கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வெ.இறையன்பு இ.ஆ.ப. - கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெ.இறையன்பு இ.ஆ.ப. - கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

>>>எது மகிழ்ச்சி? - வெ. இறையன்பு

சிறுவயது முதல், பழமொழிகள் பலவும் நமக்குச் சொல்லித் தரப்படுகின்றன. அவற்றில் மகிழ்ச்சிக்கான உபாயங்கள் ஒளிந்திருக்கின்றன.
எது உண்மையான மகிழ்ச்சி என்பதை அறிய, எளிய வழி உண்டு. அந்த நேரத்தில் மட்டுமே மகிழ்ச்சி யைத் தந்துவிட்டுப் பிறகு உபத்திரவம் தரும் எதுவும் உண்மையான மகிழ்ச்சியே இல்லை; இன்னும் 20 வருடங்கள் கழிந்தாலும் நினைத்து இன்புறத்தக்க நிகழ்வு எதுவோ... அதுவே பேரானந்தம்!
சில செயல்களைச் செய்யும் அந்தத் தருணத்தில், அவை சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். பின்னர், அவற்றை நினைவுகூரும் போது, நீங்காத வலியையும் குற்ற உணர்வையும் ஏற்படுத்தும்.
பணம் இலக்காக இல்லாமல், வழியாக மட்டுமே இருப்பின், ஏமாற்றம் என்பதே இல்லை.

>>>புகழ் என்பது அடங்காப்பசி கொண்ட அதிசய பிசாசு! - வெ. இறையன்பு

வாழும் காலத்தில் வையப்பட்டவர்தான் ஷேக்ஸ்பியர். 'மயிலிறகு போர்த்திய காகம்' என அவரை வசைமாரிப் பொழிந்தார் தாமஸ் கிரீன். ஆனால் காலம், ஷேக்ஸ்பியரை பொன்னாடை போர்த்திக் கௌரவித்தது.

எப்போதும் இன்புற்றிருக்க நினைப்பவர்கள், அடுத்தவரது மதிப்பீட்டினால் தங்களைத் தரம் நிர்ணயித்துக் கொள்வதில்லை. நமது வீட்டிலேயேகூட, நமது பங்களிப்பை உணராமல் இருப்பர். அதற்காக வருந்தவேண்டிய அவசியம் இல்லை. நமது தியாகத்தை அவர்கள் உணரவில்லையே என நினைத்தாலே, நமது மகிழ்ச்சி பறிபோய்விடும். யாருக்காகப் பணியாற்றுகிறோமோ அவர்களின் மகிழ்ச்சியே நமது மகிழ்ச்சி என எண்ணும்போது, எல்லா நிமிடமும் இனிப்பு மயமாகிறது.

முதலில், அடுத்தவருக்குச் சேரவேண்டிய அங்கீகாரத்தை நாம் அளிக்கிறோமா என்பதை உற்றுப்பார்க்க வேண்டும். யாருடனும் ஒப்பிடவேண்டிய அவசியம் இல்லை என எண்ணினால், நாம் புகழை யாசிக்கமாட்டோம்.!

>>>அழகாவோம் - வெ.இறையன்பு I.A.S.

நம் எல்லோருக்குமே அழகாக தோன்ற வேண்டும் என்று ஆசை!

சிலருக்கோ தாம் மட்டுமே அழகென்று திடமான நம்பிக்கை. அழகு என்பது சிலருக்கு நப்பாசை. சிலருக்கு அது ஒத்தாசை.

எவ்வளவு முயன்றாலும் ஒரு சதவிகிதம்கூட நம் முகத்தை மாற்ற நம்மால் முடியாது. இயற்கை நம்மை படைத்த விதத்தை சிகை திருத்தி, முகம் கழுவி செம்மைப்படுத்த மட்டுமே இயலும். ஆனாலும் எதையாவது செய்து நாம் அழகாகி விட மாட்டோமா என்ற எதிர்பார்ப்புகள் ஏராளம்!

இருக்கிற முகத்தை அசிங்கமாக்காமல் பார்த்துக்கொள்ள நம்மால் முடியும். இயல்பாக இருக்கிறபோது நாம் எல்லோருமே அழகுதான். கோபப்படுகிற போது நாம் அசிங்கமாக தோன்றுகிறோம் என சிலர் சொல்வதுண்டு.

கோபப்பட வேண்டிய இடத்தில் உணர்வுகளை விழுங்கிக்கொண்டு அமைதி காப்பதுகூட அருவருப்புதான். நியாயமான கோபங்களும், சமூகத்தில் நடக்கும் அவலங்களின் மீது ஏற்படும் கோபங்களும் முகத்தை சிவப்பாக்கும்போது ஏற்படும் கம்பீரம் நம்மை அழகாக்குகிறது.

பலவீனமானவர்கள் மீது சிறுபிள்ளைத்தனமாக கொள்கிற கோபம் முகம் முழுவதும் ஓடுக்கல்களை உண்டாக்குகிறது.

அழுகிறபோது மனிதன் அழகை இழந்துவிடுகிறான் என்று சொல்பவர்கள் உண்டு. வாய் கோணலாகி, கன்னங்கள் புடைக்க, சக்தியற்று வெளிப் படும் அழுகையில் பரிதாபம் தோன்றுமே தவிர அழகு ஏற்படாது என்று வாதிப் பவர்களும் இருக்கிறார்கள்.

நெஞ்சை உலுக்கும் சோகத் தில் மௌனமாக, ஆரவாரம் செய்யாமல், தன் கண்ணீர் துளிகளை இரங்கற் கவிதையாக மாற்றுகிற மனிதர்கள் அழுகையைக்கூட அழகாக்கிவிடுகிறார்கள். அதில் அன்பு, பாசம், இயலாமை, வருத்தம், பிரிவு, அக்கறை ஆகிய அனைத்து உணர்வுகளும் பிரதிபலிக்கின்றன.

அழகாக்கும் ஆசையில் நிறைய ஒப்பனைகள் செய்கிறபோது நம்மையும் அறியாமல் நம் அழகை இழக்கிறோம். நம் இயல்பு தன்மையுடன் ஒட்ட மறுக்கின்ற அவை, ஒட்டவைத்த மலர்களைப் போல் மணம் பரப்ப மறுக் கின்றன. சின்னக் குழந்தைகள் வெட்கப் படும்போதுகூட நம் மனதில் மகிழ்ச்சி தூரல் தெளிக்கப்படுகிறது. இயல்பான உணர்வுகள் தான் எப்போதுமே முகத்தில் அழகையும், ஈர்ப்பையும் ஏற்படுத்துகின்றன.

உண்மையிலேயே மனித முகங்களை கவனிப்பவர்கள், அவர்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் அசிங்கமாக தோன்றுவது கொட்டாவி விடும்போதுதான் என்பதை புரிந்துகொள்வார்கள். படுக்கை அறையில் விடுகிற கொட்டாவியை காட்டிலும், பள்ளியில் விடுகிற கொட்டாவி அதிகஅசிங்கத்தை கொடுக்கும். கண்களின் துடிப்பையும், முகத்தின் வசீகரத்தையும், உதடுகளின் இருத்தலையும், கன்னங்களின் செழுமையையும் கொட்டாவி ஒரே நொடியில் களவாடிவிடுகிறது.

சோம்பலும், மந்தத்தனமும் கொட்டாவிகளை பிரசவிக்கின்றன. சுறுசுறுப்பான முகங்களும், துருதுருவென தெரியும் வெளிப்பாடுகளுமே, அருகில் இருப்பவர்களையும் ஆனந்தப்படுத்துகின்றன!

