கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இன்று உலக புற்றுநோய் தினம்

உயிர்க்கொல்லி நோய்களில் முதன்மையானது கேன்சர் . இதனால் ஏற்படும் பாதிப்புகள், அதன் சிகிச்சை முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பிப்., 4ம் தேதி உலக கேன்சர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நுரையீரல், மார்பகம், தோல், வயிறு, நாக்கு, தொண்டை கேன்சர் என பல வகைகள் உள்ளன. கேன்சர், உடலின் ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லுக்கு பரவுகிறது. இதை கட்டுப்படுத்த முடியாதாதல், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. .
சிகிச்சை முறை:
கேன்சரின் வகை, அதன் நிலை, வயது, உடல்நிலை போன்றவற்றை பொறுத்து சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ரேடியேஷன், கீமியோதெரபி, இம்மினோ தெரபி, ஹார்மோன் தெரபி, ஜென் தெரபி உள்ளிட்ட சிகிச்கைள் மேற்கொள்ளப்படுகின்றன.கேன்சரால் ஆண்டுதோறும் 76 லட்சம் பேர் இறக்கின்றனர். இது உலகில், ஆண்டுதோறும் ஏற்படும் உயிரிழப்பில் 13 சதவீதம். கேன்சரால் இறப்பவர்களில் 70 சதவீதம் பேர், ஏழை மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. துவக்கத்திலேயே முறையான சிகிச்சை மேறகொண்டால், 40 சதவீதத்தை தடுக்க முடியும். இதில் மார்பக கேன்சர், குடல் மற்றும் தொண்டை கேன்சர் ஆகியவையும் அடங்கும். அனைத்து நாடுகளும் கேன்சரை கட்டுப்படுத்துவற்கு 4 முறைகளை கடைபிடிக்க வேண்டும். முன்னரே தடுப்பது, ஆரம்பக்கட்டத்திலயே தடுப்பது, பரிசோதனை மற்றும் சிகிச்சை, நோய் தணிப்பு ஆகியவை மூலம் கேன்சரை வராமல் தடுக்கவும் முடியும்.

ஏன் புற்றுநோய்:கேன்சருக்கு முதல் எதிரியே புகையிலை தான். வாய் மற்றும் தொண்டை கேன்சர் ஏற்பட இதுவே காரணம். இந்தியாவில், புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. என்னதான், சிகரெட் அட்டையில் எச்சரிக்கை படம் ஒட்டப்பட்டிருந்தாலும், அது யாரையும் திருத்துவதாக தெரியவில்லை. பல இளைஞர்கள் புகைப்பதை, ஒரு "ஸ்டைலாக' நினைத்து பாதிப்புக்குள்ளாகின்றனர்.


எப்படி தடுப்பது:
ஆல்கஹால், புகையிலை பயன்படுத்துவதை அறவே ஒழிக்க வேண்டும். சத்தான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி அவசியம். சீரான உடல் எடையை கடைபிடிக்க வேண்டும். தூசியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் விறகு உள்ளிட்ட திடப்பொருள்களை பயன்படுத்தி சமைப்பதால் ஏற்படும் புகையிலிருந்து பாதுகாப்பது அவசியம்.


பருவ வயது புற்றுநோய்:
சிகிச்சையால் தடுக்கலாம்: ""பருவ வயது புற்றுநோய் வருவதற்கு முன்பே, சில ரத்தப் பரிசோதனை மூலம் கண்டுபிடித்து வராமலே தடுக்கலாம்,'' என, மதுரை கே.கே.நகர், மோகன்ஸ் மெடிசிட்டி டாக்டர்கள் மோகன் பிரசாத், மகாலட்சுமி பிரசாத் கூறினர்.அவர்கள் மேலும் கூறியதாவது: டீன் ஏஜ் வயதில் (13 முதல் 19 வயது வரை) குழந்தைகள் சுறுசுறுப்புடனும், துடிப்புடனும் செயல்படுவர். இந்த வயதில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால், அவர்களை நோய்கள் தாக்காது. ஆனால் இந்த வயது தான், ஒரு சில புற்றுநோய்களால் பாதிக்கப்படும் வயது, என்பது பெரும்பாலானவருக்கு தெரியாது. இந்த வயதில், அதை போன்ற ஆபத்து இருப்பதால், இதை மார்க்கண்டேய வயது என்கிறார்கள்.இந்த பருவ வயதில் புற்றுநோயால் குணமடைந்து, திருமணம், மகப்பேறு, குடும்ப வாழ்க்கையை குறையின்றி அனுபவிக்கலாம். இதற்கெல்லாம் காரணம், இன்றைய புற்றுநோய் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தான். நுண் ஊசி மூலம் புற்றுநோய் கண்டுபிடிப்பு, முறையான அறுவை சிகிச்சை மற்றும் நவீன புற்றுநோய் மருத்துவ சிகிச்சை ஆகியவை தான், இந்த வெற்றிக்கு காரணம், என்றனர்.


புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது :
செல்கள் கட்டுப்பாடற்று பிரிந்து பெருகுவதால் ஏற்படுவது புற்றுநோய். நமது உடல் முழுவதும் செல்களால் ஆனது. இவை வளர்ந்து, பிரிந்து உடலை ஆரோக்கியமாக மாற்றத் தேவையான பல செல்களை உருவாக்குகிறது. சில வேளைகளில் தேவையற்ற பல புதிய செல்கள் உருவாதல் மற்றும் பழைய செல்கள் இறக்காமல் உயிரோடு இருத்தல் போன்ற மாற்றம் உடலில் ஏற்படுகிறது. இச்செல்கள் அனைத்தும் கூட்டாக இணைந்து உடலில் கழலைகள் போன்ற ஒன்றை உருவாக்குகிறது. இது தீங்கற்ற கழலைகள், தீங்கு விளைவிக்கும் கழலைகள் என இருவகைப்படும். தீங்கற்ற கழலைகள், புற்றுநோய் அல்ல. இதனை உடலில் இருந்து எளிதில் நீக்கி விட லாம். இக்கழலைகள் மீண்டும் தோன்றாது மற்றும் உடலிலும் பரவாது. தீங்குள்ள கழலைகள் புற்றுநோய். இக்கழலைகள் உடலில் கட்டுப்பாடற்று பெருகிவரும். மேலும் இதில் உருவாகும் செல்கள் மற்ற திசுக்களில் உள்ள செல்களை அழித்து விடும். மேலும் இச்செல்கள் ரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்து விடும். ரத்த நாளங்கள் மூலம் உடலில் ரத்த ஓட்டம் நடைபெறுகிறது. நிணநீர் மண்டலம், ரத்த வெள்ளை அணுக்களை உடலில் பல பகுதிகளுக்கு எடுத்துச்செல்லும் வேலையை செய்கிறது. இதில் தீங்குள்ள கழலைகளில் உருவான செல்கள் கலப்பதால் வெள்ளையணுக்கள் செல்லும் இடங்களில் புற்றுநோய் உருவாகிறது.

காரணம்:*தேவையற்ற செல்களின் வளர்ச்சி மற்றும் செல்களின் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றம்.
*புகைப்பழக்கம் மற்றும் முறையற்ற உணவுப்பழக்கம்.
*சூரியனிடம்மிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள்.
*புற்றுநோய் ஏற்படும் வாய்புள்ள பணியில் ஈடுபடுதல்.
* எச்.ஐ.வி.,தொற்று உள்ளோரிடமிருந்து பரவுதல்.
*பெற்றோர்களிடம் இருந்து உருவாதல்.

அறிகுறிகள்:*உடலில் உள்ள உறுப்புகளில் ஒருவித தடிப்பு மற்றும் வீக்கம்.
*உடலில் உள்ள மச்சத்தில் ஏற்படும்

மாற்றங்கள்:*ஆறாத புண்கள்.
*தொடர் இருமல் மற்றும் கரகரப்பான கம்மிய குரல்.
*மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் நேரத்தில் மாற்றம்.
*தொடர்ந்த அஜிரணம் மற்றும் உணவை விழுங்குவதில் பிரச்சனை ஏற்படுதல்.
*உடல் எடையில் மாற்றம்.
*இயல்புக்கு மாறான ரத்தபோக்கு மற்றும் ரத்த கசிவு.


