் வரை 

இது அணுகுண்டு இல்லை என்ற வதந்தியை வானொலியில் மக்கள் நம்புமாறு பரப்பிக் கொண்டிருந்தனர். 


அணுகுண்டு வீசப்பட்டு பதினாறு மணிநேரங்கள் கழித்து 

அமெரிக்க அதிபர் ட்ரூமேன் மக்களுக்கு உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்ட செய்தியை அறிவித்தார். 

ஐப்பான் இப்போதும் சரணடையவில்லை என்றால் இன்னும் உக்கிரமான அழிவை சந்திக்க நேரும் என்று எச்சரித்தார். 


ஒப்பன்ஹைமர் தான் செய்தது மிகப்பெரும் தவறு என்ற குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகி அதிபர் ட்ரூமனை சந்தித்து தனது வருத்தத்தைப் பதிவு செய்தார். 

அதற்கு ட்ரூமன் 

"அணுகுண்டு தயாரிப்பது மட்டுமே உனது பணி. அதை எங்கு எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதெல்லாம் என்னைச் சேர்ந்தது? நீ கவலைப்படத் தேவையில்லை" என்று கூலாகக் கூறிவிட்டார்


ஐண்ஸ்டைணும்

"நான் நாஜிக்கள் அணுகுண்டுகளை கண்டறிவதற்குள் அழித்தொழிக்கப்படுவார்கள் என்று நம்பியிருந்தால் 

நிச்சயம் அமெரிக்க அதிபருக்கு அப்படி ஒரு கடிதத்தை எழுதி இருக்க மாட்டேன்" என்றார் 


இவ்வாறு உலகின் முதல் அணுகுண்டு 

மனிதர்கள் மீது நேரடியாக வீசி சோதனை செய்யப்பட்ட நாள் இன்று 


ஆகஸ்ட் 6,1945 


இன்று உலகம் முழுவதும் பத்து பெரிய நாடுகளிடம்  ஹிரோஷிமாவை விடவும் பன்மடங்கு  சக்தி வாய்ந்த அழிவைத் தரக்கூடிய

அணுகுண்டுகள் உள்ளன. 


அணு ஆயுதங்களை பெருக்கிக் கொண்டே செல்வதில் வல்லரசுகளும் சளைக்காமல் ஈடுபடுகின்றன. 


இதன் மூலம் மனித இனம்  தனக்கு மட்டுமின்றி உலகில் வாழும் மற்ற உயிரினங்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும் காரியத்தை நாம் ஒருபோதும் ஏற்கக்கூடாது. 


அணு ஆயுதங்களை படிப்படியாகக் குறைத்து 

அணு ஆயுதங்களற்ற அமைதியான பூமி நம் சந்ததிகளுக்கு அமைய வேண்டும். 


அணுவிதைத்த பூமியிலே

அறுவடைக்கும்

அணுக்கதிர் தான் 


 அணு ஆயுதங்களுக்கு எதிராகவும் உலக அமைதிக்காகவும் 

இன்னுயிரை நீத்த ஹிரோஷிமா யமகுஷிககளின் ( அணுகுண்டைத் தாங்கிய தியாகிகள்)  நினைவாக இந்த நாளை அனுசரிப்போம். 


 நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


தமிழ்நாட்டைத் தாக்கும் வெப்ப அலை - எச்சரிக்கைப் பதிவு - சில மருத்துவ அறிவுரைகள் - Dr.A.B.ஃபரூக் அப்துல்லா...

 


தமிழ்நாட்டைத் தாக்கும் வெப்ப அலை 


அலர்ட் பதிவு 


சில மருத்துவ அறிவுரைகள் 


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் வெப்ப அலை மிக கொடூரமாக வீசி வருகிறது. 

கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவி வருகிறது. 

இதனால் மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகி வருகிறோம். 


இதனை எதிர்கொள்ளும் விதமாக சில மருத்துவ யோசனைகளை / அறிவுரைகளை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு. 


வெப்ப அலையால் நம் உடலுக்கு நேரும் முதல் பிரச்சனை 

நம் உடல் சூடாகுதல். இதை Hyperthermia என்கிறோம். ஆகவே, உடல் சூடாவதை தடுப்பதற்கு நாம் எடுக்கும் நடவடிக்கைகள் முதல் இடம் பிடிக்கின்றன. 


உடல் சூடாவதை தடுப்பது எப்படி? 


1. தண்ணீர்பஞ்சம் இல்லாத ஊர்களில், தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கலாம்


2. தண்ணீர் பஞ்சம் நிலவும் ஊர்களில் ,  ஒரு வேளை குளிர்ந்த நீர் குளியல் மற்றும் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கை கால் முகம் போன்றவற்றை கழுவலாம். 

இது உடலின் உஷ்ணத்தை தணிக்க உதவும்.


3. வெப்பத்தை உள்ளயே தக்க வைக்கும் உடைகளான கம்பளி / லினன் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். 

ஜீன்ஸ் அணிவதை தவிர்ப்பது நல்லது. 

பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது. 

வெப்பத்தை தக்க வைக்கும் கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது சிறந்தது. 


4. வீட்டை விட்டு வெளியே செல்லும் போது குடை / தொப்பி எடுத்துச் செல்ல வேண்டும். முடிந்த வரை , வெயில் நம் உடல் மீது நேராக படாதவாறு பார்த்துக் கொள்வது நல்லது. 


5. வெயில் தனல் அதிகமாக இருக்கும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே  செல்வதை முடிந்த வரை தவிர்க்கலாம்.  வெளியே சென்று விளையாடுவதை காலை நேரம் மற்றும் மாலை நேரத்திற்கு தள்ளி வைக்கலாம். 


அடுத்த நடவடிக்கை. 

இதை மீறியும்   சூடான நம் உடலை எப்படி குளிர் படுத்துவது என்பது.


நாம் வீட்டிற்கு உள்ளேயே இருந்தாலும்.

வெப்ப சலனம் நம்மை கட்டாயம் பிரச்சனைக்குள்ளாக்கும் 


காரணம்.. சூரியனின் வெப்பமானது மூன்று முறைகளில் நம் மீது தாக்கலாம்


ஒன்று - conduction 

இரண்டாவது - convection 

மூன்றாவது - radiation 


இதில் முதலாவதாக இருக்கும் conductionக்கு நாம் ஏற்கனவே சூடான ஒரு பொருளோடு தொடர்பில் இருந்தால் நடப்பது. அதாவது , வெயிலில் நின்ற ஒரு  பைக் மீது நாம் ஏறி உட்கார முற்படும் போது , அதன் வெப்பம் நமக்கும் பரவும். 


இதை தவிர்க்க முடிந்த வரை நிழலில் வண்டியை நிறுத்தலாம் அல்லது சீட்டில் உட்காரும் முன் நல்ல கடினமான துணியை விரித்து உட்காரலாம்


இரண்டாவது வகை

convection 

அதாவது காற்றை சூடாக்கி விட்டால் போதும். அதனுடன் தொடர்பில் இருக்கும் நமக்கும் வெப்பம் கடத்தப்படும். 

இது நாம் வீட்டினுள் இருந்தாலும் சரி , நம்மை தாக்கியே தீரும். 

பொதுவாக அடைக்கப்பட்டு நிறுத்தப்பட்ட கார் போன்ற வாகனங்களுக்குள் சென்ற உடன் தாக்கும் வெப்பம் இந்த வகை. 