>>>உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு I.A.S.

இன்று புத்தாண்டு...

உன்னிப்பாக வாழ்பவர்களுக்கு ஒவ்வொரு நாளுமே புத்தாண்டுதான். இன்று ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ளாவிட்டால், இந்த நாள் காலண்டரில் மட்டுமல்ல, நம் வாழ்க்கை குறிப்பில் இருந்தும் கிழித்து எறியப்பட்டதாகத் தான் பொருள். நாளை புதுப்பிக்க நம் வாழ்வை செறிவுபடுத்த வேண்டும். முதல் நாளன்று கொண்டாடுவதோடு புத்தாண்டு முடிந்து விடுவது இல்லை.

இந்த புத்தாண்டில் நம்மை நாம் எந்த வகையில், நம்மையே தாண்டிச் செல்லப் போகிறோம் என்பதுதான் முக்கியம். தொழிலதிபர்கள் அடுத்த ஆண்டுக்குள் எத்தனை புதிய தொழில்களை தொடங்குவது என்று திட்டமிடுவார்கள். இலக்கியவாதிகள் இன்னும் எத்தனை நூல்களை எழுதி முடிப்பது என்று அறுதியிடுவார்கள். விஞ்ஞானிகள் எத்தனை புதிய நுணுக்கங்களை கண்டுபிடிப்பது என்று வியூகம் வகுப்பார்கள். பெற்றோர்கள் எதில் முதலீடு செய்யலாம் என திட்டம் போடுவார்கள்.

இப்படி எல்லோருக்குமே ஒரு கனவும், ஆசையும் உண்டு. இதுபோல் மாணவர்களாகிய நாமும் ஏதாவது ஒரு விஷயத்துக் காக சங்கற்பம் செய்தால்தான் இந்த புத்தாண்டுக்கு ஓர் அர்த்தம் இருக்கும். பள்ளி இறுதித்தேர்வுக்கு படிக்கிறவர்கள், ‘அடுத்த கல்வி ஆண்டில் நாம் விரும்புகிற கல்லூரிப் படிப்பில் சேர்ந்துவிட வேண்டும்’ என நினைப்பது ஓர் இலக்கு. கல்லூரியில் கடைசி ஆண்டு படிப்பவர்கள், ‘நல்ல பணியில் சேர்ந்திட வேண்டும்’ என எண்ணுவது ஒரு சங்கற்பம். ஆனால் எண்ணுவது மட்டுமே வெற்றியை வரவழைத்து விடாது. அதற்கு தகுந்தபடி நம் நடவடிக்கைகளும் இணை குதிரையின் ஓட்டமாய் இருக்க வேண்டும்.

நம்மால் எட்ட முடிந்தவற்றை குறிக்கோளாக்கி கொண்டு அவற்றை நோக்கி ஒவ்வொரு நாளும், அழுத்தமாக அடியெடுத்து வைக்க வேண்டும். ‘நான் 50 தலைசிறந்த புத்தகங்களையாவது படித்து முடித்து விடுவேன்’ என்று வைராக்கியத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். ‘நல்ல பொழுதாக்கத்தை கற்றுக் கொள்வேன்’ என சூளுரைக்கலாம். ‘ஒரு குறிப்பிட்ட விளையாட்டில் தேர்ச்சி பெறுவேன்’ என சபதம் ஏற்கலாம். ‘25 மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பேன்’ என்று நிச்சயம் செய்து கொள்ளலாம்.

இப்படி, ஏதேனும் ஓர் உயர்ந்த உறுதிமொழியை மனதில் எழுதி அதை கடைப்பிடித்தால், அந்த ஆண்டு முடிகிறபோது, நம்மையும் அறியாமல் நாம் மிகப்பெரிய மகிழ்ச்சிக்கு சொந்தக்காரர்களாகி விடுவோம். நேரத்தை முறையாகப் பயன்படுத்திய நிம்மதியும், திருப்தியும் ஏற்படும். இந்த புத்தாண்டில் எப்படி நம்மை நாமே புதுப்பிக்கப்போகிறோம் என்பதில்தான், புத்தாண்டை நாம் எதிர்கொள்ளும் சாராம்சம் அடங்கி இருக்கிறது.

>>>பலவீனத்தைப் பந்தாடு (சுயமுன்னேற்ற கட்டுரை) – வெ.இறையன்பு.