விரைவில் சொல்லலாம் பைபை:
புற்றுநோய், கொடிய நோய் என்றாலும் குணப்படுத்த கூடியதே; ஆனால், அதற்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பது தான் வேதனையான விஷயம் என்கிறார், கோவை டாக்டர் குகன். தன்னம்பிக்கை இருந்தால் போதும், புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வரலாம் என்கிறார், ஒரு நோயாளி.பிப்., 4ம் தேதி, சர்வதேச புற்றுநோய் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம், பிரசாரம் போன்றவை ஒரு பக்கம் தொடர்ந்தாலும், புற்றுநோயை உண்டாக்கக்கூடிய புகையிலை உட்பட வஸ்துக்களின் தாக்கம் குறையவில்லை. உலக சுகாதார அமைப்பு (ஙிஏO), சமீபத்தில் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில், புற்றுநோய் பாதிப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள் ளது. இந்தியாவில், வரும் 2020ம் ஆண்டில், ஒன்பது முதல் பத்து லட்சம் பேர் வரை, புற்றுநோயால் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. விபத்து, மாரடைப்பில் இறப்போர் எண்ணிக்கை தான் அதிகம். இதற்கு அடுத்த இடத்தில், புற்றுநோயால் இறப்போர் எண்ணிக்கை இடம் பிடித்து விடும் என எச்சரிக்கிறது, உலக சுகாதார அமைப்பு.

இதுகுறித்து, கோவை ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் குகன் கூறியதாவது:மரபணு மாற்றத்தால், பரம்பரை பரம்பரையாக புற்றுநோய் பாதிப்பு தொடர்வதை மாற்ற இயலாது. இது பத்து சதவீதம் தான். உணவு பழக்க வழக்கங்களால் வருவது ஐம்பது சதவீத புற்றுநோய். புகையிலை எந்த வடிவத்தில் இருந்தாலும், புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம். 8ல் ஒருவர், புகையிலை பழக்கத்தால் உயிரிழக்கின்றனர். மாறி வரும் உணவுப் பழக்க வழக்கம், அதாவது, குளிர்சாதனப் பெட்டியில் உணவு பதார்த்தங்களை சேமித்து வைப்பதால், அதில் ஒருவித ரசாயனம் படிந்துவிடுகிறது. இந்த உணவை உட்கொள்வதாலும், புற்றுநோய் வரும் வாய்ப்புண்டு. மசாலா சேர்க்கப்பட்ட அசைவ உணவு வகைகளும், புற்றுநோயை உண்டாக்கும். இது உணவுக்குழாயை பாதித்து, புற்றுநோய் உருவாக்கும். உணவு பழக்க வழக்கத்தை மாற்றினால், இத்தகைய புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, பெண்களுக்கு மார்பு, கர்ப்பப்பை, தொண்டை புற்றுநோய் தாக்கம் அதிகம். சிறுவயதில் திருமணம், 30 வயதுக்கு மேல் குழந்தைப் பேறு, கர்ப்பத்தடை மாத்திரைகளை அதிகம் எடுத்தல் போன்ற காரணங்களால், பெண்களுக்கு புற்றுநோய் வரக்கூடும். இவ்வகை புற்றுநோயை கண்டு பிடித்தால், குணப்படுத்த முடியும். ஆண்களுக்கு, நுரையீரல், கழுத்து, தொண்டை, வயிற்றில் புற்றுநோய் வரக்கூடும். தகுந்த மருத்துவ பரிசோதனை எடுத்துக் கொண்டால், மோனோகிராம் மூலம் நோயை கண்டுபிடிக்கலாம்; குணப்படுத்த முடியும். குழந்தைகளுக்கு மரபணு மாற்றம் உட்பட பல காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம். 95 சதவீதம் வரை அவர்களை காப்பாற்ற முடியும்.இவ்வாறு, குகன் கூறினார்.

