கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> 10,11,12 ஆம் வகுப்புகள் அக்.1 முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி: என்னென்ன கட்டுப்பாடுகள்?- முழு விவரம்


கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகள், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தன்னார்வ அடிப்படையில் அக்.1 முதல் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி மாணவர்கள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுவர். முதல் பகுதி மாணவர்கள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும் இரண்டாம் பகுதி மாணவர்கள் செவ்வாய், வியாழன், சனிக் கிழமைகளிலும் வரவேண்டும். இது அடுத்த வாரத்திலும் அப்படியே தொடரும்.

அதேபோல ஆசிரியர்களும் இரண்டு குழுக்களாகக் பிரிக்கப்பட்டு முதல் குழுவினர் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் பள்ளிகளுக்கு வரவழைக்கப்படுவர். இரண்டாவது குழு புதன், வியாழன் ஆகிய தினங்களிலும் மீண்டும் முதல் குழு வெள்ளி, சனிக் கிழமைகளிலும் பணியாற்ற வேண்டும். இரண்டாவது வாரத்தில் இரண்டாவது குழு முதல் இரண்டு நாட்கள் என சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வகுப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:


தனிமனித இடைவெளி விதிமுறைகள்

* கரோனா கட்டுப்பாட்டு மையங்களுக்கு வெளியே உள்ள 50% மாணவர்கள், ஆசிரியர்கள் விருப்பப்பட்டால் பள்ளிகளுக்கு வரலாம். கட்டுப்பாட்டு மையங்களுக்குள் இருக்கும் பள்ளிகளுக்கு யாரும் செல்லக் கூடாது.

* அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் 10 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டுமே இந்த அனுமதி அளிக்கப்படுகிறது.

* அதே நேரத்தில் தன்னார்வ அடிப்படையில் பெற்றோர்கள்/ பாதுகாவலர்களின் அனுமதி பெற்று, ஆசிரியர்களின் வழிகாட்டலைப் பின்பற்றியே பள்ளிக்கு வரவேண்டும்.

* போதிய தனிமனித இடைவெளியைப் பின்பற்றவும் வகுப்பறைகளுக்குள் தொற்றைத் தடுக்கவும் பள்ளிகளில் வெவ்வேறு கால அட்டவணைகள் பின்பற்றப்பட வேண்டும்.

* எங்கெல்லாம் வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்படுமோ, அங்கெல்லாம் தரையில் முறையாக வட்டங்கள் வரையப்பட்டு, தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.

* ஆசிரியர்- மாணவர் கலந்துரையாடல் தனிமனித இடைவெளியைப் பின்பற்றியே நடைபெற வேண்டும்.

* அனைத்து வேலை நாட்களிலும் பள்ளி முகப்பிலும் வளாகத்திலும் கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில், தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.

* வகுப்பறையில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையில் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

* ஆசிரியர் அறைகள், அலுவலக அறைகளில் தனிமனித இடைவெளி அவசியம்.

* பருவநிலை சாதகமாக இருந்தால், ஆசிரியர்- மாணவர் கலந்துரையாடலைத் திறந்த வெளிகளில் நடத்தலாம்.

* காலை வழிபாடு, மாணவர்கள் கூடுதல், விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை கட்டாயம் தவிர்க்கப்படவேண்டும்.

* பள்ளிகளில் நீச்சல் குளங்கள் (இருந்தால்) தொடர்ந்து மூடப்பட்டிருக்க வேண்டும்.


பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய கிருமிநாசினி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

*பள்ளிகளில் வழக்கமான நடைமுறைகளைத் தொடங்கும் முன், ஆய்வகம், வகுப்பறை மற்றும் பொதுப் பயன்பாட்டு இடங்களை 1% சோடியம் ஹைப்போ க்ளோரைட் கரைசல் கொண்டு சுத்தப்படுத்தவேண்டும். கம்பி, கைப்பிடி உள்ளிட்ட அடிக்கடி தொட வாய்ப்புள்ள இடங்களை அதிக கவனம் கொடுத்துச் சுத்தப்படுத்த வேண்டும்.

* சோப் கொண்டு, ஓடும் நீரில் கை கழுவும் வசதியை அளிக்க வேண்டும். சானிடைசர் வசதியும் வழங்கப்பட வேண்டும்.

* பள்ளிக்குள் நுழையும்போது கைகளைக் கட்டாயம் கழுவிய பிறகு/ சானிடைசர் போட்டுக்கொண்ட பிறகே ஆசிரியர்களும் மாணவர்களும் உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும்.

* பள்ளி நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் இடங்களில் சோப் மற்றும் சானிடைசரை வைத்திருக்க வேண்டும்.

* இதுகுறித்த அரசின் உத்தரவுகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனைத்துப் பள்ளிகள், சுகாதாரத் துறை மற்றும் உள்ளூர் அமைப்புகளிடம் தெரியப்படுத்த வேண்டும்.

* பள்ளியில் பயோமெட்ரிக் பதிவேட்டுக்குப் பதிலாக தொடுதல் இல்லாத வகையில் வருகைப் பதிவேட்டைப் பராமரிக்க வேண்டும்.

