கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நுணுக்கமான உழைப்பே முக்கியம்

 


கடின உழைப்பல்ல, நுணுக்கமான உழைப்பே முக்கியம்' என்கிறது நவீன உலகம்.!!!!

ஸ்மார்ட்டா வேலை பாருங்க!

வாழ்க்கை என்பது பாரம் இழுக்கும் பாதையல்ல. சிந்தனைகளைக் கூர் தீட்டி பாரங்களையும் வரங்களாய் மாற்ற வேண்டிய பயணம்.

'ராத்திரி பகல் பார்க்காம கஷ்டப்பட்டு உழைத்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்'.

இப்படி ஒரு வாக்கியத்தை நமது வாழ்க்கையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எல்லோருமே கேட்டிருப்போம்.

ஆனால் இன்றைய உலகம் இந்த சிந்தனையை விட்டுக் கொஞ்சம் விலகியிருக்கிறது.

'கடின உழைப்பல்ல, நுணுக்கமான உழைப்பே முக்கியம்' என்கிறது நவீன உலகம்.

'ஸ்மார்ட் ஒர்க்' என இந்த நுண்ணறிவு வேலையைக் குறிப்பிடுகிறார்கள்.

வேலையில் சுட்டித்தனம், திறமை கலப்பது, வித்தியாசமாய்ச் சிந்திப்பது, புதுமையாய்ச் செயல்படுவது இவற்றையே 'ஸ்மார்ட் வேலை' என்கிறார்கள்.

ஒரே மாதிரி ஓய்வில்லாமல் இயங்கிக் கொண்டே இருக்க நாம் இயந்திரங்கள் இல்லையே.

காலையில் அலுவலகம் சென்றவுடன் ஒரே மாதிரியான வேலையை மாலை வரைச் செய்ய வேண்டுமென நினைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு போரடிக்கும்!

அதே வேலையை பல ஆண்டுகளாகச் செய்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? வேலைக்குப் போவதே ஒரு போரடிக்கும் போராட்டக் களத்துக்குள் போவது போல் இருக்கும் இல்லையா?

'திறமை இல்லாமல் வெறும் கடின உழைப்பு மட்டும் இருப்பது வெட்கக் கேடானது. திறமை இருந்து கடின உழைப்பு இல்லாத நிலையோ துயரமானது' என்கிறார் ராபர்ட் ஹால்ப்.

மனிதனுக்கு கடவுள் வெறும் உடலை மட்டும் தரவில்லை, சிந்திக்கும் மூளையையும் சேர்த்தே தந்திருக்கிறார். எனவே வெறும் கடின உழைப்பு எனும் வட்டத்தை விட்டு விலகி சிந்தனையின் நாற்றுகளை நட வேண்டியது அவசியமாகிறது. அப்படிப்பட்டவர்களே உயரிய இருக்கைகளை விரைவில் சென்றடைகிறார்கள்.

மரம் வெட்டும் போட்டி ஒன்று நடந்தது. இரண்டு பலவான்களுக்கு இடையேயான போட்டி. இருவருமே சம பலம் படைத்தவர்கள்.

ஒரு நாள் காலை முதல் மாலை வரை மரங்களை வெட்டி வீழ்த்த வேண்டும். யார் அதிக மரங்களை வெட்டுகிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள்.

போட்டி ஆரம்பமானது. ஒருவர் கடின உழைப்பாளி. ஓய்வே இல்லாமல் மரங்களை வெட்டிச் சாய்த்துக் கொண்டே இருந்தார். மற்றவரோ பதற்றமடையவில்லை. மரங்களை வெட்டினார், ஓய்வெடுத்தார், மதிய உணவு சாப்பிட்டார். மீண்டும் மரங்களை வெட்டினார். கடைசியில் அவரே வெற்றியும் பெற்றார்.

கடின உழைப்பாளிக்கு ஒரே ஆச்சரியம். 'நான் இடைவேளையே இல்லாமல் கடுமையாக உழைத்தேன். என்னோடு ஒப்பிட்டால் நீ கொஞ்சம் குறைவாகத்தான் உழைத்தாய். எப்படி முதல் பரிசு பெற்றாய்?' வியப்பாகக் கேட்டார் அவர்.

