தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதாரத்துறை தகவல்
18 people infected with corona in Tamil Nadu - Health Department information
தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் மொத்தம் 93 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர், தாய்லாந்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை சொல்லியிருப்பது என்ன.?
மீண்டும் பரவும் கொரோனா
சீனாவில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி, பெரும் உயிர்சேதத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. பல லட்சம் பேரை காவு வாங்கிய பின்னர், கொரோனாவிற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டது.
2 ஆண்டுகள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்த மக்கள், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்தற்குப்பின் தான் நிம்மதி அடைந்தனர். ஆனாலும், 2 ஆண்டுகளுக்கு மேல் கொரோனா ருத்ர தாண்டவம் ஆடியதால், கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையே மாறியது. லாக் டவுன் இருந்ததால், ஏராளமானோர் வேலையையும், தொழிலையும் இழந்தனர். கொரோனா இல்லாமல் உலகம் சகஜ நிலைக்கு திரும்பினாலும், அவரவர் அடைந்த நஷ்டத்திலிருந்து இன்னும் மீளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங்கில் பரவல் அதிகரிப்பு
இந்த நிலையில், தற்போது சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனிடையே, ஹாங்காங்கில் ஒரே வாரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் கொரோனா பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க அளவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீனா மற்றும் தாய்லாந்திலும் கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் எத்தனை பேருக்கு தொற்று.? தமிழ்நாட்டில் எத்தனை.?
இதையடுத்து நடந்த பரிசோதனையில், இந்தியாவில் மொத்தம் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல், புதுச்சேரியில் 13 பேருக்கும், கேரளாவில் 15 பேருக்கும், கர்நாடகாவில் 4 பேருக்கும், மகாராஷ்டிராவில் 7 பேருக்கும், டெல்லியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
எனினும், மத்திய அரசின் பொது சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மொத்தமாக 24 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில், மே மாத முதல் வாரத்தில் 14,200 பேரிடம் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நிலையைவிட 28% அதிகமாக இருப்பதால், ஓராண்டுக்குப் பிறகு அந்நாட்டு சுகாதார அமைச்சகம், கொரோனா குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தமிழ்நாடு சுகாதாரத்துறை சொல்வது என்ன.?
இதனிடையே, தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்துள்ள சுகாதாரத்துறை, வைரஸ் பாதிப்பு பெருமளவில் இல்லை எனவும், மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், 8 முதல் 10 பேருக்கு தினசரி பரிசோதனை செய்யப்படுவதாகவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது வீரியமில்லாத கொரோனா என்பதால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.