தமிழக கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலைப் பட்டப் படிப்பில், மொழிப்
பாடங்கள் கற்பிப்பதில் முரண்பாடுகள் நிலவுவதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு
உயர்கல்வி மன்றப் பரிந்துரைகளை, சில பல்கலைகள், நடைமுறைப்படுத்துவதில்லை
என்றும் புகார் எழுந்துள்ளது.
தமிழகத்திலுள்ள கலை, அறிவியல்,
கல்லூரிகளில், வேலைவாய்ப்புக்கான வளாக நேர்காணலில், பெரும்பாலான மாணவர்கள்,
ஆங்கிலத்தில் பேச முடியாமல் சிரமப்படுகின்றனர்.இளநிலைப் பட்டப் படிப்பில்,
மொழிப் பாடத் திட்டத்திலுள்ள குறைபாடுகள் தான், இதற்கு காரணமாக,
கருதப்படுகிறது.
பி.காம்., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ., போன்ற, இளங்கலை
துறை மாணவர்கள், 2 செமஸ்டர்கள் மட்டுமே ஆங்கிலம், தமிழ் பாடங்களைப்
படிக்கின்றனர். ஆனால், பி.எஸ்.சி., அறிவியல், பி.எஸ்.சி., ரசாயனம் போன்ற
படிப்புகளுக்கு இப்பிரச்னையில்லை.
படிப்புகளுக்கு இப்பிரச்னையில்லை.
இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அந்தந்த சிறப்புப்
பாடங்களில் பட்ட மேற்படிப்பில் சேரலாம். ஆனால், எம்.ஏ., தமிழ், ஆங்கிலம்
படிக்க வேண்டுமென்றால், மொழிப் பாடத்தை இளநிலைப் பட்ட வகுப்பில், படித்துத்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலைப் பட்ட வகுப்பில், பிற முதன்மைப்
பாடம் படிக்கும் மாணவர்கள், நான்கு செமஸ்டர்களில் மொழிப் பாடத்தில்
தேர்ச்சி பெற்றிருந்தால் தான், முதுநிலை ஆங்கிலம், தமிழ் படிக்க முடியும்.
இதனால், பி.காம்., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ.,
பி.எஸ்சி.,(ஐ.டி.,) போன்ற பாடங்களில், இளநிலைப் பட்டம் பெற்றவர்கள்,
எம்.ஏ., தமிழ், எம்.ஏ., ஆங்கிலம் பட்டமேற்படிப்பு வகுப்பில் சேரத் தகுதி
இல்லாதவர்களாக, கருதப்படுகின்றனர். கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள
விரும்பும் இத்துறை மாணவர்களுக்கு, முதுகலை தமிழ், முதுகலை ஆங்கிலம் பட்ட
மேற்படிப்பு படிக்க, வாய்ப்பில்லை.
மாணவர்கள் நலன் கருதி, இளநிலைப் பட்டப்படிப்பு படிக்கும் அனைவருக்கும்,
மொழிப்பாடங்களை, நான்கு "செமஸ்டர்"களிலும் நடத்த வேண்டும் என,
முன்னாள் தமிழ்த்துறை பேராசிரியர் கணேசன், முதல்வர் மற்றும் உயர்கல்வித்
துறை முதன்மைச் செயலர் உள்ளிட்டோருக்கு, மனு அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து, பேராசிரியர் கணேசன் கூறியதாவது:தமிழ்நாடு மாநில உயர்கல்வி
மன்றத்தின் பரிந்துரைப்படி, பொதுப் பல்கலைகள் அனைத்திலும், 2008- 09
கல்வியாண்டிலிருந்து, 4 செமஸ்டர்களிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்
பாடங்கள், இடம்பெற வேண்டும். இந்த பரிந்துரைகளை, சில பல்கலைகள்
நடைமுறைப்படுத்தாமல் உள்ளன.
தமிழகத்திலுள்ள, ஒன்பது பொது பல்கலைகளில், பாரதிதாசன், அழகப்பா, அன்னை
தெரசா ஆகியவற்றில், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் பரிந்துரை
பின்பற்றப்படுகிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், இக்கல்வியாண்டு
முதல், நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிகிறது. மதுரைப் பல்கலையில், நான்கு
பருவங்களுக்கும் மொழிப்பாடங்கள் உள்ளன.
திருவள்ளுவர் பல்கலை, பெரியார் பல்கலைகளில், இது, பாடத்திட்டக்குழுவின்
பரிசீலனையில் உள்ளது. சென்னை மற்றும் பாரதியார் பல்கலையில், இப்பரிந்துரை
பின்பற்றப்படவில்லை. அனைத்து பல்கலைகளிலும், இந்த பரிந்துரை சீராக
பின்பற்றப்படாத நிலையில், 2008-09 கல்வியாண்டு முதல், 2011-12 கல்வியாண்டு
வரை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, இளநிலைப் பட்டங்கள், எந்த
அடிப்படையில் சமமாகும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இதுதொடர்பாக, கல்லூரிக் கல்வித்துறை சார்பில், விளக்கம்
கேட்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், இளநிலை பட்டப் படிப்புகளில் மொழிப்
பாடங்கள், ஒரே முறையில், கற்பிக்கப்பட வேண்டும். அண்ணா பல்கலைகள் அனைத்தும்
ஒருங்கிணைக்கப்படுவதுபோல, கலை, அறிவியல் கல்லூரிகளில், மொழிப்பாடங்கள்
ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
இதுகுறித்து, கடந்த ஆண்டு அக்டொபர் மாதம், அரசுக்கு அனுப்பப்பட்ட
கோரிக்கை மனு, ஆரம்ப நிலையிலே பரிசீலிக்கப்பட்டிருந்தால், தற்போது, இந்த
குறையை களைந்திருக்கலாம். இந்த, 2012- 13 கல்வியாண்டிலாவது, இக்குறையைச்
சரி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
பல்கலைகளில், இதுபோன்ற குளறுபடிகள், களையப்படாத நிலையில், தமிழ் மற்றும்
ஆங்கிலப் பாடங்களில், 25 மதிப்பெண்களுக்கு, செய்முறைத் தேர்வு முறையை
அறிமுகப்படுத்த, உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.