வென்றவர் சொன்னார், 'நீ ஓய்வெடுக்காமல் உழைத்தாய். உன்னுடைய கோடரியின் முனை மழுங்கிக் கொண்டே வந்தது. நான் ஓய்வெடுத்தேன். மதிய உணவு சாப்பிட்டேன், அப்போதெல்லாம் எனது கோடரியை கூர் தீட்டினேன். அதனால்தான் வென்றேன்.'

பல வேளைகளில் நாம் நம்முடைய சிந்தனைகளைக் கூர் தீட்ட மறந்து போய் விடுகிறோம். எறும்புகள் போல ஒரே பாதையில் ஒன்றன் பின் ஒன்றாய் ஓடிக் கொண்டே இருக்கிறோம். அதை விட நல்ல பாதை, எளிய பாதை இருந்தாலும் நாம் பாதை மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை. கடினமான அந்தப் பாதையில் ஓடிக் கொண்டே இருந்தால் போதும் என நினைக்கிறோம்.

ஒரு செயலை நாம் முதலில் செய்யும் போது அது நமக்குக் கடினமாக இருக்கிறது. அந்தச் செயலை மீண்டும் மீண்டும் செய்கையில் எளிதாகி விடுகிறது. பிறகு அந்தச் செயல் நமது மூளையில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. அதற்குப் பிறகு நம்மை அறியாமலேயே மூளை நம்மை அந்தச் செயலைச் செய்யப் பணிக்கிறது.

அதனால்தான் பல வேளைகளில் பழக்கமான வழியை விட்டு வேறு வழிக்குச் செல்ல மிகுந்த தயக்கம் எழுகிறது என்கின்றனர் உளவியலார்கள்.

ஸ்மார்ட் வேலை என்பது வழக்கமான வழியை விட்டு புதுமையான வழிக்குத் தாவுவது. ராத்திரி பகலாகக் கண் விழித்துப் படிப்பவர்கள் சில வேளை தோல்வியைச் சந்திப்பதுண்டு. ஆனால் திட்டமிட்டு, குறிப்பெடுத்து, முக்கியமானவற்றை வரிசைப்படுத்திப் படிப்பவர்கள் குறைந்த உழைப்பில் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் உண்டு.

ஒரு சூழலை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது உங்கள் வெற்றியும், தோல்வியும். இந்தச் சூழலுக்கு இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பதையே மனம் எப்போதும் சொல்லும். அதைத் தாண்டிய வழிகளைச் சிந்திக்க மூளையைப் பழக்கப்படுத்துபவர்களே அறிவாளிகளாக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஒரு பற்பசை நிறுவனம் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. எல்லோரும் விற்பனைக்காக ஓடி ஓடி உழைத்தார்கள். ஏன் பற்பசை விற்பனையாகவில்லை என நிறுவனம் யோசித்தது. வாங்கும் பற்பசை மக்களுக்கு ரொம்ப நாளைக்குப் போதுமானதாய் இருப்பதைக் கண்டு பிடித்தது. அதற்கான தீர்வு என்ன என எல்லோரும் யோசித்துத் தளர்ந்தார்கள்.

ஒருவர் சொன்னார், 'இனிமேல் பற்பசையின் வாய்ப் பகுதியைப் பெரிதாக வைப்போம். மக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். விரைவில் பற்பசை காலியாகும். வாங்குவார்கள்.'

அந்த ஸ்மார்ட் சிந்தனை, நிறுவனத்தை மீண்டும் உயரத்தில் கொண்டு போய் வைத்தது.

யார் வேண்டுமானாலும் ஸ்மார்ட் வேலைக்காரர் ஆக முடியும். அதற்கு சில அடிப்படை விஷயங்களை மனதில் கொண்டிருந்தாலே போதும்.

முதலாவது, ஒரு வேலையில் வலது காலை வைக்கும் முன் அந்தச் செயலைச் செய்வதற்குத் தேவையான அனைத்து விஷயங்களும் உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அது பொருளாகவும் இருக்கலாம், தகவலாகவும் இருக்கலாம், அறிவாகவும் இருக்கலாம்.