 “மற்றவர்களின் பலவீனமே நம் பலம் என்பது யுத்தநெறி” "மற்றவர்களின் பலவீனமே நம் பலம் என்பது யுத்தநெறி"
ஒண்டிக்கு ஒண்டி மோதுவதாக இருந்தாலும், ஊருடன் ஊர் மோதுவதாக இருந்தாலும் சரி, பலவீனமான பகுதி எது எனத் தெரிந்து அதைத் தாக்குவதுதான் வெற்றிபெறுவதற்கான ஒரே வழி.
மிகவும் பலசாலியாக இருக்கிறவனுக்கும் ஒரு பலவீனம் கட்டாயம் இருக்கும். அதை அறிவதுதான் யுத்தத்திற்கான முதல்படி. அது தெரியாதவரை எதிரியை எதுவும் செய்ய முடியாது.
ஸ்டிக்ஸ் நதியில் நனையாமல் போன அக்கிலஸின் குதிகால் மட்டும் பலவீனமானது என்கிற நுண்ணிய தகவலை ஹெலன் மூலம் தெரிந்துகொண்ட பாரிஸ், அதை நோக்கி அம்பு செலுத்தி வீழ்த்துகிறான். கிரேக்கப்படைகள் அக்கிலஸை இழந்து தவிக்கின்றன.
துரியோதனனுக்கு காந்தாரி கண் கட்டவிழ்த்தபோது உள்ளாடை உடுத்தியிருந்த தொடைப்பகுதி மட்டும் பலவீனமாக இருக்கிறது. அதை இறுதி யுத்தத்தில் கிருஷ்ணர் சமிக்ஞையின் மூலம் உணர்த்த பீமன், யுத்தநெறிகளைத் தாண்டி அவன் தொடையை கதையால் தாக்கிக் கொல்கிறான்.
மற்றவர்களின் பலவீனமே நம் பலம் என்பது யுத்தநெறி. மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏதேனும் ஒரு வகையில் பலவீனமற்ற மனிதன் அரிது.
சர்வதேசப் பயங்கரவாதம் என்பது எதிரியின் பலவீனத்தைக் குறிவைத்து இயங்குகிற கருத்தாக்கம். அது கொரில்லாத் தாக்குதலின் அடிப்படையிலே அமைந்த தந்திரம். ஆனால், இரண்டுக்குமான அடிப்படைவேறுபாடு ஒன்று உண்டு. பயங்கரவாதம் என்பது அந்நிய மண்ணில் நடக்கும் தாக்குதல். கொரில்லாத் தாக்குதல் சொந்த மண்ணில் நடப்பது. சர்வதேசப் பயங்கரவாதம் தாக்குதலையும், கொரில்லா யுத்தம் தற்காப்பையும் அடிப்படையாகக் கொண்டது.
பலவீனத்தை மையமாக்கி நடத்தும் போர் ஒழுங்கற்ற போர்முறை (Irregular Warfare). உலகளவில் எதிரியின் பலவீனத்தைத் தாக்கி, கடுமையான சேதத்தை விளைவித்து குறிக்கோளையடைந்ததற்கு மிகப்பெரிய சான்று, மாசேதுங் நடத்திய கொரில்லாப் போர். கொரில்லாப்போர் என்பது 4,500 ஆண்டுகள் பழைமையானதுதான். ஆரம்பக் கட்டங்களில் நாடோடியாகத் திரிந்தபோதும், நாகரிக வாழ்வைத் தொடங்கியபோதும் சரித்திரத்திற்கு முற்பட்ட நிகழ்வுகளிலும் இப்படிப்பட்ட போரே நிகழ்ந்தது. பழங்கால சுமேரிய, எகிப்திய நாகரிகங்களின்போது நடந்த போர்களும் இத்தன்மையதே.
கொரில்லா யுத்தம் ராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி போன்ற வீரப்புருஷர்களால் கையாளப்பட்ட நெறியென்றாலும் அதற்கு அறிவார்ந்த அடிப்படையையும், கருத்தாக்கத்தையும், வழிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தவர் மாவோதான். அவர், ‘சன்-சூ’ போர்க்கலைப் புத்தகத்தில் குறிப்பிட்ட அனைத்துக் கருத்துகளையும் நெசவு செய்து அணுகுமுறையை வடிவமைத்தார். அது எம்மாதிரியான மோதலுக்கும் பொருந்தும் என்றும், எல்லாப் போர்களுக்கும் ஏற்றது என்றும் அவர் நிரூபித்துக்காட்டினார்.
மாவோவின் முதல் நோக்கம் நேரடியான, சிறுசிறு தாக்குதல்களை எதிரிகளின் நகரம், தடவாளம், கிடங்கு, தகவல்தொடர்புச் சங்கிலி ஆகியவற்றின்மீது அடிக்கடி நிகழ்த்துவது. தாக்குதல்கள் பல இடங்களில் எதிர்பாராத நேரங்களில் நடக்கும். எதிரி தன்னுடைய பலத்தைப் பரவலாக்கி, முக்கிய இடங்களைப் பாதுகாக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எவ்வளவு பாதுகாப்பு அளித்தாலும் அவை வலுவற்றுதான் இருக்கும். ஏனென்றால், எந்தப் பகுதியை மாவோவின் படை தாக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது. எதிரியைக் குழப்பமடையச் செய்வதும், எப்போதும் பதற்றத்திலும், பயத்திலும், பாதுகாப்பின்மையிலும் தவிக்கும்படி செய்ய வேண்டும். அவர்கள் முற்றிலுமாக உற்சாகம் குறைய, காற்றுப்போன பந்து மாதிரியாகி விடுவார்கள். அது எதிரியின் பலத்தை நிர்மூலமாக்கிவிடும்.
பாரம்பரிய ராணுவ நெறியை மேற்கொள்ளாததால், எதிரியை நாடு முழுக்க அலைய வைக்க நேரிடும். எனவே, எந்தப்பக்கமும் எதிரியின் பின்புறமாகிவிடும். எனவே, கொரில்லா வீரர்கள் மக்களையே உணவு, உடை போன்றவற்றிற்கும் எதிரியின் நடமாட்டம் பற்றிய நுண்ணறிவுக்கும் நம்ப வேண்டியிருக்கும். விவசாயிகளின் ஒத்துழைப்பைப் பெறும் பொருட்டு, பெரிய நிலச்சுவான்தார்களின் தோட்டங்களைப் பறிமுதல் செய்து, அவற்றை ஏழை விவசாயிகளுக்கு அவர் பிரித்துக் கொடுத்தார்.
மாவோ வேகமாகவும், மின்னலைப்போலவும் தாக்கி கடுமையான சேதங்களை விளைவித்து, விரைவில் மறைந்துவிடும் உத்தியை கொரில்லா வீரர்களுக்குப் பயிற்றுவித்தார். இருபது ஆண்டுகள் பயிற்சி; போராட்டமே பயிற்சியானது. ராணுவமோ நாட்டின் முக்கியமான பகுதிகளைக் காப்பதிலேயே மும்முரமாக ஈடுபட்டது. கொரில்லாக்கள் அவர்களுக்கு உணவு வரும் வழிகளையெல்லாம் தடுத்து நிறுத்தினர். எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்கிற பயமே அவர்களை செயலிழக்கச் செய்தது.கொரில்லாவிற்கு எப்போதும் சாதகமான சூழல். அவர்கள் எந்த இடத்தைத் தாக்குவது என சுயமாகத் தீர்மானித்துக்கொள்ளலாம்.
தொடக்கத்தில் மாவோவுக்கு வெற்றி எளிதில் கிடைக்கவில்லை. சீனாவின் அதிபராக இருந்த ஹியாங் கேஷி, வெறிபிடித்துப்போய் ஏழு லட்சம் வீரர்களைக் கொண்ட ராணுவத்தை அனுப்ப… மாவோ உருவாக்கிய சிவப்பு ராணுவம் தப்பி ஓடியது. ஓராண்டு தொடர்ந்து ஓட்டம். ஆறாயிரம் பேர் மட்டுமே தப்ப, ஓட்டத்தில் மாசேதுங்கின் தம்பியும், குழந்தைகளும் கூட பலியானார்கள்.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானோடு போரிட்டுப் போரிட்டுக் களைத்துப் போயிருந்த ஹியாங் கேஷியின் ராணுவத்தை நோக்கி சிவப்பு ராணுவம் அடிமேல் அடி வைத்துத் தாக்கியது. சீனாவின் ராணுவம் புறமுதுகு காட்டி ஓடியது. ஹியாங்கே, தாய்வான் தீவுக்குத் தப்பி ஓடினான்.
எதிரிகளின் பலவீனத்தைப் பந்தாடிய இன்னொரு வரலாற்றுச் சம்பவம் 1991ம் ஆண்டு நடந்த வளைகுடாப்போர். போர் நுணுக்கம் அறிந்தவர்கள் அதைப் ‘பாலைவனப் புயல்’ என்றே சிலாகிக்கிறார்கள்.
ஈராக் 1990ம் ஆண்டு ஆகஸ்ட் 2 அன்று குவைத்தை ஆக்கிரமித்தது. விமானம் மூலமாகவும், தரைவழியாகவும் 1,50,000 ஈராக் சிப்பாய்கள் அதிரடியாக நுழைந்து, குவைத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். ஈராக் அதிபர் சதாம் உசேன் ஈரானோடு எட்டு ஆண்டுகள் நடத்திய கடுமையான யுத்தம் பலவகைகளில் அவருடைய நாட்டுக்குப் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுத்திவிட்டது.
அவர், குவைத் போன்ற இதர வளைகுடா நாடுகளுக்குப் பெருமளவில் கடனைத் திருப்பிச் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். குவைத்தைக் கையகப்படுத்தி அதை ஈராக்கின் பத்தொன்பதாவது மாநிலமாக அறிவிப்பதன் மூலம் அந்நாட்டுக்குச் செலுத்தவேண்டிய கடன் தொல்லையில் இருந்து மீள்வதுடன் குவைத்தின் வளமான எண்ணெய்க் கிணறுகளின் மூலமாக மற்ற நாடுகளுக்கு அளிக்க வேண்டிய கடனைச் சமாளித்துவிடலாம் என்பதுதான் அவருடைய திட்டம். இதனை அமெரிக்கா உட்பட 33 உலக நாடுகளின் கூட்டணி கடுமையாக எதிர்த்தது.
ஐந்து மாதங்கள் கழித்து ஈராக்கியத் துருப்புகளின் மீது விமானத் தாக்குதல்களை அமெரிக்கா தீவிரப்படுத்தியது. ஈராக் அதைச் சமாளிக்க, ஐந்து லட்சம் துருப்புகளை குவைத்தில் குவித்தது. தரை மூலமாக தாக்குதல் நடத்தினால்தான் சமாளிக்க முடியும் என்கிற நிலைமை உருவானது. பல பத்திரிகைகள் குவைத்தை மறுபடி மீட்பதற்கு ஒருவாரம் தேவைப்படும் என்றும், 20,000 அமெரிக்க சிப்பாய்கள் உயிரிழக்க நேரிடும் என்று அனுமானித்து எழுதின. ஈராக்கியத் துருப்புகளோ பாதுகாப்பான இடங்களைப் பிடித்து, தாக்குதலைச் சமாளிக்கத் தயாராகியது.