சமூக சேவகர் நடராஜன் கூறுகையில், ""புற்றுநோய் வந்துவிட்டால், இறந்து விடுவோமோ என்ற அச்சம் ஆட்கொள்கிறது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புற்றுநோய் இல்லாத நாடாக, இந்தியாவை உருவாக்க, புதிய திட்டங்கள் தீட்ட வேண்டும். நலத்திட்டங்களை அறிவிக்க வேண்டும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை, வாழ வைக்க வேண்டும்,'' என்றார்.

கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்ததால், அதில் ரேடியேசன் தாக்குதலுக்கு உள்ளாகி, புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர், கோவையை சேர்ந்த தேவதாஸ். இவர் கூறியதாவது: கடந்த ஏழு ஆண்டுகளாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். டாக்டர்களின் ஆலோசனைகளை முறையாக பின்பற்றி, சமமான உணவு வகைகளை, தேவையானதை எடுத்துக் கொண்டதால், புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளேன். புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தமுடியும். தன்னம்பிக்கை வேண்டும். டாக்டர்களின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும். வேகவைத்த உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும். மது, சிகரெட் போன்றவற்றை விட வேண்டும். எளிதான உடற்பயிற்சி, சந்தோஷமான விஷயங்களை பகிர்தல், அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துதல் போன்றவையே நோயை துரத்திவிடும். புற்றுநோய் குணப்படுத்தக்கூடியது என்ற விழிப்புணர்வை பரப்ப வேண்டும்.இவ்வாறு, தேவதாஸ் கூறினார்.

நம் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டால், நோய்களை விரட்டுவது சாத்தியமே...!


தடுக்கும் முறைகள் :
புற்றுநோய் தடுப்பு என்பது, புற்றுநோய் நிகழ்வை குறைப்பதற்கான சுறுசுறுப்பான நடவடிக்கைகளை எடுத்தல் என்று வரையறுத்துள்ளார்கள். இதை "கார்சினொஜென்ஸ்' என்ற புற்று ஊக்கிகளை தவிர்ப்பதாலும் அல்லது அதன் வளர்சிதை மாற்றத்தை மாற்றி அமைப்பதாலும், வாழ்க்கை பாணியை அல்லது உணவு முறைகளில் சிறு திருத்தங்கள் செய்தும் அல்லது மருத்துவ குறுக்கீடு மூலமாகவும், ரசாயன வகை தடுப்பு முறையில், முன்-புற்றுப்பண்பு கட்டிகளுக்கு சிகிச்சை அளித்து நிறைவேற்றலாம். தடுப்பு என்பது, பொதுவாக தொடக்க நிலை. இதில் எந்த நோயாலும் பாதிக்கப்படையாத மக்கள் அடங்குவர், அல்லது உயர் நிலை தடுப்பு, இது நோய் மீண்டும் வராமல் இருப்பதற்கான நோக்குடன் ரிகர்ரன்ஸ் (மறுபீடிப்பை) குறைத்தல் அல்லது முன்னதாகவே அறிந்த நோயின் சிக்கல்களை குறைத்தல்.


பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய் :
இந்திய, பெண்களுக்கு மார்பகபுற்று நோய் தாக்குதல் இன்று அதிகரித்து வருகிறது. நகர் புறங்களில் வாழும் 1: 28 என்ற விகிதத்தில் பெண்களை இந்த நோய் தாக்குகிறது. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்நோய் அதிகமாக வரும் வாய்ப்புள்ளது.மார்பக புற்றுநோய் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் ரத்தத்தில் அதிகமாக சுரப்பதினால் அதிக உடல் பருமன், கொழுப்பு மிகுந்த உணவுப்பண்டங்களை உண்ணுதல். இளம் வயதில் பருவமடைதல், குறைந்த காலம் மட்டுமே தாய்ப்பால் கொடுப்பது போன்றவை இந்நோய் வருவதற்கான காரணங்களாக உள்ளன. மேலும், குடும்பத்தில் நெருங்கிய பெண் உறவினர்கள் ஆகியோருக்கு மார்பக புற்றுநோய் இருந்தால், அப்பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்.மார்பக புற்றுநோய் வருவதை கண்டறிய மாமோகிராம் என்னும் "ஸ்கிரீனிங்' டெஸ்ட் உதவுகிறது. இதை 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் ஆண்டுதோறும் மேற்கண்ட தகுந்த சிகிச்சை பெறலாம். இந்த மாமோகிராம் டெஸ்ட், எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்ட் கதிர்களை கொண்டு வலியின்றி செய்யப்படும்.மார்பக வலியற்ற கட்டிகள், காம்பிலிருந்து நீர் வடிதல், மார்பக நிறம் மாறுதல் போன்றவை தெரிந்தால் உடனே தக்க மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியம். இவை அனைத்தும் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாகும்.மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் மாமோகிராம் போன்ற தற்காப்பு ஸ்கிரீனிங் டெஸ்டும் இந்நோயை ஆரம்ப நிலையில் கண்டறிய உதவும். அவ்வாறு ஆரம்ப நிலையில் உள்ள இந்நோயை, தகுந்த சிகிச்சை மூலம் முற்றிலுமாக நீக்கினால் நலமுடன் வாழ முடியும்.

