கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கருவாக்கி, உருவாக்கி, உயிரான என் அப்பா! இன்று தந்தையர் தினம்

அன்னையின் வயிற்றில் ஐந்திரண்டு மாதங்களாய் நம்மை சுமந்தாலும், ஆயுள் வரை நெஞ்சில் சுமப்பவர் தந்தை. அம்மாக்களை போல, அப்பாக்களுக்கு பாசத்தை வெளிக்காட்டத் தெரியாது. முள்ளுக்குள் ரோஜாவாய், பலாப்பழத்தில் பலாச்சுளையாய் நினைக்க, நினைக்க நெஞ்சுக்குள் சந்தோஷமும், பெருமையும் தருபவர். வாழ்க்கைச் சக்கரத்தில் வசதியாய் நாம் வாழ்வதற்காக, ஓயாமல் சுழலும் அன்புச் சக்கரம் தந்தை. "நான் பட்ட கஷ்டம்', என் பிள்ளையும் படக்கூடாது என்று வாயாற பேசி, மனமார உழைக்கும் அந்த அன்பு... "கண்ணுக்கு தெரியாத கடவுளைப் போல', நம்மை அரவணைத்து காக்கும். தந்தையின் பெருமைகளை மனதால் உணரும் போதுதான், அவரது அன்பு நம் கண்ணுக்குத் தெரியும்.

தந்தையிடம் அறிவை வாங்கலாம்...: தந்தையருக்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக, உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் கொண்டாடப்படும் தேதி நாட்டுக்கு, நாடு வேறுபட்டாலும், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் ஜூன் 3வது ஞாயிறு (ஜூன் 17) கொண்டாடப்படுகிறது. இன்று ஒவ்வொருவரும் தங்களது தந்தைக்கு, நேரிலோ, போனிலோ வாழ்த்து தெரிவித்துக்கொள்ளுங்கள்.

பாசத்துக்கு எப்போதும் அன்னை தான் உதாரணம். தந்தைதான் ஒரு குழந்தைக்கு வழிகாட்டியாக இருக்கிறார். "அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்' என்ற பாடல் வரிகள் தாய், தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இத்தினத்தின் நோக்கம். தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்க வேண்டும்.

எப்படி வந்தது: அமெரிக்காவில் 1909ல் "சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட்' என்ற இளம் பெண் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன் வைத்தார். அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக் கூடாது என வலியுறுத்தினார். இவர், தாயாரின் மறைவுக்கு பிறகு தந்தை வில்லியம், ஆறு குழந்தைகள் கொண்ட தனது குடும்பத்தை கடுமையான சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார். இது தான், தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு தூண்டியது. இதன்படி 1910ம் ஆண்டு முதன் முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

உங்களுக்கும் வரலாம்: தாயின் அன்புக்கு எவ்வகையிலும் குறைந்து விடுவதில்லை தந்தையின் அன்பு. சிறு வயது முதல் பிள்ளைகள் விரும்பியவற்றை செய்து தருகிறார். பிள்ளைகளின் கல்வி முதல் திருமணம் வரை அனைத்திலும் தந்தையின் பணி அளவிட முடியாதது. சிலர், முதுமை பருவத்தில் தந்தையை தவிக்க விடுகின்றனர், இது தவறு. இன்று பிள்ளையாக இருப்போர், நாளை தந்தையாக மாறுவர். எனவே இந்நிலைமை யாருக்கும் வரலாம் என்பதை நினைவில் வைத்து தந்தைக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும்.

இன்று தந்தையர் தினம். நம் நாளின் ஒவ்வொரு மணித்துளியிலும் தந்தையின் உழைப்பை நினைவு கூர்வோம், புரிந்து கொள்ள முயற்சிப்போம். "தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்ற வாக்கை, வாழ்க்கையில் கடைப்பிடித்து வரும், வி.ஐ.பி.,க்கள், தங்களது தந்தையரின் பெருமைகளை, பகிர்ந்து கொள்கின்றனர்.

