குரூப்-4 தேர்வில், தேர்வு பெற்றுள்ள, 10 ஆயிரம் பேருக்கு, துறை
ஒதுக்கீட்டு உத்தரவு வழங்குவதற்கான கலந்தாய்வு, டி.என்.பி.எஸ்.சி.,
அலுவலகத்தில் நவம்பர் 19ம் தேதி துவங்கியது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில், குரூப்-4 நிலையில், காலியாக உள்ள, 10
ஆயிரத்து 718 இடங்களை நிரப்ப, ஜூலை 7ல், போட்டித்தேர்வு நடந்தது. இதில், 10
லட்சம் பேர் பங்கேற்றனர். இதன் முடிவு, கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
தேர்வு பெற்ற, 10 ஆயிரத்து 718 பேருக்கும், அரசுத் துறை ஒதுக்கீடு
வழங்குவதற்கான கலந்தாய்வு, தேர்வாணைய அலுவலகத்தில் துவங்கியது.
முதலில், சுருக்கெழுத்தர்-தட்டச்சர் பணிகளுக்கு, 1,179 இடங்களை
நிரப்புவதற்கான கலந்தாய்வு, நவம்பர் 19ம் தேதி துவங்கி, நவம்பர் 21ம் தேதி
வரை நடக்கிறது. தேர்வு பெற்றவர்கள், உற்சாகத்துடன், கலந்தாய்வில் பங்கு
பெற்றனர். தேர்வாணைய தலைவர் நடராஜ் தலைமையில், செயலர் விஜயகுமார்
மேற்பார்வையில், கலந்தாய்வு பணிகள் நடந்தன.
காலையில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும், பிற்பகலில், துறை ஒதுக்கீடு
ஆணை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தன. இளநிலை உதவியாளர் உள்ளிட்ட இதர
பணிகளுக்கான கலந்தாய்வு, டிச., 3ம் தேதி முதல் நடக்கிறது. குரூப்-2,
நேர்முகத் தேர்வு அல்லாத, 3,000 பணியிடங்களுக்கு, பணி ஒதுக்கீட்டு உத்தரவு
வழங்கும் கலந்தாய்வு, இம்மாதம், 22ம் தேதி முதல் நடக்கும் என்றும்,
தேர்வாணைய செயலர் விஜயகுமார் தெரிவித்தார்.