நமது வீட்டின் ஜன்னல்களில் தண்ணீரில் முக்கிய துண்டுகளை காயப்போடலாம். இதன் மூலம் வீட்டினுள் வரும் காற்று சிறிது ஈரப்பதம் கலந்து வரும். 


நாம் போடும் மின்விசிறி. வெளியே இருக்கும் வெப்பக்காற்றையும் மேலே சூடான தளத்தின் காற்றையும் நம் மீது தள்ளும். 

அதனால் தான் என்ன வேகமாக ஃபேன் சுழன்றாலும் வெப்பம் தணியாமல் இருக்கும். 


கார் உபயோகிப்பவர்கள்

 கார் கண்ணாடிகளை உடனே நன்றாக திறந்து விட வேண்டும். 

ஏசியை உடனே போடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் அந்த ஏசி மெசினும் 100 டிகிரிக்கு மேல் சூடாகி இருக்கும். அதில் இருந்தும் வெப்பக் காற்றே வரும். 


மூன்றாவது Radiation 

இதற்கு காற்று போன்ற எந்த கடத்தியும் தேவையில்லை . மின் காந்த அலைகளான இந்த வெப்பம் நம்மை நேரடியாக தாக்கி நம் உடலை சூடாக்கும். 

நம் வீட்டில் கிச்சனில் உபயோகப்படுத்தும் மைக்ரோ வேவ் அவன் இந்த முறையில் தான் இயங்குகிறது. 


இந்த முறையில் சூடாகும் நம் 

உடல் எப்படி இந்த சூட்டை தானாக தணித்துக்கொள்கிறது ? 


அதற்கு காரணம் "Evapouration" எனும் தற்காப்பு முறை 


அதிகமாக உடல் சூடானால், நமது உடலில் வேர்வை அதிகமாக சுரக்கும். அந்த வேர்வை உடலை குளிர்விக்க முயற்சிக்கும்.(sweating)  மேலும் உடலுக்குள் உள்ள உஷ்ணத்தை நமது நுரையீரல் வெளியிடும் மூச்சுக்காற்று வழி அனுப்ப முயலும்(expiration) 


இப்படி நம் உடல் அதிக நீர்ச்சத்தை உபயோகித்து குளிர்விப்பதால் ஏற்படும் பிரச்சனை 

Dehydration - நீர் சத்து குறைதல்..


இதை எப்படி அறியலாம்? 


- நாக்கு வரண்டு போதல்

- சிறுநீர் அடர் மஞ்சளாக செல்லுதல்

- தசைப்பிடிப்பு 

- தலை சுற்றல்

- கை கால் தளர்வு 


போன்ற அறிகுறிகளால் அறியலாம்


இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ?


1. எளிதான வழி - தண்ணீரைப் பருகுவது.


நமது சிறுநீரகங்கள் சரியாக இயங்க குறைந்தபட்சம் ஒருவரின் எடைக்கு  கிலோ ஒன்றிற்கு முப்பது மில்லி லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு பருகி ஆக வேண்டும். 


உதாரணம் 

60 கிலோ எடை உள்ள ஒருவர் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருந்தாலும் சரி. வெயில் காலமோ குளிர்காலமோ அவர் 


60 ( கிலோ) × 30( மில்லி) = 1800 மில்லி லிட்டர் தண்ணீர் குறைந்த பட்சம் பருக வேண்டும். 


இந்த தண்ணீரின் உட்கொள்தல் அளவு அவர் செய்யும் வேலைகள் பொறுத்து அதிகமாகும். 


இன்னும் வெப்ப சலனம் நிலவும் காலங்களில் 30 மில்லி லிட்டர் என்பது 60 மில்லி லிட்டர்  அளவு குறைந்தபட்ச தேவையாக  மாறும்.


உங்கள் பள்ளி செல்லும் குழந்தையின் எடை 20 கிலோ என்றால் 

இந்த வெப்ப சலனத்தில் அவர்களின் குறைந்த பட்ச தேவை ஒரு கிலோவுக்கு 60 மில்லி லிட்டர் என்று கொண்டால் 


20 (கிலோ) * 60 ( மில்லி லிட்டர் ) = 1200 மில்லி லிட்டர். 

அதாவது 1.2 லிட்டர் கட்டாயம் பருக வேண்டும் 


வளர்ந்த ஆணும் பெண்ணும் 

பொதுவாக , 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருகுவது சிறந்தது. 


இந்த தண்ணீரை 

இளநீராக, மோராக, லஸ்ஸியாக , பழச்சாறாக எப்படி வேண்டுமானாலும் பருகலாம். 


செயற்கை குளிர்பானங்கள், ரசாயன கலர் பொடிகள் கலந்த கலவைகளை தவிர்ப்பது நல்லது. 


குளிர் நீர் பருகுவது சிறந்தது. அதிலும் ஃப்ரிட்ஜில் வைத்து கால் மணி நேரம்  முதல் அரை மணி நேரத்தில் எடுத்து பருகினால் சரியான குளிர்ச்சி இருக்கும். 


ஆற்று மணல் பரப்பி அதில் நீர் ஊற்றி அதன் மீது வைத்த

மண்பானையில் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரை ஊற்றி குளிர்வித்து குடிப்பது சிறந்தது.


மிக அதிகமான குளிர்ச்சி தரும் நீரை பருகுவது தொண்டைக்கு கேடு விளைவிக்கும்.


சரி..இப்போது வெப்ப சலனத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.


1. வெப்ப சலனத்தால் பாதிக்கப்பட்டவரை உடனே நல்ல குளிர்ச்சியான இடத்துக்கு அல்லது நிழலான பகுதிக்கு மாற்ற வேண்டும். 


2. அவரது மேலாடைகளை கழற்றி விட வேண்டும். நன்றாக உடலில் காற்று பட வேண்டும். 


3.அவரை காலை நீட்டி படுக்க வைக்க வேண்டும். 


4. காற்றாடி / மின்விசிறியை இயக்கி குளிர்விக்க வேண்டும். 


5. சுற்றி ஆட்கள் நின்று கொண்டு காற்று அவருக்கு செல்வதை தடுக்கக்கூடாது.


6. தண்ணீரில் நனைத்த துணியைக்கொண்டு உடல் முழுவதும் ஒத்தடம் கொடுக்க வேண்டும். 


7.கால்களை சிறிது உயரத்தூக்கி வைக்க வேண்டும்


8. சிறிது நினைவு திரும்பியதும் அமர வைத்து.. தண்ணீரை வழங்க வேண்டும். 


9.     911 / 108 க்கு அழைத்து உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதிக்க வேண்டும் 


இதுவே வெப்ப சலனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய முதல் உதவி. 


ஹை அலர்ட் தேவைப்படும் வகுப்பினர்

பின்வருமாறு 


1. குழந்தைகள் 

2. முதியோர்கள்

3. நீரிழிவு / ரத்த கொதிப்பு நோயாளிகள் 

4.கர்ப்பிணிகள்

5. வெயிலில் நின்று வேலை செய்யும் தொழிலாளிகள் 

6. அதிகமாக பயணம் செய்பவர்கள் 


முடிந்த வரை வெப்ப சலனத்தில் இருந்து நம்மையும் நம்மை சார்ந்தோரையும் பாதுகாப்போம் 


நிழல் தரும் மரங்களை நம்மால் இயன்ற அளவு வளர்த்து பின்வரும் சந்ததியினர் இதுபோன்ற வெப்ப சலனங்களில் நிழல் தேடி அலையாதவாறு காப்போம்


நன்றி 


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


பிறந்த குழந்தை சரியான முறையில் தான் உடல் எடை கூடுகிறதா?