ஈராக் ஐந்து மாதங்களுக்கு முன்பே உள்ளே நுழைந்து தங்களைப் பலப்படுத்திக்கொண்டு, சக்தி வாய்ந்த பாதுகாப்பு அரண்களை உருவாக்கிக் கொண்டார்கள். அது முதலாம் உலகப்போரை நினைவுபடுத்துகிறது என்றெல்லாம் எழுதினார்கள். ஈராக் அப்போதும் ஐந்து லட்சத்து நாற்பதாயிரம் சிப்பாய்களையும், நாலாயிரம் டாங்கிகளையும், ஆயிரக்கணக்கான பாதுகாப்பு வாகனங்களையும் நிறுத்தி வைத்திருந்தது. சிப்பாய்களோ எடுத்துச்செல்லக்கூடிய கான்கிரீட் பாதுகாப்புக் கூரைகளுக்கு அடியில் தாக்குதலைச் சமாளிக்கும் வகையில் குவித்து வைக்கப்பட்ட மணல் மூட்டைகள் அரண்வகுக்க ஆயத்தமாக இருக்கிறார்கள் என்று, ‘டைம்’ இதழ் போரைப்பற்றிக் கணித்துச் சொன்னது.
போர் விமர்சகர்கள் அமெரிக்கத் தளபதி நார்மன் ஷ்வார்ஜ்காஃப் வைத்திருந்த உத்தியைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அவருடைய கமாண்டர்கள் குவைத்தை நேரடியாகத் தாக்கினால் இரண்டாயிரம் பேர் இறப்பார்கள், எட்டாயிரம் பேர் காயமடைவார்கள் என்று திட்டத்தை வகுத்துக்கொடுத்தனர். ஆனால், அதை அவர் நிராகரித்தார். விமானத்தின் மூலமாக குண்டுமழை பொழிந்து, ஈராக்கின் பலத்தைப் பாதியாகக் குறைப்பது என்றும் ‘இடது கொக்கி’ மூலமாக ரகசியத் தாக்குதல் நடத்துவது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
உலகத்தின் ஒட்டுமொத்தக் கவனமும் குவைத்தின் தெற்குப்பக்கம் அமெரிக்கத் துருப்புகள் வருவதைக் கண்காணித்துக்கொண்டிருக்கும்போது ரகசியமாக 2,50,000 சிப்பாய்களை குவைத்தின் மேற்குப் பக்கம் மெதுவாக ஊடுருவச் செய்து, அங்கிருந்து வலது பக்கத்திற்குச் சென்று, காலியாக இருக்கும் தெற்கு ஈராக்கில் பாலைவனப்பகுதிகளை வசப்படுத்துவது என்று முடிவானது.
தரைவழியான தாக்குதல் தொடங்கியதும் இந்தப் படை வடக்கு நோக்கி நகர்ந்து, கிழக்குப் பக்கம் திரும்பி, இடது கொக்கியைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதன்மூலம் ஈராக்கின் பாதுகாப்புச் சப்பையை அடித்து நொறுக்க வேண்டும். அந்தத் திட்டத்தின்படி அமெரிக்க கடற்படை, குவைத்தின் வடக்குநோக்கி மெதுவாக நகரத் தொடங்கின. இது உண்மையிலேயே தாக்குதலுக்காக அல்ல, ஈராக்கின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக.
ஷ்வார்ஜ்காஃப்பின் உத்தி மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. தரைப் படைத் தாக்குதல் நூறு மணி நேரத்தில் முடிந்துபோனது. ஒரு மாத காலம் விமானத் தாக்குதல் நடத்தியதன்மூலம் ஒரே இடத்தில் குவிந்திருந்த ஈராக்கியத் துருப்புகள் பரவலாகச் சிதறவும் ஒரே இடத்தில் குவிந்திருக்காமல் செய்யவும் வழிவகுத்தன.
அவர்கள் தங்கள் பீரங்கிகளையும், டாங்கிகளையும் விட்டு விலகியிருக்கவும் செய்தன. விரைவாகவும், ஆக்ரோஷத்துடனும் டாங்கிகள், காலாட்படை, ஹெலிகாப்டர்கள், குண்டுபொழியும் விமானங்கள் ஆகியவற்றின்மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதல் மிகவும் உக்கிரமாக இருந்தது. ஈராக்கிய சிப்பாய்கள் துணிவோடு போராடினார்கள். ஆனால், அவர்களால் வேகத்திற்கும், ஆக்ரோஷத்திற்கும் ஏற்றவாறு உபரிப்படையை நகர்த்தி சமாளிக்க முடியவில்லை.
அமெரிக்க கப்பற் படையினரோ ரசாயன ஆயுதங்களை ஈராக் பயன்படுத்தினால், இருபதிலிருந்து முப்பது சதவிகிதம் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அதைப் பயன்படுத்த சதாம் உசேன் ஆணை வழங்கவில்லை.
வேறுவழியின்றி பெரும்பான்மையான படைகள் சிதற… குவைத்தைவிட்டு ஈராக் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடியது. அமெரிக்க சார்புடைய படைகளின் இழப்போ மிகவும் குறைவாக இருந்தது. ஷ்வார்ஜ்காஃப் முக்கியமான தாக்குதல், கடலின் வழியாக நடப்பதைப்போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கினார். அதை எதிர்பார்த்து ஈராக் காத்திருந்தபோது, அதன் பலவீனமான பகுதியை கடுமையாகத் தாக்கினார்.
அதை யாரும் எதிர்பார்க்கவில்லை. பத்திரிகைகளும், குவைத்தின் தெற்குப் பக்கம் அமெரிக்கத் துருப்புகள் குவிக்கப்படுவதைப்போல மாயத்தோற்றத்தை ஏற்படுத்தின. பெரும்பான்மையான அமெரிக்கக் கமாண்டர்களுக்கு இது தெரியாது. சாதுர்யமாக ஈராக்கின் பலவீனத்தை நோக்கி அவர் நகர்த்தியதால், அமெரிக்கத் துருப்புகளுக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதம் சொற்பமாக இருந்தது.
வாழ்விலும் நிர்வாகத்திலும் எதிரியின் பலவீனத்தை நோக்கியே நாம் காய் நகர்த்த வேண்டும். சிலர் புகழையே தங்கள் பலமாக நினைத்துக்கொண்டிருப்பார்கள். அதை நோக்கி குறிவைத்தால் ஆடிப்போய்விடுவார்கள். அதற்கு எந்தக் களங்கமும் விளையக்கூடாது என்பதற்காக எதையும் பறிகொடுக்கத் தயாராக இருப்பார்கள். பலவீனம் மற்றவர்களுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.
பலவீனமில்லாத வாழ்க்கையை வாழ்வது எப்போதுமே பாதுகாப்பானது. ஆனால், அதற்கு எளிமையும் நேர்மையும் அவசியம். தனிப்பட்ட வாழ்க்கையில் இவற்றைக் கையாளுவது சிரமமல்ல. ஆனால், நிருவாகம் என்பது எண்ணற்றோருடைய கூட்டமைப்பு. அதில் எங்கேனும் ஓரிடத்தில் நிச்சயம் பலவீனம் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதை உணர்ந்து, அந்தப் பகுதியைப் பாதுகாத்துக்கொள்வது அவசியம்.
இரண்டு நிறுவனங்கள் ஒரே வாடிக்கையாளர்களைக் கவரும் போட்டியில் ஈடுபடும்போது மற்ற நிறுவனத்தில் எது பலவீனமானது என்பதைக் கண்டறிய வேண்டும். விலங்குகளை வீழ்த்துகிறவர்கள்கூட அவற்றின் எந்தப் பகுதியை அடித்தால் உடனே உயிர் போகும், அதிகச் சித்திரவதை இல்லாமல் அவை உயிரிழக்கும் என்பதை எதிர்பார்த்துத்தான் தங்கள் அசைவை முன்நிறுத்துகிறார்கள்.
வர்த்தகத்தில் எதிராளியின் பொருளில் எது குறைபாடு என்பதைத் தெரிந்துகொண்டு, அதைச் சரிசெய்யும் வகையில் ஆய்வை நடத்தி, தங்கள் நிறுவனத்தின் பொருளை மேம்படுத்துபவர்கள் விரைவில் சந்தையைப் பிடித்துவிடுகிறார்கள். ரியல் எஸ்டேட்டில்கூட மிக நல்ல நிலம் போவதற்கு வழியில்லாமல் நடுவில் மாட்டிக்கொண்டால், அடிமாட்டு விலைக்கு விற்க நேர்வதைப் பார்க்கலாம். தொடர்ந்து தன்னைப் பலப்படுத்திக்கொள்வது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம்.
தலைசிறந்த நிர்வாகியாக இருக்கிறவர் பேச்சில், எழுத்தில், கூட்டங்களை நடத்துவதில், உடலசைவு மொழியில், உடைகளை உடுத்துவதில், கம்பீரமாக நடப்பதில், மிடுக்காக நடந்துகொள்வதில் தன்னை அச்சு அசலாக வெற்றிபெற்றவர்களைப்போல காட்டிக்கொள்ள முனையும்போது எதிராளிக்கு நடுக்கம் வந்துவிடுகிறது. வெகு எளிதில் அவனால் கவர்ச்சி ஒளிவட்டத்தை உண்டுபண்ணிவிட முடிகிறது.
அதற்குப் பிறகு அவன் கீழ் பணிபுரிபவர்கள் அவன் சொன்னதற்கெல்லாம் சொக்குப்பொடி போட்டதைப்போல மயங்கிவிடுகிறார்கள். சிலருக்கு பெரிய விஷயங்களில் பலவீனம் இருக்காது. ஆனால், சின்னவற்றில் பலவீனம் இருக்கும். தன்னுடைய பலவீனத்தை நண்பர்களிடமிருந்து கேட்டறிவதும், அவற்றைக் கவனமாக தவிர்க்க முயல்வதும் உறுதியான பலன்களை அளிக்கும். அப்போது வீழ்த்த முடியாத மனிதனாக வீறுகொண்டு எழலாம். ஒழுக்கமும், சுயக்கட்டுப்பாடும் கொண்டவர்கள் எந்த நேரத்திலும் நிமிர்ந்து நிற்கிறார்கள்.
நன்றி  - புதிய தலைமுறை வாரஇதழ்

