ஆந்திராவில், கல்லீரல் நோயால் அவதிப்படும், ஏழை மாணவியின்
சிகிச்சைக்கு தேவையான நிதியை திரட்ட வசதியாக, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை
கழகம், தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது.
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர், ப்ரீத்தி.
நெல்லூரில் உள்ள, என்.பி.கே.ஆர்., தொழில்நுட்ப கல்லூரியில், பி.டெக்.,
இறுதியாண்டு படிக்கிறார். இவரது தந்தை, டாக்சி டிரைவராக பணிபுரிகிறார்.
இவரது குடும்பம், மிகவும் ஏழ்மையானது. ப்ரீத்திக்கு, கல்லீரல் பாதிப்பு
இருந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்காக, பல லட்சம்
ரூபாய்க்கு மேல் செலவழித்தும் பயன் இல்லை. ‘ப்ரீத்தி, உயிர் பிழைக்க
வேண்டுமானால், அவருக்கு உடனடியாக, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய
வேண்டும். அதற்கு, 50 லட்சம் ரூபாய் செலவாகும்’ என, டாக்டர்கள் கூறினர்.
ப்ரீத்தியின் உடல் நிலை மோசமடைந்ததால், மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். அவரின் அறுவை சிகிச்சைக்கு தேவையான நிதியை
திரட்டுவதற்கு, அவருடன் கல்லூரியில் படிக்கும், சக மாணவர்கள்
திட்டமிட்டனர். அறக்கட்டளைகள் மூலமாகவும், வீடு, வீடாகச் சென்றும், நிதி
வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ப்ரீத்தி படிக்கும் கல்லூரிக்கு, தேர்வு
அறிவிக்கப்பட்டதால், நிதி வசூலிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து,
ப்ரீத்தியுடன் படித்த சக மாணவர்கள், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக
அதிகாரிகளை சந்தித்து, நிதி வசூலிக்க வசதியாக, தேர்வை தள்ளி வைக்கும்படி
கோரிக்கை விடுத்தனர்.
துவக்கத்தில், இதற்கு சம்மதிக்க தயக்கம் காட்டிய அதிகாரிகள்,
ப்ரீத்தியின் ஏழ்மை நிலையை, மாணவர்கள் எடுத்துக் கூறியதும், ஒரு
வாரத்துக்கு தேர்வை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளனர். இதனால், உற்சாகம்
அடைந்துள்ள மாணவர்கள், நிதி வசூலிக்கும் பணியை தீவிரப்
படுத்தியுஉள்ளனர்.மாணவியின் உயிரை காப்பதற்காக, பல்கலை நிர்வாகம், தேர்வை
தள்ளி வைத்துள்ளதற்கு, ஆந்திராவில் அனைத்து தரப்பினரும், பாராட்டு
தெரிவித்துள்ளனர்.