 பிறந்த குழந்தை சரியான முறையில் தான் உடல் எடை கூடுகிறதா???


அதற்கு தாய்ப்பால் சரியான அளவில் கிடைக்கிறதா???


வீட்டில் பெரியவர்கள் தாய்ப்பால் சரியாக கிடைக்கவில்லை. அதனால் குழந்தை புஷ்டியாக மாட்டேங்கிறது.  எனவே லாக்டோஜென் போன்ற மாவுகளை கொடுக்கவும் என்கிறார்களே.  என்ன செய்வது? என்பது பல தாய்மார்களின் கவலையாக இருக்கிறது. 


இந்தக்கட்டுரை வழியாக 

பிறந்த குழந்தை எப்படி உடல் எடை கூட வேண்டும் 


வயதுக்கேற்றபடி எவ்வளவு எடை இருந்தால் நார்மல் என்று பார்ப்போம். 


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


 குழந்தையின் பிறப்பு எடை மூன்று கிலோ இருக்கிறது என்று உதாரணத்திற்கு வைத்துக்கொள்வோம் 


குழந்தைக்கு பிறந்த ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கினால் போதுமானது. 

இதை EXCLUSIVE BREAST FEEDING என்று அழைப்போம். 


குழந்தை தனது தாகத்தையும் பசியையும் தாய்ப்பால் மூலமாகவே முதல் ஆறு மாதங்களுக்கு தீர்த்துக்கொள்ளும். 


பிறந்த குழந்தைக்கு முதல் வாரத்தில் நீர் இழப்பு ஏற்படும். இதனால் உடல் எடையில்  பத்து சதவிகிதம் வரை இழப்பு ஏற்படும். 


இந்த உடல் எடை இழப்பை தாய்மார்கள் பார்த்து பயந்து 

தனது குழந்தைக்கு தாய்ப்பால் சரியாக கிடைக்கவில்லையோ என நினைப்பார்கள். 


குழந்தைக்கு தாய்ப்பால் சரியாக  கிடைப்பதை உறுதி செய்ய 

அது எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறது என்பதை பார்த்தாலே போதும். 


சரியான கால அளவில் சிறுநீர் கழிக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் சரியாக கிடைக்கிறது என்றே பொருள். 


பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு பத்து வரை கூட மலம் கழித்தாலும் நார்மல் தான். 

மூன்று நாட்களுக்கு ஒருமுறை என்று மலம் கழித்தாலும் நார்மல் தான். 


பிறக்கும் போது மூன்று கிலோ இருந்த குழந்தை முதல் சில நாட்களில் 300 கிராம் வரை எடை குறைவது நார்மல்.


பிறகு மீண்டும் உடல் எடை கூட பத்தாவது நாள் பிறப்பின் போது  இருந்த எடையை அடையும்.


முதல் மூன்று மாதங்களில் நாளொன்றுக்கு 

25-30 கிராம் உடல் எடை கூடும். 


இந்த பருவத்தில் தான் 

குழந்தைகள் நன்றாக புஸ் புஸ் என்று இருக்கும். 

காரணம் உடல் எடையில் ஏற்படும் நல்ல வளர்ச்சி. 


மூன்றாவது மாதத்தில் கழுத்து நிற்கும். 


பால் குடிப்பது - தூங்குவது- சிறுநீர் மலம் கழிப்பது இப்படியாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் ஜாலியான நாட்கள் அவை. 


நான்காவது மாதத்தில் இருந்து குழந்தை தாயைப்பார்த்தும் பிறரைப்பார்த்தும் வாய்விட்டு கெக்கே பெக்கே என்று சிரிக்கத்துவங்கும். 


அதற்குப்பிறகு நான்காவது மாதத்தில் இருந்து ஒரு வயது வரை 

மாதத்திற்கு 400 கிராம் வரை உடல் எடை கூடும். 


அதாவது நாளொன்றுக்கு பத்து கிராம் முதல் பதினைந்து கிராம் என்று உடல் எடை கூடும் வேகம் குறையும். 


ஐந்தாவது மாதத்தில் குப்புறப்படுத்துக்கொண்டு தலையைத்தூக்கும். 


பிறக்கும் போது உங்கள் குழந்தை  மூன்று கிலோ எடை இருந்தால் 


அந்த குழந்தை ஆறு மாதம் எட்டும் போது 

எடை இருமடங்காகி ஆறு கிலோ ஆகியிருந்தால் போதுமானது. ( பிறப்பு எடை × 2) 


எட்டாவது மாதத்தில் தானாக பிடிமானம் இல்லாமல் உட்காரும். 


ஒன்பதாவது மாதத்தில் பிடிமானத்துடன் நிற்கும். இவ்வாறு நிற்பதற்கு ஒரு வயது வரை ஆனாலும் நார்மல் தான். 


15 மாதத்தில் இருந்து நடக்க ஆரம்பிக்கும். 

எனினும் 18 மாதங்கள் வரை குழந்தை நடப்பதற்கு காத்திருக்கலாம். அதுவரை நார்மல் தான். 


குழந்தை ஒரு வயதை எட்டும் போது பிறப்பு எடையில் இருந்து மும்மடங்காக மாறி ஒன்பது கிலோ இருந்தால் போதுமானது.( பிறப்பு எடை × 3) 


ஒரு வயது நிறைவடையும் தருவாயில் 

ஒன்றிரண்டு அர்த்தமுள்ள வார்த்தைகளை பேசும். எனினும் ஒன்றரை வயது வரை குழந்தை பேசுவதற்கு காத்திருக்கலாம். 


குழத்தை இரண்டாவது வயதில் அதனுடைய பிறப்பு எடையில் இருந்து நான்கு மடங்காகி நமது எடுத்துக்காட்டின்படி  பனிரெண்டு கிலோ இருந்தால் போதுமானது. ( பிறப்பு எடை × 4) 


மூன்று வயதில் அதனுடைய பிறப்பு எடையில் ஐந்து மடங்காகி இருந்தால் நார்மல் . 

( பிறப்பு எடை × 5) 

நமது எடுத்தாக்காட்டுப்படி 3 கிலோவில் பிறந்த குழந்தை மூன்று வயதை எட்டும் போது 15 கிலோக்கள் என்பது நார்மல். 


மூன்று வயதை எட்டிய குழந்தை சுயமாக கற்பனையில் விளையாட ஆரம்பிக்கும் . 


மூன்று முதல் ஏழு வயது பருவத்தில் 

வருடத்திற்கு இரண்டு கிலோ வீதம் கூடினால் நார்மல். 


ஏழு வயது முதல் 12 வயது வரை 

வருடத்திற்கு மூன்று கிலோ வீதம் கூடினால் நார்மல். 


மூன்று வயது முதல் 12 வயது ஆன குழந்தைகள் தற்போது நம் மாநிலத்தில் அபரிமிதமான உடல் எடை அதிகரிப்பை சந்திக்கத்துவங்கியுள்ளன. 


இதற்கான காரணம் 

அதீத மாவுச்சத்து / இனிப்பு / உடல் உழைப்பின்மை போன்ற நாகரீக மாற்றங்களே ஆகும். 