>>>தூய்மையான சூழலை உருவாக்குவோம்! - வெ.இறையன்பு

வெளியிலிருந்து பார்த்தால் புதிதாகப் பூத்த தாமரை போல் மலர்ந்திருந்த அந்த அழகான கட்டடம் உருவாகிற ஒவ்வொரு படியையும் நான் அறிவேன். எவ்வளவு பெரிய முதலீடு! எத்தனை பெரிய கட்டடம்! எத்தனை பேருடைய உழைப்பு! விரைவில் முடிக்க எவ்வளவு கண்காணிப்பு.

தடபுடலான விழாவுடன் அந்தப் பொதுக் கட்டடம் திறக்கப்பட்டது. எனக்கும் ஆசை இருந்தது. இப்போது அது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பார்த்துவிட வேண்டும் என்று ஏற்பட்ட அவாவில் அது திறந்த ஒரு மாதம் கழித்து அங்கு சென்றேன்.

உள்ளே நுழையும்போதே மூக்கைப் பிடிக்க வேண்டிய சூழ்நிலை. திரும்பிய பக்கம் எல்லாம் குப்பைகள். மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு முன்னேறும் போதே, எதுவுமே நடக்காதது போல் ஒரு சிலர் அந்த மைதானத்தை திறந்தவெளி கழிவறை ஆக்கியிருந்தார்கள். அதனால் காலை உணவைத் தேடி நன்றி விசுவாசத்துடன் பன்றிகள் சில படை எடுத்திருந்தன.

அப்படி கடமையை முடித்து வந்த ஒருவரிடம் கேட்டேன், "இங்கு கழிவறை வசதி இல்லையா?" அதற்கு அவர், "'என்ன இருந்தாலும் இந்த சுகம் வருமா" இன்னொருவர், "நான் இந்த அலுவலகத்துக்கு வரவில்லை. மதில் சுவரெல்லாம் கட்டி மறைவாக இருப்பதால் இங்கு வந்தேன்."

இவற்றையும் மீறி உள்ளே நுழைந்தேன். வாசல் பக்கம் பல்வேறு பிளாஸ்டிக் பைகள். மாடிப்படி வளைவுகளில் எச்சில் துப்பிய சுவடுகள். கண் முன்னேயே வாயில் குதப்பிய வெற்றிலையைக் காறி உமிழும் ஒருவரைக் கண்டேன். அவரைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஒரு மாதத்துக்கு முன்புதான் திறக்கப்பட்ட இந்த அழகிய கட்டடம் இப்படி ஆகிவிட்டதே என்கிற வருத்தம் என் மனம் முழுவதும் பரவியது. சின்ன வயதிலேயே "பொது இடத்தில் எச்சில் துப்பக்கூடாது. சிறுநீர் கழிக்கக்கூடாது. அரசுக் கட்டடங்களை நம் சொந்த சொத்தைப்போல பாதுகாக்க வேண்டும். தூய்மையான சூழலே ஆரோக்கியமான வாழ்வின் அடிப்படை. சுற்றுலாத் தலங்களை நம் வருகையால் அழுக்காக்கக் கூடாது" என்கிற உயர்ந்த குடிமைப் பண்புகளை நாம் தரித்துக்கொள்ள வேண்டும். நம் மாநிலத்தின் அருகிலேயே அமைந்திருக்கும் கேரளாவில் இந்த நிலைமையில்லை. அங்கு குடிமைப் பண்புகள் கோலோச்சுகின்றன.

வாயைப் பொத்திக்கொண்டு தும்ம வேண்டும். கைகளை வைத்து இரும வேண்டும். இவ்வா றெல்லாம் நம்மை ஒழுங்குபடுத்திக்கொள்வது அவசியம்.

'டென்மார்க்கின் தலைநகரம் எது' என்று சொல்லிக் கொடுப்பதற்கு முன், இதை சொல்லித் தந்தால் தமிழகத்தின் பல இடங்களில் மூக்கை மூடிக்கொண்டு, சில இடங்களில் கண்ணை மூடிக்கொண்டும் போக வேண்டிய அவசியம் ஏற்படாது. இவற்றைத் தட்டிக் கேட்காமல், வாயை மூடிக்கொண்டு இருந்தால், இதே நிலைதான் தொடரும்.