* ஏசி அறைகளைக் கூடுமான வரையில் தவிர்ப்பது நல்லது. அவசியப்படும் இடங்களில் 24 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், ஈரப்பதம் 40-70 சதவீதமும் பராமரிக்கப்பட வேண்டும். 50 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் இயற்கையான காற்று இருப்பதை ஏசி இயக்க அமைப்பு உறுதி செய்ய வேண்டும்.

* அவசரக் காலங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் தொடர்புகொள்ள மாநில உதவி எண், உள்ளூர் சுகாதாரத்துறை எண்களை பள்ளி வளாகத்தில் மாட்டி வைத்திருக்க வேண்டும்.

* மேற்குறிப்பிட்ட விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதற்கு, பள்ளி நிர்வாகமே பொறுப்பு.


சமூக நடைமுறை

* ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் சுத்தமான முகக் கவசம் அணிந்திருப்பதைப் பள்ளித் தலைமை ஆசிரியர்/ முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.

* அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம். முடிந்த அளவு முகக்கவசத்தைத் தொடாமல் இருக்க வேண்டியது அவசியம்.

* முகத்தையோ, முகத்தில் உள்ள உறுப்புகளையோ தொடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

* பள்ளி லிஃப்டுகள், படிக்கட்டுகள், கைப்பிடிகள் ஆகியவற்றைத் தொடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

* எச்சில் துப்புவதைத் தவிர்க்க வேண்டும்.

* ஒவ்வொருவரும் சுய பரிசோதனைக்குத் தங்களை உட்படுத்தி, உடல்நலக் குறைபாடு இருந்தால் உடனே தெரிவிக்க வேண்டும்.


தெர்மல் பரிசோதனை நடைமுறைகள்

* அதேபோல பள்ளிகளில் நுழையும்போது ஒவ்வொருவருக்கும் தெர்மல் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

* சோதனை செய்யும்போது அவர்களை, தெர்மோமீட்டரால் தொடக்கூடாது.

* தெர்மோமீட்டரைப் பயன்படுத்தி முடித்தபிறகு, அடுத்த பயன்பாட்டுக்கு முன் முழுமையாகச் சுத்தப்படுத்த வேண்டும்.

* உடல் சராசரி வெப்பநிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட்டாக (37 டிகிரி செல்சியஸ்) இருக்க வேண்டும். அதிகபட்சம் 99 டிகிரி ஃபாரன்ஹீட்டாக (37.2 டிகிரி செல்சியஸ்) வரை இருக்கலாம். அதற்கு மேல், வெப்பநிலை இருந்தால் அவர்களுக்குப் பள்ளி வளாகத்தில் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.


ஆய்வகங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்.

* ஆய்வகங்களில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

* ஆய்வக உபகரணங்கள் முறையாகச் சுத்தப்படுத்தப்பட வேண்டும். அடிக்கடி தொட வாய்ப்புள்ள உபகரணங்களைப் பயன்படுத்தும் முன்னும் பயன்படுத்திய பிறகும் சுத்தப்படுத்த வேண்டும்.

* பயிற்சி உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும் ஆசிரியர்களும் மாணவர்களும் கைகளை சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.


பிற கட்டுப்பாடுகள்

* ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் அனைத்து நேரங்களிலும் அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும்.

* பள்ளி வளாகங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் கூட்டமாகக் கூடக்கூடாது.

* வயதான, கர்ப்பமான, பிற நோய்களால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் முன்களத்துக்கு வந்து மாணவர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கக் கூடாது.

* ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.

* பள்ளிகளில் அனைவரும் விதிமுறைகளைப் பின்பற்றுவதைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்/ முதல்வர் உறுதிசெய்ய வேண்டும்.

* போதிய அளவு முகக் கவசங்கள், சானிடைசர்களைப் பள்ளிகளில் கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.

* மூடப்பட்ட குப்பைத் தொட்டிகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அப்புறப்படுத்துவதற்கான சாதனங்கள் பாதுகாப்பான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். பள்ளிகளின் தூய்மைப் பணியாளர்களுக்கு இதுகுறித்த பயிற்சி முறையாக அளிக்கப்பட வேண்டும்.

* பள்ளிகளுக்கு அவசியமில்லாமல் விருந்தினர்கள் வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

* நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில், அழிப்பான், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை மாணவர்கள் பகிர்ந்துகொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

* போக்குவரத்து வசதி கொண்ட பள்ளிகள், பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களை 1% சோடியம் ஹைப்போ க்ளோரைட் கரைசல் கொண்டு சுத்தப்படுத்தவேண்டும்.

* உளவியல் சிக்கல்களைக் கொண்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

* கரோனா அறிகுறிகள் கொண்ட மாணவர்கள்/ ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

* அவர்களின் பெற்றோர்/ பாதுகாவலருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புது ஊஞ்சல் - 01-15 நவம்பர் 2024 இதழ் - Puthu Oonjal - 01-15 November 2024 Magazine

புது ஊஞ்சல் - 01-15 நவம்பர் 2024 இதழ் - Puthu Oonjal - 01-15 November 2024 Magazine   புது ஊஞ்சல் - புது ஊஞ்சல் - 01-15 நவம்பர் 2024 மாதமிரு...