பூப்பெய்தும் பருவ காலத்தை எட்டும் போது 

உயரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். 

அப்போது உடல் எடை கூடுவதை ஒப்பிடும் போது உயரம் அதிக அளவு கூடியிருக்கும். அதனால்  உடல் மெலிந்து காணப்படுவார்கள். 

அதுவும் நார்மல் தான். 


மேற்கண்ட கட்டுரையில்  கூறியவை அனைத்தும் குழந்தைக்கு எதுவெல்லாம் நார்மல் என்பது குறித்த கருத்துகள். 


நிச்சயம் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மருத்துவர் அதன் வளரும் பருவத்தில் முக்கியமாக ஐந்து வயது வரை 

அதன் வளர்ச்சி மேற்பார்வையாளராக

ஊட்டச்சத்து நிபுணராக  

சிறு நோய் 

ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிப்பவராக 

இருப்பது நல்லது. 


உங்கள் குழந்தைக்கு தாங்கள் செய்யும் உணவியல் 

வாழ்வியல் மாற்றங்கள் ஒவ்வொன்றையும் 

குழந்தையின் மருத்துவரிடம் கருத்து கேட்டு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். 


இனிய தாய்மார்களே


இனி உங்களை நோக்கி வரும் குழந்தையின் எடை சார்ந்த கேள்விகளுக்கு தைரியமாக பதில் கூறுங்கள். 


குழந்தையின் உடல் எடை அதிகரிப்பது எவ்வளவு முக்கியமோ 

அதே அளவு அது சரியான அளவில்  அதிகரிப்பது முக்கியம். 


உடல் எடையை அதிகரிக்க அதிகமான ஊட்டச்சத்து உணவுகளை ஊட்டி தேவைக்கும் மீறி குழந்தையை குண்டாக்கும் நிகழ்வுகளையும் கடந்து வருவதால் இந்தப்பதிவு அவசியமாகின்றது. 


 Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை



MEFTAL மாத்திரை பயன்பாடு - எதிர்விளைவுகள் குறித்து இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை (Medicines Authority of India warns about the use of MEFTAL tablets & side effects)...

 MEFTAL மாத்திரை பயன்பாடு - எதிர்விளைவுகள் குறித்து இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை (Medicines Authority of India warns about the use of MEFTAL tablets & side effects)...



மாதவிடாய் வலி, முடக்கு வாதம் உள்ளிட்ட வலிகளுக்கு பயன்படுத்தப்படும் 'MEFTAL' வலி நிவாரணி மாத்திரைகளால் மோசமான எதிர்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மத்திய அரசு எச்சரிக்கை.


ரத்தத்தில் அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்கள் (Eosinophils) உருவாக வாய்ப்பு, தோல் எரிச்சல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மாத்திரை உட்கொண்ட 2 முதல் 8 வாரங்களுக்கு பின் தோன்ற வாய்ப்புள்ளது. 


மருத்துவர்கள் அறிவுறுத்தல் இன்றி வலி எழும்போதெல்லாம் இதனை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அரசின் மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்காணிக்கும் துறை மருத்துவர்களுக்கான  அலர்ட் வழங்கியுள்ளது.  இது குறித்த Dr. அ.ப.ஃபரூக் அப்துல்லா அவர்களின் பதிவு...


அரசின் மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்காணிக்கும் துறை மருத்துவர்களுக்கான  அலர்ட் வழங்கியுள்ளது.  இது போன்ற அலர்ட்களை தொடர்ந்து வழங்குவது இத்துறையின் பணியாகும். 


சமீபத்தில் வந்துள்ள அலர்ட் 

"மெஃபினமிக் ஆசிட்" எனும் மருந்தினால் "ட்ரெஸ் (DRESS) எனும் பக்கவிளைவு அரிதினும் அரிதாக ஏற்படுவதாகவும் 

இந்த மருந்தை பரிந்துரைக்கும் போது 

இது குறித்த எச்சரிக்கை உணர்வு தேவை என்பதற்காக வழங்கியுள்ள அலர்ட்டாகும். 


மெஃபினாமிக் ஆசிட் மருந்தினால் DRESS ( DRUG REACTIONS WITH ESINOPHILIA & SYSTEMIC SYMPTOMS) எனும் பக்கவிளைவு ஏற்படும் என்பது இன்று புதிதாக அறியும் தகவல் அன்று. 


ஏற்கனவே அறிவியல் பூர்வமான ஆய்வுகளிலும் இந்த மருந்தினால் 

இதே பக்க விளைவு அரிதாக உண்டாகலாம் என்பது நிரூபணமாகியுள்ளது. 


இந்த மருந்தை உட்கொள்பவர்களுக்கு அரிதினும் அரிதாக 

- கடுமையான காய்ச்சல் 

- உடல் முழுவதும் படை 

- சோர்வு 

- முக வீக்கம் 

இத்துடன்  முறையான சிகிச்சை அளிக்காவிடில் சிறுநீரகம் , கல்லீரல் போன்ற உறுப்புகள் செயலிழப்பும் ஏற்படலாம். 


இவர்களுக்கு ரத்த வெள்ளை அணுக்களில் ஈசினோஃபில்ஸ் அதிகமாக இருக்கும் 

ரத்த தட்டணுக்கள் குறையும் 

கல்லீரல் நொதிகளின் அளவுகள் கூடும் 


இந்த பக்கவிளைவு ஏற்பட்டிருப்பதை அடையாளம் கண்டால் உடனடியாக மாத்திரையை நிறுத்தி விட்டு அதற்குரிய சிகிச்சையை பெற வேண்டும். 


இத்தகைய பக்கவிளைவுகள் 

பத்து மில்லியனில் ஒருவருக்கு ஏற்படும் அரிதினும் அரிதான பக்கவிளைவாகும். 


மெஃபினமிக் ஆசிட் என்பது உடல் வலி போக்கும் மாத்திரையாகும். 

இதை மருத்துவப் பரிந்துரையில்லாமல் தொடர்ச்சியாக உட்கொண்டு வருவது தவறு. 


எனினும் 

மருத்துவ காரணங்களுக்காக 


- அதீத மாதவிடாய் கால வலி 

- குழந்தைகளில் ஏற்படும் அதீத காய்ச்சல் 

 ஆகியவற்றுக்காக மருத்துவ பரிந்துரையின் பேரில் உட்கொள்ளலாம். 


அதீத காய்ச்சலுக்கு மெஃபினமிக் ஆசிட் + பாராசிட்டமால் கலந்த சிரப்கள், ப்ரூஃபென் சிரப்கள் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. 


எனினும் சாதாரண காய்ச்சலுக்கு 

பாராசிட்டமால் + குளிர் நீர் ஒத்தடம் போதுமானது. 


அனைத்து காய்ச்சலுக்கும் மெஃபினமிக் ஆசிட் / ப்ரூஃபன் அவசியமற்றது.


குழந்தைகளுக்கு காய்ச்சல் அடித்தால் மருத்துவர் பரிந்துரைக்காமல் சுயமாக  மெஃபினமிக் ஆசிட் / ப்ரூஃபென் போன்ற வலி நிவாரணிகள் கலந்த சிரப்களை பெற்றோர்கள் கொடுக்கும் போக்கு தவறானது. 


பெண்களில் பலர் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு இந்த மெஃபினமிக் ஆசிட் கலந்த மாத்திரையை உட்கொண்டு வருகிறார்கள். 