ஞாயிற்றுக் கிழமை மட்டும் பார்ப்போம் அப்பாவை: மதுரை வடமலையான் சிறப்பு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் புகழகிரி வடமலையான்: அப்பா வடமலையான், ஆங்கிலேயர் காலத்தில் மதுரை அரசு மருத்துவமனையில், காலை 7 முதல் மாலை 4 மணி வரை, ஊதியம் வாங்காமல், கவுரவ அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியவர். தொழிலுக்கு அடுத்து தான் குடும்பத்தை நினைப்பார். நாங்கள் நான்கு பேர். எனக்கும், அண்ணனுக்கும் 20 வயது வித்தியாசம். எங்களையும் மக்களுக்கு சேவை செய்யும், டாக்டராக்க நினைத்தார், சாதித்தார். "எமர்ஜென்சிக்காக' அழைக்கப்படுபவன் தான் டாக்டர். வைத்தியம் பார்க்க வருபவர்களை, காசில்லை என்பதற்காக திருப்பி அனுப்பக்கூடாதென நினைப்பவர். பணிநேரத்தில், எங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும், வேறு டாக்டரைத் தான் அனுப்புவார். நாங்கள் எழுமுன் வேலைக்குச் செல்வார். இரவு 11.30 மணிக்கு வருவார். ஞாயிற்றுக் கிழமை மட்டும் தான் அப்பாவை பார்ப்போம். எங்கள் வீட்டிற்கு ஒருமுறை, மருத்துவ இயக்குனர் வந்திருந்தார். அப்போது, என்னைப் பார்த்து, "உங்கள் பையனா... என்ன படிக்கிறான்' என அப்பாவிடம் கேட்டார். அப்பா "என்னடா படிக்கிற' என, என்னைப் பார்த்து கேட்டார். அக்காவுக்கு திருமண நாளில், முகூர்த்தத்தின் போது அப்பாவைக் காணோம். மருத்துவமனைக்கு போன் செய்த போது, முகூர்த்தம் 10 மணிக்கு தானே. அதற்குள், நோயாளிகளை ஒருமுறை பார்த்துவிட்டு வருகிறேன், என்றார். அந்தளவுக்கு தொழில் மீது பக்திகொண்டவர். அப்பா இறக்கும் போது, எனக்கு வயது 19. மருத்துவக் கல்லூரியில் முதலாண்டில் சேர்ந்திருந்தேன். இறப்பதற்கு முன், என்னைப் பார்த்து கூறிய வார்த்தைகள்... "யாருக்காகவும் நான் தப்பு செய்யல. இதுவரைக்கும் நேர்மையா இருந்துட்டேன். நான் இறந்தபின், மத்தவங்க உன்னை கஷ்டப்படுத்துவாங்க. தாங்கிக்கோ... மருத்துவமனையை நீ தான் காப்பாத்த ணும்,' என்றார். அப்பாவின் வார்த்தைகள், நிஜத்தில் என்னை தீயாய் சுட்டது. அவரது தர்மம், என்னை காப்பாற்றியது. தமிழகத்தின் தென்பகுதியில் 1955ல் முதன்முதலில் தனியார் மருத்துவமனை அமைத்தது, அப்பா தான்.

எங்கள் தூக்கத்தில் அவரது அன்பு மறைந்திருக்கும்: மதுரை வருமான வரித்துறை கமிஷனர் எம்.கிருஷ்ணசாமி: திண்டுக்கல் ஆயக்குடியில், நிலம் கூட இல்லாத ஏழை விவசாயி, எங்கள் அப்பா. கஷ்டப்பட்டு உழைத்து நிலம் வாங்கினார். நாங்கள் மூவர். அப்பா, அம்மாவுக்கு படிப்பு வாசனையில்லை. உழவும், அறுவடையுமே அவருக்கு தெரிந்த விஷயம். ஆனால் நாங்கள் பெரிய அதிகாரியாக (எந்தத் துறை என சொல்லத் தெரியாது) வேண்டும் என்பது அவரது பெருங்கனவு. அண்ணன் ரயில்வேயில் இருக்கிறார். எங்களிடம் எந்த கோரிக்கையுமே, இதுவரை அப்பா வைத்ததில்லை. "சிறுவயதில் நாங்கள் தூங்கினாலும், எழுப்பி சோறூட்டி மீண்டும் தூங்கவைப்பார்' என, அம்மா சொல்வார். எங்களின் தூக்கத்தில் அவரது அன்பு மறைந்திருக்கும். சிலநேரம் அவரது கருத்து, ஏற்புடையதாக இல்லாவிட்டாலும், எதிர்த்து பேசியதில்லை. நாங்கள் நல்ல நிலையில் இருந்தாலும், அவர் சொகுசாக வாழவில்லை. தினமும் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று, இன்றும் வயல்வேலை செய்கிறார். உழைப்பின்அருமையை அப்பாவிடம் கற்றுக் கொண்டேன். என் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.