செர்வைகல் கேன்சர்செர்வைகல் கேன்சர் என்பது கர்ப்பப்பையின் வாய் பகுதியில் வரும் புற்றுநோய் ஆகும். இந்தியாவில் செர்வைகல் கேன்சர் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் தொடர்பான மரணத்துக்கு முதல் காரணமாகும். கடந்த ஆண்டு 72, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய பெண்கள் செர்வைகல் கேன்சரால் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்து 82 ஆயிரத்து 027 பெண்களை இந்த புற்றுநோய் தாக்குகிறது.கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் இந்த எச்.பி.வி., வைரசின் தாக்கத்தினால் ஏற்படும் மாற்றியங்கள் எளிய ஸ்மியர் டெஸ்ட் மூலம் கண்டறியலாம். பேப் ஸமியர் டெஸ்ட் புற்று நோய் வருவதற்கு முன் ஏற்படும் ஆரம்ப குறிகளை கண்டறிய உதவும். மேலும், தகுந்த சிகிச்சை மூலம் நோய் முற்றிலும் பரவாமல் இருக்க வழிவகுக்கும்.தற்போது, செர்வைகல் கேன்சர் வராமல் தடுக்க செர்வைகல் கேன்சர் தடுப்பூசி உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சரை தடுக்கிறது. இந்த தடுப்பூசியை எல்லா வயது பெண்களும் போட்டுக் கொள்ளலாம். எனினும் இளம் பெண்கள் பருவமடைந்த உடனே போட்டுக் கொள்வது மிகவும் சிறந்ததாகும். இன்று, உலகில் செர்வைகல் கேன்சரால் இறக்கும் 4 ல் 1 பெண் இந்தியராக இருக்கிறார். இந்த கொடிய நோய் வருமுன் எளிய பேப்ஸ்மியர் டெஸ்ட் மற்றும் தடுப்பூசி மூலம் பெண்கள் நலனை காப்போம். இருதயம் மற்றும் புற்றுநோய் சம்பந்தமான ஓருங்கிணைந்த உடல் பரிசோதனைகளை குறைந்த செலவில் செய்து கொள்ளலாம்.மேலும், விபரங்களுக்கு குறிஞ்சி மருத்துவமனையில் மகளிர் மகப்பேறு மருத்துவ துறை மருத்துவர் டாக்டர் மஞ்சாம்பிகையை தொடர்பு கொள்ளலாம்.