இது சரியா? 


பொதுவாக மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு கர்ப்ப பைகளின் தசைகள் சுருங்குவதால் வலி ஏற்படும். 


கர்ப்ப பை தசைகள் சுருங்குவதால் தான் கர்ப்ப பையின் உள்பக்க சுவரான எண்டோமெட்ரியம் உரிந்து மாதவிடாய் கால உதிரப்போக்காக வெளியேறுகிறது. 


எனவே தாங்கிக் கொள்ளக் கூடிய பிணிக்கு எந்த மாத்திரையும் தேவையில்லை. 


- அடிவயிறு மசாஜ் 

- வெந்நீர் ஒத்தடம் 

- ஓய்வு  போன்றவை போதுமானது. 


அனைவருக்கும் மாத்திரை மூலம் சிகிச்சை தேவையற்றது. 


எனினும் பெண்களில் சிலருக்கு 

இந்தப் பிணி தாங்கிக் கொள்ள இயலாத அளவு மிக அதிகமாக இருக்கும். 


இவர்களுக்கு கர்ப்ப பை தசை சுருங்கி இருப்பதைத் தாண்டி இறுகிப் போகும். இதை கர்ப்ப பை தசை இறுக்கம் என்கிறோம்


இந்த நிலையில் ஏற்படும் அதீத பிணியைக் குறைக்க 

டைசைக்ளோமின் எனும் மாத்திரை பயன்படுகிறது 

இத்துடன் கூட மெஃபினமிக் ஆசிட் எனும் பிணி மாத்திரையும் இணைத்து தரப்படுகிறது. 


இந்த மாத்திரையை மருத்துவ பரிந்துரையின் பேரில் அதீத பிணி இருக்கும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் மட்டும் உட்கொண்டு வருவதில்  பிரச்சனை இல்லை. 

அச்சப்படத் தேவையில்லை. 


இன்னும் இத்தகைய அதீத மாதவிடாய் கால வலிக்கான காரணங்களை மருத்துவரிடம் கலந்தாலோசித்து கண்டறிய வேண்டும். 

அதுவே சரியான வழிமுறையாகும். 


சிலருக்கு எண்டோமெட்ரியோசிஸ் எனும் பிரச்சனை இருக்கலாம்

 சிலருக்கு கர்ப்பபை ஃபைப்ராய்டு இருக்கலாம். 

இன்னும் சிலருக்கு பிசிஓஎஸ் இருக்கலாம் 

இத்தகைய ஹார்மோன் சார்ந்த காரணங்களை கண்டறிந்து குணப்படுத்தினால் வலியும் குறையக்கூடும்.  


 அதீத வலிக்கு வலி நிவாரணி அவசியம் தான் ஆனால் இதைக் காரணமாகக் கொண்டு ஒரு தூக்கம் போட்டால் குணமாகும் 

சாதாரண தலைவலி முதல் தாங்கக் கூடிய மாதவிடாய் வலிக்கும் வலி நிவாரணியின் துணையை நாடுவது தவறு. 


காரணம் 

எந்த மருந்தும் தேவைக்கு உபயோகிப்பதே சிறந்தது. 

நாம் உண்ணும் அனைத்து மருந்துகளிலும் அதற்குரிய பக்க விளைவுகள் உண்டு. 


எனவே 

கட்டாயம் மருந்து தேவையா?  என்பதை உறுதி செய்து 

மருத்துவரிடம் சென்று காட்டி சிகிச்சை பெற்று பரிந்துரையின் படி மருந்து உட்கொள்வதே சிறந்தது.  


மற்றபடி இந்த அலர்ட் என்பதற்கு பொது மக்கள் அதீத அச்சம் கொள்ளத் தேவையில்லை. 


இந்த மாத்திரையை அதீத மாதவிடாய் கால வலிக்காக (DYSMENORRHOEA) மருத்துவ பரிந்துரையின் பேரில் உட்கொண்டு வரும் சகோதரிகள் அச்சப்படத் தேவையில்லை.


எச்சரிக்கை உணர்வு போதுமானது. 


நன்றி 


Dr. அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை



இதய நாள அடைப்பு - அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும் (Coronary heart block – symptoms & treatment) - Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா...



இதய நாள அடைப்பு - அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும் (Coronary heart block – symptoms & treatment) - Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா...


 நமது உடலின் பாகங்கள் அனைத்துக்கும் ரத்தத்தை விசையுடன் உந்தித் தள்ளுவது இதயத்தின் பணியாகும். 


அத்தகைய இதயத்தின் தானியங்கும் வலிமை பெற்ற தசைகளுக்கு ஊட்டமளிப்பவை இதயத்துக்குரிய பிரத்யேக தமனிகள்


அந்த தமனிகளின் உட்புற சுவர்களில் 

சிறிது சிறிதாக அடைப்பு  (PLAQUE) ஏற்பட்டு 

ஒரு நாள் ஒரு பொழுது 

அந்த வீக்கமடைந்த உட்புற சுவரில் வெடிப்பு (PLAQUE RUPTURE)  ஏற்பட அந்த வெடிப்பை சரிசெய்யும் பொருட்டு ரத்த தட்டணுக்கள் அனைத்தும் ஒன்று கூடி ரத்தக்கட்டியை உடனடியாக உருவாக்குகின்றன. 


திடீரென உருவான அந்த  ரத்தக் கட்டி ( BLOOD CLOT)  ரத்த நாளத்தின் விட்டத்தை அபாய அளவுக்கு  சுருக்கி விடுகிறது. 


இதயத்திற்கு ஊட்டமளிக்கும் முக்கிய தமனிகளில் இவ்வாறு திடீர் அடைப்பு ( MYOCARDIAL INFARCTION)  ஏற்படும் போது 


விசையுடன் துடிக்கும் இதயத்தின் தசைகளுக்கு திடீரென ரத்த ஓட்டம் தடைபடுகிறது


இதன் விளைவாக அடைப்புக்குள்ளான அந்த தமனி ஊட்டமளித்த இதயத்தின் பகுதிகள் செயல் முடங்கிப் போகின்றன 


இத்தகைய திடீர் செயல்முடக்கத்தின் பாதிப்பால்  இதயம்  தனது துடிப்பை நிறுத்திக் கொள்கிறது 


இதயம் தனது துடிப்பை நிறுத்திய சில நிமிடங்களுக்குள் முறையான சிபிஆர் (CARDIO PULMONARY RESUSCITATION) செய்யப்படுமாயின்

விரைவாக டீஃபிப்ரில்லேட்டர் எனும் இதயத்தின் மின் ஓட்டத்தை சீர் செய்யும் சிகிச்சை அளிக்கப்பட்டால் 

இதயம் துடிக்கத் தொடங்கும். 


உடனடியாக ரத்த நாள அடைப்பை ஒரு மணிநேரத்திற்குள் ரத்தக்கட்டியைக் கரைக்கும் மருந்துகள் வழங்கப்பட்டால் 

மீண்டும் ரத்த ஓட்டம் தடைபட்ட தசைகளுக்கு ரத்த ஓட்டம் மீண்டும் கிடைக்கும். 


பிறகு அடைபட்ட இடத்தில் தேவைப்பட்டால் ஸ்டெண்ட் வைக்கப்படும். இதனால் ரத்த ஓட்டம் தடைபடாமல் மீண்டும் ஏற்படுத்தப்படும். 