என்ன செய்யப் போகிறோம் என்பதை வரிசைப்படுத்துங்கள். அப்படித் திட்டமிடும் போது மாற்று வழிகளையும் மனதில் கொள்ளுங்கள். அது உங்களை புதிய செயல்பாடுகளை நோக்கிப் பயணிக்க வைக்கும். ஒரு திட்டத்தை முடிவு செய்த பிறகு அதில் நிலைத்திருங்கள்.

குறிப்பாக, பல வேலைகளைச் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால் எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாகச் செய்வது கற்கால வழிமுறை. ஒரே நேரத்தில் பல வேலைகளை ஒன்றை ஒன்று பாதிக்காத வகையில் செய்ய முடியுமா என்பதை திட்டமிட்டுச் செய்வது ஸ்மார்ட் முறை.

மிக முக்கியமான வேலைகளை, அதிக பயனுள்ள வேலைகளை, அதிக மரியாதை தரும் வேலைகளை முதலில் செய்யத் துவங்குங்கள். அது அடுத்தடுத்த எளிய வேலைகளை சுலபமாய்ச் செய்ய உங்களைப் பக்குவப்படுத்தும்.

ஒரு வேலையை இன்னொரு நபருக்குக் கொடுக்க வேண்டுமென வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒன்று, சரியான நபரிடம் அதைக் கொடுப்பது. இன்னொன்று, சரியான நேரத்தில் அதைக் கொடுப்பது. இதில் ஒன்று தவறினாலும் தேவையற்ற மன அழுத்தத்திற்கு அது உங்களை இட்டுச் செல்லலாம்.

ஸ்மார்ட் வேலை மூன்று முக்கியமான குணாதிசயங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

முதலாவது நீங்கள் செய்ய வேண்டிய வேலையை குறைந்த உழைப்பில் செய்ய முடிவதாக இருக்க வேண்டும். இரண்டாவது குறைந்த செலவில் செய்ய முடிவதாக இருக்க வேண்டும். மூன்றாவதாக சரியான நேரத்தில் முடிக்க முடிவதாக இருக்க வேண்டும்.

இந்த மும்மூர்த்திகளை மனதில் கொண்டே எல்லா செயல்களையும் திட்டமிடுங்கள்.

ஸ்மார்ட் வேலைக்காரர்களிடம் தன்னம்பிக்கையும், 'ரிஸ்க்' எடுக்கத் தயங்காத மனமும் இருக்கும் என்கின்றனர் வல்லுனர்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்கள் செய்யும் வேலையை அப்படியே செய்து கொண்டே இருப்பார்கள். தோற்று விடுவோமோ, தவறாகிப் போய்விடுமோ எனும் பயமே அதன் முக்கியக் காரணம். எனவே, சில 'ரிஸ்க்'களை எடுக்கத் தயங்காதீர்கள்.

ஒரு செயலைச் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதைப் போல வசீகரிக்கும் விதமாய் அதை முடிப்பது மிக மிக முக்கியம். சரியான வகையில் உங்கள் வேலையை நீங்கள் விளம்பரப்படுத்திக் கொள்ள அது உங்களுக்கு ரொம்பவே கை கொடுக்கும்.

இன்னொரு மிக முக்கியமான விஷயம், கற்றுக் கொள்ளத் தயங்காத மனம். நீங்கள் செய்வது போன்ற அதே வேலையை உங்களைச் சுற்றி பலரும் செய்து கொண்டிருப்பார்கள். அவர்களிடம் ஏதேனும் நல்ல 'டெக்னிக்' இருந்தால் அதை உள்வாங்கிக் கொள்ளத் தயங்க வேண்டாம். அடுத்தவருடைய ஐடியாவை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்னும் வறட்டுப் பிடிவாதங்கள் அர்த்தமற்றவை.

திறமையான உழைப்பாளிகளிடம், கடின உழைப்பும் கை கூடும்போது பயன் பல மடங்கு அதிகமாகி விடுகிறது. ஸ்மார்ட் வேலை என்பது சோம்பேறித்தனத்துக்கான முன்னுரையல்ல. அது கடின உழைப்புடன் கலக்கும் போது உங்களுக்கு வங்கக் கடலும் வணக்கம் சொல்லும், வானமும் வந்து வாழ்த்துப் பாடும்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...