துவக்கத்திலேயே கிள்ளி எறிந்தால் நல்லது:
புற்றுகட்டி: புற்று கட்டி என்னும் சொல், வழக்கத்துக்கு அல்லது இயல்புக்கு மீறிய வீக்கம், திரள், கட்டி, டியூமரை குறிக்கும். திசுக்குவிப்பு (நியோப்லாசம்): அறிவியலின் படி, உயிரணுவில் ஏற்படும் பிறழ்வுகளால் உருமாற்றம் அடைந்த, பல்கி பெருகும் தன்மை உள்ள உயிரணு ஆகும். இவைகள் வீரியம் அல்லது வீரியமற்ற புற்று என இருவகைப்படும். வீரியபுற்று என்பது புற்றுநோயை குறிக்கும். வீரியமற்ற புற்று, குறிப்பிட்ட ஒரு இடத்தில் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ள கட்டியை குறிக்கும். இவை, மற்ற இடங்களுக்கு பரவிச் செல்லும் தன்மை கொண்டவை அல்ல. வெகு வீரிய புற்று, மற்ற செல்களுக்கு பரவிச் சென்று தாக்கும் தன்மை கொண்டவை. வீரியமற்றவை, குணப்படும் நிலையில் உள்ளவை. டயாக்னாசிஸ்: உடலில் இருக்கும் கட்டி புற்று நோயா ? அல்லது இயல்பு கட்டியா என்பதை அறியும் ஆய்வு. உடல் திசு ஆய்வு என்னும் செய்முறை மூலம் புற்று என்பதை கண்டறியலாம். பொதுவாக, கட்டியை அகற்றும் போது, அதை சார்ந்துள்ள அனைத்து புற்று செல்களும் அகற்ற வேண்டும். முழுமையான அகற்றலுக்கு எதிர்மை விளிம்புகள் என்றும், அரைகுறையான அகற்றலுக்கு, நேர்மை அல்லது நேர்ம விளிம்புகள் என்றும் அழைக்கப்படுகிறது. தரம் பகுத்தல்: புற்று நோயின் வீரியத்தை பொறுத்து, அதை, ஒன்று அல்லது இரண்டு நோய் குறியியல் மருத்துவரை கொண்டு பகுக்க வேண்டும். மூன்று அல்லது நான்காவது தரத்துக்கு உள்ள புற்று நோயானது, வீரியத்தை கொண்டு மற்ற செல்களுக்கு பரவிய நிலையை குறிக்கும்.நிலை: புற்று ஆய்வாளர்களை கொண்டு தரம் பிரிக்கும் ஆய்வு.


புற்றுநோய் குறித்த மூட நம்பிக்கைகளை ஒழிப்போம் :
சர்வதேச புற்றுநோய் தினமான இன்று நிறுவனங்கள் தனிநபர் புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பதே முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆண்டுக்கு 7.6 மில்லியன் மக்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். காசநோய், எய்ட்ஸ் மற்றும் மலேரியா போன்ற நோய்களின் எண்ணிக்கையை காட்டிலும் இது அதிகம்.இந்த வருடத்தின் முக்கிய நோக்கம், புற்றுநோய் பற்றிய தவறான மூடநம்பிக்கைகளை ஒழிப்பதாக உள்ளது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், புற்றுநோய் உடல் ஆரோக்கியத்துக்கு சம்மந்தப்பட்டது, முன்னேற்றம் அடைந்த நாட்டில் வளமன் மக்களுக்கு மட்டும் வரக்கூடிய நோய், இது உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய், புற்றுநோய் என்பது விதி போன்ற மூட நம்பிக்கையை அழிக்க முடியும் என கருதப்படுகிறது.கோ. குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் வாளவாடி நாராயணசாமி புற்றுநோய் சிகிச்சை மையம், புற்று நோயை கண்டறியும் சிகிச்சையுடன் மறுவாழ்வை அளிக்கும் பல்வேறு துறைகளையும் கொண்டு முழுமையான மையமாக திகழ்கிறது. அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு, மருந்து மற்றும் ரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்கு திறமைவாய்ந்த மருத்துவர் குழு இம்மருத்துவமனையில் உள்ளது.இம்மையத்தின் தலை மற்றும் கழுத்து, மார்பக புற்றுநோய், வயிறு மற்றும் குடல் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், ரத்தப்புற்றுநோய் பிரிவுகளுடன் நாள்தோறும் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் கூடி நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை முறை ஆலோசிப்போர் குழுவும், தொலைதூர கிராமப்புறங்களில் இருந்து வரும் புற்றுநோயாளிகள், மருத்துவமனைக்கு அருகில் செங்காடு எனும் இடத்தில் இலவச தங்கும் இடவசதியும், இறுதி நிலை புற்றுநோயாளிகளுக்காக ரக்ஷா எனும் இலவச இறுதிநிலை காப்பகமும் செயல்பட்டு வருகிறது.விவரங்களுக்கு, டாக்டர் சிவநேசன், மருந்தியல் புற்றுநோய் சிகிச்சை நிபுணர், வாளவாடி நாராயணசாமி புற்றுநோய் பிரிவு, கோ. குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை என்ற முகவரியிலும், 0422-4305252, 4305241 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.