இதயத்தின் முக்கிய தமனிகளில் அடைப்பு சதவிகிதம் மிக அதிகமாக இருப்பின் "பை பாஸ்" அறுவை சிகிச்சை செய்யப்படும்


இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்


நமக்கு ஏற்படும்

 

-நெஞ்சுப்பகுதி வலி தவிர


-மருந்துகளுக்கு கேட்காத நெஞ்செரிச்சல்

-தாடைப்பகுதி வலி

-மேல் வயிற்று வலி/ குமட்டல் /வாந்தி 

- இடப்பக்க மார்பு வலி இடப்பக்க தோள் பகுதிக்கு பரவுவது

- நடக்கும் போது நெஞ்சில் அழுத்தும் உணர்வு 

- படுக்கும் போது மூச்சுத் திணறும் உணர்வு ஏற்படுதல் 

- சிறிது தூரம் நடந்தாலும் அதீத மூச்சுத்திணறல் எடுப்பது 


போன்றவை இதயம் சார்ந்த 

சிக்கல்கள் இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள்


மேற்கூறிய அறிகுறிகள் இருப்பின் 

உடனடியாக மருத்துவரை சந்தித்து 

ஈசிஜி எடுத்துப் பார்க்க வேண்டும். 


குறிப்பிட்ட சதவிகிதத்தினருக்கு

ஈசிஜி நார்மலாக இருந்தாலும்

இதய ரத்த நாள அடைப்பு ஏற்படக்கூடும்


எனவே இதயத்தின் தசைகள் காயமடையும் போது வெளிப்படுத்தும் நொதிகளான ட்ரோபோனின்  ,  க்ரியாடினின் கைனேஸ் ஆகியவை அளவில் கூடும். அதை வைத்தும் 

ரத்த நாள அடைப்பை அறியலாம். 


நெஞ்சுப்பகுதி வலி முன்னெப்போதும் இல்லாத அளவு குடைந்து அழுத்துவது போல இருந்தால் கூடவே நன்றாக குப்பென வேர்வை வந்து உடல் குளிர்ந்து போனால் வந்திருப்பது பெரும்பான்மை இதய ரத்த நாள அடைப்பு என்றறிக .


மன ரீதியாக பதட்டமடையாமல்

108 ஆம்புலன்ஸ் அல்லது தனியார் ஆம்புலன்ஸ் அழைத்துப் படுத்துக் கொண்டே மருத்துவமனை விரைய வேண்டும் 


இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டவர்கள் நடக்கவோ வேறு பணிகள் புரியாமல் படுத்துக் கொண்டு மருத்துவமனை அடைவது நல்லது

 

கூடவே லோடிங் டோஸ் எனப்படும் 


ஆஸ்பிரின் 75 மிகி 

 நான்கு மாத்திரைகள்

( ரத்த தட்டணுக்கள் ஒன்றிணைந்து ரத்தக் கட்டி பெரிதாவதை தடுக்கும்)  


க்ளோபிடோக்ரெல் 75மிகி 

நான்கு மாத்திரைகள் 

( ரத்த தட்டணுக்கள் ஒன்றிணைந்து ரத்தக் கட்டி பெரிதாவதை தடுக்கும்)  


அடோர்வாஸ்டாடின் 10 மிகி 

எட்டு மாத்திரைகள் 

( ரத்த நாள வீக்கம் மேலும் வெடிக்காமல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தும் ) 


மாத்திரைகளை மொத்தமாக உட்கொள்ள வேண்டும். 


இதய நோய் சிறப்பு சிகிச்சை வசதி உள்ள மருத்துவமனையை விரைவில் அடைய வேண்டும் 


- இதயம் சார்ந்த அறிகுறியை 

புறந்தள்ளாமை

- உடனடியாக லோடிங் டோஸ் உட்கொள்வது

- உடனடியாக ஈசிஜி எடுப்பது  

- இதயம் செயல் நிறுத்தம் செய்தாலும் உடனடியாக சிபிஆர் மற்றும் டீஃபிப்ரில்லேட்டர் சிகிச்சை கிடைக்கச் செய்வது 


பதட்டப்படாமல் இதய நோய் சிறப்பு சிகிச்சை இருக்கும் மருத்துவமனைக்கு படுத்துக் கொண்டு விரைதல்


மேற்கூறியவற்றை செய்தால் 

இதய ரத்த நாள அடைப்பு சார்ந்த மரணங்களைக் குறைக்க முடியும் 

என்று நம்புகிறேன் 


தேவை விழிப்புணர்வும் 

அறிகுறிகளை அலட்சியம் செய்யாமையும் ஆகும்


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பாம்புக் கடி 360° (Snake bite 360°) - Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா...

 


பாம்புக் கடி 360° (Snake bite 360°) - Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா...


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


வருடத்தின் மாதங்களில் 

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 80% பாம்புக்கடி நிகழ்வுகள் நடந்தேறுகின்றன


இதில் பெரும்பான்மை நிகழ்வுகள் மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள  கிராமங்களிலேயே நிகழ்கின்றன. 


கடிபட்டவர்களில் 14% பேருக்கு கடித்தது இன்னதென தெரியாது. 

இதை UNKNOWN BITE என்று கூறுவோம். மருத்துவர்களைப் பொருத்தமட்டில் கடித்தது இன்னதெனத் தெரியாதவரை அதை பாம்புக்கடியாக எண்ணியே முதலுதவி மற்றும் தேவையான பரிசோதனைகள் செய்வோம். 


வயது வரம்பில் 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களே அதிகமாக பாம்புக்கடிக்கு   உள்ளாகிறார்கள்.


 இதனால் தான் ஓடுற பாம்ப வெறுங்கால்ல மிதிக்கிற வயசு என்ற சொல்லாடல் வந்ததோ தெரியாது. 

ஆனால் நிகழும் பாம்புகடியில் 67% கால் மற்றும் பாதங்களில் கடிக்கின்றன. வெறும் காலில் நடப்பவர்களையே பெரும்பாலும் கடிக்கின்றன. 


40% பாம்புககடி நிகழ்வுகள் 

மாலை ஐந்து மணி முதல் இரவு பத்து மணிக்குள் நிகழ்கின்றன 


59.2% பாம்புக்கடி நிகழ்வுகள் வீட்டுக்குள்ளும் வீட்டை சுற்றியும் உள்ள இடங்களில் நிகழ்கின்றன. 


இந்தியாவைப் பொருத்தவரை 

"பிக் ஃபோர்" ( பெரிய நான்கு ) 

என்று 


- நாகப்பாம்பு (Indian Cobra) 

- சுருட்டை விரியன் ( Saw scaled viper)

- கட்டு விரியன் ( Common Krait) 

-  கண்ணாடி விரியன் ( Russell's viper ) 


மேற்சொன்ன நான்கும் அதிக விஷம் கொண்ட பாம்பு வகைகள்

நிகழும் பாம்புகடி சார்ந்த மரணங்களும் பெரும்பான்மை மேற்சொன்ன நான்கினால் தான் நடக்கின்றன. 


பாம்புக்கடியைப் பொருத்தவரை 3.8% 

பேருக்கு பாம்பு கடித்த தடம் தெரியாது. எனவே பாம்பு கடி என்றாலே இரண்டு பல் தடம் இருக்கும் என்று எண்ணக் கூடாது. 