>>>நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு

நம்மைச் சுற்றி நடப்பவற்றில், உகந்தவற்றை நுகரவும், உபயோகமற்றவற்றை உதறவும் கற்றுக்கொள்வதுதான் மிகப் பெரிய கல்வி. உலகமே நம் முன் அகண்ட பள்ளிக்கூடமாக விரிகிறது. நம் முன் நிகழும் ஒவ்வொரு செயலிலும் நாம் நல்லவற்றை மாத்திரம் பாலை உறிஞ்சும் அன்னமாய் கிரகிக்க முனைந்தால், வாழ்க்கை நமக்கு வசந்த கம்பளத்தை மட்டுமே விரிக்கும்.

நகைச்சுவை என்பது எல்லாவற்றையும் விமர்சனத்துக்கு உள்ளாக்குவது, எல்லோரையும் கிண்டலுக்கு உட்படுத்துவது, எதையும் குதர்க்கமாக்குவது, எதிலும் விதண்டாவாதம் புரிவது என்கிற எண்ணம் இப்போது புரையோடிப் போய்விட்டது.

வெளியிலே இருப்பவர்கள் விளையாட்டை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். நம் நாட்டுத் தலைவர்கள், அறிஞர்கள் அனைவருமே அவர்களிடமிருந்த ஏதோ ஓர் உயரிய பண்பின் காரணமாகத்தான் அந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள். இன்றுள்ள மாறுபட்ட சூழலில், அவர்களைக் கடுமையாக விமர்சிப்பது நியாயமற்ற செயல்.

யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்பதல்ல உண்மை. இறந்தவர், தன் அனைத்துக் கடன்களையும் அடைத்து விடுகிறார் என்பதுதான் வாதம்.

மண்புழுவிடமிருந்து கூட மக்கிய இலைகளை உரமாக்கும் ரசவாதத்தைக் கற்க வேண்டும். வருத்துகிற வறட்சியிலும் மனம் தளராப் பறவைகளைப் பற்றி பயில வேண்டியவை உண்டு.

எல்லாவற்றிலும் சிறந்த பக்கங்களையே பார்ப்பது என்று முடிவெடுத்துவிட்டால், நம் உடல் கூட பஞ்சு போலக் காற்றில் மிதப்பதைக் கவனிக்க முடியும். வெறுப்பு, உடலில் அமிலத்தை உண்டாக்கும்; குடல்களை அரிக்கும்; வயிற்றைப் புண்ணாக்கும்.

திரைப்படங்களில் வரும் நகைச்சுவைக் காட்சிகளைக் கண்டு பெரியவர்களை 'பெரிசு' என்றும், மூத்தவர்களை ஒருமையில் விமர்சிப்பதும் அதிகமாகி வருகின்றன. 'எனக்கு எல்லாம் தெரியும்' என்கிற இறுமாப்பு அதல பாதாளத்தில் நம்மை உருட்டிவிடும் இயல்பு கொண்டது.

இன்று நாம் சந்திக்கும் மனிதர்களிடம் ஒரு நல்ல குணத்தைக் காண்போம். அதை கடைபிடிக்க முயல்வோம் என்று சூளுரை எடுப்போம்.

நம் பொறுமை வளர, வெறுப்பு குறையும்.

பெருந்தன்மை உயர, பொறாமை குறையும்.

மகிழ்ச்சி பெருக, வருத்தம் மறையும்.

நல்லவை கற்போம் - அல்லவை மறப்போம்.

>>>சரித்திரம் பயில்வோம்! - வெ.இறையன்பு

இப்போதெல்லாம் பள்ளிகளில் அறிவியலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் சரித்திரத்துக்குக் கொடுப்பதில்லை. இலக்கியத்துக்கு இடமே இல்லை. வரலாறும் இலக்கியமும் படித்தால் வேண்டிய படிப்புக்கு விண்ணப்பம் போட முடியுமா என்று மாணவர்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்கேள்வி கேட்கிறார்கள்.

வரலாறு, இலக்கியம் பண்டங்களல்ல, பாத்திரங்கள். உணவை உண்ணுகிற பாத்திரம் நிறைவு செய்வது போல, அவை முழுமையான வாழ்க்கை நெறியை வழங்குகின்றன.

வரலாறு நூல்களைத் தேர்வு செய்து படிக்கும் போது, கதைப்புத்தகத்தைப் போல கலகலப்பூட்டு கிறது. பாடப்புத்தகங்களில் மதிப்பெண்களுக்காகப் படிக்கிற போது கவிதைகள் கூட கந்தகமாகிவிடுகின்றன. விருப்பத்துடன் வாசிக்கின்றபோது கந்தகம் பற்றிய குறிப்பு கூட சந்தனமாகிவிடுகிறது.

சுவாரசியமான பல சரித்திர நூல்கள் எழுதப் பட்டிருக்கின்றன. சரித்திரத்தை இலக்கியங்கள் மூலமும் வாசிக்கமுடியும். ஷேக்ஸ்பியர், மார்லோ, பெர்னாட்ஷா ஆகியோருடைய பல நாடகங்கள் சரித்திரத்தின் பதிவுகள், வரலாற்றின் பிழிவுகள்.

மாபெரும் மன்னர்களின் வீழ்ச்சிக்கு ஒரே ஒரு தவறால் நிகழந்ததை நமக்கு அவை உணர்த்துகின்றன. அதீத நம்பிக்கையால் ஜூலியஸ் சீசர் கத்திகளின் உத்திகளுக்குப் பலியானார். ஹேம்லெட் முடிவெடுக்காமல் தடுமாறியதால் தள்ளாடினார். மேக்பெத் அதிக அவாவால் அழிந்தான். நெப்போலியன் சரியாகத் திட்டம் இடாததால் தொய்வுற்றார். ஹிட்லர் அகங்காரத்தால் அழிந்தார்.

சரித்திரத்தை எவ்வளவு நாம் புறக்கணித்தாலும் அவை திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏன், நம் வாழ்வில் கூட மீண்டும் பழைய தவறுகளையே நாம் செய்து கொண்டே இருக்கிறோம். விழுந்த இடத்திலேயே விழுகிறோம்.

தலைமைப் பண்பை உறிஞ்சிக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு, சரித்திரம் அகராதி. மேன்மையான உயர்ந்த குணங்கள் சிலரை உச்சாணிக் கொம்பிலே அமர்த்தியதை வரலாற்றை வாசிப்பதிலிருந்து கிரகித்துக் கொண்டு நாமும் அவற்றை நோக்கி பயணிப்பதற்கு நம்மை அவை உசுப்பி விடுகின்றன.

மகாத்மா காந்தி எத்தனைப் போராட்டங்களைச் சந்தித்தார் என்பதைத் தெரிந்து கொள்கிறபோதுதான், மாதப் பரீட்சைக்கே மனமொடியும் நாம் நம்மைத் திருத்திக்கொள்ள முடியும். வைராக்கியம் வளர்க்கவும், இடறாமல் இருக்கவும் சாதனை செய்தவர்களின் சரித்திரச் சான்றுகள் நமக்கு என்றும் உறுதுணை புரியும்.

>>>கலைகளைக் காப்போம்! - வெ.இறையன்பு

பல்வேறு இடங்களுக்கு செல்லும் நாம் அழகான தோட்டங்கள், பரந்து விரிந்த கடற்கரை, கம்பீரமான கோயில்கள், சிறப்பு மிகுந்த சிற்பங்கள் என்று பார்த்து மகிழ்கிறோம். அவற்றை அழகுபடுத்த முடியாவிட்டாலும் அழுக்குப்படுத்தாமல் இருப்பது அவசியம்.

