கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தன்மானம் மிக்க பட்டுக்கோட்டையார்

 
“குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ,
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா 
எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா 
விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா 
சிலர்குணமும் இதுபோல் குறுகிப்போகும் கிறுக்கு உலகமடா “.

இன்று பட்டுக்கோட்டை போல மக்களுக்கான கருத்துக்களை விதைக்கும் பாடலாசிரியரைத் தேடவேண்டியுள்ளது.

பாட்டுடைக் கவிஞன் பாரதிக்குப் பிறகு, தமிழ்க்கவிதையில் எளிமையும், இனிமையும், புதுமையும் புகுந்து நவீன கவிதை பிறந்தது. தமிழ்க் கவிதை மரபில் உடைப்பு ஏற்பட்டது. கவிதை புதிய பரிமாணத்தில், புதிய களங்களில், தளங்களில் பயணித்தது. இவர்களை தமிழ்உலகம் பாரதி பரம்பரையினர் என்று பெருமைப்படுத்துகிறது. இந்தப் பரம்பரையில் வந்த பாரதிதாசனும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் பாராட்டப்பட வேண்டியவர்கள். பாவேந்தர் பாரதிதாசனை நேரிலே பார்க்காமலே அவரை தனது மானசீக குருவாக ஏற்று, பாரதிதாசனே வியந்து பாராட்டும் கவிஞராகத் திகழ்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடுவது அவருடைய சிறப்பு . இப்போது அவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. 29 ஆண்டுகளே வாழ்ந்தாலும் தான் எழுதிய பாடல்களால் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் 'பாட்டுக்கோட்டை'யாகவே அறியப்பட்டவர் பட்டுக்கோட்டையார். திரையுலகப் பாடல்களில் பட்டிருந்த கறையை நீக்கி, மக்கள் நெஞ்சம் நிறைவுறவும்,வியத்தகு செந்தமிழில் எளிமையாக அருமையான கருத்துக்களும், முற்போக்குக் கருத்துக்களும் கொண்ட பாடல்கள் எழுதி குறுகிய காலத்தில் புகழ் அடைந்தவர் பட்டுக்கோட்டையார். கிட்டத்தட்ட 189 படங்களில் பாட்டு எழுதிய‌வர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

இடதுசாரி இயக்கத்தின் இடையறா ஈர்ப்பாளி..!

இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார். நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர் என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.
பட்டுக்கோட்டையின் பன்மமுக பரிமாணங்கள்..!

விவசாயி
மாடுமேய்ப்பவர்
மாட்டு வியாபாரி
மாம்பழ வியாபாரி
இட்லி வியாபாரி
முறுக்கு வியாபாரி
தேங்காய் வியாபாரி
கீற்று வியாபாரி
மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
உப்பளத் தொழிலாளி
மிஷின் டிரைவர்
தண்ணீர் வண்டிக்காரர்
அரசியல்வாதி
பாடகர்
நடிகர்
நடனக்காரர்
கவிஞர்

கவி பாடும் விவசாய குடும்பம்..!

தமிழ்நாட்டின் தஞ்சை மண்ணில், பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் குக்கிராமத்தில், அருணாச்சலனார் – விசாலாட்சியின் இளைய மகனாக 13.04.1930-ல் பிறந்தார். அது ஓர் எளிய விவசாய குடும்பம். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். 'முசுகுந்த நாட்டு வழி நடைக்கும்பி' எனும் நூலையும் அவர் தந்தை இயற்றியிருக்கிறார். தந்தை கவிஞராக இருந்ததால், மகன்களான கணபதி சுந்தரமும், கல்யாண சுந்தரமும் கவிபாடும் திறத்தை வளர்த்துக் கொண்டனர்.

மக்கள் கவிஞனின் மகத்துவம்..!

தனது 19 வது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர் பட்டுக்கோட்டையார். இவருடைய பாடல்கள் கிராமிய மணம் கம்ழுபவை. பாடல்களில் உணர்ச்சிகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைக் கனவுகளையும், ஆவேசத்தையும், அற்புதப் பாடல்களாக வடித்தார். இவர் இயற்றிய கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டது.

1955ஆம் ஆண்டு 'படித்த பெண்’ திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார். உழைப்பாளி மக்களும், அறிவால் உழைக்கும் மக்களும் கூட தங்களுக்காக திரையுலகிலே குரல் கொடுத்து வாழ்வை மேம்படுத்த முன்னின்ற பாடலாசிரியராக‌ இவரைக் கண்டனர்.