தடமே இல்லாமலும் இருக்கலாம் 


பாம்புக்கடியை தவிர்க்க செய்ய வேண்டியவை 


இயன்ற அளவு கட்டிலில் படுப்பது நல்லது 

தரையில் படுக்கும் சூழ்நிலை இருப்பின் கொசு வலையை பாய்க்குள் நுழையுமாறு சொருகிக் கொண்டு உள்ளே உறங்குவது பாம்பு , பூரான் , தேள் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு தரும். 


பெரும்பாலும் கட்டுவிரியன் இரவில் தரையில் உறங்கிக் கொண்டிருப்பவர்களை வலியின்றிக் கடித்து விடும். காலை எழும் போது பக்கவாதம் ஏற்பட்டு எழுந்திருப்பார்கள் அல்லது உறக்கத்திலேயே இறந்திருப்பார்கள். 


 வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டாயம் இரவு நேரங்களில் ஒளி விளக்குகள் அமைத்திருக்க வேண்டும். குறிப்பாக வீட்டுக்கு வெளியே கழிப்பறை இருப்பவர்கள், கழிப்பறை செல்லும் பாதையில்  ஒளி விளக்கு எரியுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 


8% பாம்புக்கடி நிகழ்வுகள் திறந்த வெளியில் மலம் / சிறுநீர் கழிக்கச் செல்லும் போது நடக்கின்றன. 


வீட்டில் உணவு சேமித்து வைக்கும் அறைக்கும் உறங்கும் அறைக்கும் இடையே தூரம் இருக்குமாறு அமைக்க வேண்டும். 

உணவை உண்ண வரும் எலிகளை வேட்டையாட பாம்புகள் உள்ளே வரும். 


நாகப்பாம்பு மற்றும் கட்டுவிரியன் ஆகியவை நரம்பு மண்டலத்தை தாக்கும் விஷம் கொண்டவை 


சுருட்டை விரியன் மற்றும் கண்ணாடி விரியன் ஆகியவை ரத்த உறைதலை தடுத்து உதிரப்போக்கை ஏற்படுத்தும் விஷம் கொண்டவை 


ஒரு போதும் பாம்பு கடித்த இடத்தில்

வாய் வைத்து உறிஞ்சுதல் கூடாது.


ஒருபோதும் பாம்பு கடித்த இடத்தில் 

இறுக்கமான கயிறு/ துணி வைத்து கட்டுதல் கூடாது. பல நேரங்களில் கடித்தது விஷமற்ற பாம்பாக இருக்கும் ஆனால் கட்டப்பட்ட இந்த துணியால் ரத்த ஓட்டம் பாதித்து கை அல்லது கால் கருப்பாகி திசுக்கள் இறந்து , கை அல்லது காலை முழுவதுமாக நீக்க வேண்டிய நிலை ஏற்படும் 


வாய்வழியாகவோ கண் வழியாகவோ காது வழியாகவோ மருந்துகளை ஊற்றக்கூடாது. 


கடி பட்ட இடத்தை கீறவோ ஊசி வைத்துக் குத்தவோ கூடாது 


கடிபட்டவரை பதட்டப்படுத்தக்கூடாது. 

அவரை நிதானமாக வைத்திருந்தால் அவரது இதயத்துடிப்பு நார்மலாக இருக்கும். இதனால் விஷம் மேலும் பரவும் வாய்ப்பு குறையும். 


எத்தனை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோமோ அவ்வளவு நல்லது.


பைக் இருந்தால் கூட போதும் 

ஒருவர் பைக் ஓட்ட 

கடிபட்டவரை நடுவில் ஏற்றிக் கொண்டு 

பின்னால் ஒருவர் அவரைப் பிடித்துக் கொண்டு உடனே அரசு மருத்துவமனை நோக்கி விரைய வேண்டும். 


காலம் பொன் போன்றது


நாகப்பாம்பு விஷம் - சில நிமிடங்களில் கொல்லும் 


விரியன்களின் விஷம் சில மணிநேரங்கள் எடுக்கும் 


எனவே எத்தனை விரைவில் மருத்துவமனையை அடைகிறோமோ அத்தனை நல்லது. 


பல நேரங்களில் பாம்பு கடிக்கும் போது அது வரண்ட கடியாக இருக்கக்கூடும். இதை DRY BITES என்று கூறுகிறோம். 

எந்தப் பாம்பும் தான் வைத்திருக்கும் மொத்த விஷத்தையும் ஒரே கடியில் செலுத்தாது. சில நேரங்களில் பல் தடம் இருக்கும் ஆனால் விஷம் ஏறியிருக்காது. 

இந்த சூழ்நிலை கடிபட்டவருக்கு சாதமாக அமையும். 

எனவே பதட்டத்தை இயன்ற அளவு தணிக்க வேண்டும். 


கடிபட்ட காலோ கையோ அதை இயன்ற அளவு அசைக்காமல் வைத்திருக்க வேண்டும்.  

அசைத்தால் விஷம் சீக்கிரம் ரத்தத்தில் கலக்கும் வாய்ப்பு உண்டு 


கடித்தது விஷப்பாம்போ

விஷமற்ற பாம்போ 

அதைப்பற்றி ஆராய்ச்சி செய்து நேரத்தை கடத்தாமல் உடனே மருத்துவமனை அடைவதை குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் 


சில தருணங்களில் விஷமற்ற பாம்பு தான் கடித்தது என்று நோயாளிகள் கூறிய நிலையில் அது விஷப்பாம்புக் கடியாக இருந்ததை பார்த்துள்ளேன் 


விஷமுள்ள பாம்புக்கடியை பொருத்தவரை 

முக்கியமான சிகிச்சை 

- பாம்பின் விஷத்திற்கு எதிராக தரப்படும் விஷமுறிவு மருந்தாகும். 


எத்தனை விரைவில் மருத்துவமனையை அடைந்து இந்த விஷமுறிவு மருந்தை ஆரம்பிக்கிறோமோ அத்தனை நல்லது


இதற்கிடையில் 

பாம்புக்கடியால் கடிபட்ட இடத்தில் 

வீக்கம், ரத்தக் கசிவு , நெரிகட்டுதல் போன்றவை ஏற்படலாம்


வாந்தி, குமட்டல், மயக்கம், சோர்வு, பிரவுன் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், பக்கவாதம் ஏற்படுதல் , கண் இமைகள் கீழிறங்குதல் , மூச்சு திணறல் , 

மூச்சு விடுவதற்கு தேவையான தசைகள் செயலிழப்பதால் மரணம் ஏற்படும். 

இவற்றுக்கும் தேவையான சிகிச்சையை  காலத்தே செய்ய வேண்டும். 


விஷமற்ற பாம்புகள் கடித்தாலும் 

கடித்த இடத்தில் புண் வருவது, வீக்கம் ஏற்படுவது நிகழும். எனவே அதற்கும் முறையான சிகிச்சை தேவை. 


பாம்புக்கடியை இயன்ற அளவு தவிர்ப்போம் 

மீறி பாம்பு கடித்து விட்டால் பதட்டப்படாமல் உடனே 

அரசு மருத்துவமனைகளுக்கு விரைவோம்


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பிறவிக் காது கேளாமை குறைபாடும், காக்ளியார் இம்ப்ளாண்ட் சிகிச்சையும் - மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா (Congenital Deafness and Cochlear Implant Treatment - Dr. A.B. Farook Abdulla)...



