கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>வாழ்வில் வெற்றியடைய விரும்பினால்...

எத்தனை புற அம்சங்கள் இருந்தாலும், தனக்கான எதிர்காலத் துறையைத் தேர்ந்தெடுப்பதில், ஒரு மாணவர், தன் விருப்பம் மற்றும் உள்ளார்ந்த திறனுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் நினைத்தப்படி திருப்தியான வாழ்க்கையை வாழ முடியும். ஆனால், தனக்கான ஒரு எதிர்கால தொழில்துறையைத் தேர்ந்தெடுப்பது, ஒவ்வொரு மாணவருக்கும் பெரிய சவாலாகவே எப்போதும் திகழ்கிறது. ஏனெனில், பலரால் விரும்பப்படுவது, பலரால் பரிந்துரைக்கப்படுவது, வருமானம் அதிகம் வருவது, பல கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட துறை சார்ந்த படிப்பிற்கே முக்கியத்துவம் கொடுப்பது போன்ற நெருக்கடியான அம்சங்களைத் தாண்டி, ஒரு மாணவர், தனது விருப்பம் மற்றும் தன்னுடைய பிறவித் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு துறையை தேர்வு செய்வதென்பது சவாலான மற்றும் மனோதிடம் தேவைப்படும் ஒரு செயல்பாடாகும்.
இதுதொடர்பான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
விருப்பமே முக்கியம்
ஒருவர் தனிப்பட்ட முறையில் வாழும் சந்தோஷமான மற்றும் திருப்தியான வாழ்க்கையானது, அவரது பணி திருப்தியையே பெரிதும் சார்ந்துள்ளது. தான் செய்யும் பணியை விரும்பி மேற்கொள்ளும் ஒருவர், தனது வாழ்க்கையையும் விரும்புகிறார். நீங்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் பணியானது, வருமானம் குறைந்த ஒன்றாகவும் இருக்கலாம். வருமானம் குறைவு என்பதற்காக ஒருவரின் இயல்பார்ந்த விருப்பத்தை மாற்றிக் கொள்ளுதல் என்பது கடினம். வேண்டாத வேலையும்கூட. வருமானத்தைப் பெருக்குவதற்கு வேறு மாற்று வழிகளைக்கூட உருவாக்கிக் கொள்ளலாம். ஏனெனில், பணத்தால் மட்டுமே ஒருவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்துவிட முடியாது. எனவே, பணத்தின் அடிப்படையில் மட்டுமே, வருங்காலத் தொழிலை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், பலவிதமான உளவியல் சிக்கல்களை எதிர்கொள்வதோடு, இடையிலேயே தொழிலை மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டு, காலங்கள் வீணாகும் சூழ்நிலை ஏற்படும்.
உள்ளார்ந்த திறன்
ஒருவர் பிறப்பிலேயே, மரபுவழியில் பல உள்ளார்ந்த ஆற்றல்களைப் பெற்றிருப்பார். ஒருவருக்கு வரலாறு, தத்துவம், அரசியல் உள்ளிட்ட விஷயங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதைப் புரிந்துகொள்வதும் அவருக்கு எளிது. சிலருக்கு இலக்கியம் என்றால் உயிர். சிலருக்கு தொழில்நுட்பம் என்றாலே அலாதி விருப்பம். சிலருக்கோ, மருத்துவ ஆராய்ச்சியில் ஆர்வம். இப்படி, பலவாறாக இருக்க, இந்த சமூகம் பல சமயங்களில் அதைப் புரிந்துகொள்வதில்லை. பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் இயல்பாற்றலை அறியாமலேயே, சமூகத்தில், வருமானத்தின் பொருட்டு, பிரபலமாக இருக்கும் சில படிப்புகளில் சேரச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் (உதாரணம் - மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகள்). விருப்பமில்லாத மற்றும் உள்ளார்ந்த ஆற்றல் இல்லாத துறைகளில் ஈடுபடுபவர்கள், எதையும் சாதிக்க முடியாமல், வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்துவிட்டு போய்விடுகிறார்கள். எனவே, பெற்றோர்கள் கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டும்.
இலக்கை நிர்ணயித்தல்
லட்சியத்தை அடைய, இலக்கு நிர்ணயம் செய்வதென்பது, ஒரு மிகுந்த முக்கியத்தும் வாய்ந்த செயல்பாடாகும். சரியான இலக்கின் மூலமே, நமது கனவை நனவாக்க முடியும். உலகின் மிகப்பெரிய சாதனையாளர்கள் அனைவரும், சரியான ஒரு இலக்கை நிர்ணயம் செய்து, அதன்படி செயல்பட்டே தங்களின் லட்சியத்தை அடைந்தார்கள். இலக்கு நிர்ணயித்தல் என்பது, விரிவான செயல்திட்டம் வகுத்தலாகும். லட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகள், அதற்கான காலஅளவு, இன்னின்ன காலத்தில் இன்னின்ன முயற்சிகள், தேவைப்படும் மாற்றங்கள், சரியான நபர்களின் ஆலோசனைகள், ஏற்படும் தடைகளை களைவதற்கான வழிமுறைகள், சோர்ந்து போகாமல் இருப்பதற்கு தேவையான மனோதிடத்தை தக்கவைப்பதற்கான ஆலோசனைகளைப் பெறுதல், லட்சியத்தை அடைவதற்கான முழு காலஅளவு போன்ற அனைத்து விஷயங்கள் பற்றியும் திட்டமிட்டு முடிவெடுத்தலே இலக்கு நிர்ணயித்தலாகும். தெளிவான முறையில் இலக்கு நிர்ணயித்தப் பின்னர், தாமதமின்றி செயல்படத் தொடங்க வேண்டும்.
எதுவும் எளிதல்ல...
நீங்கள் ஒரு லட்சியத்தை நிர்ணயித்து, அதை அடைவதற்கான செயல்பாட்டில் ஈடுபடத் தொடங்குகையில், உங்களுக்கான பயணம் பெரும்பாலும் இலகுவானதாக இருக்காது. பலவிதமான தடைகள், மன உளைச்சல்கள், பலரின் எதிர்மறை கருத்துக்கள், உடலியல் உபாதைகள், திட்டமிட்ட காலத்தைவிட, அதிக காலம் செலவாதல், எதிர்பார்த்த எளிய வாய்ப்புகள் கிடைக்காமல் போதல் போன்ற எத்தனையோ தடைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் அதற்கெல்லாம் சோர்ந்துவிட்டால், நிச்சயம் நினைத்ததை அடைய முடியாது. உங்களின் நண்பர்கள் ஜாலியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் படிக்க வேண்டியதிருக்கலாம். ஆனால் அந்த ஜாலி நிரந்தரமல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எந்த லட்சியமும் உடனடியாக அடையப்பட்டதல்ல. பல நாள் முயற்சியில், பல ரணங்களுடன் அடையப்பட்டவையே. பல சாதனையாளர்களின் பேட்டிகளைப் படிக்கையில் இதனை நாம் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு துறையில் சாதனைப் புரிந்தவர்களும் தாண்டி வந்த தடைக்கற்கள் பல. பள்ளிப் படிப்பை முடிக்கவே சிரமப்பட்டவர்கள் ஐஏஎஸ் ஆனதுண்டு. அனைத்து வாய்ப்புகளும் கிடைத்தவர்கள், கோட்டை விட்டதுமுண்டு. தளராத மனவுறுதியுடன், விடாத முயற்சியை மேற்கொள்பவரே, இறுதியில் வெற்றியாளராக ஜொலிப்பார் என்பதே உலக உண்மை. இதை உணர்ந்தவருக்கு கவலையில்லை.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...