பட்டுக்கோட்டை பாடுவதிலும் வல்லவர். நாடகம், திரைப்படம் பார்ப்பதிலும் ஆர்வம் மிகுந்தவர். கற்பனை வளமும் இயற்கை ரசனையும் நிறைந்தவர். இதுவே இவரை இயல்பாகவே கவிதை புனைய வைத்தது. 1946இல் தனது 15வயதில் ஏற்பட்ட அனுபவத்தை அவரே கூறுகிறார்.

தன்மானம் மிக்க பட்டுக்கோட்டையார்..!

திரை உலகில் நுழைய பட்டுக்கோட்டையார் சென்னைக்கு வந்து ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெருவில் 10-ம் நெம்பர் வீட்டில் ஒரு அறையை 10 ரூபாய்க்கு வாடகைக்குப் பிடித்தார். சிறிய அறை. அதில் அவரது நண்பர்களான ஓவியர் கே.என். ராமச்சந்திரனும், நடிகர் ஓ.ஏ.கே.தேவரும் தங்கி இருந்தனர். பட்டுக்கோட்டை துவக்க காலத்தில் பணத்துக்கு கஷ்டப்பட்டாலும் துணிச்சல்காரராகவும் தைரியசாலியாகவும் இருந்தார். சினிமா கம்பெனி ஒன்றுக்கு அவர் பாட்டெழுதிக் கொடுத்தார். பணம் வந்து சேரவில்லை. பணத்தைக் கேட்க பட அதிபரிடம் சென்றால், 'பணம் இன்னிக்கு இல்லே! நாளைக்கு வந்து பாருங்கோ' என்று பதில். ஆனால் கல்யாணசுந்தரமோ பணம் இல்லாமல் நகருவதில்லை என்ற உறுதியுடன் நின்றார். 'நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்' என்ற பட அதிபர் வீட்டிற்குள் போய்விட்டார்.

உடனே கல்யாணசுந்தரம் சட்டைப்பையில் இருந்த ஒரு தாளையும், பேனாவையும் எடுத்து சில வரிகள் எழுதி, மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். கொஞ்ச நேரத்தில் படக்கம்பெனியைச் சேர்ந்த ஆள் பணத்துடன் அலறியடித்துக் கொண்டு கல்யாணசுந்தரத்திடம் வந்து பணத்தைக் கொடுத்தார். அப்படி என்னதான் அந்த சீட்டில் எழுதினார் பட்டுக்கோட்டை? இதோ 'தாயால் வளர்ந்தேன்; தமிழால் அறிவு பெற்றேன்; நாயே! நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்; நீ யார் என்னை நில் என்று சொல்ல?' இதைப் படித்துப் பார்த்த பட அதிபர் அசந்து போனார். பணம் வீடு தேடி பறந்து வந்தது.
மனித நேயம் மிக்க பட்டுக்கோட்டையார்..!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அற்புதமான கவியாற்றலில் மனதைப் பறிகொடுத்தவர் கவியரசு கண்ணதாசன். அதுபோலவே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் கண்ணதாசனிடம் மிகுந்த அன்பு கொண்டவர். புகழின் உச்சியில் இருந்து, ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் படங்களுக்கு பாடல் எழுதி வந்த பட்டுக்கோட்டையை, கண்ணதாசன் நேரில் சந்தித்து, ஒரு பாடல் எழுதித் தருமாறு கேட்டதிற்கு , அவர் மிகுந்த பற்றுதலோடு பாடல் எழுதித்தர இசைந்ததை கண்ணதாசன் ஒரு சமயம் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார். மனித நேயமும், துணிச்சலும், தன்னம்பிக்கையும் உள்ள மாமனிதர் பட்டுக்கோட்டையார். அந்த காலத்தில் சினிமா பத்திரிகை ஆசிரியர் ஒருவர் திரைப்பட கவிஞர்களை ஏளனமாகவும், கேலியாகவும் விமர்சித்தார். கவிஞர் கண்ணதாசனும் அதற்குப் பலியானார். ஒரு விழாவில் பத்திரிகை ஆசிரியரை பட்டுக்கோட்டையார் சந்தித்தபோது, க்ண்ணதாசனைக் குறிப்பிட்டு, "என்னடா கவிஞர்கள் என்றால் உனக்கு ஏளனமா? கருவாட்டு வியாபாரம் செய்கிற உனக்கு கவிதையைப் பற்றி என்னடா தெரியும்?" என்று கேட்டு உதைக்கப் போனார்.

எளிமையான பட்டுக்கோட்டை..!