பிறவிக் காது கேளாமை குறைபாடும், காக்ளியார் இம்ப்ளாண்ட் சிகிச்சையும் - மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா (Congenital Deafness and Cochlear Implant Treatment - Dr. A.B. Farook Abdulla)...


 சமீபத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரிவு வெளியிட்ட "உலக காது கோளாமை குறித்த விழிப்புணர்வு நாள்" புகைப்படத்தில் கேரளாவைச்  சேர்ந்த  மருத்துவ மாணவியான செல்வி. ரிஸ்வானாவின் படம் இடம்பெற்றது. 


இதிலென்ன ஸ்பெசல்? 


தற்போது இறுதி ஆண்டு மருத்துவம் பயிலும் ரிஸ்வானா பிறக்கும் போதே காது கேளாமை நோயால் பாதிக்கப்பட்டவர்.


அவரது தந்தை மற்றும் தாயின் கடும் உழைப்பு மற்றும் போராட்டத்தாலும் 

சாதுர்யமாக அறிவோடு விழிப்புணர்வோடு செயல்பட்டு மகளுக்கு இருந்த கேட்டல் திறன் குறைபாட்டை உடனே கண்டறிந்து அதற்குரிய நவீன சிகிச்சையான காக்லியார் இம்ப்ளாண்ட்டை பொருத்தி அவர்களது மகள் நன்றாக கேட்கவும் பேசவும் படிக்குமாறு செய்து தற்போது அவர் மருத்துவராகவும் வரப்போகிறார் என்று எண்ணும் போது நவீன மருத்துவ அறிவியலின் முக்கியத்துவத்தையும் காது கேளாமை குறித்த விழிப்புணர்வை நாம் அனைவரும் பெற்றிருப்பது முக்கியம் என்பது புலப்படும். 


தமிழ்நாட்டைப் பொருத்தவரை 

பிறவியிலேயே காது கேளாமை நோய்க்கு உள்ளான குழந்தைகளை பிறந்த உடனேயே கண்டறிய 

மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவ மனைகள் , மருத்துவக் கல்லூரிகளில் 

இதற்கென பிரத்யேகமான மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 


அங்கு OTO ACOUSTIC EMISSION செவி ஒலி உமிழ்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒலிபுகா அறையில் பிறந்த குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் இலவசமாக பரிசோதிக்கப்படுகிறது. 


இவ்வாறு பிறந்த குழந்தைக்கு மூன்று மாதத்திற்குள் காது கேட்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொண்டால் 


ஒருவேளை நம் குழந்தைக்கு காது கேட்கும் திறன் பிறவியிலேயே இல்லாமல் இருந்தால் (CONGENITAL DEAFNESS) 

கவலைப்படத் தேவையில்லை 


தமிழ்நாட்டில் பிறவிக் காது கேளாமை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு  காக்லியார் இம்ப்ளாண்ட் எனும்  நவீன செயற்கை செவிப்புலன் மீட்கும் கருவியை பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு இலவசமாக பொருத்தும் திட்டத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக  2009 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டில் செயல்முறைப் படுத்தினார். 


தமிழ்நாட்டைப் பின்பற்றி 

கேரளாவில் 2012ஆம் ஆண்டு இந்த திட்டம் தனியார் பங்களிப்போடு செயல்பாட்டுக்கு வந்தது. 


தற்போது மத்திய அரசின்  சமூக நீதித்துறை (ADIP SCHEME)  சார்பாக காக்ளியார் இம்ப்ளாண்ட் சிகிச்சைக்கு பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு ரூபாய் ஏழு லட்சம் வரை நிதி ஒதுக்கப்படுகிறது. 


ஒரு காக்ளியார் இம்ப்ளாண்ட் பொருத்த சுமார் ஏழு லட்சம் ரூபாய் செலவு ஆகும் என்ற சூழ்நிலையில் 

தமிழ்நாட்டில் இந்த திட்டத்தின் கீழ் மொத்த செலவினத்தையும் அரசு ஏற்று இதுவரை ரூபாய் 327 கோடி இதன் பொருட்டு செலவிடப்பட்டு 4101 குழந்தைகளுக்கு காக்லியார் இம்ப்ளாண்ட் பொருத்தப்பட்டுள்ளது. 


பள்ளி சிறார் நலன் பேணும் மருத்துவர்கள் அடங்கிய குழு கடந்த எட்டு ஆண்டுகளில் பல்லாயிரம் காது கேளாத குழந்தைகளை அடையாளம் கண்டு இந்த சிகிச்சைக்கு உட்படுத்தி செவிப்புலனை மீட்க உதவியுள்ளனர். 


தங்களது குழந்தைக்கு காது சரியாக கேட்காமல் இருப்பதாக உங்களுக்குத் தோன்றினால் அருகில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை பிரிவை உடனே அணுகவேண்டும். 


எத்தனை விரைவாக காது கேளாமையை கண்டறிகிறோமோ அத்தனை நல்லது


காக்ளியார் இம்ப்ளாண்ட் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சையை ஒரு வயது கடந்த குழந்தைகளுக்கு செய்ய முடியும். 


ஆயினும் ஒன்றரை வயதுக்குள் இந்த கருவி பொருத்தப்படும் போது சீக்கிரமாகவே குழந்தை நன்றாக கேட்டு  பேசி படிக்க ஆரம்பிக்கும். கற்றலில் எந்த பிரச்சனையும் வராது. 


அப்படியே தள்ளிப்போனாலும் மூன்று வயதுக்குள்ளாவது காக்ளியார் இம்ப்ளாண்ட் பொருத்தப்பட்டால் சிறப்பான முடிவுகள் கிடைக்கும். 


அதிகபட்சம் இந்திய வரம்புப்படி ஐந்து வயதுக்கு மேல் இந்த இம்ப்ளாண்ட்  பொருத்தப்படுவதில்லை. காரணம் பிறவிக்குறைபாட்டிற்கு அதற்கு மேல் இம்ப்ளாண்ட் பொருத்துவதால் பெரிய பலனில்லை. 


காக்ளியார் இம்ப்ளாண்ட் தற்போது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொருத்தப்படுகிறது 


இம்ப்ளாண்ட் பொருத்தப்பட்ட பின் பேச்சுப் பயிற்சி மொழிப்பயிற்சி வழங்கப்பட வேண்டும் 


இவ்வாறாக குழந்தைகளுக்கு கேட்டல் திறன் அதிகரிக்கும் போது கற்றலும் பேச்சும் சிறப்பாக அமையும் 

அவர்களது எதிர்காலமும் வளம் பெறும். 


உங்களுக்கு அருகில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரியின் காது மூக்கு தொண்டைப் பிரிவு மருத்துவர்களை  அணுகி தேசிய காதுகேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தின் நோக்கம் மற்றும் பலன்களைப் இலவசமாகப் பெற்றிடுங்கள் 


விரைவில் பிறவிக் காது கேளாமையைக் கண்டறிவோம்

விரைவில் காக்ளியார் இம்ப்ளாண்ட் பொருத்துவோம் 


செவிப்புலனை  குழந்தைகளுக்கு வழங்கிடுவோம்

அவர்களின் எதிர்காலத்தைக் காத்திடுவோம்


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025-2026 - Conducting "Kalai Thiruvizha" competitions - Guidelines

2025-2026 ஆம் ஆண்டு - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்   "கலைத்திருவிழா" "Kalai Thiruvizha" போட்டிகள் நடத்துதல் ...