கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தகுதிதான் அடிப்படை!

ஆசிரியர் தகுதித் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டபோது, தேர்வு எழுதியவர்களில் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அப்போது தேர்வு எழுதியவர்கள் பலரும் வினாத்தாள் கடினமாக இருந்தது என்று கருத்துத் தெரிவித்ததால், மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்விலும் சுமார் 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டு முறையும் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதால் இந்தத் தேர்வு முறை தவறு என்று ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள் சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டு, தகுதித்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.

ஆனால், அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் அவர்கள் கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக இல்லை.

வினாத்தாள் கடினம் என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. 6 லட்சம் பேர் தேர்வு எழுதும்போது, வினாத்தாள் கடினமாகத்தான் இருக்க முடியும். அதற்காகத்தான் அதை "தகுதித் தேர்வு' என்று அழைக்கிறார்கள்.

இந்த அமைப்புகள் எழுப்பும் இன்னொரு கேள்வி, ஒரு தமிழாசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர் ஏன் மற்ற பாடங்களின் கேள்விக்குப் பதில் எழுத வேண்டும், ஆங்கில ஆசிரியர் பணியேற்கப்போகிறவர் ஏன் தாவரவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான். மேலும், பி.எட். பாடத்திட்டத்திலிருந்து அதிகக் கேள்விகள் இடம்பெறுகின்றன என்ற முணுமுணுப்பும் உண்டு. இதில் எந்தவித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இவர்கள் பணியாற்றப்போவது கல்லூரியில் அல்ல, பள்ளிகளில் பணியாற்றப் போகிறவர்கள். தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் 90 சதவீதம் புறநகர்ப் பகுதிகளில் இருப்பவை. பல நடுநிலைப் பள்ளிகளிலும் மேனிலைப் பள்ளிகளிலும் ஒரே ஆசிரியர் இரண்டு பாடங்களை எடுக்க வேண்டிய தேவையும் பொறுப்பும் இருக்கிறது.

மேலும், ஒரு மாணவன் ஓர் ஆசிரியரைத் தனக்குத் தெரியாத அனைத்தும் தெரிந்தவராக மதிக்கிறார். அனைத்துப் பாடங்களிலும் ஆசிரியருக்குத் தேர்ச்சி இல்லாவிட்டாலும், அந்நிலையில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு, குறைந்தபட்சம் அதற்கான சரியான விடையை எங்கே தேடலாம் என்கின்ற அறிவு படைத்தவராக ஆசிரியர் அமைய வேண்டும். இதுதானே நியாயமான எதிர்பார்ப்பாக இருக்க முடியும்?

அதைக் கருதியே, பல்வேறு பாடங்களில் இருந்தும் அடிப்படைக் கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன. இதையும்கூட தவறு என்று சொல்வார்கள் என்றால், அவர்கள் கல்லூரி விரிவுரையாளர்களாகப் பணியாற்ற முயற்சி செய்யலாமே தவிர, பள்ளிகளில் பணியாற்ற வேண்டியதில்லை.

இந்த இரண்டு தகுதித் தேர்வுகளிலும் அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது என்னவென்றால், வெற்றி பெற்றிருப்போர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுதான். அதாவது, தொடர்ந்து படித்துக்கொண்டும், தனியார் பள்ளிகளில் பாடம் நடத்திக்கொண்டும் இருப்போர் மட்டுமே இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். பட்டம் மட்டும் வாங்கிக்கொண்டு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துவிட்டு, பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எதையும் படிக்காமல் சும்மா இருந்தவர்களால் இத்தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதுதான் மிகவும் கசப்பான உண்மை.

இந்த உண்மையை ஏற்கவும், ஆன்ம பரிசோதனை நடத்தவும் முயல வேண்டிய ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள், அதற்கு மாறாக பணம் கொடுத்துதான் இவர்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்று சொல்வது தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும். அறிவால் தேர்ச்சி பெற்றவர்களை வெறும் காழ்ப்புணர்ச்சியால் இதைவிடக் கொச்சைப்படுத்தும் செயல் வேறு ஏதும் இருக்க முடியாது.

தகுதித் தேர்வுகள் மிகவும் இன்றியமையாதது என்பதும், குறிப்பாக ஆசிரியர் பணிக்கு அறிவுத்திறன் சோதனை அவசியமானது என்பதும் மேலும்மேலும் உறுதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே, தமிழக அரசு இத்தகைய அடிப்படையற்ற விமர்சனங்களுக்காக அச்சப்படாமல், தகுதித் தேர்வைத் தொடர்ந்து முறைப்படி, நடத்தவும், அதில் தேர்ச்சி பெறுவோரை மட்டுமே பணியமர்த்தவும் செய்தல் வேண்டும். அதுமட்டுமே அடுத்த தலைமுறைக்கு நல்ல ஆசிரியர்களை வழங்கும் செயலாக இருக்கும்.

மேலும், தற்போதைய ஆசிரியர்கள் எந்த அளவுக்குத் தங்கள் பாடங்களில் ஆழமும் விரிவும் கொண்ட அறிவுப்புலம் பெற்றிருக்கிறார்கள் என்பது இன்றியமையாத கேள்வி. ஒருமுறை பணியில் சேர்ந்துவிட்டால், அந்த ஆசிரியருக்குச் சம்பளம் மட்டுமே வழங்க வேண்டும் என்பது எந்த நாட்டிலும் இல்லாத ஒரு நடைமுறை. ஆகவே, ஆசிரியர்கள் அனைவருக்கும், அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை, சுய ஆய்வுத் தேர்வு ஒன்றை நடத்துவது அவசியமாகிறது.

காலத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார்களா, இவர்களுக்குத் தாங்கள் நடத்தும் பாடப்புத்தகத்தில் உள்ள விஷயங்களாகிலும் முழுமையாகத் தெரிந்திருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள இத்தகைய சுய ஆய்வுத் தேர்வு அவசியம். அந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர்களாகத் தொடர அனுமதிக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பது உறுதி. ஆனாலும், ஓர் ஆசிரியர் காலத்தால் பின்தங்கிவிட்டு, ஒரு மாணவனுக்கு எப்படி அறிவு புகட்ட முடியும்? தகுதியற்ற ஒருவருக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வழங்கிக் கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்?

ஒரு சாதாரண தொழிலாளிக்கும்கூட புதிய இயந்திரங்களில் பயிற்சி அளித்து அவரைத் தரப்படுத்துகிறார்கள். மருத்துவர்கள், பொறியாளர்கள் தங்கள் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் புத்தாக்கப் பயிற்சிகள் மூலம் வளர்த்துக்கொள்கிறார்கள். ஓர் ஆசிரியர் காலத்துக்கேற்ற அறிவுப்புலம் கொண்டிருக்கிறாரா என்பதை அறிய சுயஆய்வுத் தேர்வு நடத்துவதில் என்ன தவறு?
நன்றி - தினமணி

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Implementation of DAAS - Dispensing of Physical Salary Vouchers - submission of online Salary Bills - Letter from Director of Treasuries and Accounts Department to all DDOs and TOs, dated : 24-02-2025

ஊதியப் பட்டியலை கருவூலத்தில் ஒப்படைக்கும் நடைமுறை முடிவுக்கு வருகிறது - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநரின் கடிதம், நாள் : 24-02-202...