"உங்க வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில எழுதணும்" - பாட்டாளிக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணந்தரத்திடம் ஒரு நிருபர் கேட்டாராம். பட்டுக்கோட்டையார் அந்த நிருபரை ராயப்பேட்டையிலிருந்த தம் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு தெருவில் சிறிது தூரம் நடந்திருக்கிறார். பிறகு இருவரும் ரிக்ஷாவில் ஏறி மௌண்ட் ரோட்டுக்கு வந்திருக்கிறார்கள். அப்புறம் பஸ்ஸைப் பிடித்து கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் இறங்கி இருக்கின்றனர். கேட்டைக் கடந்து ஒரு டாக்ஸி பிடித்து வடபழநியில் தம் பாடல் பதிவான ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் போய் இறங்கினார்கள். கூடவே வந்த நிருபர், "கவிஞரே, வாழ்க்கை வரலாறு" என்று நினைவூட்டி இருக்கிறார். உடனே பட்டுக்கோட்டையார், "முதலில் நடையாய் நடந்தேன், ரிக்ஷாவில் போனேன், பிறகு பஸ்ஸில் போக நேர்ந்தது. இப்போது டாக்ஸியில் போகிறேன். இதுதான் என் வாழ்க்கை. இதுல எங்கே இருக்குது வரலாறு?" என்று சிரித்துக்கொண்டே போய்விட்டாராம். இந்த எளிமைதான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

வேடிக்கையும், விவேகமும் மிக்க கவிஞர்..!

ஒரு சமயம் சென்னையில் நகரப் பேருந்தில் தான் பயணம் செய்து கொண்டிருந்தபோது, வழியில் ஒரு இடத்தில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு அங்கே பழுது பார்க்கும் வேலை நடப்பதை அறிவிக்க வாகனங்களுக்கு எச்சரிக்கையாக சிவப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே வந்த பட்டுக்கோட்டையார் தன் அருகிலே இருந்த நண்பரிடம், 'எங்கே எல்லாம் பள்ளம் விழுந்து அது மேடாக நிரப்பப்பட வேண்டுமோ, அங்கே எல்லாம் சிவப்பு கொடி பறந்துதான் அந்த பணிகள் நடக்க வேண்டும் போலும்' என்றார்.

ஒரு சமயம் பொதுவுடமை இயக்கத்திற்காக நாடகம் நடத்த சென்றிருந்த பட்டுக்கோட்டையார் நாடகத்திற்கு சரியான வசூல் இல்லாமல் தங்கள் குழுவினருடன் பசி, பட்டினியுமாக சென்னை திரும்ப பேருந்தில் ஏறினார். பேருந்தில் அமர்ந்திருந்த தங்கள் குழுவினர் அனைவரும் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள். அவர்கள் சோகத்தை மாற்றி அவர்களுக்கு குதூகலத்தைத் தர பட்டுக்கோட்டையார் அங்கேயே ஒரு பாடல் எழுதி, அதனை சத்தமாக பாட ஆரம்பித்தார். அந்தப் பாடலை கேட்டதும் நாடக குழுவினருக்கு பசி பறந்துவிட்டது. அனைவரும் குதூகலமாக கைகளைத் தட்டி பாட ஆரம்பித்தார்கள்.
கருத்தாழமும் அறிவுக்கூர்மையும் சமூகசமத்துவம் பற்றிய வேட்கையும் விடுதலை உணர்வும் ஆத்மநேயத் துடிப்பும், இயற்கை மனிதர்கள் மீதான நேசிப்பும் என விரிவு கொண்டதாகவே பட்டுக்கோட்டையாரினது கவிதை வெளி இருந்தது. அவரது திறமைக்கும் ஆற்றலுக்கும் அவரின் ஆயுள் மிகக் குறுகியது. 29 ஆண்டுகள் மட்டுமே..!ஆனால் அவர் விட்டுச் சென்றுள்ள தடம் ஆழமானது. 1959-ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கும், கௌரவாம்பாளுக்கும், குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) பட்டுக்கோட்டை அகால மரணம் அடைந்தார்.

பட்டுக்கோட்டை பற்றிய ஆவணப்படம்...!

பட்டுக்கோட்டையாரைப் பற்றி ஆவணப்படம் எடுத்திருக்கிறார், அம்பத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன். இதில் பட்டுக்கோட்டையா‌ரின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது கவிதை உலகம், இடதுசா‌ரி ஈடுபாடு, வறுமை, திரை அனுபவங்கள் அனைத்தும் அவருடன் நெருக்கமானவர்ளுடனான பேட்டிகளின் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டையா‌ரின் மனைவி கௌரவாம்பாள், அவரது பால்ய நண்பர் சுப்ரமணியம், தியாகி மாயாண்டி பாரதி, எம்.எஸ்.விஸ்வநாதன் உள்பட கவிஞருக்கு நெருக்கமானவர்கள் அனைவ‌ரின் பேட்டிகளும் இந்த ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், கவிஞ‌ரின் முக்கியமான 12 திரைப்பாடல்களின் காட்சியும், அவரது அ‌ரிய புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது ஆவணப் படத்தின் தரத்தை உயர்த்துகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings

  01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...