தேகத்தை அரித்துவிடும் :
இன்று, வயது வித்தியாசம் பார்க்காமல் தாக்கப்படும் நோய்களில் ஒன்று புற்றுநோய். வாழ்வையே அழிக்கக் கூடிய புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்வது, நம் ஒவ்வொருவருக்குமான அவசியம். புற்றுநோய் என்பது, கட்டுப்பாடற்று செல்கள், பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய். இந்த செல்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த செல்கள் குருதியின் வழியாக பரவுகின்றன. எந்த வயதினரையும் தாக்கும். உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பட்டது. உடலில் உள்ள செல்கள் வளர்ந்து, பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு, பல செல்களை உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி அல்லது டியூமர் எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.எல்லா டியூமர்களும், புற்று நோய் போன்றவையல்ல. இது, தீங்கில்லா டியூமர், மற்றும் கேடுவிளைவிக்கும் டியூமர் என இரு வகைகப்படும். தீங்கில்லா டியூமர் புற்றுநோய் அல்ல. அவற்றை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில், அவற்றை நீக்கிய பின், மீண்டும் தோன்றுவது இல்லை.தீங்கில்லா டியூமர்களில் உள்ள செல்கள், மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை. கேடு விளைவிக்கும் டியூமர் என்பது புற்றுநோய். இதில் உள்ள செல்கள், இயல்புக்கு மாறாகவும், எவ்வித கட்டுப்பாடும் இன்றியும் பெருகும். இப்படி ஏற்படும் புற்றுநோய் செல்கள், ரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்து விடும்.இவ்வாறு புற்று நோய் பரவுவதை திசுத்தொற்று என்பர். புற்று செல்கள் கடந்து செல்லும் நிலைக்கு மெடாச்டாசிஸ், அதாவது, நோய் இடம் மாறி பரவுதல் என்று பெயர். புற்று நோய், சில வேளைகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கட்டியாக வெளிப்படுவதை, தீங்கற்ற கட்டி என்று அழைக்கப்படுகிறது. அவை தன்னிடத்திலேயே எல்லைக்கு உட்பட்டு அடங்குபவை. மேலும் அவை ஊடுருவி தாக்கவோ அல்லது இதர இடங்களுக்கு பரவவோ செய்யாது. புற்றுநோய் காரணமாக, 10 சதவீத மனித இழப்பு ஏற்பட்டு வருகிறது. விலங்குகளையும் இது தாக்கக் கூடியது. சில வேளைகளில், புற்று நோய் மரபு வழியாகவும் கடத்தப்படும். புற்று நோயின் அறிகுறியாக, கட்டிகள் அமைந்தாலும், அதை உறுதிப்படுத்த, திசுக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டே, புற்று உள்ளதா; இல்லையா? என அறிந்துக் கொள்ள முடியும். புற்றுநோயின் வகை, இடம் மற்றும் நிலையைப் பொறுத்து சிகிச்சை அளிக்கலாம். சில வகைகளை குணப்படுத்தலாம். புற்றுநோய் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை முறைகளில் சிகிச்சை அளிக்கலாம். மேலும் ஆராய்ச்சி மேம்பட்டு வருவதால், சிகிச்சை முறையும் ஒவ்வொரு வகை புற்றுநோய் வகைக்கும் ஏற்றவாறு, தனிப்பட்ட வகையில் மாற்றமடைந்து வருகின்றன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100% No Govt Servant & Teachers Will Accept Tamil Nadu Govt's Evasion Words to instead of Old Pension Scheme - Tamil Nadu Chief Secretariat Association Condemns Report

  பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசின் பசப்பு வார்த்தைகளை 100% எந்த அரசு ஊழியரும், ஆசிரியர்களும் ஏற்க மாட்டார்கள் - தமிழ்...