நடப்பு கல்வியாண்டில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்டுள்ள முப்பருவ மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையை, அடுத்த கல்வியாண்டில் (2013-14) 9, 10ம் வகுப்புகளுக்கு அமல்படுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் தலைமையில் குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா பிறப்பித்துள்ள அரசாணை விவரம்: வரும் 2013-14ம் கல்வியாண்டில், 9, 10ம் வகுப்புகளுக்கான பாட நூல்களை, முப்பருவ முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையை உள்ளடக்கி தயாரிக்க ஏதுவாக, ஒவ்வொரு பாடத்திற்கும், ஒரு இணை இயக்குனரை, பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்ய வேண்டும்.
பாடப் புத்தகங்கள் எழுதும் பணிக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும், அரசுக்கு, இயக்குனர் கருத்துரு அனுப்பினார். இதை பரிசீலித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் தலைமையில், பாட வாரியாக பொறுப்பு அலுவலர்களை நியமனம் செய்து, தமிழக அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு சபிதா தெரிவித்து உள்ளார்.
அரசு உத்தரவுப்படி, தமிழ் பாடத்திற்கு - உமா; ஆங்கிலம் பாடம் - செல்லம்; கணிதம் - செல்வராஜ்; அறிவியல் - பாலமுருகன்; சமூக அறிவியல் பாடத்திற்கு - குப்புசாமி என ஐந்து இணை இயக்குனர்கள் நியமிக்கப் பட்டு உள்ளனர்.
ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, ஏற்கனவே புதிய பாடத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்களை, முப்பருவ கல்வி முறைக்கு ஏற்றார்போல், சில மாற்றங்களை கொண்டு வருவது, பாடப் புத்தகங்களை பிரிப்பது மற்றும் தொடர் மதிப்பீட்டு முறைக்கான விதிமுறைகளை வகுப்பது உள்ளிட்ட பணிகளை குழு செய்யும்.
வழக்கமாக இதுபோன்ற பணிகளுக்கு, ஓய்வுபெற்ற ஆசிரியர் அல்லது அதிகாரிகள், பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்படுவர். தற்போது, பணியில் உள்ள அதிகாரிகளையே நேரடியாக பொறுப்பு அலுவலர்களாக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தப் பணியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முப்பருவ கல்வி முறையில், 60 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வுக்கும், 40 மதிப்பெண்கள் செய்முறைக்கும் பிரிக்கப்பட்டு உள்ளது. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, முழு ஆண்டுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாக வைத்து, தேர்ச்சி முடிவு வெளியிடப்படுகிறது. அப்படியிருக்கும் போது, முப்பருவ கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையை, பத்தாம் வகுப்பிற்கு எப்படி அமல்படுத்துவர் எனத் தெரியவில்லை.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: பத்தாம் வகுப்பிற்கு, அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கவில்லை. முதலில், 9ம் வகுப்பிற்கு திட்டத்தை நீட்டிப்பு செய்துவிட்டு, அதற்கு அடுத்த கல்வியாண்டில் (2014-15), பத்தாம் வகுப்பிற்கு அமல்படுத்தலாம் என, யோசித்து வருகிறோம்.
பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில், உயர்மட்டக்குழு அமைக்கப் பட்டு உள்ளது. இக்குழு கூடி, 10ம் வகுப்பிற்கு முப்பருவ கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு திட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதித்து, விதிமுறைகளை வகுக்கும்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பிற்கு, கட்டாய பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, பள்ளி நடத்தும் தேர்வு, போர்டு நடத்தும் தேர்வு என, இரு வகையான தேர்வு நடத்தி, "கிரேடு" முறையில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இத்திட்டம் எந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளது என்பதையும் ஆய்வு செய்வோம். இவ்வாறு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி-தினமலர்