இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி முகாமில்
பங்கேற்பதற்காக செல்லும் தென் மாவட்ட ஆசிரியர்கள், காலாண்டு விடுமுறைக்கு
சொந்த ஊருக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், மங்களூர்
வட்டாரத்தில், தென் மாவட்டங்களான, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர்,
திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட
ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். காலாண்டுத் தேர்வு முடிந்து, நாளை
முதல், 30ம் தேதி வரை, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊருக்கு
விடுமுறையில் செல்ல, ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், கடலூர் மாவட்ட
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மையம் மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில்,
வடலூரில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி முகாம்
நடைபெற உள்ளது.
வரும், 27ம் தேதி, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களும்;
28ம் தேதி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த பட்டதாரி
ஆசிரியர்களும்; 29ம் தேதி, தலைமையாசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க
வேண்டும். இதனால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், விடுமுறைக்கு
ஊருக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தென் மாவட்ட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: இலவச கட்டாயக்
கல்வி உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி முகாம், தமிழகம் முழுவதும்
நடக்கிறது. விடுமுறையில் நடைபெறுவதால், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த
ஆசிரியர்கள், அங்கு நடக்கும் முகாமில் பங்கேற்க, பள்ளிக் கல்வித்துறை
உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.