கந்துவட்டிக்கு கடன் வாங்கி என்னை படிக்க வச்சாரு: பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்., மதுரை எஸ்.பி.,: எங்க தாத்தாவுக்கு அந்தக் காலத்துல நிறைய சொத்து இருந்துச்சு. அப்பா (வேலய்யா, கன்னியாகுமரி மாவட்டம் எட்டு பூட்டு தேரிவிளை கிராமம்) விவசாயத்த பார்த்துக்கிட்டாரு. அப்பா படிக்கவில்லை என்றாலும் எங்களோட படிப்பை முக்கியமா நினைச்சாரு. எங்க தலைமுறையில, நான் தான் முதன்முதலா "டிகிரி'(பி.எஸ்சி., விவசாயம்) முடிச்சேன். அதுக்கு அவர் பட்ட கஷ்டத்தை சொன்னா... இன்னைக்கும் கண்ணீர் வரும். ஒவ்வொரு நிலமா வித்தாரு. எங்க ஊர்ல, நாலாவது படிக்கும் போதே, படிப்பை நிறுத்திட்டு கயிறு வேலைக்கு அனுப்பிடுவாங்க. சொந்தக்காரங்களும், ஊர்க்காரங்களும் "பிள்ளைகளை படிக்கவைக்கறதுக்கு... நிலத்தை விக்காதே'னு சொன்னதை, அப்பா ஏத்துக்கல. "சொத்து போனா பரவாயில்லை... பிள்ளையோட படிப்பு முக்கியம்'னு சொன்னாரு. அக்காவுக்கு அடுத்து நான், எனக்கு கீழே நான்கு பேர். நான் படிச்ச அளவுக்கு, மத்தவங்களையும் படிக்க வைக்க முடியல. உண்மைய சொன்னா... அப்பா கந்துவட்டிக்கு கடன் வாங்கி, என்னை படிக்கவச்சாரு. கந்துவட்டி கொடுமைய நேரில் அனுபவிச்சவன் நான். வட்டி கட்ட முடியாத சூழ்நிலையில் கூட, படிப்பை நிறுத்த நினைக்கல. எம்.எஸ்சி., 2ம் ஆண்டு படிக்கும் போதே, வங்கியில் வேலை கிடைச்சுடுச்சு. முதல் மாச சம்பளத்த, அம்மாகிட்ட தான் கொடுத்தேன். நானா யோசிச்சு அப்பாவுக்கு வேட்டி, சட்டை எடுத்து கொடுத்தேன். அப்பாவுக்கு 67 வயசாகுது. நிலத்தையெல்லாம் இழந்துட்டு, பந்தல் கான்ட்ராக்ட் வேலை பார்க்குறாரு. அவரோட கைச் செலவுக்கு மட்டும், வருமானம் கிடைக்குது. ஆன... அப்பா இன்னமும், எதையுமே எங்கிட்ட எதிர்பார்க்கல.

