கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>போர்க்கள புகைப்படக்கலைஞர் ராபர்ட் கபே...

1938ம் ஆண்டு பிக்சர் போஸ்ட் என்ற உலகப்புகழ் பெற்ற பத்திரிகை பின் வருமாறு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர் ராபர்ட் கபே எடுத்த வியட்நாம் போர்க்களகாட்சிகள் நாளை முதல் பிரசுரமாகிறது என்பதுதான் அந்த அறிவிப்பு. ஒரு புகைப்படக்கலைஞருக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுத்து வெளியான இந்த அறிவிப்பு, யார் அந்த புகைப்படக்கலைஞன் என்பதை அறிந்துகொள்ளும் ஆவலை அவரை அறியாதவர்களுக்கு ஏற்படுத்தியது.
யார் அந்த ராபர்ட் கபே; வாழ்வையும், சாவையும் போர்க்களமாக்கிக்கொண்ட புகைப்படக் கலைஞர். உலகை உலுக்கிய போர்ப்புகைப்படங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலில் இருப்பவர். நாற்பது வயதில் மரணத்தை தொட்டவர். அந்த நாற்பதாவது வயதிலும் கேமிராவுடன் போர்களத்தில் நின்றவர். இதனால் உலகம் முழுவதும் உள்ள புகைப்பட ஆர்வலர்களின் மனதை வென்றவர்.

ஹங்கேரியில் பிறந்த இவரது இயற்பெயர் என்ட்ரி ப்ரைடுமேன். பட்டப்படிப்பு முடிப்பதற்கு முன்பே எழுத்தாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் சந்தர்ப்பம் இவரை புகைப்படக் கலைஞராக்கியது. எழுத்தில் வார்க்க நினைத்த உணர்வுகளை புகைப்படங்களில் கொண்டுவர முடிவு செய்தார்.புகைப்படக்கலைக்கு தீவிரமானதொரு முகத்தை தருவது போர் புகைப்படங்களே என்பதை உணர்ந்து போர் புகைப்படங்களை எடுக்க துணிந்தார். போர் வீரர்களுக்கு இணையான வீரமும், துணிச்சசலும், சாகசமும் இருந்தால் மட்டுமே போர்க்கள புகைப்பட கலைஞனாக இருப்பது சாத்தியம். இதெல்லாம் கூடுதலாகவே கொண்டிருந்த என்ட்ரி ப்ரைடுமேன், ராபர்ட் கபே என்ற புனைப்பெயருடன் போர்ப்படங்கள் எடுக்க ஆரம்பித்தார்.

போர்க்கள புகைப்படங்கள் என்றாலே வீரர்கள் அணிவகுப்பு, பீரங்கிகளின் முன்னேற்றம், குண்டு துளைத்த கட்டிடங்கள், பிணக்குவியல்தான் காட்சி படுத்தப்படும். அந்த மாதிரியான சூழலில் ஸ்பானிஷ் போரின் போது ஸ்பானிஷ் வீரர் ஒருவர் குண்டடிபட்டு சாய்ந்து விழும் படம் ஓன்றை ராபர்ட் கபே எடுத்தார். சாவின் எஞ்சியிருந்த கடைசி நொடியினை பதிவு செய்த அந்த படம் வு என்ற பிரெஞ்சு பத்திரிகையில் முதலில் வெளிவந்தது. அப்போது கூட அந்த படம் அதிகம் பேசப்படவில்லை. ஆனால் அதற்கு பிறகு அந்த படத்தை லைப் பத்திரிகை உணர்ச்சிகரமான குறிப்புகளுடன் சரியும் போர்வீரன் என்று தலைப்பிட்டு பெரிதாக வெளியிட்டதும் உலகமே அதிர்ச்சிக்குள்ளாகியது. உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகள் தத்தம் கண்ணோட்டத்துடன் அந்த படத்தை மறுபிரசுரம் செய்தன.

இதன் பிறகு ராபர்ட் கபேயின் பெயர் உச்சத்திற்கு சென்றது. இவரை ஒப்பந்தம் செய்து போர்க்களத்திற்கு புகைப்படம் எடுக்க அனுப்புவதற்கு புகழ் பெற்ற செய்தி ஸ்தாபனங்கள் போட்டியிட்டன. அவரும் இரண்டாம் உலகப்போர், ஜப்பானியப் போர், அரபு- இஸ்ரேல் உள்ளிட்ட ஐந்து போர்களங்களில் புகைப்படக்கலைஞராக பணியாற்றி ஆயிரக்கணக்கான சாகவரம் பெற்ற படங்களை பதிவு செய்தார். இவர் போர்க்களத்தில் பெற்றதைவிட இழந்தது அதிகம். தான் உயிருக்கு உயிராய் காதலித்த ஹெரா டேராவையும் போர்க்களத்திற்கு கூட்டிச் சென்று காதலையும், புகைப்படக்கலையும் ஒரு சேரக் கற்றுக் கொடுத்தார். இரண்டிலுமே பிரமாதமாக பரிணமிக்கும் நேரத்தில் குண்டுக்கு பலியாகி காதலி டேரா அநியாயமாக செத்துப்போனார்.

ரொம்பவே மனது பாதிக்கப்பட்டாலும் விரைவில் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட ராபர்ட் கபே தனது நண்பர் துணையுடன் மேக்னம் போட்டோஸ் என்ற ப்ரீலென்ஸ் புகைப்பட அமைப்பை ஏற்படுத்தினார். இன்றைக்கும் உலகம் முழுவதும் உள்ள இளைய தலைமுறை புகைப்படக்கலைஞர்களின் வாழ்விற்கு, வளர்ச்சிக்கு அக்கறையுடன் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் நிறுவனம்தான் மேக்னம் போட்டோஸ் நிறுவனம்.

ஜார்ஜ் ஆக்ஸல், எர்னஸ்ட் ஹெமிங்வே போன்ற பிரபல எழுத்தாளர்களுடனும், நோபல் பரிசு பெற்ற ஜான் ஸ்டெப்பெக்கருடனும் இணைந்து போர்க்களங்களில் பணியாற்றினார். இவர்களின் எழுத்தும், வர்ணனைகளும் ராபர்ட் கபேயின் படங்களுக்கு மிகவும் உணர்ச்சியூட்டி மிகுந்த உயிரோட்டத்தை உண்டாக்கியது.

பிரபல டைம் பத்திரிகைக்காக இந்தோசீனா போரை படமெடுக்க களமிறங்கியவர், 1954ம் வருடம் மே மாதம் 25 ம்தேதி ராணுவ வீரர்களுக்கு முன்பாக வேகமாக ஒடிச்சென்று படமெடுக்கும் போது கண்ணிவெடியில் சிக்கி தூக்கியெறியப்பட்டார். அலறியடித்து அனைவரும் ஒடிச்சென்று பார்த்த போது அவரது கால்கள் சிதறி சி்னாபின்னமாகியிருந்தது. மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஒடினார்கள். ஆனால் அங்கே அனைவரது கண்முன்னாலும் அவரது உயிர் கொஞ்சம், கொஞ்சமாக பிரிந்தது. கடைசிவரை பிரியாமல் இருந்தது அவரது கையில் இருந்த கேமிரா மட்டுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - 2329 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு & விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள்...

  மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - 2329 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு & விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள்... >>> விண்ணப்பதாரர்கள...