கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இந்தியாவின் தேசிய நீர் விலங்கு!

 
கடலில் துள்ளி விளையாடும் டால்பின்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சில பேர் பார்த்தும் கூட இருப்பீர்கள். ராமேஸ்வரத்துக்கு அருகிலிருக்கும் குருசடை தீவுக்கு அருகாக டால்பின்களை நிறைய காண்பதாக மீனவர்கள் சொல்கிறார்கள். . ஏனெனில் மனிதனுக்குப் பிறகு உயிரினங்களில் அதிக பகுத்தறிவோடு வாழும் விலங்கு டால்பின் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். நாய்கள், யானைகள் போன்றே மனிதனுக்கு இணக்கமான நீர்வாழ் உயிரினம் இது.

நம் நாட்டின் தேசிய நீர் விலங்காக அறிவிக்கப்பட்டிருப்பது கடலில் வாழும் டால்பின்கள் அல்ல. நதிநீரில் வாழும் டால்பின்கள். டால்பின்கள் நதிகளிலும் வாழும் ஓர் உயிரினம். இவை கடல் டால்பின்களை ஒப்பிடுகையில் உருவம், அளவு மற்றும் குணத்தில் நிரம்பவே மாறுபடுகிறது.

நதிநீர் மாசுபடுதல் மற்றும் மனித வேட்டைகளின் காரணமாக இந்த உயிரினம் அருகிக் கொண்டே வருகிறது. இந்த வகை டால்பின்களுக்கு பார்வைக் குறைபாடு உண்டு. சிலவற்றுக்கு சுத்தமாக கண்ணே தெரியாது. எனவே ஆபத்து வருவதை அறியாமல் எங்கோ போய் முட்டிக்கொண்டு மரணிக்கின்றன. குறிப்பாக மனிதர்கள் பயன்படுத்தும் படகுகளிலும், மீன்வலைகளிலும் மாட்டிக் கொண்டு உயிரிழக்கின்றன.

இந்தியாவில் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய வற்றாத நதிகளில் இப்போது நூற்றுக்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே டால்பின்கள் வாழ்கின்றன. 1993ல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் கங்கையில் மட்டும் அறுநூறும், பிரம்மபுத்ராவில் மட்டும் நானூறும் இருந்தன. கங்கையில் வாழும் டால்பின்கள் ‘சூசு’ (Susu) எனவும், சிந்துவில் வாழும் டால்பின்கள் ‘புலான்’ (Bhulan) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்திய நதிநீர் டால்பின்கள் பொதுவாக பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில், நீண்ட மூக்கோடு, பெரிய தலையோடு காணப்படும். அதிகபட்சமாக எட்டு அடி நீளம். சராசரியாக நூறு கிலோ எடை. மேல் தாடையிலும், கீழ் தாடையிலும் மிகக்கூர்மையான தலா இருபத்தெட்டு பற்கள் உண்டு. இருபுறமும் அகலமான துடுப்பு போன்ற இறக்கைகள் உண்டு. திமிங்கலத்தைப் போலவே இவையும் பாலூட்டி இனம் என்பதால் நுரையீரல் மூலமாகவே சுவாசிக்கிறது. முப்பது முதல் ஐம்பது நொடிகளுக்கு ஒருமுறை நீர்மட்டத்துக்கு மேலே வந்து சுவாசித்துவிட்டு செல்லும். இவற்றின் கர்ப்பக்காலம் ஒன்பது மாதம். புதியதாக பிறக்கும் டால்பின் குட்டிகள் 65 செ.மீ நீளம் இருக்கும். குட்டியாக இருக்கும்போது தாய்ப்பாலும், வளர்ந்த பிறகு சிறுமீன்கள், இறால் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளும். நதிநீர் டால்பின்கள் சராசரியாக முப்பத்தைந்து ஆண்டுகள் உயிர்வாழும். பார்வைக் குறைபாடு இவைகளுக்கு இருப்பதால் கடல் டால்பின்களைப் போல பயிற்சியளித்து, மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது. கடல் டால்பின்கள் அமெரிக்க ராணுவத்தில் கூட உளவுப் பணியாற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லா டால்பின்களுக்குமே ஒலியலைகளை (Sonar sense) கிரகித்துக் கொள்ளக்கூடிய தன்மை உண்டு. நீரில் வாழும் பாலூட்டிகளில் டால்பின்கள் மட்டுமே இந்த சிறப்பினைப் பெற்றிருக்கின்றன. ஒலியலைகளை உணர்வதின் மூலமாகவே இவை இரை தேடுகின்றன. டால்பின்களால் 2,00,000 ஹெர்ட்ஸ் அளவுக்கான அல்ட்ரா சோனிக் ஒலியலைகளை ஏற்படுத்த முடியும் (மனிதர்களது காது 18,000 ஹெர்ட்ஸ் அளவுக்கே கேட்கும் சக்தி கொண்டது). பார்வைக் குறைபாட்டை ஒலிகள் மூலமாகவே டால்பின்கள் தவிர்க்கின்றன.

சீனநதி டால்பினான ‘பைஜி’ என்ற உயிரினம் அழிந்துவிட்டதாகவே கூறப்படுகிறது. கடைசியாக ‘பைஜி’யை 2004ஆம் ஆண்டுதான் பார்க்க முடிந்ததாம்.

உலகின் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக இருப்பதால், இவற்றைக் காக்கும் முகமாக ‘தேசிய நீர் விலங்காக’ மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையின் முக்கியத்துவத்தை பிரதமரின் அமைச்சரவை ஏற்றுக்கொண்டதின் அடிப்படையில் டால்பின் அதிகாரப்பூர்வமாக ‘இந்தியாவின் தேசிய நீர் விலங்காக’ மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம்ரமேஷால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனி மீதமிருக்கும் டால்பின்களை காக்கவும், அவை இனப்பெருக்கம் செய்யவும் இனி திட்டங்கள் தீட்டப்படும்.

இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972ன் படி மாமிசத்துக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ இந்த டால்பின்களை வேட்டையாடும் பட்சத்தில், வேட்டையாடுபவர்கள் மீது சட்டம் பாயும். பெரும்பாலும் மருத்துவத்துக்கு உதவும் மீன் எண்ணெய்கள் தயாரிக்கவே இவை வேட்டையாடப் படுகின்றன. வேட்டையாடுபவர்களுக்கு ஒன்று முதல் ஆறு வருடங்கள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...