அப்பா... பாட்டு பாடி என்னை எழுப்புவார்: பி.எம்.லீலா ஸ்ரீநிதி(பத்தாம் வகுப்பு ஐ.சி.எஸ்.இ., பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற, மதுரை லட்சுமி பள்ளி மாணவி): தற்போது டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்துள்ளேன். பத்தாம் வகுப்பில் முதலிடம் பெற்றதற்கு முழுக்காரணம் அப்பா தான். பெற்றோருக்கு (டாக்டர் பழனியப்பன், நுரையீரல் நிபுணர், அப்போலோ மருத்துவமனை, டாக்டர் மீனா பிரியதர்ஷினி) நான் ஒரே பிள்ளை. அப்பா... என்னை, ஒருநாளும் திட்டியதில்லை, அடித்ததில்லை. நான் சின்ன குழந்தையா இருக்கறப்ப, காலையில் எட்டு மணி வரைக்கும் தூங்குவேன். "நீ தான் எழுந்திருப்பதில் பர்ஸ்ட்... நீ தான் எதிலும் பெஸ்ட்' என்று கவிதை பாடி, எழுப்புவார். அது இன்றும் தொடர்கிறது. நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது, குட்டி குட்டியா பத்து கதைகள் எழுதினேன். அதைப் பார்த்துட்டு, தனியா ஓவியம் வரையச் சொல்லி, புத்தகமே வெளியிட்டார். அப்ப சந்தோஷமா இருந்துச்சு. இப்ப நினைச்சா... பிரமிப்பா இருக்கு. இத்தனூண்டு கதை எழுதினதுக்கே, புத்தகம் போடற அப்பா... யாருக்கு கிடைக்கும்? இரவு 2 மணி வரைக்கும் மருத்துவமனையில் வேலை. வீட்டுக்கு வரும் போதும், சிரிச்சுட்டு வருவார். பரீட்சை நேரத்துல கூட, தூங்கச் சொல்ற அப்பாவை பார்த்திருக்கீங்களா? மதிப்பெண் மட்டும் உலகமில்லை. சாப்பாடும், தூக்கமும் தான் முக்கியம் என்பார். அவருக்காக தான் முதல் மதிப்பெண் எடுத்தேன். சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்பதை தினமும் சொல்லித் தருவார். பாட்டு, வீணை, விளையாட்டுனு... என் மனசுக்கு பிடிச்ச விஷயங்களை அம்மாவும், அப்பாவும் ஊக்கப்படுத்துவாங்க. ஐ லவ்யூ அப்பா...

அப்பாவின் கைப்பிடித்து நடக்கும் அனுபவம், கோடி ரூபாய்க்கு கூட ஈடாகாது: கோபிநாத், சாக்ஸ் நிறுவன பங்குதாரர், மதுரை: நாங்க நான்கு பிள்ளைகள். இப்படித் தான் வாழவேண்டும் என்று, வாழ கற்றுக் கொடுத்தவர் என் அப்பா(கணபதி, சாக்ஸ் நிறுவனர்). அவரைப் போல நல்லவரைப் பார்க்கமுடியாது. கோபப்பட்டு திட்டினாலும், அது நமக்கு நன்மையாக அமையும். ஒருமுறை, ஒரு ரூபாய் தானே... என, அசட்டையாக கூறிவிட்டேன். அப்பாவுக்கு வந்ததே கோபம்... "ஒரு ரூபாயோட அருமை, உனக்குத் தெரியுமா? அதை சம்பாதிச்சு பாரு,' என்றார். எனக்கு திருமணம் செய்து வைத்தபோது அப்பா சொன்ன ஒரு விஷயத்தை, இன்றும் கடைப்பிடிக்கிறேன். "பெண்கள் சொல்ற குற்றச்சாட்டுகளை, நாலு பேரு முன்னால சபைக்கு கொண்டு வராதே. கூட்டுக் குடும்பமும், நிறுவனமும் சிதைஞ்சுரும்'னு சொன்னாரு. பணப் பட்டுவாடாவைப் பொறுத்தவரை, "ஒரு செக் கூட, பணமில்லைனு திரும்பி வரக்கூடாது. அது நமக்கு அவமானம்னு சொல்வாரு,'. அவரது நேர்மையும், மரியாதையும் தான் மிகப்பெரிய சொத்து. இப்போது அவருக்கு 80 வயதாகிறது. இப்பவும் கடைக்கு வந்து, எங்களை விட சுறுசுறுப்பா வேலை பார்க்கிறது ரொம்ப பிடிக்கும். அவரது ஆலோசனைகளை கேட்கும் போது, அவர் ஒரு நீதிபதியா இருந்துக்கலாமேனு தோணும்.