கடற்கரையில் அமர்ந்து காற்று வாங்கும்போது நாம் பெறுகிற சுகத்தை அங்கே இருப்பவர் களும் பெற வேண்டாமா? நாம் சாப்பிட்ட கடலைத் தோல்களையும், எண்ணெய் காகிதத்தையும் அங்கேயே போட்டால் எறும்புகள் மொய்க்காதா? ஈக்கள் சூழாதா? இப்படி பலரும் போட்ட தின்பண்டங்களின் எச்சங்கள் தமிழகத்தில் உள்ள ஒரு கடற் கரையையே சேதப் படுத்திவிட்டது. இப்போது அங்கே அமர்கிறவர்கள் வாழ்நாள் முழுவதும் தோல் நோயால் தொல்லையுறு கிறார்கள். மணலைச் சலித்து எடுத்தால்தான் அங்கிருக்கும் நுண்ணுயிரிகளைச் செயலிழக்கச் செய்யமுடியும் என்று அது குறித்த அறிவியல் அறிஞர்கள் அறிவிக்கின்றார்கள்.

புனிதத் தலங்கள் என்று சொல்லிக் கொண்டு, அவற்றை அழுக்குப்படுத்த நமக்கு மட்டும்தான் மனம் வரும். கோயில்களின் தெப்பக்குளங்கள் குப்பைத்தொட்டிகளாகும் அளவுக்கு, உபயோகித்த பொருள்கள் எல்லாம் எறியப்படு கின்றன. வணங்கிய சிலையையே உடைப்பது போன்றது இந்தச் செயல்.

அழகிய பூங்காக்கள் முழுவதும் காலை நேரத்தில் காகிதச் சிதறல்களாக இருப்பதைக் காணலாம். எங்கு சென்றாலும், எதையாவது தின்பதுதான் ஆனந்தமயமான அனுபவம் என்று எழுதப்படாத விதி நம்மிடம் இருக்கிறது. அதனால்தான், கடலை ரசிப்பதைவிட கடலை கொறிப்பதில் நமக்கு அக்கறை அதிகம். சாப்பிட்ட பிறகு காகிதங்களையும், மிச்சமானவற்றையும் குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும் என்கின்ற ஆறாவது அறிவைப் பல நேரம் இழப்பவர்கள் நாலாந்தார மனிதர்களாகி விடுகிறார்கள்.

கோயில்களுக்குச் சென்றால், அங்கிருக்கும் சிற்பங்களில் ஆணியாலும், கரியினாலும் தங்கள் பெயர்களை எழுதி அசிங்கப்படுத்து பவர்கள் இருக்கிறார்கள். நம் உடலில் ஒரு சின்னக் கீறல் ஏற்பட்டாலே அடுத்தவர்களை நொந்து கொள்கிற நாம், அழகான சிற்பங்களைக் கொஞ்சம்கூட குற்றவுணர்வு இல்லாமல் காயப்படுத்துகிறோம். சிலர், சிற்பங்களின் மூக்குகளை உடைக்கிறார்கள், கைகளைச் சிதைக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டு களுக்கு மேற்பட்ட கலைச்சின்னங்களில் இப்படிப்பட்ட கயமைத்தனமான செயலால் நாம் சேதப்படுத்துகிறோம்.

நாம் செல்கிற இடங்களை கண்களால் ரசிப்போம். அவற்றை சிதிலப்படாமல் பாதுகாப்போம். மற்றவர்கள் அச்செயலைச் செய்கிறபோது தடுப்போம், அறிவுறுத்துவோம், விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். நம் நாட்டின் பெருமைகளைத் தொடர்ந்து பேணிக் காப்போம்.

>>>மண்படாத வாழ்க்கை! - வெ.இறையன்பு

மழையில் நனையாமல், வெயிலில் காயாமல் வாழ்கிற வாழ்வே 'சொகுசான' வாழ்வென்று நாம் சொல்லிக்கொள்கிறோம்.

காலில் மண்படாமல், சூறாவளிக் காற்றில் சிக்கிக் கொள்ளாமல் வாழ்வது தான் பாதுகாப்பான வாழ்வென்று நினைத்துக் கொள்கிறோம்.

நம் தட்பவெப்பம், நம் மரபுக் கூறுகளுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது. வெயில் கொளுத்துகிற ஊரில், தாகம் அதிகமெடுக்கும். தண்ணீர் குடிக்கும் தேவை அதிகரிக்கும். உள்ளே போகிற நீர் பெரும்பாலும் வியர்வையாக வெளிவருவதுதான் உடலுக்கு நல்லது. குளிர்சாதன வசதி கொண்டு, வியர்வையைத் தடுத்தால் சிறுநீரகம் அதிகம் உழைக்க, அவை பழுதடைந்துவிடும்.

இயற்கையுடன் இயைந்து வாழ்கிற வாழ்க்கையே மேன்மையான வாழ்க்கை, செறிவான நெறி. மழையில் ஒரு முறையேனும் நனைந்தால்தான் அதன் சுகத்தை உணரமுடியும். வானமே 'ஷவராக' மாற, நம் உடலில் தெளிக்கும் சாரல் ஒரு நிமிடம் நம் இருத்தலையே கரைத்துவிடும் தன்மை பெற்றது. அது ஏறத்தாழ 'மெய்ஞானம்' கிடைத்த அனுபவமாகிவிடும்.

அப்படி நனைந்தால் காய்ச்சல் வருமே என்று கவலைப்படும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் முடிதிருத்தகத்தில் சிகையலங்காரத்திற்கு முன்பு தெளிக்கப்படும் நீருக்கே பயப்படுவார்கள். மழையில் நனைவதால் அப்படிக் காய்ச்சல் வந்தால் வரட்டுமே! உயிரா போய்விடப் போகிறது!

மகிழ்ச்சியுடன் செய்கிற எதுவுமே உடல் உபாதையை விளைவிக்காது என்பதே உண்மை. நல்ல வெயிலில் வியர்வை வழிந்தோடும் வரை விளையாடும்போது நம் மனமும், உடலும் எதிர்ப்புத்திறனை வளர்த்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்று விடுகின்றன.

சில நாட்கள் செருப்புப் போடாமல் நடந்து, பூமியின் குறுகுறுப்பை உணர வேண்டும். மாதத்தில் ஒரு நாளாவது மலைச்சாரலில் நடந்து போக நேரிட்டால், நம் உடலின் உண்மையான பலத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

உடல் அளப்பரிய சக்தியுடையது. நல்ல உழைப்புக்குப் பின் ஏற்படுகிற தூக்கமே சொர்க்கம் என்பதை வியர்வையை அனுபவித்தவர்களால் உணரமுடியும்.

இயற்கையின் சக்திகள் அனைத்துமே நமக்கு சகாயமானவை. அவற்றை விநோதமாகக் கருத கருதத்தான் நமக்கு உண்டாகிற நோய்களின் அளவும் அதிகரித்துவிட்டன.

மண்ணில் அழுக்குப் படியாத கால்கள் அவற்றின் படைப்பு நோக்கத்தையே இழந்து விட்டதாகவே கருதமுடியும்.

மண்ணை மதிப்பவர்கள், காற்றை நேசிப்பவர்கள், மழையை விரும்புபவர்கள் அவற்றிடமிருந்து ஓடி ஒளிவதில்லை, மாறாக அவற்றைத் தேடி அலைவதுண்டு.