13 வயதில் அமெரிக்காவுக்கு தனியாக அனுப்பினார்: ஆர்.விசித்ரா (மதுரை பெல் ஓட்டல்ஸ் முதன்மை நிர்வாக இயக்குனர்): சிறு வயதிலிருந்தே அப்பா (ராஜசிங் செல்லதுரை, ஸ்டாண்டர்ட் பயர்ஒர்க்ஸ் இயக்குனர்) நிறைய சுதந்திரம் கொடுப்பார். நான் அப்பா செல்லம். 20 வயதில் தனியாக பேக்கரி துவங்குகிறேன், என்றபோது, முதலில் "செக்' புத்தகத்தை கையில் கொடுத்தார். அவரது வழிகாட்டுதலில் ஆறாண்டுகளில் கூடுதல் கிளைகளையும் திறந்துள்ளேன். ஐந்து வயதிலிருந்தே, என்னை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கிறார். தற்போது தொழில் தொடர்பாக, தனியாக செல்கிறேன். கரிசனமாக அவ்வப்போது போனில் பேசுவார். ஆனால் வந்தவுடன் "அங்கே சென்று என்ன கற்றுக் கொண்டாய். புதுவகை மெனுக்களை எழுதிக் கொண்டாயா' எனக் கேட்பார். 13 வயதில் சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்றபோது, அமெரிக்காவின் ஹவாய் தீவிற்கு 15 நாட்கள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தனர். வீட்டில் நானும், அண்ணனும் தான். ஆனாலும் பயப்படாமல் என்னை தனியாக அனுப்பி வைத்தார். அப்போது வைத்த நம்பிக்கை, இன்னும் மாறவில்லை. ஒருமுறை, இரண்டு முறையல்ல... நூறு முறை மன்னிப்பார். என்னை மட்டுமல்ல... தொழிலாளர்களையும் தான்.

அப்பாவுக்கு அன்பு பரிசு: தந்தையர் தினத்தை முன்னிட்டு அப்பாவிற்கு பரிசளிக்க விரும்புகிறீர்களா? ஷாப்பிங் செய்யப்போகிறீர்களா?

* நம் நினைவுகளை நெஞ்சோடு பத்திரப்படுத்த, பணத்தோடு "பர்ஸ்' பரிசளிக்கலாம்.
* கீதையும், குரானும், பைபிளும், நன்னெறி புத்தகங்களும் தரலாம்.
* சிறுவயதில் கைப்பிடித்து நடந்ததை நினைவுகூற, "வாட்ச்' தரலாம்
* விரும்பிய இடத்திற்கு சிறு சுற்றுலா அழைத்து செல்லலாம். முடிந்தால் அப்பா பிறந்த கிராமத்திற்கு, குடும்பத்தோடு செல்லலாம்.
* போட்டோவுடன் "கீ செயின்'
* நினைத்த நேரம் பேசி மகிழ, மொபைல் போன்
* எதுவும் வாங்காவிட்டாலும், அன்பான வார்த்தைகள் பேசலாம். காலில் விழுந்து வணங்கலாம்.

தெய்வம் இருப்பது எங்கே?

* வாழும் தெய்வங்கள் (பெற்றோர்) இருப்பது வீட்டில் தான். கோயிலில் தேட வேண்டாம்.
* எட்டி உதைத்த கால்களை, கட்டி அணைத்து கொஞ்சிய அப்பாவுக்கு... முதியோர் இல்லம் தான்... நீங்கள் தரும் பரிசா? உங்கள் பிள்ளையிடம், இந்தப் பரிசை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
* வாலிபம் தொலைந்து வயதாவது இயற்கை. நாளை நமக்கும் தான். சிறுவயதில் நம்மை தாங்கியவருக்கு, முதுமையில், நாம் கொஞ்சம் தாங்கிப் பிடிக்கலாமே.

ஞாபகம் வருதே!

தந்தையர் தின ஞாபகங்களை அறிந்து கொள்ள சில இணையதளங்கள்

நன்றி-தினமலர்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Our next calender year 2025 is a mathematical wonder

 நமது அடுத்த நாட்காட்டி ஆண்டு 2025 ஒரு கணித அதிசயம் சுவாரஸ்யமான 2025  1) 2025, ஒரு முழு வர்க்க எண்  2) இது இரண்டு வர்க்கங்களின் பெருக்கற்பலன...