>>>தினமொரு நற்செயல்! - வெ.இறையன்பு

நாம் ஏதேனும் ஒரு நல்ல செயலைச் செய்தால்தான் அந்நாள் முழுமை பெற்றதாகக் கருதமுடியும்.

பறவைகள் கூட எத்தனையோ விதைகளின் முளைப்புத் திறனை அதிகரித்து, அவற்றை செடிகளாகக் கிளைவிட உதவி வருகின்றன.

மலர்கள் கூட காற்று மண்டலத்தை நறுமண மயமாக்கிய பின்னர் தாங்கள் உருவாக உதவிய பூமியை முத்தமிட்டு, சருகாகி எருவாகி வளம் சேர்க்கின்றன.

ஆனால் பகுத்தறிவு தமக்கு மட்டுமே உண்டு என்று மார்தட்டிக் கொள்கிற மனிதர்கள் பலர் சுயநலம் மட்டுமே பிரதானம் என்று மண்ணுக்கு பாரமாய் வாழ்கிறார்கள்.

தினமொரு நற்செயல் செய்கிறபோது நம்மையும் அறியாமல் நம் மகிழ்ச்சி வட்டம் விரிவடையும். உடல் முழுவதும் காந்த அலைகள் பரவும். நாம் காணுகிற திசைகளில் அழகும், அன்பும் நர்த்தனமிடும். இரவு படுக்கையில் விழும் முன் அன்று நாம் செய்த நற்காரியத்தை நினைத்தால் உள்ளம் ஆர்ப்பரிக்கும், அமைதி நிலவும், ஆனந்தம் தழுவும்.

'ஒழுக்கம் என்பது சுயநலமில்லாத வாழ்வு' என்றார் சுவாமி விவேகானந்தர். உற்று நோக்கினால் ஒழுக்கமற்ற செயல்கள் அனைத்துமே சுயநலமின்மையால் உருவாவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். நம் தூய்மையை சமூகமல்ல, நாம்தான் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

தாகத்தினால் தவிக்கின்ற கன்றுக்கு நீர்கொடுத்தால் அதுவும் நற்செயல். காயத்தில் தடுமாறும் நாய்க்கு உணவளித் தால் அதுவும் உயர் செயலே.

வழிகேட்டு வந்தவருக்கு, சரியான பாதையை அடையாளம் காட்டுவதும் நற்செயலே. விபத்தில் விழுந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல் வதும் உன்னதச் செயலே.

வகுப்புக்கு வராத நண்பனுக்கு, வகுப்பில் நடந்தவற்றை விளக்கிச் சொல்வதும் மேன்மையான செயலே.

இப்படிப்பட்ட செயல்களை நாம் யாரும் பாராட்டுவார்கள் என்று செய்வதில்லை. நமது திருப்திக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் மேற்கொள்கிற போது, நம் உள்ளம் உவகையடைகிறது.

மாணவப் பருவத்திலே இது போன்ற பண்புகளைப் பதியம் போட்டால், தலைமைப் பண்பு அரும்ப ஆயத்தமாகி விடும். பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிற இளைஞர்கள் சமூகத்துக்கு பாரமாக இருக்கிறார்கள். கூடுதல் பொறுப்புகளையும் தாங்குவதற்குத் திறனுடைய இளைஞர்கள், பாலமாக இருக்கிறார்கள்.

நாம் பிறருக்கு நற்செயல் செய்கிற போதெல்லாம் அது நமக்கே திரும்ப வந்து சேருகிறது என்பதை உணர்ந்தால் நம்மைச் சுற்றி எப்போதும் கொண்டாட்டமும் கும்மாளமும்தான் நிலவமுடியும்.

>>>தோல்வியை வெல்வோம்! - வெ.இறையன்பு I.A.S

வெற்றியை காட்சிப்படுத்தியே நாம் முயற்சிகளை முன் வைக்கிறோம். பல நேரங்களில் செயல்படுகிறபோதே ஜெயித்துவிட்டதாகக் கருதுகிறோம். நாம் செல்கிற வேகத்தில் தோல்வி ஏற்பட்டால் துவண்டு விடுகிறோம். அடுத்து புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் சுணங்கி விடுகிறோம். வெற்றி என்கிற ஆளுயர மாலையை அநாயசமாகத் தாங்குகிற நாம், தோல்வி என்கிற சின்ன கருப்புத்துணியின் பாரம் தாங்கமுடியாமல் அமுங்கி விடுகிறோம். வெற்றி மினுமினுக்கிற பொன்னாடையை அணிவிக்கின்றது. தோல்வி கண்ணீரை ஒற்றிக் கொள்ளும் கைக்குட்டையை மட்டுமே காணிக்கை ஆக்குகிறது. முதல் மதிப்பெண் கிடைக்கவில்லையே, நினைத்த படிப்பில் சேர முடியவில்லையே என்றெல்லாம் நம்மை நாமே தாழ்த்திக்கொண்டு வாழ்க்கையை சேதப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உற்று நோக்குபவர்களுக்கு மட்டுமே உண்மை தெரியும். வெற்றி தரக்கூடிய களிப்பைவிட, தோல்வி வழங்குகிற அனுபவம் ஆழ மானது. வெற்றி அஜாக்கிரதையையும், தோல்வி விழிப்புணர் வையும் அள்ளித்தருகின்றன. ஒரு முறை கிடைத்த பரிசு அதீத நம்பிக்கையையும், அலட்சிய மனப்பான்மையையும் அபரிமித மாகத் தந்துவிடுகிறது. மேடையில் ஒருமுறை நின்றுவிட்டதாலேயே நாம் அனைவரையும்விட உயரமானவர்கள் என்ற எண்ணம் உதித்துவிடுகிறது. அதே நேரம் வெற்றி பெறுகிற தருணத்தில் கவனக்குறைவாக இருந்து கேடயத்தை தவறவிட்டவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் வரலாறானது. ஜெயித்தவர்கள் தன் திறமையால் வென்றதாகக் கருதிக்கொள் கிறார்கள். தோற்றவர்கள், தான் குழுவைச் சரியாக வழிநடத்த வில்லையென்று சுயவிசாரணை செய்கிறார்கள். எதனால் வெற்றி பெற்றோம் என்று நாம் ஒரு நிமிடம்கூட அலசுவதில்லை. ஆனால், தோல்வி நம்மைத் துருவித்துருவி ஆராய வைக்கிறது. வெற்றியால் கிடைக்கின்ற பெருமை மின்னலாக மறைந்து விடுகிறது. தோல்வியால் பெற்ற அவமானங்கள் மழையாய் நம்மை நனைத்து விடுகிறது. ஒவ்வொரு தோல்வியும் மிகப் பெரிய வெற்றிக்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறது. சின்னச் சின்ன வெற்றிகளில் சிலிர்த்து போகிறவர்கள், பெரிய முயற் சியில் பாதாளத்தில் விழுந்து பரிதவிக்கிறார்கள். பதக்கங்களை காட்டிலும் நோக்கங்கள் முக்கியம். உயர்ந்த நோக்கத்துக்காக அடைகிற தோல்வி சின்ன சுகத்துக்காகக் கிடைக்கிற வெற்றியைக் காட்டிலும் உன்னதமானது. இன்று பெறுகிற தோல்வி வேறொரு உயர்ந்த லட்சியத் திற்காக நம்மை தயார்படுத்துகிறது எனக் கருதி, அதை சுட்டு விரலால் சுண்டி உதறி விட்டு நாம் முன்னேற வழிவகுப்போம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 29.11.2024

  கனமழை காரணமாக 29-11-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools &am...